அறிக்கைப்போர் நடத்தும் அமைப்புகளின் மெத்தனம் குறித்து எதிர்கட்சி தலைவர் விசனம்!

தமிழ் மக்களின் உரிமை சம்மந்தமாகவும், அவர்களுக்கு எவ்வாறான தீர்வு தேவை என்பது பற்றியும் ஆளுக்கொரு அமைப்பை உருவாக்கி, அறிக்கை விடுவதும், கொடிபிடித்து கோசமிடுவதும் என விளம்பரம்தேடும் பலர், அண்மையில் பிரதமரால் அமைக்கப்பட்ட தீர்வுதிட்டம் சம்மந்தமான இருபதுபேர் கொண்ட மக்கள் கருத்தை அறியும் குழு முன்தோன்றி, தமது ஆலோசனைகளை வழங்க முன்வரவில்லை என்ற தன் விசனத்தை, வட மாகாண சபை எதிர்கட்சி தலைவர் திரு சின்னத்துரை தவராசா தெரிவித்துள்ளார்.

தென்னாபிரிக்காவை அடியொற்றி செய்யப்படும் இந்த நகர்வை பத்தோடு பதினொன்றாக பார்க்க முடியாது. கடந்த காலங்களில் அரசுகள் அரசியல் தீர்வுக்காக ஆணைக்குழுக்களை அமைப்பதும், அதன் ஆலோசனைகளை எதிர்கட்சிகள் எதிர்ப்பதும், அல்லது அரசே கைவிடுவதும் என்ற அனுபவம் காரணமாக, இதுவும் ஒரு கண்துடைப்பு நாடகம் என கூறுபவர்கள் உண்டு. ஆனால் இம்முறை சூழ்நிலை எமக்கு சாதகமாக இருப்பதை அவர்கள் எண்ண மறுப்பதாகவே தோன்றுகிறது. காரணம் இந்த அரசு வரலாற்றில் முதல் முறையாக ஆளும் தரப்பு எதிர் தரப்பு இணைந்த நல்லாட்சிக்கான அரசாக உருவாக்கப்பட்டுள்ளது.

நல்லாட்சி என்றவுடன் நம்பி பின்செல்ல முடியாது என்பவர் சேர் பொன் அருணாசலம் டி எஸ் சேனநாயக்காவுடனும், ஹண்டி பேரின்பநாயகம் சேர் ஜோன் கொத்தலாவலையிடமும், செல்வநாயகம் பண்டா – டட்லியுடனும், அமிர்தலிங்கம் ஜெயவர்த்தனாவுடனும், வரதராஜபெருமாள் பிரேமதாசாவுடனும், பிரபாகரன் எரிக் சொல்கைமுடனும் நம்பித்தான் உறவாடினர் இறுதியில் நடந்தது என்ன? என்ற கேள்வியை எழுப்பலாம். அதற்கான பதில்தான் இன்றைய சர்வதேச நாடுகளின் இனப்பிரச்சனைக்கான தீர்வு பற்றிய, சிறீலங்கா அரசின் மீதான கால அவகாசம் குறிப்பிட்டு கொடுக்கப்படும் அழுத்தம்.

தம் நலம் சார்ந்த செயலாக சர்வதேசம் இதனை செய்கிறது என்பது அனைவரும் அறிந்த உண்மை என்ற போதும், எம் இனம் இதன் மூலம் அடையக்கூடிய பலாபலன்களை நாம் உதாசீனம் செய்ய கூடாது. தனிமனித வாக்கு மீறல்களால் ஏற்பட்ட விரக்தி எம் மனதில் ஏற்படுத்தி உள்ள சந்தேகங்களை முன்னிறுத்தி நாம் முடிவுகள் எடுத்தால், அல்லல்படும் மக்களின் அன்றாட பிரச்சனைகள் கூட அனுமன் வால் போல் நீண்டு செல்லும் நிலை ஏற்படும். கொடிபிடித்து கோசம்போட அழைத்தவர் அதை முடித்து தம் வசதியான வீட்டில் கட்டிலில் குறட்டை விட, அதில் கலந்து கொண்ட மக்கள் அகதி முகாம் சகதியில் பாய் விரித்து தூக்கத்தை தொலைப்பர்.

நீண்ட நெடிய யுத்தம் தமிழ் மக்களை இறுதியில் தங்களை வெல்ல வந்த இராணுவத்திடம், வெட்கம் இன்றி பசித்த தன் பிள்ளைகளுக்காய் சோற்று பாசல் கேட்டு கை ஏந்த வைத்தது. தன் வயிறு காய்ந்தபோதும் மெய்வருந்த இருந்த தாய் தன் சேயின் பசித்த வயிற்றுக்கு தன்னில் பால் சுரக்க, இரந்தாகிலும் தான்உண்ணும் நிலைக்கு மனதை மாற்றவைத்தது. கை இழந்து கால் இழந்து உடம்பின் அவயங்களில் விழுப்புண் சுமந்து, விடுதலை கனவில் மட்டும் களம் புகுந்து சமராடி, சரித்திரமான ஆயிரக்கணக்கான போராளிகளின் பெற்றோரை கூட, அநாதரவாக அலைய வைத்தது.

