வரலாறும் வர்க்கப் போராட்டமும் – ந.இரவீந்திரன்

 

தேசியம் குறித்த பல்வேறு குழப்பமான கருத்துகள் மேலோங்கி, மக்கள் விடுதலைப் போராட்டங்கள் பலவும், திசை கெட்டழிந்து, கேடுகள் மலிந்துவிட்ட நிலையில் மீண்டும் தேசியம் குறித்து மார்க்சியம் முன்வைக்கும் சிந்தனை பற்றி தேடுதல் முனைப்படைந்து வருகிறது. மார்க்சியமல்லாத மற்றும் மார்க்சிய விரோத நிலைப்பாட்டில் முன்னெடுக்கப்பட்ட தேசிய விடுதலைப் போராட்டங்கள் தறிகெட்டுப் போனதில் மார்க்சியர்களது தவறும் சுய விமர்சனத்துக்குரியதாகும். தேசியம் என்பதை முதலாளித்துவத்திற்கான பிரச்சினையாக கணித்து மார்க்சியத்தை வெறும் வர்க்கவாதமாக முடக்கிய மார்க்சியச் செயற்பாடுகள் சென்ற நூற்றாண்டின் அறுபதுகளுக்குப் பிந்திய குளறுபடிகளுக்கான ஒரு பிரதான காரணம் எனலாம்! 

இந்த நிலையில் வர்க்கப் போராட்டத்தை மட்டுமே மார்க்ஸ் கவனம் கொண்டிருந்தாரா, தேசியப் போராட்டங்கள் குறித்து அவரது நிலைப்பாடு யாது எனும் வினாக்கள் எழுவது இயல்பானது. அவர் பிரித்தானியாவில் இருந்து செயற்பட்டபோது அதன் குடியேற்றவாத நாடாக இந்தியா இயங்கியது எனும் வகையில் இந்தியா பற்றி கூறியவையும், பொதுவாக காலனித்துவம் குறித்த அவரது நிலைப்பாடும் மீளாய்வு செய்;யப்படுதல் இன்று வலுப்பட்டு வருகிறது. அதன் பொருட்டு வெளியான இரு நூல்கள் தமிழாக்கம் பெற்றுள்ளன. கார்ல் மார்க்ஸ் “இந்தியாவைப் பற்றி” எழுதிய கட்டுரைகளின் தொகுப்பு விடியல் பதிப்பகம் வாயிலாக வெளிவந்துள்ளது, இதற்கான சுனிதி குமார்கோர்ஷ் இன் அறிமுகக் கட்டுரை கவனிப்புக்குரியது. மற்றது பாரதி புத்தகாலய வெளியீடாக வெளிவந்த “தேர்ந்தெடுக்கப்பட்ட எழுத்துக்கள், தேசியம் மற்றும் காலனியப் பிரச்சினைகள் குறித்து மார்க்ஸ் – ஏங்கெல்ஸ்” எனும் நூல், இதன் தேர்வும் முன்னுரையும் அய்ஜாஸ் அகமதுவினுடையது.
இரு நூல்களும் மார்க்சியத்தை வர்க்கவாதமாகப் புரிதல் கொள்வதிலிருந்து மீட்கும் நோக்கத்தை உடையனவாயினும் அதற்கான பார்வையை வந்தடைய இயலாத வகையிலான முட்டுக்கட்டைகளையும் கொண்டிருப்பன. மார்க்சும் ஏங்கெல்சும் “கொம்யுனிஸ்ட் அறிக்கை” யில் முன்வைத்த கோசம் “உலகத் தொழிலாளர்களே ஒன்று சேருங்கள்” என்பது, ஆயினும், மார்க்சியம் வீரியத்துடன் செயற்பட்ட இருபதாம் நூற்றாண்டில் மிகப் பெரும்பாலான மார்க்சிய நூல்களின் முதற்பக்கம் “உலகத் தொழிலாளர்களே, ஒடுக்கப்பட்ட தேசங்களே ஒன்று சேருங்கள்” என்பதாகவே அமைந்திருந்தன. இது லெனினிசமாக மார்க்சியம் பெற்ற பரிணமிப்பின் பேறு. இதனை முழக்கமிட்டவாறே மார்க்சிச – லெனினிசம் வர்க்கமாக்கப்பட்டதைக் கண்டிருக்கிறோம். இன்று “இந்தியா பற்றி” மார்க்ஸ் நூலை விடியல் பதிப்பகம் வெளியிட்டபோது முதற்பக்கத்தில் “உலகத் தொழிலாளர்களே ஒன்று சேருங்கள்” என்ற கோசத்தை பதிவிட்டிருப்பது தெளிவுகளை தேடுவதற்கு எந்த அளவிற்கு உதவும் என்பது கேள்விக்குறி!
