வடமராட்சியின் ஒளி குன்றாத விளக்கு தங்கவடிவேல் மாஸ்டர்.

தான் எங்கு சென்றாலும் அந்த இடத்தில் அறிவு விளக்கை ஏற்றிவைத்த ஆசிரியப் பெருந்தகை என்று அக்காலத்தே எல்லோராலும் போற்றப்பட்டவரே வல்வை கம்பர்மலையை சேர்ந்த தங்கவடிவேல் மாஸ்டர். இவரோடு தொடர்புபட்ட ஒவ்வொருவரும் தத்தம் அறிவுக்கும் தாம் எடுத்து காரியங்களுக்கும் ஏற்ப இவருடைய ஆற்றலை விளக்கி தமது பக்கமாக சேர்த்துக் கொள்வார்கள். காரணம் இருள் உள்ள இடங்கள் எல்லாம் இந்த விளக்கை தம்மோடு வைத்துக்கொள்ள ஆசைப்பட்டன. பொதுவாக விளக்கை வைத்திருப்பவர் அதை இரவல் விளக்கென்று சொல்வதில்லை ஏனென்றால் ஒளி உலகத்திற்கு பொதுவானது, அதுபோல இவரும் எல்லோரும் நேசிக்கும் பொது உடமைவாதியே.

தமிழ், கரபந்தாட்டம், ஓவியம், இசை, நாடகம், அரசியல், சிந்தனை, மேடைப்பேச்சு என்று பலதரப்பட்ட திறமைகளை தன்னகத்தே உள்ளடக்கியவர். இவருடன் கரபந்தாட்டம் விளையாடிய அனுபவம், இவர் தலைமைதாங்கிய பட்டிமன்ற மேடையில் பேசிய அனுபவம், இவரோடு மனம்விட்டு பேசி மகிழ்ந்த அனுபவம் என்று இவருடைய பல்துறை ஆற்றல்களையும் நேரில் வாழ்ந்து பார்த்த காரணத்தினால் இதுதான் இவர் என்று ஒரு குறிப்பிட்ட சாயம் பூசிவிட என்னால் முடியவில்லை.

ஆனால் இவரிடம் இருந்த மிகப்பெரிய திறமை எதற்குமே ஏன் என்ற கேள்வி எழுப்புவதாகும், காரணம் எல்லாக் கேள்விகளுக்கும் அவரிடம் பதில் இருந்தது. அதேவேளை ஒரு மனோதத்துவ நிபுணர் போலவும் நடவடிக்கைகள் இருக்கும், மனித மனங்களை வாசித்தறியும் ஆற்றல் கைவரப்பெற்றவர் என்பதால் இவர் கலை நுட்ப வாழ்வை அக்காலத்தே பலரால் புரிய முடியாதிருந்தது.

எழுத்தாளர் தீபம் பார்த்தசாரதியைப் பற்றி என் இளமைக்காலத்தில் இவருடன் பேசிக் கொண்டிருந்தேன், அவர் ஒரு பத்தாம் பசலி என்று கூறி காரணங்களை ஒரு மணி நேரம் தொடர்ந்து விளக்கினார். அவ்வளவு தூரம் அவரிடம் பரந்த வாசிப்பு ஞானம் இருந்தது.

இவர் எடுக்கும் அதிரடி முடிவுகள் பலதை இவர் இல்லாத இடத்தில் ஆச்சரியமாகப் பேசிய எழுபதுகளின் மனிதர்களின் கருத்துக்களை காதுகளில் இன்றும் பசுமையாக சேகரித்து வைத்துள்ளேன். அந்த உரையாடல்கள் எல்லாமே மற்றவர்களால் அவரை புரிய முடியாத காரணத்தால் உருவான கணிப்புக்களே என்பதை புரிய முடிந்தது.

கரபந்தாட்ட மைதானங்களிலும், எண்ணற்ற பெரிய ஆட்டங்களிலும் நடந்த சம்பவங்களை ஆண்டுவாரியாக தொகுத்து என் மனமென்ற உலையில் போட்டு அலசியிருக்கிறேன், அதற்கு என்னால் கண்டு பிடிக்கக்கூடிய ஒரே விடை என்ன பெருமையை கொடுத்தாலும் மதியாதார் தலைவாசலில் மாஸ்டர் மறுபடியும் கால் வைப்பதில்லை, முள் முடிகளை தன் தலையில் சூடுவதும் இல்லை என்பதுதான்.

போலியான பட்டங்கள், பதவிகள், புகழை விரும்பாத மனிதனை சாதாரண சமுதாயத்தால் புரிந்து கொள் முடிவது கடினமே.

