27 வருடங்களின் பின்னர் திறக்கப்படும் பாடசாலை

பிரான்ஸ் நாட்டின் முன்னணி இலக்கியவாதியாகிய விக்டர் ஹியுபோ உலகமே ஏற்கத்தக்க ஒரு உண்மையினை சில வார்த்தைகளால் இவ்வாறு கூறினார். “ஒரு பாடசாலையின் கதவைத் திறப்பவர் சிறைசாலையின் கதவை மூடி விடுகின்றார்” இக்கருத்து எந்தளவு ஆழமான உண்மையாகும் என்பதனை கடந்த பல தசாப்தங்களாக நமது நாட்டிலேயே நம்மால் கண்கூடாகக் காணக்கூடியதாக இருந்தது. கடந்து சென்ற மூன்று தசாப்தங்கள் முழுவதிலும் அடிக்கடி பாடசாலைகள் மூடுவிழா காணும் அதே நேரத்தில் பல்வேறு வகையான தடுப்பு முகாம்களை பற்றியே எமக்கு அதிகம் கேட்கக் கிடைத்தது. இவற்றுள் சிறைச்சாலைகள், அகதி முகாம்கள், தற்காலிக முகாம்கள், திறந்தவெளி சிறைச்சாலைகள் ஆகியன நமது நாட்டினதும் உலகத்தினதும் முக்கிய கதைப்பொருளாக அமைந்ததை நாம் கண்டோம்.இன்று எமது இந்த கட்டுரைக்கு அடிப்படையாக அமைவதும் வளர்வதற்கு பதிலாக அடைபட்டுப் போய் சுமார் 27 வருடங்களின் பின்னர் எதிர்வரும் வாரத்தில் மீண்டும் திறக்கப்படவிருக்கின்ற சுமார் 200 வருடங்கள் பழமைவாய்ந்த புகழ்பெற்ற மயிலிட்டி கலைமகள் மகா வித்தியாலயமாகும்.

பிரிவினைவாத யுத்தம் வேரூன்றி வளர ஆரம்பித்த அந்த காலத்தில் அதுவரை அப்பகுதியில் நிலவிய சுமூகமான இயல்பு வாழ்க்கை சிதைக்கப்பட்டு மனித நேயத்தை மறந்த மனிதர்கள் எதிரிகளாக மாறி ஆயுதம் ஏந்த ஆரம்பித்த 1987 ஆம் ஆண்டில் அதுவரை 900க்கும் அதிகமான மாணவர்களுக்கு பாடம் புகட்டிவந்த இந்த பாடசாலையை ஒரு இருண்ட நாளில் முதல் முறையாக அகதி நிலைமையில் விட்டுவிட்டு ஊராருக்கும் மாணவர்களுக்கும் ஊரை விட்டு வெளியேற நேர்ந்தது. அதையடுத்து அப்பாடசாலையில் கற்றுவந்த மாணவர்களும் ஆசிரியர்களும் பல்வேறு திசைக்கு பிரிந்து செல்ல நேரிட்டது. இதனால் எஞ்சியோரைக் கொண்டு இப்பாடசாலை யாழ். அளவெட்டி ஞானோதயா பாடசாலையுடன் இணைக்கப்பட்டது. சிறிது காலத்தின் பின்னர் மீண்டும் நிலமை வழமைக்குத் திரும்பியதால் சுமார் 800 மாணவர்களையும் 25 ஆசிரியர்களையும் கொண்டு முதலாவது இடம்பெயர்வுக்கு முன் இயங்கிய இடத்திற்கே இந்த வித்தியாலயம் கொண்டு வரப்பட்டது.