மார்க்ஸ் – ஏங்கெல்சின் “தேசியம் மற்றும் காலனியப் பிரச்சினைகள் குறித்து” என்ற நூலை மொழிபெயர்க்கும்போது “மானுடச் செயற்பாடுகள் அனைத்தும் வர்க்க அரசியல் ஊடாகவே பார்க்கப்பட வேண்டும் என்கிற புரிதல் கிடைத்தது” என்கிறார் அதனைத் தமிழாக்கம் செய்திருந்த அப்பணசாமி. இந்த விடயங்களுக்குள் இத்தனை கரிசனத்துடன் மூழ்கி ஆராய்ந்தவர்களே வர்க்கவாதக் கண்ணாடியை வாசகரிடம் மாட்டிவிடும் முகப்பு நடவடிக்கைகளைத் தொடக்கியபின்னர், நூலினுள் செல்பவர்கள் முன்முடிவுகளைக் கடந்து எந்தளவுக்கு மார்க்சியத்தை புரிதல் கொண்டுவிட முடியும்? வர்க்கப் பார்வையை வலயுறுத்துவதே மார்க்சியம் என்ற ஆரம்பப் படிகளைக் கடந்துதான் அநேகமாக ஒருவர் இந்த நூல்களைத் தேடுவார் (தேசியவாத முடக்கத்திலிருந்து கொண்டே இதைத் தேடுவோரும் இருப்பர் என்றபோதிலும் அத்தகையவர்கள் மிகக் குறைந்த தொகையினரே). அவர்கள் அனைவரும் பாட்டாளி வர்க்க அணுகுமுறையில் தேசிய இனப்பிரச்சினையைப் புரிந்துகொள்ள அவசியமுள்ள நிலையில் அதற்கு விரோதமாய் இந்த நூல்கள் வர்க்கவாதத்தை ஆழமாய்ப் பதியம் செய்துவிடக் கூடாது.
இந்திய மொழிகளில் வேறெந்த தேசிய இனப்பிரவினரைக் காட்டிலும் தமிழின் தேசியவாதமும் சாதியவாதமும் அதிக பாதகங்களை விளைவித்துள்ளதன் காரணமாக மேற்படி நூல்கள் இரண்டிலும் செயலாற்றியவர்கள் வர்க்க அரசியலுக்கு அதிக அழுத்தம் கொடுக்க நிரப்பந்திக்கப்பட்டிருந்தனர் எனக் கொள்ள இயலும். அதுவே முதன்மைக் காரணமாகுமே அல்லாமல் திசைதிரும்பும் நோக்கம் நிச்சயமாக இல்லை என்பதை நூல்களை முழுமையாக காணும்போது உணர்ந்து கொள்வோம்.