இவரை நான் கரபந்தாட்டத்தில் ஒரு சமுதாயப் போராளியாக பார்த்திருக்கிறேன், அக்காலத்தே உயரமான தோற்றமுடைய விளையாட்டு வீரர்கள் என்றால் வடமராட்சியில் இரண்டு பேரை சொல்லலாம் ஒருவர் தங்கவடிவேல் மாஸ்டர், இன்னொருவர் வல்வையின் சின்னத்துரை இந்த இரண்டு பேரும் மைதானத்தின் எதிர்ப்பக்கத்தில் நின்றால் புயலில் பாய்மரக்கப்பல் ஓடியது போன்ற நிலைதான், அடிகள் நெற் றிம்மில் பட்டு சரமாரியாக பொழிந்து கொண்டிருக்கும்.

சின்னத்துரையின் கை இடது பக்கம் மட்டுமே வேலை செய்யும், தங்கவடிவேல் மாஸ்டரின் கைகள் இடம் வலம் இருபக்கங்களாலும் வேலை செய்யும் இதனால் அவர் அக்கால வல்வைக்கு மட்டுமல்லகுடாநாடு முழுவதிற்குமே நட்சத்திர வீரராக வலம் வந்தார்.

நான் சிறுவனாக இருந்தபோது இவரை உடுப்பிட்டி நவஜீவன் விளையாட்டுக்கழகத்தில் முதன் முதலாகக் கண்டிருக்கிறேன், கடைசியாக நாட்டை விட்டு வெளியேறும் முன்னர் கம்பர்மலை பாரதி சனசமூக நிலையம் நடத்திய கரபந்தாட்டப் போட்டியில் இமையாணன் ஐக்கிய விளையாட்டுக்கழகத்தில் மின்னலடி வீரன் விஜயன், ராஜேஸ்வரன், அவர் சகோதரர் கொண்ட அணியில் விளையாடியதைப் பார்த்திருக்கிறேன்.

அந்த ஆட்டம் அரையிறுதி ஆட்டத்தில் சூல் கொண்ட மேகமானது. இமையாணனும், இவர்களும் விiளாடிய பெரும் சர்ச்சைக்குள்ளாகி, வழக்கு வைக்குமளவுக்கு சென்றது.

பொதுவாக ஓவர் கேம் ஆட்டத்தில் பெரும் வீரர்களாக இருந்தவர்கள் எல்லாம் கட்டையாக இருந்தவர்களே. நெட்டையான தோற்ற முடையவர்கள் அந்த விளையாட்டில் தாக்குப்பிடிப்பது கடினம் காரணம் கீழ்க்கை என்று ஓர் அடி இருந்தது, அது நெட்டையான உருவமுள்ளவர்களுக்கு மிகவும் கடினம். இதனால் நெட்டையர்கள் பலரால் ஓவர் கேமில் பிரகாசிக்க முடியவில்லை, உதாரணமாக எதிர்பாராமல் ஒரு பந்து கீழ்க்கைக்கு வந்தால் சின்னத்துரையால் அதைத் திருப்பி அனுப்ப முடியாது.

ஆனால் இதையெல்லாம் தாண்டி முழந்தாள் போட்டு பந்துகளை எடுத்து எல்லா நேரங்களிலும் பந்தை மடக்காமல் எத்தனை நூறு பந்துகள் வந்தாலும் சலிப்பின்றி ஆடும் பொறுமை மிக்க ஆட்டக்காரராக மாஸ்டர் இருந்தார்.

கரபந்தாட்டத்தில் கொடி ஆட்டம் என்று ஒரு முறை இருந்தது, காற்றில் தவழும் கொடி போல பந்து கோலி வளைவாக அரை வட்டமாகச் சுழன்று போவது, அது கரபந்தாட்ட சாகசக்காரர்களால் மட்டும் அடிக்க முடிந்த அடி. அந்தப் பந்தை திருப்பி அனுப்பும்போது மறுபக்கத்திலும் அதே கொடிபோல வளைத்து அடிக்காவிட்டால் பவுல் ஆகிவிடும். அந்த அடியை வடமாகாணத்தில் சிறப்பாக அடித்தது மாஸ்டரைப் போல வேறும் எவரும் இல்லை.

எழுபதுகளில் ஓவர்கேம் வடமாகாணத்தில் பேராட்சி புரிந்து வந்தது, அந்த அலையில் முடிசூடா மன்னர்களாக இருந்தவை இரண்டு கழகங்கள் ஒன்று இமையாணன், அடுத்தது அல்வாய் யூனியன். லாலா சோப், தினகரன் போன்ற பாரிய ஆட்டங்களில் இந்த இரண்டு அணிகளுமே மோதும்.

