காற்றுள்ள போதே தமிழர்கள் தூற்றிக் கொள்வார்களா? அல்லது புதிய பொறிமுறைகள் தேடிவரும் எனக் கனவுலகில் காத்திருப்பார்களா?

(தோழர் வரதராஜபெருமாள்)
காற்றுள்ள போதே தமிழர்கள் தூற்றிக் கொள்வார்களா? அல்லது புதிய பொறிமுறைகள் தேடிவரும் எனக் கனவுலகில் காத்திருப்பார்களா?
புதிய அரசுடன் தமிழரசுக் கட்சி ரகசியமாக எவ்வாறானதொரு தீர்வைப் பேசப்போகிறது என யாருக்காயினும் தெரியுமா?
அடைந்தால் சமஷ்டி இல்லையெனில் எதுவும் வேண்டாமா? அல்லது அடைய ஏதாவது உண்டா?;
எவ்வாறான அரசியற் தீர்வு வேண்டும் என்பதில் பெரும்பான்மையான தமிழர்களிடையே ஒருமித்த கருத்து அவசியமாகும்.

இப்போது நடைமுறையில் இருக்கும் அரசியல் யாப்பை முற்றாக நீக்கிவிட்டு புதிய அரசியல் யாப்பு ஒன்றை மிகவிரைவில் கொண்டு வருவதற்கான முயற்சிகளைத் தொடங்கி விட்டதாக நாட்டில் ஏற்பட்டுள்ள தேசிய ஒற்றுமை அரசாங்கம் அடிக்கடி கூறி வருகின்றது.
அவ்வாறானதோர் அரசியல் யாப்பு ஒரு வருடத்திலோ அல்லது இரண்டு வருடங்கள் முடியும் முன்னரோ பாராளுமன்றத்தில் முன்வைக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இப்போதைய நிலையில் அதற்கான வாய்ப்பு இருப்பதாகவே தெரிகின்றது.
வரும் என எதிர்பார்க்கப்படுகின்ற புதிய அரசியல் யாப்பில் உள்ளடங்கவுள்ள பல்வேறு விடயங்களில் பிரதானமாக இரண்டு விடயங்கள் உள்ளடங்க உள்ளன என்பது தெளிவு.

அவற்றில் ஒன்று புதிய தேர்தல் முறை. அதாவது, ஜேர்மனியிலோ அல்லது நியூசிலாந்திலோ உள்ள தேர்தல் முறையை ஒத்ததான ஒரு முறையைக் கொண்டு வருதல். அதாவது விகிதாசாரத் தேர்தல் முறையையும் தொகுதிவாரித் தேர்தல் முறையையும் கலந்த வகையில் உருவாக்கப்படும் ஒரு தேர்தல் முறை. கடந்த இருபது ஆண்டுகளுக்கு மேலாக இது தேசிய அரசியல் அரங்கில் பேசப்படும் பொருளாக இருந்து வருகின்ற போதிலும் நடைமுறைக்கான சட்டமாக இன்னமும் ஆகவில்லை. சில மாதங்களுக்கு முன்னர் அதற்கான பிரேரணை பாராளுமன்றக் கதவு வரை வந்து நின்றுவிட்டது.
புதிய அரசியல் யாப்பில் இடம் பெறவுள்ள மற்றொரு பிரதானமான விடயம், இனப்பிரச்சினைக்கான தீர்வாக அமையவுள்ள அதிகாரப் பகிர்வு தொடர்பான விடயம்.

