வடக்கின் ‘சுற்றுலா அரசியல்’

(கே. சஞ்சயன்)

கடந்த செப்டெம்பர் 26ஆம் திகதி, நல்லூரில் தியாகி திலீபனின் நினைவு நாள் நிகழ்வுகள் நடந்து கொண்டிருக்க, யாழ். மாநகரசபை மைதானத்தில், தேசிய சுற்றுலா நாள் நிகழ்வு நடந்து கொண்டிருந்தது. இந்த இரண்டு நிகழ்வுகளில், ஒன்றில், யாழ். மாநகர மேயரும், இன்னொன்றில், வட மாகாண முதலமைச்சரும் பங்கேற்றிருந்தார்கள். இருவருமே, அரசியலில் எதிரெதிர் முகாம்களில் இருக்கின்றவர்கள். திலீபன் நினைவு நிகழ்வு நடக்கும்போது, யாழ். மாநகர சபைப் பகுதியில், வேறு நிகழ்வுகள் நடத்தக்கூடாது என்று, தடுக்கும் முயற்சிகள் மாநகர சபையால் மேற்கொள்ளப்பட்டன.

அது, வடமாகாண முதலமைச்சர் பங்கேற்கும், தேசிய சுற்றுலா நாள் நிகழ்வைத் தடுக்கும் முயற்சியாகவும் கூட, அரசியல் கண்ணோட்டத்தில் பார்க்கப்பட்டது.

திலீபன் நினைவு நிகழ்வு ஆரம்பமாகி, சற்று நேரத்துக்குப் பின்னர், தேசிய சுற்றுலா நாள் நிகழ்வு ஆரம்பிக்கப்பட்டது. எனினும், அப்போதும் நல்லூரில், திலீபன் நினைவு நிகழ்வு நடந்து கொண்டிருந்தது.

சுற்றுலா நாள் நிகழ்வில் உரையாற்றிய வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன், “வடக்கு மாகாணத்தில் சுற்றுலாத் துறை வளர்ச்சியடையவில்லை. அத்தகையதொரு துறையே, இல்லாத நிலையே காணப்படுகிறது” என்று கூறியிருந்தார்.

மத்திய அரசாங்கத்தின் உதவியுடன், வடக்கில் சுற்றுலா அபிவிருத்தி மேற்கொள்ளப்பட வேண்டும் என்பதை அவர் வலியுறுத்தி இருந்தார். அவரது கருத்து உண்மையே. வடக்கைப் பொறுத்தவரையில், கடந்த நான்கு தசாப்தங்களாகச் சுற்றுலா என்பதே, அறியப்படாத ஒரு விடயமாகத் தான் இருந்தது.

போர் நடந்த காலங்களில், யாழ்ப்பாணத்தில் இருந்தவர்கள் நல்லூருக்கும், செல்வச்சந்நிதிக்கும், நயினாதீவுக்கும், வல்லிபுரக்கோவிலுக்கும், திருவிழாவுக்காகச் செல்வது மாத்திரம் தான், சுற்றுலாவாக இருந்தது. பின்னர், முத்திரைச் சந்தையில், ‘கிட்டு பூங்கா’ சுற்றுலா மய்யமாக மாறியது. படையினர் வசமானதை அடுத்து, அதுவும் அழிக்கப்பட்டது.

போர் முடிந்த பின்னர் தான், கண்டி, ஹற்றன், நுவரெலியா, திருகோணமலை, மட்டக்களப்பு என்று சுற்றுலா செல்லும் பழக்கம் வடக்கில் அரும்பியது. அதற்கப்பால், வடக்கில் சுற்றுலாத்துறை, சுற்றுலாத் தொழில் என்று குறிப்பிடும்படி எதுவும் இல்லை.

வடக்கில் சுற்றுலாத் துறைக்கான வாய்ப்புகள் இருந்தாலும், அதை யாரும் கண்டு கொள்வதில்லை. அதை அபிவிருத்தி செய்வதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டதுமில்லை. இதற்கு, மத்திய அரசாங்கத்தைக் குறை கூறி, மாகாண சபை காலம் கடத்துகிறது. அதுபோல, மத்திய அரசாங்கமும் பாரபட்சமாகவே செயற்படுகிறது.

முதலில், வடக்கில் உள்ள சுற்றுலாத் தலங்களை அடையாளம் காணுதல் முக்கியமானது. எங்கெங்கு சுற்றுலாத் தலங்கள் உள்ளன என்பதை அடையாளப்படுத்தி, அவற்றைப் பிரபலப்படுத்த வேண்டும்.

அதற்குப் பின்னர், அந்த இடங்களை அழகுபடுத்தி, சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் வகையிலான, விளம்பரப்படுத்தல்களை முன்னெடுக்க வேண்டும். சுற்றுலாத் தலங்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகளை ஏற்படுத்த வேண்டும். வீதிகளைப் புனரமைத்து, குறித்து இடத்தில் கழிப்பிட வசதிகள், உணவு, தங்குமிட வசதிகள் இருப்பதை, உறுதி செய்து கொள்ள வேண்டும்.