இவர்களுக்கு ஈடு கொடுத்து ஆட வேண்டுமானால் நீர்வேலி சிவன், உடுவில் ஸ்டார், தையிட்டி ஸ்டார் போன்ற கழகங்களாலேயே 13 புள்ளிகளையாவது நெருங்க முடியும். இந்தக் கழகங்கள் வெற்றிக் கோப்பைகளை பெற விரும்பினால் கண்டிப்பாக தங்கவடிவேல் மாஸ்டரை மேலதிகமாக அழைப்பார்கள்.

இமையாணன் என்ற மாபெரும் சக்தியை முறியடிக்கும் அகோர ஆட்டங்கள் நடைபெற்ற மைதானங்களில் எல்லாம் நான் தங்கவடிவேல் மாஸ்டரை எதிரணியில் காண்பேன். இமையாணன் என்பது கூட இமையாணன் குஞ்சர்கடை பகுதியை மட்டும் கொண்ட அணியல்ல நெல்லியடி ஸ்பேர்ஸ் விளையாட்டுக்கழக கனகு, இன்னொரு மாஸ்டர் ஆகிய இருவர் வேறிடங்களை சேர்ந்தவர்களே.

அக்காலத்தே ஈடு இணையில்லாத கரபந்தாட்ட ஓவர் கேம் நாயகன் இமையாணன் அப்புக்குட்டிதான், அவருக்கு நேர் எதிராக அவருடைய வயதில் தொடர்ந்து களத்தில் நின்று விளையாடிய இன்னொருவர் மாஸ்டர்.

ஒரு தடவை வதிரி தமிழ் மன்னறம் நடத்திய கரபந்தாட்டப் போட்டியில் இறுதியாட்டத்தில் இமையாணன் பீ பிரிவை எதிர்த்து வதிரி தமிழ் மன்றத்தின் செலக்டட் அணி மோதிக் கொண்டிருந்தது. அதில் தங்கவடிவேல் மாஸ்டர் விளையாடிக் கொண்டிருந்தார்.

அந்த ஆட்டத்தின் பிரதம விருந்தினராக அல்பிரட் துரையப்பா வந்திருந்தார், அவருடைய முட்டைக் கண்கள் மாஸ்டரின் விளையாட்டில் அங்குமிங்கும் சுழன்று கொண்டிருந்தன, பொறி கக்கும் போட்டி கடைசி வெற்றிப்புள்ளிக்கு முந்திய கேம் போலில் ஒரு பவுல் சரியாக ஊதப்படவில்லை இதனால் பலத்த சிக்கல் ஏற்பட்டது, கலவரம் ஏற்படுமளவுக்கு போனது.

மாஸ்டர் தலையிட்டு புள்ளியை இமையாணனுக்கே வழங்கும்படி கூறி, எஞ்சியுள்ள ஒரேயொரு சைட் அவுட்டை ஆதாரமாக வைத்து தொடர்ந்து விளையாடச் சொன்னார். தேர்ட் லைன் கோர்ணரில் இருந்து அடுத்த பக்கம் கோர்ணருக்கு பந்தை சுழற்றி, கைபிடியை மாற்றி அடித்துக் கொண்டிருந்தார். அந்த அசைந்தாடும் பூங்கொடி நகர்வை இமையாணனால் எதிர் கொள்ள முடியவில்லை இமையாணன் தோல்வியடைந்தது, இதை சிறீலங்கா போலீஸ் அணியின் சிறந்த விளையாட்டு வீரன் பெர்ணாண்டோவும் பார்த்துக் கொண்டிருந்தான்.

எழுபதுகளில் நடந்து முடிந்த இந்தப் போட்டி இன்றும் மறக்கமுடியாத காவியமாக என் மனதில் இருக்கிறது, அன்று தங்கவடிவேல் மாஸ்டர் எழுதிய கரபந்தாட்டக் காவியத்தைப் பார்த்து இன்றும் மறக்க முடியாமல் தவிக்கிறேன்.

பின்னர் வல்லை கல்வி மன்றத்தில் படிப்பித்த காலத்தில் அவருடைய வழிகாட்டலில் எண்ணற்ற மாணவர்கள் புதுமைச் சிந்தனைகளால் வயப்பட்டு, நல்ல ஆளுமையுள்ள மனிதர்களாக வடித்தெடுக்கப்பட்டதை நேரில் பார்த்திருக்கிறேன். அவர் தலைமையில் வல்வை ரேவடி கடற்கரையில் ஒரு பட்டிமன்றத்தில் பேசியபோது அவர் பேச்சாற்றலைக் கண்டு ஆச்சர்யப்பட்டிருக்கிறேன்.