வெட்டிக்கோசங்களும் வீராப்பு வசனங்களும் பேசி மக்களை தெருவுக்கு இறக்கும் தலைமைகள், ஏற்ற தீர்வு என்ன என்ற ஆலோசனை வழங்க தங்கள் பங்களிப்பை செய்ய முன்வருவதில்லை என்பதே, எதிர் கட்சி தலைவர் திரு தவராசா வின் நியாயமான ஆதங்கமாகும். கலாநிதி நல்லையா குமரகுருபரன், சட்டவாளர் திரு அப்பாத்துரை விநாயகமூர்த்தி, திரு பாக்கியசோதி சரவணமுத்து போன்ற சிலர் தாம்சார்ந்த அமைப்பினூடாக ஆலோசனையை வழங்கி உள்ளது சற்று ஆறுதல். முன்னாள் வடக்கு கிழக்கு மாகாண சபை முதல்வர் திரு அண்ணாமலை வரதராஜ பெருமாளும் அதிகாரபகிர்வு உட்பட்ட தீர்வு பற்றிய தனது முன் அனுபவ ஆலோசனையை வழங்கியுள்ளார்.

நீண்டகால அரசியல் கலந்துரையாடல் அனுபவம் கொண்ட திரு தவராசா வெறுமனே அரசியல்சார்ந்த அமைப்புகள் மட்டுமல்ல, தமிழ் சங்கங்கள் போன்ற பொது அமைப்புகளும் தமது அலோசனைகளை வழங்கி பேரினவாதிகளின் சிந்தையில் சிக்கியுள்ள இன நல்லுறவை மீட்க பல குரல்கள் எழுப்பும் ஒருமித்த கோரிக்கைதான் பலன்தரும் என்பதை எதிர்வுகூருகிறார். சர்வதேச அழுத்தம் ஏற்படுத்தி தந்திருக்கும் இந்த சந்தர்ப்பத்தை, பல அமைப்புகளை புலம்பெயர் பணத்துக்காக உருவாக்கி வெறும் உறுமல் மட்டும் செய்யாது, தீர்வுக்கான ஆலோசனைகள் வழங்க முன்வரவேண்டும் என்ற அவரின் எதிர்பார்க்கை யதார்த்தமானது.

எதிர்கட்சி தலைவர் திரு தவராஜா மாகாண சபை கூட்டங்களில் முன்வைத்த விடயங்களை அவர் இருக்கும் இடத்தை வைத்து ஏற்கமறுத்தவர்கள் அவர் கூறிய விடயம்பற்றி காலம் கடந்த பின் உணரத்தலைப்பட்டமை அண்மைய நிகழ்வுகள் மூலம் நிரூபணம் ஆகின்றன. மூன்று கோரிக்கைகளை முன்வைத்து அண்மையில் முதல்வருடன் சந்திப்பை நடத்திய ஆளும்தரப்பு உறுப்பினர்கள் முன்வைத்த முதன்மை கோரிக்கை வினைத்திறன் உள்ள மாகாண சபை செயன் முறை என்பதே. வலம்புரி ஆசிரியருக்கு பகிரங்க மடல் எழுதிய வைத்தியர் செந்தூரன் குறிப்பிட்டதும் மாகாண சபையின் வினைத்திறன் அற்ற செயல்ப்பாடு பற்றியதே.

பல உண்மைகளை ஆதாரத்துடன் கூறிய எதிர்கட்சி தலைவர் மாகாண அரசின் மெத்தனபோக்கு பற்றி பட்டியலிட்ட விடயங்கள் கனதியானவை.

1. மாகாண சபைக்கு என மத்திய அரசால் ஒதுக்கப்படும் நிதியை அந்தந்த மாவட்டங்களின் முக்கிய தேவைக்கேற்ப நாமே ஒதுக்கும் அதிகாரம் எமக்கு வேண்டும். அதை விடுத்தது மத்திய அரசு மாவட்டங்களுக்கு குறித்தொதுக்கும் திட்டங்களுக்கு செலவிடும் முகவராக நாம் இருக்கக்கூடாது.

2. செயல்படுத்த உள்ள திட்டங்களுக்கான ஒப்பந்ததாரர் தரும் செலவின மதிப்பீட்டு மனு கோரலை மத்திய அரசின் நிதி வரும்வரை காத்திருக்காமல் முன் கோரலாக பெற்று வைத்திருந்து நிதி கிடைத்ததும் வேலையை ஆரம்பித்து குறித்த ஆண்டுக்கென கிடைத்த நிதி மீண்டும் திறைசேரி திரும்பும் நிலையை இல்லாமல் செய்யவேண்டும்.

