வடக்கைக் குழப்பும் நிகழ்ச்சி நிரல்

(கே சஞ்சயன்)

வடக்கில் அமைதியையும் நல்லிணக்கத்தையும் ஏற்படுத்தும் முயற்சிகள், சாண் ஏறினால் முழம் சறுக்குகின்ற கதையாகவே நீண்டு செல்கின்றன. கடந்த ஆண்டு ஜனவரி மாதம் இடம்பெற்ற ஆட்சி மாற்றத்தையடுத்து, பெரிதும் நம்பிக்கையோடு இருந்த தமிழ் மக்களுக்கு ஏமாற்றங்களும் இழப்புகளும் தான் மிஞ்சி நிற்கின்றன. அரசியல்த் தீர்வு, அரசியல் கைதிகளின் விடுதலை, காணிகள் விடுவிப்பு, படைக்குறைப்பு, மீள்குடியேற்றம், காணாமற்போனோர் பிரச்சினைக்குத் தீர்வு, போர்க்குற்ற விசாரணை என்று தமிழ் மக்கள் ஆட்சி மாற்றத்துக்குப் பின்னர் எதிர்பார்த்த விடயங்கள் ஏராளம்.

ஆனால், ஆட்சிமாற்றத்துக்குப் பிந்திய காலகட்டம் தமிழ் மக்களின் நம்பிக்கைகளை ஒவ்வொன்றாகச் சிதைத்து வருகிறது என்பதே உண்மை.

ஆட்சி மாற்றத்தின் பின்னர் வடக்கில் ஒப்பீட்டளவில் ஒரு ஜனநாயக வெளி தோன்றியிருந்தாலும் தமிழ் மக்களின் அடிப்படைப் பிரச்சினைகளையோ, அன்றாடப் பிரச்சினைகளையோ, பாதுகாப்புத் தொடர்பான பிரச்சினைகளையோ தீர்க்கின்ற ஒன்றாக அது இருக்கவில்லை.

தமது பங்களிப்புடன் ஏற்படுத்தப்பட்ட ஆட்சிமாற்றம் தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கான தீர்வாக அமையும் என்றே பெரும்பாலானவர்கள் எதிர்பார்த்திருந்தனர். ஒருவகையில் அது மிகையான எதிர்பார்ப்பும் கூட.

ஏனென்றால், இப்போது ஆட்சியில் இருக்கின்ற அரசாங்கம் ஒன்றும் வானத்தில் இருந்து குதித்து வந்ததோ அல்லது அதில் உள்ளவர்கள் தேவதூதர்களோ அல்ல!

தமிழ் மக்களுக்கு எதிராக அநீதிகள் இழைக்கப்பட்ட கடந்த கால அரசாங்கங்களில் அங்கம் வகித்து வந்தவர்கள் மற்றும் அவற்றுக்குத் துணைபோனவர்களைக் கொண்டது தான் இப்போதைய அரசாங்கம்.

எனவே, இந்த அரசாங்கத்திடம் இருந்து தமிழ் மக்களின் எல்லாப் பிரச்சினைகளும் தீர்ந்து விடும் என்றோ, தமது அபிலாஷைகள் நிறைவேற்றப்பட்டு விடும் என்றோ தமிழ் மக்கள் முழுமையாக எதிர்பார்த்திருக்கக் கூடாது.

ஆனாலும், முன்னைய அரசாங்கத்தை விடச் சற்று முன்னேற்றகரமான நிலை ஒன்றுக்கான வாய்ப்புகளை எதிர்பார்த்திருப்பதில் தவறில்லை.

எவ்வாறாயினும், முன்னைய ஆட்சிக்காலத்து நிலைமைகளை நோக்கியே தற்போதைய அரசாங்கமும் செல்லுகின்றதோ என்ற சந்தேகங்கள்தான் தமிழ் மக்களுக்கு இப்போது ஏற்பட்டுள்ளது.