சுற்றுலாத் துறையை வளர்ப்பதற்கு, இப்படி பலகட்ட வேலைத் திட்டங்களை முன்னெடுக்க வேண்டும். வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகளை ஈர்ப்பதற்கு முன்னர், உள்நாட்டுச் சுற்றுலாப் பயணிகளை, அந்த இடங்களுக்கு வரவைக்க வேண்டும். அவர்களின் ஊடாக முன்னெடுக்கப்படும் பிரசாரங்களின் மூலம், வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகளைக் கவரும் வாய்ப்புகள் அதிகமாகும்.

அண்மையில், வெளிநாட்டில் இருந்து யாழ்ப்பாணம் வந்திருந்த நண்பர் ஒருவர், அனலைதீவுக்குப் பயணம் மேற்கொண்டிருந்தார். முதல்முறையாக அங்கு சென்று, சுற்றிப் பார்த்து விட்டு வந்த அவர், மிகவும் செழிப்பான தீவாக இருக்கிறது என்று வியந்தார்.

ஆனால், ஒரேயோர் உணவகம் மாத்திரமே அங்கு இருப்பதாகவும், அதுவும் முன்கூட்டியே சாப்பாட்டுக்கு முன்பதிவு செய்தால் மாத்திரமே, சாப்பாடு கிடைக்கும் என்ற குறைபாட்டையும் முன்வைத்தார்.

அனலைதீவு போன்ற தீவுகளில், நிறையவே சுற்றுலா வாய்ப்புகள் இருந்தாலும், அங்கு செல்வதற்குப் படகு போன்ற, போக்குவரத்து வசதிகளோ, தீவைச் சுற்றிப் பார்ப்பதற்கான வாகன வசதிகளோ, உணவகம், கழிப்பிடம் போன்ற வசதிகளோ இல்லாமல் இருப்பது பிரதான குறைபாடாக உள்ளது. வடக்கில் சுற்றுலாத் தலங்களாக மாற்றப் படக்கூடிய, இடங்களில் உள்ள பிரச்சினை இது.

வடக்கில் சுற்றுலாத் துறையை அபிவிருத்தி செய்ய வேண்டுமாயின், அதற்கான அடிப்படைக் கட்டுமானங்களை உருவாக்கிக் கொள்வதற்கு, முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும்.

சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கின்ற இடங்களை வைத்திருந்தால் மட்டும் போதாது, அங்கு, பொழுதைக் கழிப்பதற்கு வருபவர்களின் தேவைகளும் நிறைவேற்றப்பட வேண்டும். வடக்கில் சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கக் கூடிய பல இடங்கள் இருந்தாலும், சுற்றுலாப் பயணிகளுக்கான அடிப்படை வசதிகள், போதுமானவையாக இல்லை.

பிறஇடங்களில் இருந்து வரும் சுற்றுலாப் பயணிகள், தங்கிச் செல்வதற்கான வீடுகள், தங்குமிடங்கள் உள்ளூரில் இருந்தாலும், அவை போதுமானவையல்ல. வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கக் கூடிய,போதிய வசதிகளைக் கொண்டவையல்ல.

சுற்றுலாத் தொழில் வளர்ச்சியடைய வேண்டுமாயின், சுற்றுலாப் பயணிகள் குறிப்பிட்ட பிரதேசத்துக்குள் தங்குமிடம், உணவு, பொழுது போக்குகளுக்காகச் செலவழிக்க வேண்டும். அப்போதுதான், அந்த இடம் வளர்ச்சியடையும். அங்கு புதிய தொழில் முயற்சிகளும் சுற்றுலாத் துறையை அடிப்படையாகக் கொண்ட முயற்சியாளர்களும் பெருகுவர்.

ஆனால், வடக்கைப் பொறுத்தவரையில், சுற்றுலாத் தொழிற்துறையை விரிவுபடுத்துவதற்கான சூழல் இல்லை. குறிப்பாக, அரசியல் சூழலும் அதற்கு ஏற்றதாக இருக்கிறது என்று கூற முடியாது.

சில ஆண்டுகளுக்கு முன்னர், மண்டைதீவில் ஓர் ஆடம்பர விடுதியைக் கட்டும் முயற்சி முன்னெடுக்கப்பட்ட போது, அது சுற்றுச்சூழலுக்குக் கேடு விளைவிக்கும் என்று, வடக்கு மாகாண சபை அதற்குத் தடையை ஏற்படுத்தியது நினைவிருக்கலாம்.

அண்மையில், காரைநகரில், ஓர் ஐந்து நட்சத்திர விடுதியை அமைப்பதற்கு, பிரதேச சபை அனுமதி அளித்துள்ளதற்கு எதிராக, பிரச்சினை எழுப்பப்பட்டுள்ளது. அதற்கு நீதிமன்றத் தடையும் பெறப்பட்டுள்ளது.

