வன்னியிலும் வாகரையிலும் வாடும் மக்களுக்கு ஆதரவளிப்பது யார்?

(எஸ்.கருணாகரன்)

மாவை சேனாதிராஜா தலைமையில், தமிழரசுக்கட்சியின் அணியொன்று கனடாவுக்குப் பயணமாகியுள்ளது. இந்த அணியில், நாடாளுமன்ற உறுப்பினரும் தமிழரசுக் கட்சியின் தலைவருமான மாவை சேனாதிராஜா, வட மாகாணசபை உறுப்பினர் ஆனோல்ட், தமிழரசுக் கட்சியின் சிரேஷ்ட உறுப்பினரும் கிழக்கு மாகாண விவசாய அமைச்சருமான துரைராஜசிங்கம் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். கனடாவில் உள்ள தமிழரசுக் கட்சி அனுதாபிகள், அபிமானிகள், ஆதரவாளர்கள் போன்றவர்களை, இந்த அணியினர் சந்திக்கச் செல்வதாகவே, அதன் நிகழ்ச்சி நிரலில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதற்கப்பால், அங்குள்ள தமிழரசுக் கட்சி ஆதரவாளர்களின் முயற்சியினால், சிலவேளை, கனடிய நாடாளுமன்ற உறுப்பினர்களில் ஒரு சிலரையோ அல்லது அரச பிரதிநிதிகளில் யாராவது சிலரையோ தனிப்பட்ட முறையில் சந்திக்கலாம். இதெல்லாம் தமிழ் மக்களுடைய அரசியல் கணக்கு வழக்குகளில் சேர்க்கப்படப்போவதில்லை. வேண்டுமானால் தமிழரசுக்கட்சியின் கணக்குக்கு உதவக்கூடும்

கனடாவுக்குச் செல்லும் சேனாதிராஜா குழுவை, அங்குள்ள மக்கள் சந்திப்பதற்காக, கனடிய ஏற்பாட்டாளர்கள் பல்வேறு விதமான ஒழுங்குகளைச் செய்திருக்கிறார்கள். இதற்கான விளம்பரங்களும் கவர்ச்சிகரமாக, விதம்விதமாகச் செய்யப்பட்டுள்ளன.

இந்த விளம்பரங்களில் ஒன்றில், ‘தமிழின விடுதலைக்காக, ஏழு ஆண்டுகள் சிறையிருந்த செம்மல் மாவை சேனாதிராஜா கனடா வருகை’ என்று தலைப்பிட்டு, சேனாதிராஜாவின் இளமைக்காலத் தோற்றமுள்ள, கறுப்பு – வெள்ளைப் படம் ஒன்றும் இணைத்து, வெளியிடப்பட்டுள்ளது.

அது, சேனாதிராஜா 1970 களில், இளைஞர் பேரவையில் இருந்த காலத்தில், சிறையிருந்தபோது எடுக்கப்பட்ட படம். அந்தப் படமே, சேனாதிராஜாவின் அரசியல் முதலீடாகப் பல சந்தர்ப்பங்களிலும் பயன்படுத்தப்பட்டுள்ளது.

தேர்தல்காலங்களில் அந்தப் படத்தை, அவருடைய ஆதரவாளர்கள் எப்படியும் முன்னரங்குக்குக் கொண்டு வருவார்கள். இப்போது, கனடா ஆதரவாளர்களும் அந்தப்படத்தைப் பயன்படுத்தத் தொடங்கியுள்ளனர். முன்னெப்போதோ, சிறையிருந்ததை உச்சக்கட்ட விடுதலைப் பங்களிப்பாகச் சித்திரிக்கும் அரசியல் இது.