ஏனென்றால், புதிய அரசாங்கத்திடம் தமிழ் மக்களாலும் அவர்களின் அரசியல் பிரதிநிதிகளாலும் முன்வைக்கப்பட்ட கோரிக்கைகள் எதுவுமே முழுமையாக நிறைவேற்றப்படவில்லை.

தமிழ்மக்களின் பிரச்சினைகள் தீர்க்கப்படாமல் நீடித்துச் செல்லுகின்ற நிலையில், இப்போது, தமிழ் மக்களின் பாதுகாப்புத் தொடர்பான பிரச்சினையும் தோன்றியிருக்கிறது.

கொக்குவிலில் கடந்த வாரம் யாழ்.பல்கலைக்கழக மூன்றாம் வருட மாணவர்கள் இருவர், பொலிசார் நடத்திய துப்பாக்கிச் சூட்டின் விளைவாகப் பலியாக நேரிட்டுள்ளது.

ஒரு மாணவனின் நெஞ்சில் துப்பாக்கிக் குண்டுக் காயம் உள்ளது. துப்பாக்கிச் சூட்டையடுத்து, மோட்டார் சைக்கிள் மதிலுடன் மோதியதன் விளைவாக மற்றைய மாணவன் உயிரிழந்ததாகக் கூறப்படுகிறது.

இந்தச் சம்பவம் தொடர்பான நீதி விசாரணைகள், புலனாய்வு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

பொலிஸ் தரப்பினால் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூடு தான், இருவரின் மரணங்களுக்கும் காரணமாகியிருக்கிறது. ஆனாலும், இந்தச் சம்பவத்தை பொலிசார் மூடிமறைத்து விபத்தாகக் காண்பிக்க முயன்றமையானது, இந்தச் சம்பவம் தொடர்பான சந்தேகங்களைக் கிளப்பியிருக்கிறது.

பொலிசார் மறித்தபோது நிறுத்தாமல் சென்றதால்தான் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது என்று காலம் பிந்திக் காரணம் கூறுவது ஏற்றுக் கொள்ள முடியாத விடயம்.

அதனை ஆரம்பத்திலேயே கூறியிருந்தால், நியாயமான காரணமாக அது எடுத்துக் கொள்ளப்பட்டிருக்கும்.

ஆரம்பத்தில் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதை மறைத்து, அதற்கான தடயங்களையும் மறைத்து விட்டு, விபத்து என்று காரணம் காட்டி விட்டு, எல்லாம் வெளிச்சத்துக்கு வந்த பின்னர், உண்மையான காரணத்தைக் கூற முயன்றால் அது சந்தேகத்தையே ஏற்படுத்தும்.

இப்போது, நிறுத்தாமல் சென்றதால் பொலிசார் சந்தேகத்தின் பேரில் சுட்டனரா அல்லது திட்டமிட்டே சுட்டனரா என்ற கேள்வி எழுந்திருக்கிறது.

அது மாத்திரமன்றி, மோட்டார் சைக்கிளின் பின்னால் இருந்து பயணம் செய்த மாணவன் சுவரில் மோதித்தான் உண்மையில் இறந்தாரா அல்லது தமது தவறை மறைக்க பொலிசாரே அவரையும் கொலை செய்தனரா என்றும் சந்தேகங்கள் எழுப்பப்படுகின்றன.

நிறுத்தாமல் சென்ற ஒரு மோட்டார் சைக்கிளைத் தடுத்து நிறுத்துவதற்கு, அல்லது துரத்திப் பிடிப்பதற்கு பொலிசாருக்கு பல வழிகள் உள்ளன. அத்தகைய வழிகள் எதையும் நாடாமல் துரிதமாகத் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டிருக்கிறது.

அதுமாத்திரமன்றி அந்த துப்பாக்கிச் சூட்டுக்கான தடயங்களும் மறைக்கப்பட்டிருக்கின்றன.