3. எமக்கு பகிரப்பட்ட விடயங்களுக்கான சட்டவாக்கத்தை உருவாக்காது கால இழுத்தடிப்பு செய்வதால் நாம் மத்திய அரசின் சட்டப்படி செயல்படும் நிலையை மாற்றவேண்டும். உதாரணமாக கூடுறவுசபை மாகாணத்துக்கு முழுமையாக பகிரப்பட்டவிடயம். ஆனால் அதற்கான சட்டவாக்கம் உருவாக்கபடவில்லை. எமக்கு அதிகாரம் இல்லை என கூறிக்கொண்டு இருப்பதை தவிர்த்து, எமக்கு தரப்பட்ட அதிகாரங்களை பிரயோகிக்க கூடிய சட்டவாக்கங்களை விரைவாக உருவாக்க குழுக்களை அமைக்கவேண்டும். என பலவிடயங்கள் பற்றி அவர் யோசனை தெரிவித்தார்.

அன்று அமைச்சர்களின் செயல் மற்றும் அமைச்சுகளில் நடப்பவைகள் பற்றி அவர் தெரிவித்த கருத்துகளை ஏற்காது அவருடன் வாதப்பிரதிவாதம் செய்த ஆளும்தரப்பு உறுப்பினர்கள் தான் இன்று முதல்வரிடம் அமைச்சர்கள் பற்றிய முறைப்பாட்டை செய்துள்ளனர். அமைச்சர்களை பற்றி குறை கூறத்தான் என்னிடம் நேரம் ஒதுக்கித்தரும்படி கோரினீர்கள் என முதலமைச்சரே வட மாகாண சபை ஆளும் தரப்பு உறுப்பினர்களுக்கு எழுதிய பதில் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளமை. எதிர்கட்சி தலைவர் திரு தவராசாவின் கூற்றை உறுதி செய்கிறது.

எதிர்கட்சி தலைவர் என்ற நிலைக்கு அப்பால் திரு தவராசாவுக்கு நீண்ட அரசியல் அனுபவம் உண்டு. பல ஜனாதிபதிகளால் அமைக்கப்பட்ட இனப்பிரச்கானக்கான தீர்வு திட்ட ஆணைக்குழுக்களின் ஆலோசனை கூட்டங்களில் அவர் கலந்து கொண்டுள்ளார். தவிரவும் ஒரு அமைச்சரவை அந்தஸ்து உள்ள அமைச்சரின் ஆலோகசராய், செயலாளராய் மிக நீண்ட காலம் செயல்பட்டு வந்துள்ளார். ஆரம்பகால போராளிகளான புஸ்பராஜா, முத்துக்குமாரசாமி, பத்மநாபா போன்றவர்களுடன் ஈழ விடுதலை இயக்கத்தில் [E L O] செயல்பட்டுள்ளார்.

போராளி, கணக்காய்வாளர், பாராளுமன்ற உறுப்பினர், அரசியல் நிர்வாகி, எதிர்கட்சி தலைவர் என்ற அவரது பாதையில் நிறைய நடைமுறை அனுபவங்களை கொண்டவராக அவர் இருப்பதனால் அவரது ஆதங்கத்தை வெறுமனே அவரை ஒரு கட்சி சார்ந்தவராக கொள்ளாது, அவர் கூறிய விடயத்தில் உள்ள அனுபவ பகிர்வை நாம் புரிந்துகொள்ள வேண்டும். எனவே இன்று ஏற்பட்டிருக்கும் சூழ்நிலையை பயன்படுத்தி சகல மக்கள் நலன் சார்ந்த அமைப்புகளும் தங்கள் ஆலோசனைகளை நேரில் ஆஜராகி முன்வைக்கும் போது அது கனதியான நல்ல பலனை தரும்.

எம்மிடையே திரு தவராசா போன்ற பல அனுபவம் உள்ள திறமையானவர்கள் தனிமரங்களாக இருக்கும் நிலை மாறவேண்டும். இனப்பிரச்கானக்கான தீர்வு விடயத்தில் எம்மவர் அனைவரும் ஒன்றினைந்து தோப்பாக செயல்ப்பட வேண்டும். சில வருடங்களுக்கு முன் திரு அண்ணாமலை வரதராஜபெருமாள் தனது கட்டுரை ஒன்றில் ஈழத்தமிழர்களில் நிறைய திறைமைசாலிகள் இருக்கிறார்கள் ஆனால் அவர்கள் தோப்பாக அல்லாது தனி நபர்களாகவே செயல்ப்படுகிறார்கள் என ஆதங்கப்பட்ட நிலை தற்போதும் தொடர்கிறது. அந்த நிலை இனிமேலாவது மாறவேண்டும்.

(ராம்)