ஆனால், மாவை சேனாதிராஜாவை விட, மூன்று மடங்கு அதிகமான காலம், பல தமிழ் அரசியல் கைதிகள் சிறையில் உள்ளனர்; பலர் 20 ஆண்டுகளுக்கும் மேலாகச் சிறையிலிருந்து விட்டு வந்திருக்கிறார்கள். பல ஆயிரக்கணக்கானவர்கள் போர்க்களத்திலே, தங்களின் உடல் உறுப்புகளையே இழந்து, தியாகம் செய்திருக்கிறார்கள். பல குடும்பங்கள், தங்கள் உறுப்பினர்களையே இழந்து, தியாகம் செய்துள்ளன. ஆகவே, அந்தப் பழைய சரக்கைத்தான், புதிதாக மெருகேற்றி, ஏதாவது செய்வதற்கு காரணமும் உண்டு.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அரசியல் நிலைப்பாடுகள், இனப்பிரச்சினைக்கான தீர்வு முயற்சிகளில் ஏற்பட்டுள்ள தேக்கம், அரசமைப்புத் திருத்தம் தொடர்பான குழப்ப நிலை, வடக்கு மாகாணசபையின் பிரச்சினைகள், மைத்திரி – ரணில் அரசாங்கத்துடன் கூட்டமைப்புக் கொண்டிருக்கும் உறவு, கூட்டமைப்பின் அடுத்த கட்டம் போன்றவற்றில் எழுந்துள்ள கேள்விகள், சேனாதிராஜாவை நோக்கி எழுப்பப்படுவதற்கான சூழல் இருக்கிறது.

குறிப்பாக, சேனாதிராஜா அணியின் கனடியப் பயணத்தில், கஜேந்திரகுமாரின் ஆட்கள் என்று கருதப்படுவோரும், முதலமைச்சரின் ஆட்கள் என்று கூறப்படும் விக்னேஸ்வரனுக்கு ஆதரவாக இருப்போரும் சேனாதிராஜாவைக் குறிவைத்து, இந்தக் கேள்விகளை எழுப்பக்கூடும். ஆகவே, அவற்றைத் தடுப்பதற்காகவே சேனாதிராஜாவின் இந்தப் போராளி பிம்பமும் தியாக அடையாளமும் கட்டமைக்கப்பட்டுள்ளது.

1970 களில் சேனாதிராஜாவோடும் தமிழரசுக் கட்சி, தமிழர் விடுதலைக் கூட்டணி, இளைஞர் பேரவை போன்றவற்றோடு தொடர்புபட்டிருந்தவர்களே, சேனாதிராஜாவின் கனடியப் பயண நிகழ்ச்சி நிரலில் முக்கியமான சுற்றுவட்டத்தினராக உள்ளனர். இவர்கள் சேனாதிராஜாவின் அரசியல் பங்களிப்பைப் பற்றிச் சிறப்பாகக் கூறி, இன்றைய விமர்சனங்களின் சூட்டைத் தணிக்க முற்படுவர்.

இவ்வாறு, மிகக் கவனமாகத் திட்டமிடப்பட்டுச் செய்யப்படும் சேனாதிராஜாவின் இந்தப் பயணத்தினால், தமிழ் மக்களுக்கு ஏற்படப்போகும் பயன்கள் என்ன? இந்தக் கேள்வியே இன்று முக்கியமானது.

ஏனென்றால், இப்படித்தான் முன்னரும் பல சுற்றுப் பயணங்களைத் தமிழ்த் தலைவர்கள் செய்திருக்கிறார்கள். தமிழரசுக் கட்சியினர், தமிழர் விடுதலைக் கூட்டணியினர், தமிழ்த்தேசியக் கூட்டமைப்பினர், தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியினர் என்று ஒவ்வொரு தரப்பும் பல சுற்றுப் பயணங்களைச் செய்திருக்கின்றனர்.

இந்தப் பயணங்களின்போது, பல சந்திப்புகளும் ஒன்று கூடல்களும் கலந்துரையாடல்களும் ஆலோசனைகளும் நிதிசேகரிப்புகளும் நடந்துள்ளன. இருந்தும், தமிழ் மக்களுக்கு இவற்றினால் ஏதாவது உருப்படியான பயன் குறிப்பிட்டுச் சொல்லக்கூடிய அளவுக்குக் கிடைத்துள்ளதா? என்றால், இல்லை என்பதே தெளிவான பதில்.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு வடக்கு மாகாணசபையின் முதலமைச்சர் விக்னேஸ்வரன் தலைமையில் மாகாணசபை அமைச்சர்கள் அடங்கிய குழு ஒன்றும் கனடாவுக்குப் பயணமாகித் திரும்பியிருந்தது. அதற்கு முன்பு இலண்டனுக்கும் அந்தக் குழு சென்றிருந்தது. ஆனால், அதன் பிறகு நடந்த முன்னேற்றங்கள் என்ன? என்று யாராவது கூற முடியுமா?