ஆயினும் 90களின் ஆரம்பத்தில் ஆரம்பித்த இரண்டாம் ஈழப் போர் மீண்டும் இப்பாடசாலையையும் அதில் கல்விகற்ற மாணவர்களையும் கற்பித்து வந்த ஆசிரியர்களையும் மீண்டும் இடம்பெயர செய்தது. அதையடுத்து சுன்னாகம் உள்ளிட்ட சில பிரதேசங்களில் மாலை நேர வகுப்பறை நடத்தும் ஒரு பாடசாலையாகவும் பின்னர் வேறு பாடசாலைகளுடன் கூட்டுச் சேர்க்கப்பட்ட பாடசாலையாகவும் காலத்தைக் கடத்த வேண்டியிருந்ததால் 93 ஆம் ஆண்டளவில் மயிலிட்டி கலைமகள் மகா வித்தியாலயம் தனது தனித்துவத்தை இழந்த ஒரு பாடசாலை என்ற நிலைக்குத் தள்ளப்பட்டது. சில வருடங்களின் பின்னர் மீண்டும் சில ஓலைக் கொட்டில்களில் இப்பாடசாலையை ஒரு சுயாதீன பாடசாலையாக நடாத்திச் செல்வதற்கு எடுக்கப்பட்ட முயற்சிகளும் மீண்டும் மீண்டும் தொடர்ந்த அனர்த்தத்தினால் அடிபட்டுப்போனது. இதனால் 1996 ஆம் ஆண்டு மே மாதத்திலிருந்து இதுவரையிலான கடந்த 27 ஆண்டுகளாக மயிலிட்டி கலைமகள் மகா வித்தியாலயம் சுன்னாகம் சபாபதி பிள்ளை வீதியில் அமைந்திருக்கும் தனியார் ஒருவருக்கு சொந்தமான ஒரு பாடசாலையினை கொண்டு நடத்துவதற்கு தேவையான எந்த அடிப்படை வசதிகளும் அற்ற ஓர் பாழடைந்த கட்டடத்திலேயே நடத்தப்பட்டு வருகின்றது.

1818 ஜூன் மாதம் 04 ஆம் திகதி 33 மாணவர்களைக் கொண்டு மயிலிட்டி வடக்கு அமெரிக்கன் மிஷன் தமிழ் கலவன் பாடசாலை எனும் பெயரில் ஆரம்பிக்கப்பட்ட இப்பாடசாலை 1963 ஆம் ஆண்டு அரச பாடசாலையாக மாற்றப்பட்டதையடுத்து பெளதீக ரீதியிலும் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் எண்ணிக்கையிலும் வளர்ச்சி கண்டதுடன், மூத்த தமிழ் அரசியல்வாதியும் யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான எஸ்.ஜீ.வீ.செல்வநாயகம் அவர்களே மயிலிட்டி வடக்கு கலைமகள் மகா வித்தியாலயம் எனும் பெயரை இப்பாடசாலைக்கு சூட்டியிருக்கின்றார்.

யாழ். மாவட்டத்தின் கல்வி மற்றும் விளையாட்டுத் துறையின் வளர்ச்சிக்காக காத்திரமான பங்களிப்பினை வழங்கி வந்த இப்பாடசாலையே யுத்தத்தின் பிடியில் சிக்கி மூடுவிழா கண்ட அப்பகுதியின் பல பாடசாலைகளுக்கு நேர்ந்த துர்பாக்கிய நிலைக்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டாகும். இவ்வாறு 27 வருடங்களாக இருளில் மூழ்கியிருந்த இப்பாடசாலை பற்றிய கதையும் எதிர்பாராத நேரத்தில் எதேச்சையாகவே வெளிச்சத்திற்கு வந்தமைக் குறிப்பிடத்தக்கதாகும். இப் பாடசாலைக்கு ஏற்பட்ட இதே கதியை சந்தித்து கடந்த 27 வருடங்களாக மூடப்பட்டிருந்த மயிலிட்டி மீன்பிடி துறைமுகத்தின் புனர்நிர்மானப் பணிகள் மேன்மைதங்கிய ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன அவர்களின் தலைமையில் கடந்த 22 ஆம் திகதி யாழ். மயிலிட்டியில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