இவற்றைவிட புதிய அரசியல் யாப்பில், நாட்டின் பிரஜைகளுக்கான அடிப்படை உரிமைகள் மேலும் வலுப்படுத்தப்படலாம், அத்துடன் நீதிமன்றங்கள், தேர்தல் ஆணையகம், ஊழல் மற்றும் லஞ்ச விசாரணை ஆணைக்;குழு போன்றவற்றின் சுதந்திரங்கள் மேலும் வலுப்படுத்தப்பட்டு உறுதிப்படுத்தப்படலாம்.
எல்லாவற்றிற்கும் மேலாக, நவீன தாராள பொருளாதார அமைப்பு முறையினை நாட்டில் ஆழமாக விரிவுபடுத்துவதற்கும் வெளிநாட்டு முதலீடுகளைக் கவருவதற்கும் வேண்டிய அரசியல் யாப்பு ஏற்பாடுகளையும் வலுவாகக் கொண்டதாகவே புதிய அரசியல் யாப்பு அமையும் என எதிர்பார்க்கலாம்.
எதிர்பார்க்கப்படுகிற புதிய அரசியல் யாப்பில், அரச அமைப்பின் உயர் பதவிகளில் இலங்கையின் சிறுபான்மைத் தேசிய இனத்தவர்களுக்கான இடங்கள் உறுதிப்படுத்தப்பட்டிருக்குமா?
உயர்கல்வியில், வேலை வாய்ப்பில், அரச நிர்வாக அமைப்புகளில், தேசிய ஆயுதப் படைகளில் இலங்கையின் சிறுபான்மையான தேசிய இனங்களின் சனத்தொகை விகிதாசாரம் குறைந்த பட்சமாகவாவது பிரதிபலிப்பதை உறுதிப்படுத்துவதற்கான ஏற்பாடுகளைப் புதிய அரசியல் யாப்பு கொண்டிருக்குமா?
இங்கு தமிழர்களைப் பெரும்பான்மையாகக் கொண்ட மாகாணங்கள் – பிராந்தியங்கள் தமது சமூக பொருளாதார, கலாச்சார, பாதுகாப்பு, மற்றும் வளர்ச்சி தொடர்பான அடிப்படையான விடயங்கள் அனைத்திலும் ஒன்றுபட்ட இலங்கைக்குள் சுயாட்சி கொண்டவையாக செயற்படுவதற்கு என்ன ஏற்பாடுகள் சரியானதாகும் சாத்தியமானதாகும் என்பதே இலங்கையின் இனப்பிரச்சினைக்கான தீர்வு பற்றிய விடயத்தின் கருப்பொருளாக உள்ளது.

புதிய அரசியல் யாப்பில் ஒற்றையாட்சி அமைப்புக்குள்ளேயே அதிகாரப் பகிர்வுகளைக் கொண்ட வகையாகவே தீர்வு வழங்கப்படும் என ஆட்சியில் ஒன்றிணைந்துள்ள இரண்டு கட்சிகளும் கடந்த தேர்தலின் போதும் அதன் பின்னரும் தொடர்ந்து கூறி வருகின்றன. அண்மையில் இந்தியப் பிரதமர் மோடி அவர்களைச் சந்திக்கச் சென்ற இலங்கைப் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கா அவர்கள் ஒற்றையாட்சி அமைப்புக்கு உட்பட்ட வகையாகவே அரசியற் தீர்வு காணப்படும் என மீண்டும் வலியுறுத்திக் கூறியுள்ளார்.

2002ம் ஆண்டு பிரதமராக இருந்த ரணில் விக்கிரமசிங்கா அவர்கள் பிரபாகரனுடன் ஓர் ஒப்பந்தத்தை ஏற்படுத்திக் கொண்டதன் பின்னர் மேற்கத்தைய நாடுகளின் அனுசரணையுடன் நோர்வேயின் தலைநகர் ஒஸ்லோவில் புலிகளின் பிரதிநிதிகளுடன் நடத்திய பேச்சுவார்த்தையின் போது சமஷ்டி அமைப்பின் அடிப்படையிலான தீர்வுக்கு அப்போது ஒத்துக் கொண்டவராயினும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷாவின் ஆட்சிக்குப் பின்னர் பிரதமர் ரணில் விக்ரமசிங்காவும் தனது நிலையை மாற்றிக் கொண்டுள்ளார்.

முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா அவர்கள் தமது ஆட்சிக்காலத்தின் போது சமஷ்டியை அண்மித்த தீர்வொன்றினை முன் மொழிந்தவராயினும் இப்போது நேரடி அதிகாரத்தில் இல்லாத அவரால் தமது முன்னையதைப் போன்றதொரு தீர்வை வலியுறுத்துவதற்கு முன்வருவார் என்று எதிர்பார்க்க முடியாது.
இந்நிலையில், புதிய அரசியல் யாப்பில் பின்வரும் மூன்றில் ஏதாவதொன்றிற்கான சாத்தியங்களே அதிகமாக உள்ளன. அதாவது:

1. இப்போதுள்ள அரசியல் யாப்பில் 1987ம் ஆண்டு இந்திய-இலங்கை சமாதான உடன்பாட்டின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட 13வது திருத்தத்தின் மூலம் உருவாக்கப்பட்ட மாகாண சபை அமைப்பு முறையையும் அதற்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களையும் எந்தவித மாற்றங்களும் முன்னேற்றங்களுமின்றி புதிய அரசியல் யாப்பும் அவற்றை அப்படியே உள்ளடக்கியபடி கொண்டு வரப்படலாம். அல்லது,

2. 13வது திருத்தப்படி வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களுக்கு மேலாகப் போகாவிடினும் அந்த அதிகாரங்களைச் செம்மையாகவும், காத்திரமாகவும் முழுமையாகவும் கொண்டு மாகாணசபைகள் செயற்படக் கூடிய வகையிலான அரசியல் யாப்பு ஏற்பாடுகளோடு வரலாம். அல்லது

