730 சம்பள உயர்விற்குள் சுருக்கிக் கொண்டது மலையக தொழிலாளர்கள் சங்கம்…?

(Sinnapalaniandy Sachidanandam and Saakaran)

ரூபா 1000க்கு ஒரு சதம் குறைந்தாலும் நான் ஏற்றுக் கொள்ள மாட்டேன் என்று கடந்த ஒன்றரை ஆண்டு காலமாக இலங்கையிலும் உலகின் பல்வேறு நாடுகளிலும் சுற்றிச் சுற்றி பல்வேறு பேச்சுவார்த்தைச் சுற்றுக்களில் சண்டையிட்டு எல்லாமே தோல்வியில் முடிவடைந்த படியால் கிடைத்தவரை லாபம் என்ற வகையில் வேறு வழியில்லாமல் ரூபா 730 க்கு நிலுவை எதுவுமே பெற்றுத் தர வக்கற்ற நிலையில் இலங்கையின் மிகப் பெரிய மற்றும் மிகப் பழைய தோட்டத் தொழிலாளர் சங்கம் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் உரிமையாளர் தனது சகா வடிவேல் சுரேஷுடன் சமமாக அமர்ந்து ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார். வெட்கக்கேடு!

சரியான சுபநேரத்தில் ரூபா 1000 மற்றும் நிலுவைச் சம்பளத்தையும் தொழிலாளர்களின் பாக்கெட்டில் வைப்போம் என்று வாக்குறுதி அளித்தார் முன்னாள் கால்நடைகளுக்கான அமைச்சர் ஆறுமுகன் ராமநாதன். இதோ அவர் வாக்குறுதியளித்த சுபநேரம் வந்துவிட்டது. ஆனால் ரூபா 1000த்தைத் திணிக்க தொழிலாளர்களின் பாக்கெட்டில் போதிய இடம் இல்லாத படியால் கொஞ்சம் குறைத்து ரூபா 730 வைக்க ஏற்பாடு செய்துள்ளார். எல்லாவற்றுக்கும் சுப முகூர்த்தமும் “மற்றவைகளும்” சரியாக அமைந்தால் வாக்குறுதிகள் நிறைவேற்றுவதில் இதொகா உரிமையாளரை எவராலும் மிஞ்ச முடியாது என்பதற்கு மற்றுமொரு எடுத்துக்காட்டு.

முதலாளிமார் சம்மேளனத்தையும் ஜனாதிபதியையும் ஒரே கையெழுத்தில் மகிழ்வடையச் செய்து சாதித்துள்ள படியால் யார் எதிர்த்தாலும் ஆறுமுகன் ராமநாதனுக்கு சற்றும் விருப்பமில்லாமல் அமைச்சு பதவியை திணிப்பார்கள் என்பது அன்னாரின் எதிர்பார்ப்பு. அவர் பார்க்காத அமைச்சா? சுண்டைக்காய் அமைச்சு. இருந்தாலும் மாதச் சந்தா கொடுத்து வாழ வைக்கும் உங்களுக்கு சேவை செய்ய வேண்டும் எனபதற்காக நல்லாட்சியில் ஒரு அமைச்சு பதவி கிடைக்கும் என்பது நீண்டகால எதிர்பார்ப்பு. பொறுத்ததே பொறுத்தோம். இன்னும் சில வாரங்களுக்குப் பொறுப்பதில் என்ன தவறு. ஒப்பந்தத்தில் கையெழுத்திட வேண்டுமென்பதற்காக இலங்கையில் நீண்ட காலம் தங்கி விட்டார். ஆகவே ஒரு மாற்றம் தேடி வெளிநாடு சென்று வரட்டும். வழியை மறைக்காதீர்கள். தூக்கி வீசி விடுவார்