அவ்விழாவில் மிக உணர்வுபூர்வமாக உரையாற்றிய பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா அவர்கள் “இந்நாட்டின் மீன் உற்பத்திக்கு கணிசமான பங்களிப்பினை வழங்கிவந்த இந்த மயிலிட்டி துறைமுகம் 27 வருடங்களின் பின்னராவது மீனவர்களின் பயன்பாட்டிற்காக வழங்கப்பட்டிருக்கும் அதேவேளை அதன் முழுமையான பயனை அடையும் வகையில் அத்துறைமுகத்தினை அபிவிருத்தி செய்வதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்திருக்கின்றமை பாராட்டத்தக்க விடயமாகும். அதேநேரத்தில் யுத்தம் முடிவிற்கு வந்து 09 வருடங்கள் கடந்திருக்கும் நிலையிலும் இத்துறைமுகத்தை சூழ்ந்திருக்கும் எஞ்சிய நிலமும் அதில் அமைந்திருக்கும் பாடசாலையும் இன்னும் மக்களிடம் கையளிக்கப்படாமல் இருப்பது கவலைக்குரிய விடயமாகும்” எனக் குறிப்பிட்டார்.

அவரின் உரையை அடுத்து அங்கிருந்த யாழ் இராணுவக் கட்டளைத் தளபதியை தம்வசம் அழைத்து கலந்தாலோசித்த ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன அவர்கள் அச்சமயம் கொழும்பிலிருந்த இராணுவத் தளபதியுடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு அவ்விடயம் குறித்து கலந்துரையாடினார். அதன் பின்னர் அவ்விழாவில் உரையாற்றிய ஜனாதிபதி அவர்கள் மயிலிட்டி கலைமகள் மகா வித்தியாலயத்தை இரண்டு வாரங்களுக்குள் விடுவிப்பதற்கு நடவடிக்கை எடுப்பதாக அறிவித்தார். அதற்கு அங்கே குழுமியிருந்த 3000 இற்கும் அதிகமான அப்பகுதி மக்களின் உற்சாகமான கரகோஷம் பதிலாகக் கிடைத்தது.

அவ்விழாவை அடுத்து இந்த எழுத்தாளருடன் கருத்து தெரிவித்த யாழ். இராணுவக் கட்டளை தளபதி மேஜர் ஜெனரல் தர்ன ஹெட்டியாரச்சி அவர்கள் அப்பாடசாலையையும் அதனுடன் கூடிய இரண்டரை ஏக்கர் நிலத்தையும் ஜனாதிபதி அவர்களின் ஆலோசனையின் பேரில் விடுவிப்பதற்கு நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார். தற்போது பாதுகாப்பு துறையினரும் யாழ். அரசாங்க அதிபரும் அப்பாடசாலையை இம்மாதம் 05 ஆம் திகதி விடுவிப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

இப்பின்னணியில் ஒரு சமூகம் என்ற வகையில் எம்முன் ஒரு சவால் காணப்படுகின்றது. அதாவது 27 வருடங்களாக கைவிடப்பட்ட நிலையில் பாழடைந்த கட்டிடமாக இருந்துவரும் மயிலிட்டி கலைமகள் மகா வித்தியாலயத்தை மீண்டும் அனைத்து அடிப்படை வசதிகளையும் கொண்ட ஒரு பரிபூரண பாடசாலையாக மாற்றுவது எப்படி என்பதே அந்த சவாலாகும். இந்த நாட்டில் உண்மையான நல்லிணக்கம் ஏற்பட வேண்டும் என எதிர்பார்ப்போர் அதற்கான ஓர் சந்தர்ப்பமாக இதனை பயன்படுத்திக் கொள்ளலாம்.

“பாடசாலைகளை மூடி சிறைச்சாலைகளை திறக்குமாறு கட்டளை இடுவதை விட, மூடப்பட்டிருக்கும் பாடசாலைகளை மீண்டும் திறந்து திறக்கப்பட்டிருக்கும் சிறைச்சாலைகளை மீண்டும் மூடக் கூடிய சூழ்நிலையை தமது நாட்டில் ஏற்படுத்துவதே ஒரு உண்மையான அரச தலைவனுக்கு மகிழ்ச்சியைத் தரும்” என்பதை மறுப்பதற்கில்லை.

ஏனெனில் உலகையே மாற்றக்கூடிய வல்லமையையும் இருளிலிருந்து வெளிச்சத்தை நோக்கி செல்லக்கூடிய ஆற்றலையும் கல்வியே கொண்டிருக்கின்றது.

(ரவி ரத்னவேல்)