இதுதான் நம்முடைய பிரச்சினையே. ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும், ஏதோ காரணங்களைச் சொல்லிக் கொண்டு, தமிழ்த்தலைமைகள் வெளிநாட்டுப் பயணங்களைச் செய்கின்றன.

ஆனால், அவற்றினால் எந்தப் பயன்களும் கிட்டுவதில்லை. அங்கே செல்கின்ற இந்தத் தலைமைகளை வரவேற்று, உபசரித்துக் கொண்டாடுவோரும் இதையிட்டுச் சிந்திப்பதில்லை.

குறைந்த பட்சம், இந்த வரவேற்பாளர்கள் இங்கிருந்து செல்லும் தலைமைகளிடம் கேட்க வேண்டிய கேள்விகளைக் கூடக் கேட்பதில்லை. குறிப்பாக, இனப்பிரச்சினைக்கான தீர்வைப் பெறுவதற்கான முயற்சிகள் எந்த வகையில் முன்னெடுக்கப்படுகின்றன; அவற்றின் முன்னேற்றம் என்ன? இனப்பிரச்சினைக்கான தீர்வு எட்டப்படும் வரையில் தமிழ் மக்களுடைய தேவைகளை எப்படி, யார் நிறைவேற்றுவது? அவற்றுக்கான பொறிமுறை என்ன? அது சீராக நடக்கிறதா? தமிழ் மக்களுடைய வாழ்நிலை எப்படியாக உள்ளது? அவர்கள் எதிர்கொள்ளும் சவால்களை தலைமைகளாகிய நீங்கள் எப்படித் தீர்த்து வைக்கப்போகிறீர்கள்? அதற்கான புலம்பெயர் மக்களுடைய பங்களிப்பும் அதனுடைய பொறிமுறையும் என்ன? எனப் பல கேள்விகள் கேட்கப்படவேண்டும்.

இந்தக் கேள்விகளைக் கேட்பதற்கு, இந்தப் பிரச்சினைகளைப் பற்றிய போதிய விளக்கமும் தெளிவும் புள்ளி விவரங்களும் அவற்றின் உண்மையும் தெரிந்திருக்க வேண்டும்.

கவலைக்குரிய விடயம் என்னவென்றால், இதற்கான முன்தயாரிப்புகளைப் புலம்பெயர் தேசங்களில் உள்ள வரவேற்பாளர்களும் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களும் செய்வதில்லை என்பதே. இவ்வளவுக்கும் இந்தத் தலைமைகளுக்கான பயணச் செலவு தொடக்கம் அங்கே நடக்கின்ற நிகழ்ச்சிகளுக்கான ஏற்பாட்டுச் செலவுகள் வரையில் இந்தப் புலம்பெயர் மக்களே பொறுப்பேற்கின்றனர்.

ஆனால், இது பயனுள்ளதாக இல்லாமல், ஏதோ சடங்காக, விழாவாகக் கொண்டாட்டமாகப் போய் முடிகிறது. ஆனால், தமிழ் மக்களுக்குப் பயனற்றுப்போனாலும் சேனாதிராஜாவுக்கும் தமிழரசுக் கட்சிக்கும் இது, நிறையப் பயனைக் கொடுக்கும். இதனுடைய நோக்கமே அதுதான்.