அப்பணசாமி வர்க்க அரசியலுக்கு எச்சரிக்கையுடன் அழுத்தம் கொடுக்கும் காரணத்தை அய்ஜாஸ் அகமதுவின் முன்னுரையின் இறுதி வாசகத்தைப் படித்து முடிக்கும்போது உணர்ந்துகொள்வோம். அந்த முன்னுரையின் இறுதி வாசகங்கள் இவை, “ஐரோப்பிய புரட்சிக் கனவுகள் சிதைந்து ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு குறுகிய காலத்தில் எதிர்நோக்கும் மூன்று விஷயங்கள் குறித்து மார்க்ஸ் நம்பிக்கை கொண்டிருந்தார், பிரிட்டனில் சோஷலியப் புரட்சி இந்தியாவில் தேசியப் புரட்சி, சாதியமைப்பு ஒழிப்பு. தற்போது, மிகவும் காலந்தாழ்ந்த நிலையில், இந்தியா விடுதலை பெற்றுவிட்டது, ஆனால், மற்ற இரு பிரச்சினைகள் பிரிட்டனில் வர்க்க, இந்தியாவில் சாதிப் (மார்க்ஸ் கூறுவது போல ”பிறப்புவழி வேலைப்பிரிவினை”) பிரச்சினைகள் இன்னமும் தீர்க்கப்படவில்லை. இந்தியாவில் வர்க்கப் பிரச்சினையின் தீர்மானம் சந்தேகத்திற்கிடமின்றி இன்றும்கூட சாதியப் பிரச்சினைக்கூடாகத்தான் பயணிக்கிறது” (அய்ஜாஸ் அகமது, பக்கம். 46-47)
அவ்வாறு இந்தியாவின் வர்க்கப் பிரச்சினையை சாதிய இயங்காற்றல் களத்திலேயே முன்னெடுக்க வேண்டும் என்கிறபோது அது வர்க்க அரசியலின் செயற்பாடாகவே அமைந்தாக வேண்டும் என்பதை மறந்தவிடக் கூடாது என மீள வலியுறுத்துவது அவசியமே, ஆயினும் அது வர்க்கவாதத் தவறுக்குச் சறுக்கிவிடும் வகையில் அமைந்திருக்கக் கூடாது. வர்க்கப் போராட்ட இயங்காற்றலை மட்டுமே கவனங் கொள்வதாய் மார்க்சிச இயக்கம் நீண்டகாலத்தை செலவிட்டிருந்தது. சாதியப் பிரச்சினையாக இயங்கும் எமது சமூகங்களுக்கான வரலாற்றுச் செல்நெறியை போதிய அளவில் கவனங்கொள்ளாதிருந்து இப்போதுதான் சாதிமுறைக்கெதிரான போராட்டத்தில் மார்க்சியர்கள் பலர் ஈடுபாடுகாட்டத் தொடங்கியுள்ளனர். இதன் முன்னெடுப்பில் தவறுகளைக் குறைப்பதற்கான எச்சரிக்கை உணர்வு நியாயமானதே. இதன் பொருட்டு வர்க்கப் போராட்ட அரசியல் செயற்பாடுகளில் ஏற்பட்டுவந்த மாற்றங்களைக் கவனங்கொள்வது அவசியமாகும்.
மேலே பார்த்திருந்து அய்ஜாஸ் அகமதின் மேற்கோளின் முதல் வாசகத்தில் இடம்பெற்ற “ஐரோப்பியப் புரட்சியின் கனவுகள்” என்பது 1848 இல் இடம்பெற்ற புரட்சியை ஒட்டி ஏற்பட்டதனைக் குறிப்பதாகும். பிரான்சில் 1848இல் தொடங்கிய எழுச்சி அலை மிக வேகமாக ஐரோப்பிய நாடுகளெங்கும் பரவலடைந்திருந்தது. இதன் உந்துதலினால் பாட்டாளிவர்க்கம் ஒரு நாட்டில் முதலாளித்துவ ஆட்சியை வீழ்த்தித் தனது கைகளில் அரசைப் பொறுப்பேற்கும்போது அடுத்தடுத்து மற்றைய நாடுகளுக்கும் புரட்சி பரவுவதனை “நிரந்தரப் புரட்சி” மீது நம்பிக்கை ஏற்பட்டு, உலகம் ஒரே வீச்சில் சோசலிஸ மாற்றத்தைத் தொடக்கி வைக்கக்கூடியதாக “உலகப்புரட்சி” அமையுமென மார்க்ஸ் கருதியிருந்தார். இங்கு குறிப்பிடப்பட்ட ஐந்தாண்டின் பின்னான பிரதான மாற்றம் என்ன? முன்னதாக பாட்டாளிவர்க்கப் புரட்சி ஐரோப்பாவைச் சோஷலிஸ மாற்றியமைத்தலுக்கு ஆட்படுத்தியதும் அவற்றின் குடியேற்ற நாடுகளான ஆசிய நாடுகள் விடுதலை பெறுமெனும் நம்பிக்கை மாற்றமடைந்து, காலனித்துவ நாடுகள் தமது விடுதலையை ஒடுக்கும் தேசத்தின் சோஷலிஸ மாற்றியமைத்தலுக்கு முன்னரே எட்ட முடியும் எனக் கண்டறிந்தமையே அதுவாகும்.
