வன்முறையும் ஆணியமும் பெண்ணியமும்

இதில் உள்ள தரவுகளை கொஞ்சம் மாற்றி எழுக தமிழுக்கு மாற்றி போட்டு படிக்கலாம் , எந்தவகையான ஆபத்தை நான் கவனத்தில் எடுக்க சொல்கிறேன் என்பது .-

(யாழ்ப்பாணம் பல்கலைக் கழகத்தில் உள்ள பெரும்பான்மை ஆண்களின் நிலை பற்றி சில பதிவுகள் இதில் உண்டு .. எனது கதையை விட்டு விடுங்கள் ,சக பெண்கள் எப்படி அதை பார்த்தார்கள் என்று பாருங்கள் )

ஒரே ஒரு பெண்ணை கூட இந்த உலகத்தில் சந்தோசமாக வைத்திருக்க தெரியாதவன் தான் நான். ஆணின் உளவியலில் ஆழமான பகுதி வன்முறையானது , அது வன்முறையை விரும்பும் அல்லது கொண்டாடும் பகுதி ,ஆகவே எனது இதயத்தின் மூலமாக வன்முறை , ஆணியம் , பெண்ணியம் என்பவற்றை விளங்கிக் கொள்ளும் முயற்சி தான் இந்தப் பத்தி.

அண்மையில் நடந்த ஒரு வன்புணர்வுச் சம்பவம் யாழ்பாணத்தில் பல்வேறு மாற்றங்களை ஒவ்வொரு மனிதனிலும் ஏற்படுத்தியிருக்கிறது , ஏதோ ஒரு வகையில் ஒவ்வொருவரிலும் அது எதிரொலித்திருக்கிறது . இது ஒரு மாற்றம் . வழமையான வன்செயல்கள் இவ்வளவு எதிரொலியை ஏற்படுத்துவதில்லை ,ஆகவே இது ஒரு மாற்றம் தான் , ஆனால் எந்த வகையான மாற்றம் ? , ஆணின் பெண்ணின் மனதில் இது ஏற்படுத்தியிருக்கும் மாற்றம் என்பது என்ன ?

சம்பவம் நடந்த பின்பு சில பெண்களிடம் நான் உரையாடியவற்றை தருகிறேன் .

1 – ஒரு இரண்டு சிறிய பாடசாலை செல்லும் பெண்களின் தாய் சொன்னார் ,” நான் இவையளை பள்ளிக்கூட பாத் ரூமுக்கு கூட போக விடுறேல்ல , கொஞ்ச நாளைக்கு முதல் நடந்தது தெரியும் தானே , ஒரு வோச் மென் பண்ணினது ‘

2- இன்னொரு பெண் – “இண்டைக்கு யுனில என்ன தூசணத்தால பேசினவங்கள் , இந்த ……. தான் அண்டைக்கு வித்தியாவுக்காக போராட்டம் பண்ணினதுகள் . இதுகள் எல்லாம் எதுக்காக போராடினதுகள் ”

3- ஒரு நண்பியின் நிலைத் தகவல் – “மிக மோசமான மனநிலையுடன் இதை பதிகின்றேன்
இன்று யாழ் பல்கலைகழகத்தில் நடைபெற்ற வெனூரி பெரேரா வின் ‘எதிரிடை’ எனும் தலைபிலான ஆற்றுகையில் மிக ஆழமான மிக காத்திரமான நகர்வு.. என்னை பொறுத்தவரையில் இன்றை பெண்கள் மீதான ஆண்களின் எதிரொலிகள் சார்ந்தவை என்றே கூறுவேன்…வெனூரி யின் ஆற்றுகையின் போது பல்கலைகழக மாணவர்களின் செயற்பாடுகள் ஒரு விதத்தில் எதிரிடை என்ற கருத்துநிலைக்கு சார்பாகவே அமைந்தது…

பெண்ணின் சுகந்திரமான ஆற்றுகை போக்கை கூட மௌனமாக ரசிக்கதெரியாத நீங்களா நேற்றய போராட்டத்தில் பெண்களுக்கு எதிராக , வன்முறைகளுக்கு எதிராக ,குரல் கொடுத்தீர்கள் ”

இவை வேறு வேறு மன நிலைகள் வேறு வேறு சந்தர்ப்பங்கள் , ஆனால் ,இவை எல்லாமே போராட்டங்களிற்கு பின்னரான பெண்களின் ஆழமான நம்பிக்கையின்மை மற்றும் வெறுப்பைக் காட்டுகிறது .இதே மன நிலையையே நான் பொதுவாக அவதானிக்கிறேன் . அப்படியென்றால் இந்த போராட்டங்கள் சாதிப்பது என்ன ?

இவை ஒரு புறநிலையான பயத்தை ஏற்ப்படுத்த நினைக்கின்றன . புற நிலையான சமூக கட்டுமானத்தை இவை உருவாக்க முனைகின்றன . ஆனால் இவற்றின் சாத்தியமான தூரம் எவ்வளவு ?