கட்சியைப் பலப்படுத்த வேண்டிய அவசியம் இப்போது தமிழரசுக் கட்சிக்கு அதிகமாக ஏற்பட்டுள்ளது. ஏற்கெனவே, அது தன்னைப்பலப்படுத்தும் முயற்சிகளிலேயே செயற்பட்டு வந்துள்ளது. என்றாலும், இப்போது இதற்காக அது, கடுமையாக உழைக்க வேண்டியுள்ளது.
கூட்டமைப்பில் இணைந்திருக்கும் ஈ.பி.ஆர்.எல்.எவ், டெலோ, புளொட் ஆகிய கட்சிகள், தமிழரசுக்கட்சியின் மீது, நீண்ட கசப்பைக் கொண்டிருக்கின்றன. தமிழ் மக்கள் பேரவையில் இந்தக் கட்சிகள் வெளிப்படையாகவே பங்கேற்பதும் இந்த அதிருப்தியை வெளிப்படுத்துவதற்காகவே ஆகும்.

கூடவே, கூட்டமைப்புக்குப் பதிலாக அல்லது கூட்டமைப்பின் தலைமைக்குப் பதிலாக, ஒரு மாற்றுத் தரப்பையும் மாற்றுத் தலைமையையும் ஈ.பி.ஆர்.எல்.எவ், டெலோ, புளொட் ஆகியவை கோரிவருவதும் இந்த அடிப்படையிலேதான். இதெல்லாம் தமிழரசுக் கட்சியின் மீதான வெறுப்பின் வெளிப்பாடுகளாகும்.

ஆகவே, தமிழரசுக் கட்சி இப்போது நேரடியாகவே தன்னுடைய சகபாடிகளின் எதிர்ப்பையும் எதிர்த்தரப்பான ஈ.பி.டி.பி, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி, தமிழ் மக்கள் பேரவை போன்றவற்றின் எதிர்ப்பையும் சந்திக்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது.
1977 இல் தமிழர் விடுதலைக் கூட்டணி பெரு வெற்றியைப் பெற்றுத் தமிழ் பேசும் மக்களிடம் பெரும் நம்பிக்கையை ஏற்படுத்திவிட்டு, அதற்கு மாறாக ஏமாற்றங்களைக் கொடுத்ததைப்போன்ற ஒரு வரலாற்றுப் பயணத்தில் இப்போது தமிழ்த்தேசியக் கூட்டமைப்பும் பயணிக்கத் தொடங்கியுள்ளது. இதனால், மக்களிடத்தில் ஏராளமான கேள்விகளும் விமர்சனங்களும் எதிர்ப்புக்குரல்களும் எழத்தொடங்கியுள்ளன.

இந்த நிலைமையே இப்போது கூட்டமைப்பினுள்ளே ஏகப்பட்ட முரண்பாடுகளை உண்டாகியுள்ளன. இந்த முரண்பாடுகளின் உச்சமே தமிழரசுக் கட்சியை அதனுடைய ஏனைய பங்காளிகள் எதிர்ப்பதாகும். எல்லா அரசியற் குழப்பங்களுக்கும் தவறுகளுக்கும் தமிழரசுக் கட்சியும் அதனுடைய தலைமையுமே காரணம் என்று கணக்குக் காட்டி விட்டு மெல்ல புதிய, மாற்று அணியை நோக்கிச் செல்வதற்கான ஆயத்த நிலையில் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளான ஈ.பி.ஆர்.எல்.எப், புளொட், ெடலோ ஆகியன இருக்கின்றன.

இதையெல்லாம் எதிர்கொள்வதற்குத் தன்னுடைய தள்ளாத வயதிலும் இந்த (75 வயது) தொலைதூரம் போயிருக்கிறார். அங்கே அவர் தன்னுடைய பவள விழாக்கொண்டாட்டங்களில் பங்கேற்கவும் கூடும். அப்படியே ஏனைய நாடுகளுக்கும் செல்லவும் வாய்ப்புண்டு. ஆனால், இங்கே வன்னியிலும் வாகரையிலும் காலடியில் வாடி வதங்கிக் கொண்டிருக்கும் மக்களுக்கு ஆறுதலளிக்கவும் ஆதரவாக இருக்கவும்தான் யாருமே இல்லை. புலம்பெயர் உறவுகளுக்கு இது சமர்ப்பணம்.