இந்த வரலாற்று இயக்கச் செல்நெறி எமக்கு எடுத்துரைக்கும் படிப்பினை, ஒரே தடவையில் மார்க்ஸ் எனும் ஒருவரால் எழுதித் தரப்பட்ட ஒன்றல்ல மார்க்சியம் என்பதாகும். அல்லது அவ்வப்போது முக்காலமும் உணர்ந்த கடவுளால் அருளிச் சொல்லப்பட்டவற்றை கேட்டறிந்து தொகுத்துத்தந்ததல்ல மார்க்சியம். மக்கள் போராட்டங்கள் வாயிலாகப் புதிய படிப்பினைகள் கண்டறியப்படும்போது அத்தகைய மாற்ற நிலைகளைத் தீர்க்க தரிசனத்துடன் வெளிப்படுத்துவதாக மார்க்சியம் இருந்துள்ளது. அதன் ஒளியில் அடுத்த கட்ட நடைமுறைக்கான போர்த்தந்திரங்களையும் வென்றடைய வேண்டிய இலக்கையும் தெளிவுபடுத்துவதாகவே மார்க்சியம் அமைந்துள்ளது. இதன் பொருட்டாக, முன்னதாகத் தான் கூறிய அல்லது எதிர்பார்த்த அம்சம் தவறெனக் கண்டால் தயக்கமின்றி அதனை வெளிப்படுத்தி மாற்றத்தை வலியுறுத்துகிறவராக மார்க்ஸ் விளங்கினார். எந்த ஒன்றினாலும் – தனது வசனங்களாலும் – விலங்கிடப்படாத ஒரு சந்தனை முறையாகவே மார்க்ஸியம் துலங்குகிறது.
அவ்வாறு வரலாற்றுப்படிப்பினைகளை கவனங்கொண்டு தனது ஆக்கங்களில் வேண்டிய மாற்றங்களை அவர் செய்துவந்தமையால், அவரது “பிரான்சில் வர்க்கப் போராட்டங்கள் 1848-1850” எனும் நூலுக்கு, அவரது மறைவுக்குப் பின்னர் அவரது நண்பர் ஏங்கெல்ஸ் நீண்ட முன்னுரை ஒன்றை 1895இல் எழுத நேர்ந்தது. முன்னதாக ஐந்தாண்டுகளில் ஏற்பட்ட மாற்றத்தைவிடவும் ஏறத்தாழ ஐம்பதாண்டுகளின் பின்னர் மேலும் பாரதூரமான பல மாற்றங்கள் ஏற்பட்டிருந்தன. இதன்பேறாக அந்த முன்னுரையில் ஏங்கெல்ஸ் “ஆனால் வரலாறு நம்மையுங்கூடத்தான் தவறெனக் காட்டியது” (கார்ல் மார்க்ஸ் ப.14), எனக்கூறியதுடன் “வரலாறு நம்மையும், நம்மைப் போன்று சிந்தித்தவர்கள் அனைவரையும் பிழை என்று நிரூபித்துவிட்டது, ஐரோப்பா கண்டத்தில் அந்த சந்தர்ப்பத்தில் நிலவிய பொருளாதார வளர்ச்சி நிலையானது முதலாளித்துவ உற்பத்தி நீக்கத்திற்குரிய கனிவு பெற்றிருக்கவில்லை என்பதைத் தெளிவாக்கிவிட்டது. 1848ஆம் ஆண்டிலிருந்து இந்தக் கண்டம் முழுமையையும் கவர்ந்து கொண்டுள்ள பொருளாதாரப் புரட்சி இதை நிரூபித்துக்காட்டி விட்டது” (கார்ல் மார்க்ஸ், பக்.16-17 என்றும் கூறுகின்றார்.
