1990 காத்தான்குடி பள்ளி வாசல் படுகொலைகள், பயனடைந்தது யார் ?

விடுதலைப்புலிகள் திட்டவட்டமாக மறுத்தும் இந்த படுகொலைகளுக்கு தங்கள் கண்டனத்தை பதிவு செய்தபோதும் இதனை தமிழீழ விடுதலைப்புலிகளே அரங்கேற்றியதாக இந்நாள் வரையிலும் சிலரால் பரப்புரை செய்யப்படுகிறது. 1980 களின் பிற்பகுதிகளில் தொடங்கி தமிழீழ மண்ணில் நீர் பூத்த நெருப்பாக கனன்று கொண்டிருந்த தமிழர் இசுலாமியர் பிரச்சனையை புரிதலில்லாத பரப்புரைகள் மூலம் நிரந்தர பகைமையாக மாற்ற பெரும் பங்களித்தது இந்நிகழ்வு.


இலங்கை இராணுவத்தின் கட்டுப்பாட்டில் இருந்த ஒரு பகுதியில் கிழக்கும் மேற்கும் கடல் சூழ்ந்திருக்க வடக்கிலும் தெற்கிலும் இருந்த இரண்டு இராணுவ தடுப்பரண்களையும் கடந்து இத்தாக்குதல்களை ஒருவேளை புலிகளே செய்துவிட்டு இலங்கை இராணுவத்துடன் எந்த இடத்திலும் முட்டுப்படாது வெளியேறியிருக்க கூடும் என்று எடுத்துக்கொண்டாலும். அனைத்துலக அளவிலும் இசுலாமிய சமூகத்திடமும் இந்த படுகொலைகள் ஏற்படுத்தப்போகும் தாக்கத்தால் தங்களின் அரசியல் மற்றும் ஆயுத கொள்வனவு வலையமைப்பு எத்தகைய பாதிப்பை சந்திக்கும் என்பதை சிந்திக்க முடியாத தொலைநோக்கு இல்லாதவர்களாகவா புலிகளின் தலைமை இருந்திருக்கும்.

இலங்கையின் முதல் இனக்கலவரம் தமிழர்களுக்கு எதிராக அல்ல இசுலாமிய மார்கத்துக்கு எதிராகவே நடத்தப்பட்டது என்பது வரலாறு. சிங்கள பேரினவாதத்திற்கு எதிராக தமிழர்கள் ஆயுதமேந்திய போது 1980 களின் முற்பகுதி வரையிலும் தமிழ் விடுதலை அமைப்புகளுக்கு ஆதரவு கொடுத்ததும் அன்றி சில தமிழ் இசுலாமியர்கள் விடுதலை இயக்கங்களில் நேரடியாக இணைந்தும் தங்கள் பங்களிப்பை வழங்கினர். இவ்வளவு இணக்கமாக இருந்தவர்களை எப்படி பகைவர்களாக மாற்ற முடிந்தது.

சிங்களவர்களின் தந்திரம் மிக்க தலைவர்களில் ஒருவராக திகழ்ந்த ஜெ ஆர் ஜெயவர்தனா தம் அமெரிக்க முதலாளித்துவ சார்பு கொள்கைகளால் “yankee dickie” என்றே அறியப்பட்டவர். ஒரு புறம் இந்தியாவுடனும், இந்திய அரசை சமாளிக்க மறுபக்கம் அமெரிக்க, இசுரேலிய உளவு அமைப்புகளுடன் நெருக்கமான உறவை பேணி வந்தவர்.

அக்காலங்களில் வளர்ந்து வந்த பிரிவினை வாதமும் இடது சாரி கொள்கைகளும் சிங்கள பேரினவாதத்திற்கு பெரும் அச்சுறுத்தலாக மாறும் என்பதை அறிந்திருந்த ஜெ ஆர். தம் எதிரிகளுக்கிடையே பகைமையை வளர்த்திவிடுவதன் மூலமே தங்களை காப்பாற்றிக்கொள்ள முடியும் என்பதை நன்கு உணர்ந்திருந்தார். இதை செயல்படுத்த அவர் நாடியது அமெரிக்க மற்றும் இசுரேலிய உளவு நிறுவனங்களை.

1980 களின் தொடக்கம் முதலே மொசாட் தங்கள் தளத்தை இலங்கையில் அமைத்திருந்தது. 1983 உள்நாட்டுப்போர் அதிகாரப்பூர்வமாக தொடங்கியவுடன் முதலில் ஜெ ஆர் 50க்கும் அதிகமான இசுரேலிய சிறப்புப்படை அதிகாரிகளையும் உளவுப்பிரிவினரையும் அழைத்து வந்து மாதுரு ஓயா பகுதியில் தளம் அமைத்து சிங்கள அதிகாரிகளுக்கு பயிற்சி வழங்க செய்தார் என்பதும் உலகம் அறிந்தது.

தமிழர்களுக்கும் இசுலாமியர்களுக்கு இடையே நிரந்தர பகைமையை உருவாக்க தமது வேலைகளை முடுக்கி விட்டிருந்த சிங்கள-மொசாட் கூட்டணி முதலில் அம்பாறை மாவட்டத்தில் ஊர்காவல் படைகளில் சிங்களத்திற்கு விசுவாசமான இசுலாமிய அடியாட்களை கொண்டு தமிழர்களுக்கு எதிரான தாக்குதலை தொடங்கியது.