இதன் மூலம், வடக்கில் தமிழ் மக்கள் மத்தியில் பெரும் பீதி ஏற்படுத்தப்பட்டிருக்கிறது. வெளியில் செல்பவர்கள் பாதுகாப்பாகத் திரும்பி வர முடியுமா என்ற கேள்வியை ஏற்படுத்தியிருக்கிறது.

யாழ்ப்பாணம் மற்றும் வன்னிப் பகுதிகள் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்த காலத்தில், எந்த நேரத்திலும் யாரும் தனியாகப் பயணம் செய்யக் கூடியளவுக்குத் தனிமனிதப் பாதுகாப்பு இருந்தது.

1996இல் யாழ்ப்பாணமும் 2009இல் வன்னியும் படையினரின் கட்டுப்பாட்டில் வந்த பின்னர் தனிமனிதப் பாதுகாப்பு என்பது நிச்சயமற்றதொன்றாக மாறியது.

வெளியில் சென்றவர் திரும்பி வருவாரா? வீட்டுக்குள் இருப்பவர் கூட அச்சமின்றி உறங்க முடியுமா என்றளவுக்கு நிலைமை மாறியது.

கொலை, ஆட்கடத்தல், கைது என்று பல்வேறு வடிவங்களில் தனிமனிதப் பாதுகாப்பு கடந்த ஆட்சிக் காலத்தில் கேள்விக்குரிய விடயமாக இருந்து வந்தது.

எனினும், கடந்த ஜனவரியில் ஏற்பட்ட ஆட்சிமாற்றத்துக்குப் பின்னர், ஆங்காங்கே சில கொலைகள், வாள்வெட்டுகள் மற்றும் சமூக விரோத செயல்கள் இடம்பெற்றிருந்தாலும் இதுபோன்ற படுகொலைகள் நிகழ்கின்ற சூழல் இப்போதுதான் உருவாகியிருக்கிறது.

இந்தச் சம்பவத்துக்குப் பின்னர், வடக்கில் மீண்டும் அமைதியைக் குழப்பும் முயற்சிகள் திட்டமிட்டே அரங்கேற்றப்படுகிறதா என்ற சந்தேகங்கள் வலுப்பெற ஆரம்பித்திருக்கின்றன.

வடக்கில் நிலைகொண்டுள்ள இராணுவத்தினர்தான் தமிழ் மக்களின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் என்றும், பொலிசார் மூலமே சட்டம் ஒழுங்கு பராமரிக்கப்பட வேண்டும் என்றும் தமிழர் தரப்பில் வலியுறுத்தப்பட்ட சூழலில் தான் பொலிசாரின் இந்த அத்துமீறல் அரங்கேறியிருக்கிறது.

தமிழ் மக்களுக்கு எதிரான இனப்படுகொலைகள் இராணுவத்தினரால் தொடங்கப்பட்டதல்ல; அது பொலிசாரினால் தான் தொடங்கப்பட்டது.

1974 ஆம் ஆண்டு பொலிசாரே, தமிழாராய்ச்சி மாநாட்டின் போது, துப்பாக்கிச் சூடு நடத்தி, ஒன்பது தமிழர்களின் படுகொலையைத் தொடங்கி வைத்திருந்தனர்.

இப்போது, யாழ்.பல்கலைக்கழக மாணவர்கள் இருவர் கொல்லப்பட்ட சம்பவத்தின் பின்னணியும் அதுபோன்றதொன்றாக இருக்குமோ என்ற சந்தேகங்கள் எழுவது தவிர்க்க முடியாததாகிறது.

அதேவேளை, பொலிசார் மீது நம்பிக்கையீனத்தை ஏற்படுத்த வேண்டும் என்ற உள்நோக்கத்துடன் கூட இதுபோன்ற சம்பவங்கள் நிகழ்த்தப்பட்டிருக்கலாம்.