இவ்வாறு எதிர்பார்ப்புகளை வரலாறு பொய்ப்பித்தபோதிலும் மார்க்சியச் சிந்தனை முறை சரியாக அமைவதனை அந்த முன்னுரையிலேயே ஏங்கெல்ஸ் எடுத்துக்காட்டத் தவறவில்லை. மாற்றங்களைப் புரிந்துகொண்டு உலகப் பாட்டாளிவர்க்கம் தேசியத் தப்பெண்ணங்களால் விலங்கிடப்படாது கொண்டும் கொடுத்தும் ஊடாடியவாறு மார்க்சிய அணி (பாட்டாளிவர்க்கத்தின் முன்னணிப் படையான கம்யூனிஸ்ட் இயக்கம்) பல்வேறு நாடுகளில் வீறுடன் வளர்ந்து வருவதனை ஏங்கெல்ஸ் அந்த முன்னுரையில் வலியுறுத்திக் காட்டியிருந்தார். அத்தகைய கம்யூனிஸ்ட் கட்சிகள் இரண்டாம் அகிலத்தில் ஒன்றிணைந்து செயலாற்றியமை கவனிப்புக்குரியது. அவ்வாறு ஐரோப்பிய கம்யூனிஸ்ட் கட்சிகள் இயங்கியபோது புரட்சியின் மையமும் தொடர்ந்து இடம் மாறிவந்தது. “மார்க்ஸ் ஏற்கனவே கூறியபடி, 1870-71 ஆண்டுபோரும், கம்யூன் வீழ்ச்சியும், ஐரோப்பியத் தொழிலாளர் இயக்கத்தின் ஈர்ப்புமையத்தை அப்போதைக்குப் பிரான்சிலிருந்து ஜெர்மனிக்கு மாற்றியது “குறித்து ஏங்கெல்ஸ் மேற்படி முன்னுரையில் காட்டியிருந்தார் (கார்ல் மார்க்ஸ், ப.21). பின்னர் புரட்சியின் மையம் ருஷ்யாவை நோக்கி நகர்வதையும் மார்க்ஸ்-ஏங்கெல்ஸ் கண்டிருந்தனர்.
ருஷ்யப் புரட்சி 1917இல் சோவியத்யூனியனை உருவாக்கி அங்கே சோஷலிஸ மாற்றியமைத்தலைச் சாத்தியமாக்கியபோது மேலே ஏங்கெல்ஸ் கூறியதில் வெளிப்பட்டிருந்தவாறான பொருளாதார வளர்ச்சி, சோஷலிஸ மாற்றியமைத்தலுக்காகக் “கனிவுபெற்றிருந்த மேற்கு ஐரோப்பிய மண்ணில் நடக்கவில்லை என்றவகையில் ஏங்கெல்ஸ் கருத்தில் புதைந்திருந்த தவறை எடுத்துக் காட்டியிருந்தது. அதனை ஏற்று வெளிப்படுத்த ஏங்கெல்ஸ் உயிருடன் இல்லை என்றபோதிலும் அது ஏங்கெல்ஸின் சிந்தனை முறையின் தவறல்ல, வரலாறு மீண்டும் தனது வினோதத்தை வெளிப்படுத்திய மாற்றுவடிவம் இது! மார்க்ஸ், ஏங்கெல்ஸ் ஆகியோர் எதிர்பார்த்தவாறு பொருளாதார வளர்ச்சி கனிந்திருந்த மேற்கு ஐரோப்பாவில் சோஷலிஸப் புரட்சி ஏற்படாமல் அப்போதுதான் முதலாளித்துவ மாற்றியமைத்தலையே செய்ய வேண்டியிருந்த ருஷ்யாவில் முன்னெடுக்கப்பட்ட சோஷலிஸ எழுச்சி முக்கால் நூற்றாண்டு முன்னேறி மகத்தான சாதனைகளை ஏற்படுத்தியிருந்தமையே கவனிப்புக்குரியதாகும்.