கலை, இலக்கியம், படைப்பாளிகள், தமிழகத்தின் எழுத்தாளர்கள், முற்போக்கு, நற்போக்கு, சாதி ஒடுக்குமுறைகள் என்று பல விடயங்களை அவருடன் கரபந்தாட்ட மைதானங்களில் பேசியுள்ளேன்.

அவருடைய காலத்தில் வல்வையில் வந்த அலையொளி சஞ்சிகையிலும் பங்களிப்பை வழங்கினார், யாழ்ப்பாணத்தின் சாதி ஒடுக்குமுறைகளுக்கு எதிரான கதைகள் வந்தபோது அந்தக் கையெழுத்து சஞ்சிகையே திருடப்பட்டு, மோதல்கள் வெடித்த சம்பவம் ஒன்றும் அக்காலத்தே நடைபெற்றது.

இளமைக்காலத்தே சீன கம்யூனிச சிந்தனைகளால் கவரப்பட்டதாலும், எனது தந்தை இலங்கைக் கம்யூனிஸ்ட் கட்சியில் இருந்தவர் என்பதாலும் இடதுசாரி சிந்தனைகள் இயல்பாகவே என்னுள் உறங்கிக்கிடந்தன. அவற்றை மாஸ்டரின் பேச்சுக்களும், கருத்துக்களும் புடம் போட்டு தந்தன. எனது எழுத்துக்களில் மாஸ்டர் எனக்கே தெரிந்தார்.

மற்றவர்களுக்கும் மாஸ்டருக்கும் ஒரு நுட்பமான இடைவெளி இருந்தது, மற்றவர்கள் ஒரு தவறு கண்டால் மற்றைய 99 வீத நன்மைகளையும் கூடவே பொசுக்கும்படி கூறுவார்கள். தமிழர்கள் அழிவுக்கு இதுவே முக்கிய காரணம், ஆனால் மாஸ்டர் அப்படியல்ல புற்றுநோய்க்கான லேசர் சிகிச்சை போல நோயுள்ள இடத்தில் மட்டும் வைத்தியம் செய்யும் சமுதாய சிற்பியாக இருந்தார். அதை இன்றளவும் நிறையப்பேர் கற்றுக்கொள்ளவில்லை அதுதான் இத்தனை பெரிய சமுதாய உடைவு ஏற்பட்டுள்ளது.

சாதியத்திற்கு எதிரான போராட்டங்களிலும் சமுதாயம் என்ற கண்ணாடியை சுக்கு நூறாக உடைக்காமல் காரியமாற்றும் அறிவாற்றல் அவரிடம் இருந்தது.

இதனால்தான் அவர் கூறும் கருத்துக்களிலும், அவர் முன்னெடுக்கும் போராட்ட நியாயங்களிலும் பிழை பிடிக்க மற்றவர்களால் முடியாமலே போய்விட்டது, கடைசிவரை.

புலிகளின் காலத்தில் சாதியம் அவர்களின் ஆயுதங்களுக்கு பயந்து உறங்கியது இப்போது மறுபடியும் விழித்துவிட்டது அது அழியவில்லை என்று தெளிவாகவே சொன்னார், அது உண்மை இன்று அதையே நிதர்சனமாகக் காண்கிறோம்.

நாங்கள் ஒரு சாதியே ஒடுக்கப்படுகிறது என்று பொத்தாம் பொதுவில் கருதுகிறோம் ஆனால் சாதிக்குள் சாதியாக எல்லாச் சாதிகளுமே இந்தத் தொழு நோயால் துயரடைகின்றன, ஆகவே எல்லோருமே இந்த விளக்கை நமது விளக்காக மனதளவில் போற்றினார்கள், அனைத்துச் சாதிகளுடன் பழகி இதை நான் அவதானித்துள்ளேன்.

உதாhரணம் அவர் வாழ்ந்த கம்பர்மலையில் இடம் பெற்ற பல தலைகளை அறுத்து வல்லை வெளியில் வைத்த கம்பர்மலை கொலை வழக்கை வாசித்தால் இதை மேலும் ஆழமாகப் புரியலாம்.