3. ஒற்றையாட்சி அமைப்புக்குள்ளேயே, தற்போதைய 13வது திருத்தத்தில் வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களை விடக் கணிசமான அளவு கூடுதலான அதிகாரங்களைக் கொண்ட வகையாக மாகாண சபைகள் ஆக்கப்படலாம்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்காரர்கள் நடந்து முடிந்த பாராளுமன்றத் தேர்தலின் போது இனப்பிரச்சினைக்கான தமது அரசியற் தீர்வானது சமஷ்டி அமைப்பிலான ஒன்று மட்டுமே என அடித்துக் கூறினர். 13வது திருத்தத்தின் அடிப்படையிலான அரசியற் தீர்வினை தாங்கள் எந்தக் கட்டத்திலும் ஏற்கப்போவதில்லை என்றே தொடர்ந்து கூறி வருகின்றனர்.

ஒற்றையாட்சியின் அடிப்படையிலான எந்தவொரு தீர்வும் தமிழர்களுக்குப் பயன்தர மாட்டாது என்பதுவே தமிழ் தேசியக் கூட்டமைப்பினரின் தொடர்ச்சியான பகிரங்க நிலைப்பாடாக இருந்து வருகின்றது. மாகாண சபை முறையை ஏற்கவில்லை என்று கூறிவந்த கூட்டமைப்பினர் வடக்கு மாகாண சபைக்கான கடந்த தேர்தலின் போது பல்வேறு வகையான வாக்குறுதிகளை அள்ளி வீசி தமிழ் மக்களின் அமோகமான அங்கீகாரத்தைப் பெற்று வடக்கு மாகாண ஆட்சியை அமைத்தனர்.

ஆனாலும், இதுவரை வடக்கு மாகாண சபையைத் தமிழ்க் கூட்டமைப்பினர் ஆட்சி செய்து வரும் தன்மையைப் பார்க்கையில், அவர்கள் அரசியல் யாப்பின் 13வது திருத்தப்படி அமைந்துள்ள இப்போதைய மாகாண சபை அமைப்பு முறையானது எந்தவகையிலும் அதிகாரங்கள் அற்றது பயனற்றது என்பதை நிரூபிப்பதற்காகவே அதன் பதவிகளில் இருப்பதாகவே கருதமுடிகிறது.