இந்த வரலாற்று மாற்றம் அதற்கான உள்ளார்ந்த பொருளில் போதியளவு ஆய்வுக்குள்ளாக்கப்படவில்லை. இத்தனை காலந்தாழ்த்தலோடு “இந்தியா பற்றி மார்க்ஸ்” கூறியதன் மீளாய்வு என்பதேகூட அத்திசைவழியிலான ஆய்வு அவசியப்படுவதனை உணர்வதன் பேறுதான். மேலே குறித்த இரு நூல்களின் தொகுப்பில் ஏதோவொருவடிவில் பங்கேற்ற சுனிதிகுமார் கோஷ், அய்ஜாஸ் அகமது ஆகியோரின் முன்னுரைகள் காலனித்துவம் மற்றும் இந்தியா குறித்து மார்க்சின் கருத்துகள்மீது போர்த்தப்பட்ட பொய்மைகளை நீக்கி உண்மை நிலைகளை வெளிப்படுத்தியிருந்தன. பிரதானமாக, முன்னேறிய நாடுகளில் சோஷலிஸ மாற்றத்தின் பின்னரே காலனித்துவ நாடுகளின் விடுதலை சாத்தியம் என்ற கருத்தை மார்க்ஸ் விட்டொழித்தார், அயர்லாந்து, இந்தியா போன்ற குடியேற்ற நாடுகள் விடுதலை பெறுவது பிரிட்டிஷ் பாட்டாளிவர்க்கம் சோசலிசப் புரட்சியை முன்னெடுப்பதற்கு அவசியமாகலாம் என்பதுவரை மார்க்ஸ் வந்தடைந்ததை சுனிதிகுமார் கோஷ், அய்ஜாஸ் அகமது ஆகியோர் எடுத்துக் காட்டியிருந்தனர். வேறு முயற்சிகள் மார்க்ஸ் கருத்தைத் திரிப்பதற்கு எவ்வளவுதான் முன்னெடுக்கப்பட்டாலும் இவர்கள் இருவரது கருத்துரைகள் அவற்றை முறியடித்து உண்மையைத் தரிசிக்க உதவுகின்றன. அந்தவகையில் இந்தியா குறித்து மார்க்ஸ் கூறியவற்றைக் கடந்து, தொடர்ந்த உலக வரலாற்றை அவர் கண்டிருப்பின் எதனை முன்வைத்திருந்திருப்பாரா, அந்த விடுபட்டுப்போன கருத்தைத் தேடியறிதல் அவசியமானதாகிறது.
சோவியத் புரட்சி எழுச்சியின் சாத்தியத்துக்கான பிரதான காரணியாக ஏகாதிபத்தியத்தின் பலவீனமான கண்ணியாக ஜாரிஸ் ருஷ்யா திகழ்ந்தமையைக் கூறும் மரபுள்ளது. “இந்தியாவைப் பற்றி” மார்க்ஸ் நூலுக்கான அறிமுகக் கட்டுரையில் சுனிதிகுமார் கோஷ் ஏகாதிபத்தியப்பிடிப்பு நேரடியாகவும் இறுக்கமானதாகவும் உள்ள நாடொன்றில் ஜனநாயக – சோஷலிஸ புரட்சிகளை முன்னெடுப்பது மிகச் சிரமம் எனக் கூறியிருந்தார் (ப.40). ஆயினும் இன்று தென்னமெரிக்க நாடுகளின் எழுச்சிகள் இக்கருத்தை மறுபரிசீலனை செய்யக்கோருவன என்பதை அறிவோம். இங்கு எமது கரிசனத்துக்குரியது ஏகாதிபத்தியத்தின் பலவீனமான பிணைப்புப் பற்றியது. இந்தியா பிரித்தானிய ஏகாதிபத்தியப் பிடிப்பில் இறுக்கமான பிணைப்புக்குள்ளாகியிருந்தமையால் இங்கு சமூகமாற்றப் புரட்சி சாத்தியமாக இயலவில்லை, மாறாக, பல ஏகாதிபத்திய நாடுகளது பலவீனமான பிணைப்புகளுக்கு ஆட்பட்டிருந்த சீனாவில் சமூகமாற்றப் புரட்சி சாத்தியமாகியிருந்தது என்ற வகையில் சுனிதிகுமார் கோஷ் கருத்து ஏற்புடையதே.