மோதல்களை தீவிரப்படுத்த 1984 ஆம் ஆண்டு ஜூன் 9 மற்றும் 10 ஆம் நாள்களில் சிங்கள சிறப்பு படைப்பிரிவும் இசுரேலிய தீவிரவாத எதிர்ப்பு படைப்பிரிவின் வீரர்களும் சேர்ந்து மட்டக்களப்பு காத்தான்குடியில் 30க்கும் அதிகமான அப்பாவி இசுலாமிய மக்களை கொன்று குவித்தனர். உடனடி பலன் கிடைக்கவில்லை என்றாலும் தொடர் செயல்பாடுகளால் திட்டமிட்டபடி பகைமை மெல்ல வளரவே கிழக்கு மாகாணத்தின் பிற பகுதிகளுக்கும் அது பரவியது.

இசுரேலில் வைத்து சிங்கள வீரர்களுக்கு பயிற்சி அளித்த அணியில் உறுப்பினராய் இருந்த மொசாட் அதிகாரி விக்டர் ஒஸ்ட்ரோவ்ஸ்கியின் கூற்றுப்படி 1984, 85 களில் 1.6 மில்லியன் அமெரிக்க டொலர்கள் பெற்றுக்கொண்டு சிங்கள வீரர்களுக்கு கபார் சிர்க்கின் மற்றும் கைஃபா படைத்தளங்களில் இசுரேல் பயிற்சி அளித்ததாகவும். அத்தோடு நின்றுவிடாமல் இலங்கையில் தங்கள் ஆயுத வர்த்தக சந்தையை நிலை நிறுத்திக்கொள்ள TELO அமைப்பிறக்கும் மொசாட் இலவசமாகவே பயிற்சி அளித்ததாகவும் செய்தியாளர் சந்திப்பு ஒன்றில் தெரிவித்திருந்தார். 1991 ஆம் ஆண்டு இசுரேலிய உளவு நிறுவனத்தில் தனது அனுபவங்களை “By the Way of Deception” என்ற புத்தகமாக வெளியிட்டதன் மூலம் மொசாட் அமைப்புக்கு பல நாடுகளில் கடும் நெருக்கடியை ஒஸ்ட்ரோவ்ஸ்கி ஏற்படுத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.

இவை அனைத்தையும் விட முக்கியமான நபர் ரபேல் ‘ரபி’ எய்த்தான். அர்ஜென்டினாவிலிருந்து ஜெர்மானிய ss தளபதி அடால்ப் எய்க்மன் கடத்திவரப்பட்ட நடவடிக்கைக்கு பொறுப்பாக இருந்தவர். இசுரேலின் உளவு நிறுவனங்களான ‘சின் பெத்’, ‘சாபக்’, ‘மொசாட்’ போன்றவற்றில் பல முக்கிய பதவிகளை வகித்தவர். 1981 ஆம் ஆண்டு பிற நாடுகளின் அறிவியல் தொழில்நுட்பங்களை கண்காணிக்கும் இசுரேலின் ‘LEKEM’ உளவு நிறுவனத்துக்கு பொறுப்பாளராக மாற்றப்பட்டார். 1985 ஆம் ஆண்டு அமெரிக்க தொழில் நுட்பங்களை திருட முயன்ற போது இவ்வமைப்பின் உளவாளி பிடிபடவே ‘LEKEM’ கலைக்கப்பட்டது.

இதன் பிறகு இசுரேலின் தேசிய இரசாயன உற்பத்தி நிறுவனமான “Israel Chemical Corporation” இன் தலைவராக நியமிக்கப்பட்ட்டார். பல நாடுகளின் உளவு நிறுவனங்களுக்கு இசுரேலின் ஆலோசகராக செயல்பட்டு வந்தவர் இலங்கையில் செயல்பட்டு வந்த மொசாட் பிரிவுக்கு கூடுதல் பொறுப்பாளராகவும் நியமிக்கப்பட்டார்.

இலங்கையில் நிறுவப்பட்டிருந்த ஒரு இசுரேலின் இரசாயன ஆலைக்கு வருகை தரும் அதிகாரி என்ற போர்வையில் 1980 களின் பிற்பகுதிகளில் பல நாட்கள் இலங்கையில் இருந்தவர். இவர் பொறுப்பேற்ற பிறகே தமிழ் இசுலாமிய பகைமை மட்டுமில்லாது இலங்கை உள்நாட்டு போர் என்ற போர்வையில் நடத்தப்பட்ட தாக்குதல்களில் அப்பாவி பொது மக்கள் இலக்கு வைக்கப்பட்டு வகை தொகையின்றி கொல்லப்பட்டதாகவும், போர் புதிய பரிணாமத்தை அடைந்ததாகவும் நம்பப்படுகிறது.

தமிழர்களுக்கும் இசுலாமியர்களுக்கும் இடையே பகைமையை விதைத்து அதன் மூலம் நேரடியாக பலன்பெற்றவர்கள், இன்றுவரை அந்த பலனை அனுபவிப்பவர்கள் சிங்கள தலைவர்கள். தமிழினத்தை அழித்தது மட்டுமல்லாமல் போரால் தங்கள் ஆயுத வர்த்தக சந்தையை நிலை நிறுத்தி மறைமுக பலனை அனுபவிப்பவர்கள் அமெரிக்கா, இசுரேல், சீனா, இந்தியா போன்ற வல்லாதிக்க சக்திகள்.

இசுலாமிய பெருமக்களே, 1990 ஆகஸ்ட் 3 ஆம் நாள் காத்தான்குடி பள்ளிவாசல் படுகொலைகள் ஒரு போதும் சிங்கள அரசுக்கு தெரியாமல் நடந்திருக்காது. கண்மூடித்தனமாக விடுதலைப்புலிகள் தான் செய்தார்கள் என்று பரப்புரை செய்யாமல். இந்த பகைமை எப்படி உருவானதென்றும் இதனால் உண்மையில் யார் பலனடைந்திருக்கிறார்கள் என்றும் சற்று சிந்தித்துப்பாருங்கள்.
(Stalin Dass)