காரைநகர் சிவபூமி என்றும், அங்கு ஐந்து நட்சத்திர விடுதியை அமைப்பது, சைவ சமயத்துக்கும் கலாசாரத்துக்கும் கேடு விளைவிக்கும் என்றும் பிரசாரம் ஒன்று முன்னெடுக்கப்படுகிறது.

அதுவும், அங்கு பிரதேச சபையின் அனுமதியின்றி, சிவன் சிலையை அமைக்கும் நடவடிக்கைக்கு, பிரதேச சபை தடைவிதித்ததை அடுத்தே, இந்தப் பிரசாரம் மோசமாக முன்னெடுக்கப்படுகிறது.

அதை யார் அமைக்கிறார் என்ற விடயத்துக்கு அப்பால், ஐந்து நட்சத்திர விடுதிகள் அமைக்கப்படுவதென்பது, யாழ்ப்பாணத்தின் சுற்றுலாத்துறை வளர்ச்சிக்கு முக்கியமானது. அது பிரதேசத்தின் புனிதத்தன்மைக்கு கேடு விளைவிக்கும் என்பது போன்ற பிரசாரங்கள், எந்தளவுக்கு நேர்மையானவை என்ற கேள்விகள் உண்டு.

காரைநகரில் தான், ஈழத்துச் சிதம்பரமும் இருக்கிறது, கசூரினா கடற்கரையும் இருக்கிறது. புனிதத் தன்மையைப் பேணுவதில், இரண்டு இடங்களையும் ஒருபோதும் ஒப்பீடு செய்ய முடியாது.

இன்னோர் உண்மையைச் சொல்வதானால், வெளியிடங்களைச் சேர்ந்தவர்கள், கசூரினா கடற்கரைக்கு வரும் போதுதான், ஈழத்துச் சிதம்பரத்துக்கும் சென்று வழிபாடு நடத்துகிறார்கள்.

அதுபோலவே, காரைநகர் சைவபூமி என்றால், வடக்கில் உள்ள மற்ற இடங்கள் எல்லாம் என்ன பௌத்த பூமியா? வடக்கு மாகாணம் முழுவதும் சைவ வரலாறும், தலங்களும் நிறைந்திருக்கின்றன. அப்படிப் பார்த்தால், வடக்கில் எங்குமே, விடுதிகளை அமைக்க முடியாது. சுற்றுலாத்துறை வளர்ச்சி பற்றி, நினைத்தும் பார்க்க முடியாது.

இன்னும் 30 ஆண்டுகளில், வடக்கில் வெப்பநிலை அதிகரிக்கும் என்று உலக வங்கி எச்சரித்திருக்கிறது. அதனால், நிலத்தடி நீர்வளம் பாதிக்கப்படும். வெப்பநிலை அதிகரித்தால், வருடம் முழுவதும் ஓடக் கூடிய எந்த ஆறும் இல்லாத வடக்கில், விவசாயம் பாதிக்கப்படும். வடக்கில் கைத்தொழில் வளர்ச்சியும் கிடையாது.

இந்த நிலையில், சுற்றுலாத்துறை போன்ற மாற்றுத் தொழில்துறைகளை அபிவிருத்தி செய்வதற்கான வாய்ப்புகளைத் தேட வேண்டிய நிலையில் உள்ள போதும், வடக்கில் உள்ள மக்களில் ஒரு பகுதியினரும், அரசியல்வாதிகள் சிலரும் அதை ஜீரணித்துக் கொள்ளத் தயாராக இல்லை.

வடக்கு முதலமைச்சர் சுற்றுலாத் துறை வளர்ச்சி பற்றி பேசுகிறார். ஆனால் அவருக்குக் கீழ் உள்ள மாகாணசபை அதற்காக என்ன செய்திருக்கிறது, என்ன செய்யப் போகிறது என்றால் அதற்கான பதில் வெறுமையாகத் தான் இருக்கிறது.

வடக்கு முதலமைச்சரை முன்னிறுத்தி, அரசியல் செய்ய முனைபவர்களில் சிலரும் கூட, விடுதிகள் அமைப்பதற்கு எதிராகப் போர்க்கொடி உயர்த்துகிறார்கள்.

சரியான ஆய்வுகள், சூழலுக்குப் பாதிப்பு ஏற்படாது என்ற உத்தரவாதம், முறையான அனுமதிகளுடன், வடக்குக்கு வரக்கூடிய எல்லா தொழில் வாய்ப்புகளையும் முதலீடுகளையும் பற்றிப் பிடித்துக் கொள்வதில் தவறில்லை.

முதலீட்டு வாய்ப்புகளைக் கண்மூடித்தனமாக எதிர்ப்பது, அரசியல் இலாபம் கருதிச் செயற்படுவது, ‘அரசியல் உத்தி’யாகப் பயன்படுத்தப்படுமானால், வடக்கின் சுற்றுலாத்துறையை ஒருபோதும் கற்பனை செய்து கூடப் பார்க்க முடியாது.