ஆயினும் ருஷ்ய நிலைமை வேறு. ஒரு ஏகாதிபத்தியம் என்றவகையில் பத்தொன்பதாம் நூற்றாண்டில் மார்க்சினால் பிரதான எதிரியாகக் கணிக்கப்பட்டிருந்தது ஜாரிஸ் ருஷ்யா. அது உக்ரேன் உட்பட்ட பல நாடுகளை ஆக்கிரமித்திருந்தது. இவ்வாறு ருஷ்யாவில் ஒடுக்கப்பட்டிருந்த நாடுகளும் புரட்சியில் இணைந்து “சோவியத் சோஷலிஸக் குடியரசுகளின் ஒன்றியம்” என்பதாக சோவியத் யூனியன் தோற்றம் பெற்றிருந்தது என்பது கவனிப்புக்குரியது. அவ்வாறு ருஷ்யாவால் ஒடுக்கப்பட்டிருந்த தேசங்களை ஐக்கியப்படுத்தும் அவசியம் காரணமாக லெனின் தேசங்களின் சுயநிர்ணய உரிமை குறித்து அதிக அக்கறை காட்டினார். ருஷ்யப் பாட்டாளிவர்க்கம் சோஷலிஸப் புரட்சியை வென்றெடுக்க வேண்டுமாயின், ஒடுக்கப்பட்ட தேசங்கள் பிரிந்து செல்லும் உரிமையுடன் கூடிய சுயநிர்ணய உரிமையடையன என்ற உத்தரவாதத்துடன் ஒன்றிணைக்கப்பட்டு போராட்டத்தை முன்னெடுக்க வேண்டும் என லெனின் வலியுறுத்தினார். இதன்மீது நம்பிக்கை கொண்டிருந்த ஒடுக்கப்பட்ட தேசங்கள் ஜாராட்சிக்கு எதிராக கம்யூனிஸ்ட்டுக்களுடன் ஒன்றுபட்டுப் போராடியமையாலேயே ருஷ்யப்புரட்சி வென்றெடுக்கப்படலாயிற்று. இவ்விடயம் ஓரளவு பேசப்பட்டபோதிலும் இதன் முக்கியத்துவம்; போதியளவு அழுத்தம்பெறத் தவறியுள்ளது.
குறிப்பாக, பாட்டாளிவர்க்க அரசு சோவியத் யூனியனில் சாத்தியப்பட்ட பின்னர் முன்னேறிய முதலாளித்துவ நாடுகளில் பாட்டாளிவர்க்கப் புரட்சிவாயிலாக சோசலிஸ மாற்றியமைத்தல் நடக்கவில்லை, மாறாக ஒடுக்கப்பட்ட தேசங்கள் தமது விடுதலையைச் சோசலிச இலட்சியத்துடன் இணைப்பதன் வாயிலாக உலக வரலாற்று இயக்கச் செல்நெறி தொடர்ந்தது என்பது கவனிப்புக்குரியதாகும். நடந்தேறிய ருஷ்யப் பாட்டாளிவர்க்கப் புரட்சியூடாக சோஷலிஸத்தை வென்றெடுத்தாலும், முன்னேறிய முதலாளித்துவ நாடொன்றில் இல்லாமல் பலவீனமான முதலாளித்துவ வளர்ச்சியையுடைய நாட்டில் ஒடுக்கப்பட்ட தேசங்களை ஐக்கியப்படுத்திய – ஒடுக்கப்பட்ட தேசங்களின் விடுதலைப் போராட்டங்களை இணைத்திருந்த – நாட்டில்தான் சாத்தியப்பட்டிருந்தது என்பதும் மிகுந்த கவனிப்பைப்பெற வேண்டிய ஒன்றாகும்.
தொடர்ந்து பாட்டாளிவர்க்கப் புரட்சி பற்றிய நம்பிக்கையில் ஆழ்ந்திருந்தமையால் ஏற்பட்ட தோற்ற மயக்கம், தேசவிடுதலை வாயிலாக சமூக மாற்றம் என்ற அம்சத்தின் மீது கவனக்குவிப்பை ஏற்படுத்தத் தடையாயிற்று. அதைவிடவும், தேசவிடுதலை எந்த வர்க்க நிலைப்பாட்டில் என்பது மிகப்பிரதான அம்சம் ஆகையால் வர்க்க அரசியல் நாட்டம் அழுத்தம் பெறுவது தவிர்க்கவியலாததாயிற்று.