ஆகவேதான் சாதிப் பிரச்சனையை யாருக்கு சார்பாக எங்கு எப்படி ஆரம்பிப்பதென்று தொடங்கினால் அது அடி முடி காணமுடியாத பெருமானகவே நின்றது. இந்த தீராத சமுதாய தொழுநோய் அனைத்துச் சாதிகளையும் பீடித்து கடைசியில் யாழ்ப்பாண சமுதாயத்தையே வேரோடு அழித்தது. அதனால்தான் அனைத்து சாதிகளிலும் அந்த நோயை வேறறுக்க போராடிய தோழர்கள் அனைவரும் ஏற்றுக் கொண்ட முன்னோடியாக தங்கவடிவேல் மாஸ்டர் திகழ்ந்தார்.

ஈழ விடுதலைப் போராட்ட காலத்திலும் இந்திய இராணுவத்தின் விசாரணைகளை சந்தித்திருக்கிறார், காரணம் ராஜீவ் கொலை வழக்கில் தற்கொலை செய்த சிவராசனின் தந்தை உடுப்பிட்டியில் இவருடன் ஆசிரியராக பணிபுரிந்த காரணத்தினால் விசாரணையை சந்திக்க நேர்ந்தாகக் கூறியிருக்கிறார்.

அதேவேளை புலிகளுக்கு எதிரான கருத்துக்களையும் அவர்களிடம் நேரடியாகவே துணிந்து முன் வைத்திருக்கிறார், அவர் கருத்துக்களை அவர்களும் ஏற்றுக்கொண்டிருக்கிறார்கள்.

இப்படி சகல ஆளுமைகளும் ஒருங்கே வாய்க்கப்பெற்ற இவர்.. இன்று சாதியத்தை தமது சொந்தப் பிழைப்பாக்கியோரைப் போல வாழ்ந்தவரல்ல. மற்றவர்களைப் போல சமுதாயத்தை ஏமாற்றி உயரக்கூடிய வாய்ப்புக்கள் அதிகம் இருந்தும், எதனுடனும் சமரசம் காணாது உண்மையின் வழி தன்னை நிலை நிறுத்திக் கொண்டார். இதனால் மக்கள் தங்கவடிவேல் மாஸ்டரை இந்தப் பக்கமாகவோ அந்தப் பக்கமாகவோ பார்க்காது ஒரு மகத்தான மனிதராகவே நேசித்தார்கள்.

இன்று அவருடைய மகன் சௌந்தரை பார்க்கிறேன், தக்கார் தகவிலார் என்பதெல்லாம் அவர் எச்சத்தால் நோக்கப்படும் என்ற குறளை பிள்ளைச் செல்வத்தையே கருதியே வள்ளுவர் எழுதினார் என்ற கோணத்தில் வைத்துப் பார்த்தால் மாஸ்டரின் எச்சமே சௌந்தர் என்பேன்.

சிறந்த ஓவியராக, சிறந்த சிந்தனையாளராக, சிறந்த இசையின் மதிப்பீட்டாளராக, சமுதாய போராளியாக தன் தந்தையின் இடத்தை அவர் நிரப்ப போராடிக் கொண்டிருப்பது எனக்கு எல்லையில்லா மகிழ்வைத் தருகிறது.

வடமராட்சியில் நான் கண்ட மிகச்சில மனிதகுல மாணிக்கங்களில் தங்கவடிவேல் மாஸ்டரும் ஒருவர் என்ற மகிழ்வு என்போன்ற பலரது வாழ்வுக்கு என்றும் துணையாக நிற்கிறது.

மாஸ்டருடன் ஒரு நாள் மைதானத்தில் நின்று விளையாடினாலே போதும் பக்கத்தில் நிற்பவன் தானாகவே பண்படுத்தப்பட்டுவிடுவான் என்று அக்காலத்தே கூறுவார்கள். அத்தகைய மாபெரும் விளையாட்டு வீரனின் அணிகளில் விளையாடி, அவரோடு அளவளாவி அவர் வாழ்ந்த இனிய காலத்தை மனதில் சுமப்பதைப் போல சுகம் வேறென்ன இருக்கப் போகிறது வாழ்வில்..

விளக்கின் சுடருக்கு பக்கங்கள் இல்லை அது பக்கச் சார்பின்றி அனைத்து இடங்களின் இருளையும் போக்குகின்றது. தங்கம் எங்கிருந்தாலும் அதன் பெறுமதி மாறுவதில்லை தங்கவடிவேல் மாஸ்டரும் இப்படித்தான்.

இப்படி அவரின் சகல பக்கங்களையும் அறிந்தால் மேலும் பல அதிசயமான உண்மைகளை அறியலாம். காரணம் அவரைப் போல இன்னொருவர் இனி இல்லை.

கி.செ.துரை ( டென்மார்க் ) 14.07.2017