“விடுதலைப் புலிகள் இருந்திருந்தால் இப்படியெல்லாம் இருக்காது ” என்று மாணவர்கள் முதல் மக்கள் வரை கருத்து தெரிவித்திருந்தனர் . ஆனால் அவர்கள் தான் இல்லையே . அவர்கள் உருவாக்கியதும் ஒரு புறநிலையான பாதுகாப்பை தான் , பயத்தை தான் . அதனால் தான் அவர்கள் இல்லையென்ற பின் அவர்களுடைய இனத்தைச் சேர்ந்தவர்களே இதை செய்கின்றனர் . ஆகவே தான் புற நிலை பாதுகாப்பு கவசங்கள் நிலையானவையா ? என்ற கேள்வி எழுகின்றது . அப்படி என்றால் இந்த சமூகச் சிக்கலை எப்படித் தீர்ப்பது ?

எனது அறிவுக்கு எட்டியவரை சில பரிந்துரைகளை முன் வைக்கிறேன் .
முதலில் புற நிலை மாற்றம் என்பது முக்கியமானது , ஆனால் அது சம காலத்திலேயே அக நிலை மாற்றதுக்குமாக செயற்பட வேண்டும் , பால் நிலை சமத்துவம் பற்றிய புரிதல்கள் பல் ஊடகங்களையும் பயன்படுத்தி அனைத்து தரப்பினருக்கும் போய் சேர வேண்டும் .

இப்படியான நிலையில் எந்த ஒரு தனிப்பட்ட அமைப்பின் மேலும் பழியைப் போடாமல் , சிந்திக்கும் மக்கள் ஆங்காங்கே பரவலாக செயற்பட வேண்டும் , சினிமா , கலை இலக்கியம் . நாடகம் போன்றவற்றின் மூலம் மக்களை ஒத்த அலைவரிசையில் சிந்திக்க வைக்க வேண்டும் .

ஆனால் இவற்றின் சாத்தியங்களை காலம் தான் சொல்ல வேண்டும் .ஏனெனில் அண்மையில் நடந்த ஒரு சம்பவத்தைப் பற்றிச் சொல்கிறேன் .
பல்கலைக் கழகத்தில் ஒரு ஆற்றுகைக் கலை நிகழ்வில் வெனூரி பெரேராவின் ,ஆண் வன்முறை சார்ந்த நிகழ்வு நடந்து கொண்டிருந்த வேளை மிக மோசமாக எதிர்வினையாற்றப் பட்டார் . ஒரு பல்கலைக் கழக சமூகத்திடம் இதை அவர் எதிர்பார்த்திருக்க மாட்டார் என்றே நினைத்தேன் , ஆனால் அவர் சிரித்துக் கொண்டே இதனால் நான் நிலை தவற மாட்டேன் , இது இயல்பு தான் என்று சொன்னார் . ஒரு ஆண்மைய சமூகத்திடம் இருந்து வேறு என்ன தான் எதிர்பார்க்க முடியும் .

இந்தளவு கலை உணர்வுடன் வெளிப்படுத்தப்பட்ட ஆற்றுகையை நான் இதற்க்கு முன் பார்த்ததில்லை . அதன் மௌன இடைவெளிகளில் எதுவும் செய்ய முடியாமல் அழுது கொண்டிருந்தவர்களை நான் பார்த்தேன் , ஆனால் இரண்டு கால்களையும் போட்டு அடித்து துடித்துக் கொண்டிருக்கும் பெண்ணின் உடலைப் பார்த்து முனகல் சத்தங்கள் எழுப்பியதற்கு என்ன செய்வது , தனிப்பட்ட பதிவில் எழுதினால் என்னோடு மல்லுக்கு நிற்பார்கள் , ஆகவே தான் பதிகிறேன் , ஆற்றுகையின் ஒரு கட்டத்தில் (முடியும் தருவாயிலில் என்று நினைக்கிறேன் ) அந்த பெண் – பார்வையாளர்களைப் பார்த்து வாய் விட்டு தொடர்ந்து சிரித்தார் , அதை நிறைய ஆண்கள் மிமிக்கிரி செய்தார்கள் , அடக் கடவுளே எனக்குள் இருந்த ஆண் அந்த சிரிப்பின் முன் கூனிக் குறுகி நின்றான் ,ஒட்டுமொத்த ஆணின் வன்முறையின் பின்னும் சிரித்துக் கொண்டு திரியும் எல்லாப் பெண்களின் முகமும் என் கண்ணீரின் ஊடே தெரிந்து கொண்டிருந்தது .

ஆகவே தான் சொல்கிறேன் மாற்றத்தை ,இந்த சமூகத்தின் எல்லாத் தரப்பிலிருந்தும் தான் தொடங்க வேண்டும் , உண்மையில் போராட்டம் என்பது ஒரு நாள் நாங்கள் செய்வது அல்ல ,தனித் தனியாக நாம் ஒவ்வொருவரும் எங்களுக்குள் இருக்கின்ற ஆணை எதிர்த்தும் எங்களைப் போன்ற ஆண்களை எதிர்த்தும் ஒவ்வொரு நாளும் செய்ய வேண்டியது .

கிரிஷாந் , ( 24.05.2015)