பாட்டாளி வர்க்க நிலைப்பாடு சீனாவைச் சோஷலிஸத்துக்கும் முதலாளிவர்க்க நிலைப்பாடு இந்தியாவை ஏகாதிபத்தியக் கூட்டுக்கும் வழிப்படுத்தியிருந்தது. இவ்வாறு தேசவிடுதலைச் சக்தியினுள்ளும் வர்க்கப் போராட்டம் நிலவிய போதிலும், ஏகாதிபத்தியம் எனும் பெருந்திணையின் ஆதிக்கத்துக்கு எதிரான ஒடுக்கப்படும் தேசங்கள் எனும் திணைகள் நடாத்தும் போரர்டம் பற்றியும் அதுவே இனிச் சோஷலிஸ மாற்றத்துக்கான வழி என்றும் பேசுவதற்கு இயலாமற் போனது துரதிஷ்டமே, ஆயினும், அவரது சிந்தனை முறை இன்று இதனைக் கண்டறிய எம்மை ஆற்றுப்படுத்தும்.
இத்தகைய திணை மேலாதிக்கமும் அதற்கெதிரான போராட்டங்களும் வரலாறு வாயிலாக இயங்கியமையை மருதத்திணையில் வேளாண்மையால் முன்னேறி வேளாளராகும் சாத்தியம் பெற்றோரால் ஏனைய திணைகளை ஒடுக்கிச் சாதிய வாழ்முறையை ஏற்படுத்த இயலுமாகிய எமது வரலாற்றுச் செல்நெறியை ஆய்வுக்கு உட்படுத்தியிருப்பின் மார்க்சினால் கண்டு காட்டியிருக்க இயலும். அயர்லாந்துப் பிரச்சினையை உள்ளார்ந்து அறிவதற்காக அங்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு மாதக்கணக்கில் கற்றலை மேற்கொண்டார் மார்க்ஸ். மாறுபட்ட வரலாற்றுச் செல்நெறி இந்தியாவில் இருந்தமையை உணர்ந்திருப்பின் எமது சமூக இயங்காற்றலை நேரில்அறிய அவர் விரும்பியிருக்கக் கூடும். அந்த வாய்ப்பின்மையால் இந்தியாவுக்கு என வரலாறு கிடையாது என மார்க்ஸ் சொல்ல நேர்ந்தது. அவ்வாறு நேர்ந்த “விடுபாட்டினை” நிவர்த்திக்க முயன்ற இந்தியவியலாளர்களும் இங்கே நடந்த வர்க்கப் போராட்டளைத் தேடினார்களே அல்லாமல் சாதிகள் அதிகாரத்தை வென்றெடுக்கப் போராடியதன் வாயிலாக முன்னேறிய திணை மேலாதிக்கத்துக்கு எதிரான போராட்டங்களின் வரலாற்றைத் தேடமுயலவில்லை. (அந்தச் சாதிகளினுள் எந்த வர்க்கம் என்பதான அம்சமும் இருந்து – அதனை கண்டவர்கள் அது ஏற்படுத்திய தோற்றமயக்கத்தினால் சாதிப் போராட்ட முழுமையைக் காணவியலாத துரதிர்ஷ்டம் தொடர இடமுள்ளமையை நிராகரிக்க வேண்டியதில்லை).
ஆக மார்க்சிடம் விடுபட்டுப் போனவற்றைக் கவனத்தில் கொண்டு, மார்க்ஸின் கருத்துக்களை மீண்டும் மறுவாசிப்புக்கு உட்படுத்துவது பயனுள்ள ஒன்றாக அமையும். பலரும் இதனை முன்னெடுப்பர் என்பதை அறிவேன், என்வரையில் மீண்டும் இவ்வழியில் தேடலைத் தொடர்வேன்.

பார்க்க வேண்டிய நூல்கள்
1. அய்ஜாஸ் அகமது (தேர்வும் முன்னுரையும்), தேர்ந்தெடுக்கப்பட்ட எழுத்துக்கள், தேசியம் மற்றும் காலனிப் பிரச்சினைகள் குறித்து மார்க்ஸ் – ஏங்கெல்ஸ், தமிழாக்கம், அப்பணசாமி, பாரதி புத்தகாலயம், சென்னை.2015.
2. கார்ல் மார்க்ஸ், ஏங்கெல்ஸ் (முன்னுரை), “பிரான்ஸில் வர்க்கப் போராட்டங்கள் 1848-1850”. புhரதி புத்தகாலயம், சென்னை.2012.
3. சுனிதிகுமார் கோஷ் (அறிமுகம்), இந்தியாவைப் பற்றி கார்ல் மார்க்ஸ், விடியல் பதிப்பகம், கோயம்புத்தூர்.2012.