வடக்கில் இராணுவம் இருப்பதை நியாயப்படுத்துவதற்கும் படைவிலக்கலைத் தடுப்பதற்கும் கூட இதுபோன்ற சதிகள் அரங்கேற்றப்பட்டிருக்கலாம்.

வடக்கில் அமைதியைக் குழப்பும் நோக்கில் பல்வேறு சக்திகள் இயங்குகின்றன; பல்வேறு சதிகள் அரங்கேற்றப்படுகின்றன. அதனால்தான், தமிழ் மக்களுக்கு பல்வேறு சந்தேகங்களும் ஏற்படுகின்றன.

இதுபோன்ற சம்பவங்கள் தமிழ் மக்களுக்கு நம்பிக்கையீனத்தையும் குழப்பத்தையும் மாத்திரம் ஏற்படுத்தாது, அரசாங்கத்துக்கும் அவப்பழியையும் தான் ஏற்படுத்தும்.

நல்லாட்சியை நடத்துவதாகக் கூறிக் கொள்ளும் ஓர் அரசாங்கத்துக்கு இதுபோன்ற சம்பவங்கள் சர்வதேச அளவில் குறிப்பாக மனித உரிமை அமைப்புகள் மத்தியில் கடுமையான அவப்பெயரையே ஏற்படுத்தும்.

இந்தச் சூழலில், மாணவர்களின் கொலைகள் தொடர்பாகப் பக்கசார்பற்ற விசாரணை நடத்தப்படும் என்ற ஜனாதிபதியின் உறுதிமொழியும் பொலிசார் மீதான உடனடி சட்ட நடவடிக்கையும் நம்பிக்கைகளை ஏற்படுத்தியிருந்தாலும் இந்தச் சம்பவத்துக்கான முழுமையான பின்னணி கண்டறியப்படுமா என்ற கேள்விகள் எழுந்திருக்கின்றன.

ஏனென்றால், நிறுத்தாமல் சென்ற வாகனத்தின் மீது நடத்தப்பட்ட ஒரு தாக்குதலாக விசாரணையை முடித்துக் கொள்ளப்படும் நிலை ஏற்பட்டால், இதுபோன்ற சம்பவங்களின் பின்னால் இருந்த சூழ்ச்சிகள் அல்லது சக்திகள் கண்டறியப்படாமலேயே போய் விடும்.

இது ஒரு தற்செயலான சம்பவமாக நிகழ்ந்திருந்தால் இத்தனை மூடிமறைப்பு முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டிருக்காது.

அதையும் தாண்டி பல்வேறு சந்தேகத்துக்குரிய விடயங்கள் நடந்தேறியிருப்பதும் இதனை நியாயப்படுத்துவதற்கு கொழும்பு வரை முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டிருப்பதும் பின்புலம் பற்றிய வலுவான சந்தேகங்களை எழுப்பியிருக்கிறது.

இத்தகையதொரு நிலையில் முழுமையான உண்மை வெளிக்கொண்டு வரப்பட்டு, குற்றவாளிகள் தண்டிக்கப்படுவதை அரசாங்கம் உறுதிப்படுத்தினால் மாத்திரமே, தமிழ் மக்கள் மத்தியில் நம்பிக்கை பிறக்கும்.

ஆபத்தின்றி வீதியில் நடமாட முடியும் என்ற நிலையை தமிழ் மக்கள் மத்தியில் தோற்றுவிக்காமல் நல்லிணக்கத்துக்கான கதவுகளைத் திறக்க முடியாது.

அதுபோன்று கண்துடைப்பு விசாரணைகளின் மூலம் இந்த விவகாரம் அமுக்கப்பட்டு விடுமேயானால் நம்பிக்கையீனமும் அச்சமும் அதிகரிக்கும். அது இப்போது தோன்றிருக்கும் இடைவெளியை மேலும் அதிகரிக்கச் செய்து விடும்.