மூழ்கிக் கொண்டிருக்கும் தொழிற் சங்கம் தன்னைத் தக்க வைத்துக் கொள்ளுமா? பன்னிரண்டு சுற்றுப் பேச்சுவார்த்தைகளும் தோல்வியில் முடிவு பெற்றன. இடையே ஓரிரு வெளிநடப்புகள் எல்லாம் நடந்தன. ஒப்பந்தத்தில் கையெழுத்திடும் இறுதி நேரத்திலும் கூட நிலுவை, 19 மாதங்களுக்கான நிலுவைப் பணம் தர முடியாது என்று தோட்ட நிர்வாகம் திட்டவட்டமாக சொல்லி விட்டது. ஆனால் உரத்த குரலில் ஆட்சேபனை தெரிவித்துக் கொண்டே ஐயா கையெழுத்திட்டு மொத்த தோட்டத் தொழிலாளர்களையும் கட்டிக் கொடுத்து விட்டார். உரத்த குரலில் கத்தி எழுப்பிய ஆட்சேபனை எங்குமே பதிவாகவில்லை.

வாயால் தெரிவித்த ஆட்சேபனையை எவரும் எங்கும் பொருட்படுத்தப் போவதில்லை. தான் உடன் படாத காரணங்களைப் பட்டியலிட்டு இன்னென்ன காரணங்களால் நான் இந்த ஒப்பந்தத்தை ஏற்க மறுக்கிறேன் என்று வெளிநடப்பு செய்திக்க வேண்டியவர் என்ன காரணத்தால் வாயால் ஆட்சேபனை தெரிவிப்பதாகச் சொல்லிக் கொண்டு கையெழுத்திட்டு ஒப்பந்தத்தை ஏற்றுக் கொள்ளுவதாகத் தெரிவித்தார்? 19 மாதங்கள் தண்ணீரில் மிதந்த கோரிக்கைகளுக்கு இவரது தான் தோன்றித் தனமான கையெழுத்து ஆப்படித்துள்ளது.

பாதிக்கப் படப் போகின்றவர்கள் மலையகத்தின் உழைப்பாள வர்க்கம்.
இன்று இவர் கையெழுத்திட்ட ஒப்பந்தம் இவருக்கு சந்தா கொடுக்கும் இதொகா அங்கத்தவர்களை மாத்திரம் கட்டுப் படுத்தவில்லை. ஏனைய தொழிற் சங்கங்களைச் சேர்ந்த தொழிலாளர்களையும் கட்டுப் படுத்துகிறது. ஆனால் வேறு தொழிற் சங்கங்களுக்கு மாதச் சந்தா கொடுப்பவர்கள் ஆறுமுகன் ராமநாதனை அணுக முடியாது.

எனவே தாங்கள் எந்த தொழிற் சங்கத்துக்கு அங்கத்துவப் பணம் கொடுக்கின்றார்களோ அந்த தொழிற் சங்கத் தலைவர்களை அணுகி தங்களது ஆட்சேபனையைத் தெரிவித்து ரூபா 1000 நாட்சம்பளம், 6 வேலை நாட்கள் மற்றும் நிபந்தனைகளில் மாற்றத்தைப் பெற்றுத் தரக் கோர வேண்டும். கூட்டு ஒப்பந்தத்தில் கையெழுத்திட தகுதி இல்லாத தொழிற் சங்கங்கள் சம்பந்தப் பட்டவர்களைத் தொடர்பு கொண்டு மாற்றங்களின் தேவை பற்றி நடவடிக்கை எடுக்காவிட்டால் பாதிக்கப் படப் போவது தொழிலாளர்கள் தான் என்பதை நாம் உணரவேண்டும்.

எனக்கு என்னவோ ஆகக் குறைந்தது 1000 ரூபாய் அடிப்படைச் சம்பளம். கிழமையில்  6 நாட்கள் அல்ல 5 நாட்கள் வேலை அதாவது இரண்டு நாட்கள் ஓய்வு.  இதில் அவர்கள் கிழமையில் 5 நாட்கள் வேலையில் பெறும் ஊதியம் சந்தோஷமாக குடும்பத்துடன் கழிகக் கூடிய வருவாய் உறுதிப்படுத்தியதாக அமைய வேண்டும். குறிப்பாக வீடுமனை இன் தராதரம் பல மடங்கு உயர்தப்படவேண்டும் இவற்றில் எந்த விட்டுக் கொடுப்பும் செய்யப்படக் கூடாது. – Saakaran