ஊவா மாகாண ஆசிரிய உதவியாளர்களுக்கு பயிற்சி பெற அனுமதி வழங்க வேண்டும் – மக்கள் ஆசிரியர் சங்கம்

1943 என இலக்கமிடப்பட்ட 2015.11.27ஆம் திகதியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலின்படி ஆசிரிய கலாசாலைகளுக்கு இரண்டு வருட ஆசிரிய பயிற்சியினை பெறுவதற்காக ஆசிரியர்களிடமிருந்து விண்ணப்பங்கள் கல்வி அமைச்சினால் கோரப்பட்டுள்ளன. இதில் குறைந்தது மூன்று மாத கால ஆசிரிய சேவை அனுபவம் கொண்ட பயிற்றப்படாத ஆசிரியர்கள் மற்றும் ஆசிரிய உதவியாளர்கள் விண்ணப்பிக்க முடியும் என குற pத்துரைக்கப்பட்டுள்ளது. ஊவா மாகாணத்தில் கடமையாற்றும் பயிற்சிக்கு விண்ணப்பிக்க தகுதியுடைய ஆசிரிய உதவியாளர்கள் விண்ணப்பிக்க அனுமதிபெற மாகாண கல்விப் பணிப்பாளரிடம் சென்ற போது ஆசிரிய உதவியாளர்கள் எவருக்கும் பயிற்சிக்கு அனுமதி வழங்காதிருக்க தீரமானிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டு பயிற்சிக்கு அனுமதி தர மறுக்கப்பட்டுள்ளார். இது குறித்து ஆசிரிய உதவியாளர்களிடமிருந்து மக்கள் ஆசிரியர் சங்கத்திற்கு முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாகவும் அத் தீர்மானத்திற்கு தமது ஆட்சேபனையைத் தெரிவிக்கும் அதேவேளை பின்வரும் விடயங்கள் தொடர்பில் கவனத்தை செலுத்த வேண்டுமென மக்கள் ஆசிரியர் சங்க பொதுச் செயலாளர் இரா. நெல்சன் மோகன்ராஜ் ஊவா மாகாண கல்வி பணிப்பாளருக்கு கடிதம் மூலம் தெரிவித்துள்ளார். அக்கடிதத்தில் பின்வரும் விடயங்கள் சுட்டிக்காட்டப்பட்டுள்ளன:


வர்த்தமானி அறிவித்தலின்படி பாடசாலையில் மூன்று மாத காலம் சேவையாற்றிய ஆசிரியர்கள், ஆசிரிய உதவியாளர்கள் அனைவரும் ஆசிரிய கலாசாலைகளுக்கு விண்ணப்பிக்க தகுதியுடையவர்களாவர்.
பயிற்சி பெறுவதற்காக கல்வி அமைச்சு தகுதியுடைய ஆசிரியர்கள், ஆசிரிய உதவியாளர்கள் ஆசிரிய கலாசாலைகளுக்கு விண்ணப்பிப்பது அவர்களின் உரிமையாகும்.
ஏனைய மாகாணங்களில் ஆசிரிய உதவியாளர்கள் ஆசிரியர் பயிற்சி கலாசாலைகளுக்கு மாகாண கல்விப் பணிப்பாளர்களால் விடுவிக்கப்பட்டிருக்கும் பட்சத்தில் ஊவா மாகாணத்தில் மட்டும் அனுமதி மறுக்கப்பட்டிருப்பது ஆசிரிய உதவியாளர்கள் தங்கள் பயிற்சி மேற்கொள்வதற்கான உரிமை மீறும் நடவடிக்கையாகும்.
ஊவா மாகாண பயிற்றப்படாத ஆசிரியர்களை மற்றும் ஆசிரிய உதவியாளர்களை பயிற்றுவிப்பதற்காக தொலைக் கல்வி பயிற்சி முறை ஒன்றை நடைமுறைபடுத்தவுள்ளதாக தாங்கள் வாய்மூலம் தெரிவித்தபோதும், அது எப்போது என்பது முறையாக அறிவிக்கப்படாத நிலையில் பயிற்றப்படாத ஆசிரியர்கள் அனைவரும் கட்டாயம் பயிற்சி பெற்றிருக்க வேண்டும் என்ற தேசிய கல்விக் கொள்கைக்கமைய தற்போதைய வர்த்தமானி அறிவித்தலின்படி நடைமுறையில் உள்ள ஆசிரிய பயிற்சி கலாசாலைகளுக்கு விண்ணப்பித்து பயிற்சியை நிறைவு செய்ய வேண்டியது அவர்களின் கடமையாகும்.
தொலைக்கல்வி பயிற்சிநெறி தேசிய கல்வி நிறுவகத்தால் நடைமுறைப் படுத்தப்பட வேண்டியதுமாகும். ஆசிரியர் பயிற்சி கலாசாலை, தொலைக்கல்வி பயிற்சி நெறி ஆகிய இரண்டு பயிற்சி முறைகளும் நடைமுறையில் இருக்குமாயின் தாங்கள் எம்முறையில் பயிற்சியை மேற்கொள்வதென்பதை தெரிவு செய்யும் உரிமையும் சுதந்திரமும் ஆசிரியர்களுக்கு உண்டு.
மாகாணத்தில் இருந்து அனைத்து பயிற்றப்படாத ஆசிரிய உதவியார்களினதும் விண்ணப்பங்களை மறுத்ததனூடாக அவர்களின் தொழில் உரிமையையும் சமமாக நடத்தப்படுவதற்கான உரிமையையும் மீறும் நடவடிக்கையாகும்.
எனவே இக்காரணிகளை அடிப்படையாக கொண்டு ஊவா மாகாணத்தில் ஆசிரிய கலாசாலைக்கு விண்ணப்பிக்க தகுதியுடைய ஆசிரிய உதவியாளர்களை விடுவிக்குமாறு கேட்டுக் கொள்வதோடு இதற்கான மறுமொழியை உடனடியாக அனுப்புமாறும் மக்கள் ஆசிரியர் சங்க பொதுச் செயலாளர் ஊவா மாகாண கல்வி பணிப்பாளிரிடம் அக்கடிதத்தினூடாக கேட்டுக்கொண்டுள்ளார்.