தமிழ்க் கூட்டமைப்பினர் இப்போது பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைமையையும் பெற்று எதிர் வரிசையில் அமர்ந்திருக்கின்ற போதிலும் தற்போதுள்ள இலங்கை அரசாங்கத்தோடு மிகுந்த நல்ல உறவுடனேயே உள்ளனர் என்பது தௌ;ளத் தெளிவான ஒரு விடயம். ஆனால் அரசாங்கத்திலுள்ள இரண்டு பெரும் கட்சியினரும் ஒற்றையாட்சி அமைப்புக்கு உள்ளேதான் அரசியற் தீர்வு காணப்படும் என உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் மீண்டும் மீண்டும் வலியுறுத்திக் கூறுகின்ற நிலையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் அரசியற் தீர்வு விடயத்தை எவ்வாறு கையாளப் போகின்றனர்?
ஒற்றையாட்சிக்குள் அமையும் எந்தத் தீர்வும் சரிப்பட்டு வராது சமஷ்டி முறையிலான தீர்ப்பே வேண்டும் என்கின்ற தமிழரசுக் கட்சியினருக்கும் ஒற்றையாட்சிக்குள்ளேயெ தீர்வு எனப் பிடிவாதமாக உள்ள ஆட்சியாளர்களுக்கும் இடையே இனப்பிரச்சினைக்கான அரசியற் தீர்வு காணப்படுவதற்கான ஒரு சமரச சமநிலை ஏற்பட எந்த அளவுக்கு வாய்ப்புக்கள் உள்ளன என்பது இன்று பெரும் கேள்வியாக உள்ளது.
தமிழரசுக் கட்சியினர் 1949லிருந்து சமஷ்டி என்று சொல்லி வந்து விட்டு 1957ல் பிரதேச சபை ஆட்சி முறை என்ற பெயரில் தெளிவற்ற வகையில் நிலம் மற்றும் மொழி தொடர்பான சில அதிகாரங்களை மட்டும் கொண்ட அவர்களின் சமஷ்டிக்குக் கிட்டவும் இல்லாத ஒரு தீர்வை அப்போதைய பிரதமர் பண்டாரநாயக்காவுடன் ஏற்றுக் கொண்டார்கள்.
1976ல் மேற்கொள்ளப்பட்ட வட்டுக்கோட்டை மாநாட்டுத் தீர்மானத்தை வைத்து 1977ல் தனித் தமிழீழத்துக்கான ஆணையென தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியினர் மக்களிடம் அமோக வாக்குகளைப் பெற்று விட்டு பின்னர் கொழும்பு மைய இலங்கை ஆட்சியாளருக்கு சேவகம் செய்வதற்கு வகையான மாவட்ட சபைகளை 1981ல் ஏற்றார்கள்
கடந்த கால வரலாறு போல, அதாவது, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் தமது தேர்தற்கால வாக்குறுதிகளுக்கும் பகிரங்கமேடைச் சத்தியங்களுக்கும் முரணாக ரகசியமாகப் பேசி இப்போதுள்ள அரசு தரத்தயாராக இருக்கும் எதையாயினும ஏற்றுக் கொள்வதே ராஜதந்திரம் என செயற்படப் போகிறார்களா என்பதே பரவலாக தமிழர்கள் மனதிலுள்ள கேள்வியாகும்.
தமிழ் மற்றும் முஸ்லிம் மக்களின் அடிப்படை அபிலாஷைகளைத் திருப்திப்படுத்துவதாகவும் அமெரிக்க மற்றும் இந்திய அரசுகள் பின்பலமாக நின்று ஆதரவளிக்க வகையாகவும் அதேவேளை இப்போதுள்ள ஆட்சியாளர்கள் சிங்கள இனவாதிகளின் எதிர்ப்பைக் கண்டு கிழித்தெறிந்து விடாததுமான ஒரு நியாயமான அரசியற் தீர்வினை தமிழ் கூட்டமைப்பினர் குறிப்பாகத் தமிழரசுக் கட்சித்தலைவர்கள் தாமே முன்முயற்சி எடுத்து பகிரங்கமாக முன்வைப்பதற்கு ஏன் இன்னமும் தயங்க வேண்டும்? இனியாவது தயங்காமற் செய்வார்களா?
இலங்கை அரசாங்கம் அரசியற் தீர்வாக தமிழர்களுக்கு என்ன தரப் போகிறது? எப்போது தரப்போகிறது? எப்படித் தரப்போகிறது என இலவு காத்த கிளி போல இருக்காமல், இலங்கையின் எந்தவொரு இன மக்களினதும் அடிப்படை அபிலாஷகளுக்குப் பாதகமில்லாத, ஒரு நியாயமான, முழுமையானதொரு தீர்வுப் பெட்டகத்தினை தமிழ்க் கூட்டமைப்பினர் தாமே தயாரித்து பாராளுமன்ற ஆட்சியாளர்களை ஏற்கப் பண்ணுவதற்கு முன்முயற்சி எடுப்பது தமிழர்களுக்கான அரசியற் தீர்;வினை விரைந்து பெறுவதற்கு சரியானதொரு அணுகுமுறையாக அமையாதா? பரந்துபட்ட தமிழர்கள், முஸ்லிம்கள் மற்றும் சிங்களவர்கள் மத்தியில் அந்தந்த சமூகங்களிலுள்ள முற்போக்கான ஜனநாயக சக்திகளின் துணையுடன் அவ்வகையான ஒரு தீர்வுக்கு அவசியமான ஆதரவைத் திரட்டும் வேலைத் திட்டங்களை கூட்டமைப்பினர் தாமே முன்னெடுப்பது அவர்களால் சாத்தியப்படுத்த முடியாத ஒன்றா?.
தமிழர்களுக்கு அரசியற் தீர்வு கிடைத்தாலும் சரி கிடைக்கா விட்டாலும் சரி தேர்தல்களில் அடுத்தடுத்து வெற்றி தமக்கே உரியது எனும் அசைக்க முடியாத நம்பிக்கை தமிழ் தேசியக் கூட்டமைப்பினரிடம் இருப்பது வெளிப்படையான ஒன்று. தமிழர்கள் மத்தியில் தாம் சாதித்தது எனச் சொல்லிப் பெருமையடித்துக் கொள்ளக் கூடிய ஒரு தீர்வை இலங்கை அரசாங்கம் தானாக முன்வந்து தந்தாலும் அடுத்த தேர்தலில் தமது வெற்றி நிச்சயம். அப்படி ஒரு தீர்வு தரப்படாவிட்டாலும் கூட, அவர்கள் தாமாக எந்தவொரு முன்முயற்சியையும் மேற்கொள்ளாமலேயே அடுத்து வரும் தேர்தல் மேடைகளில் இலங்கை ஆட்சியாளர்களை எல்லா வகையிலும் திட்டித் தீர்த்து மீண்டும் சர்வதேச அங்கீகாரம் பெறுவதற்கு தமிழ் மக்களிடம் சிந்தாமற் சிதறாமல் தமக்கு வாக்குகளை அளித்து ஆணை தரும்படி கேட்டு தேர்தலில் சிரமமில்லாமல் வென்;று விட முடியும்; எனும் வகையான நம்பிக்கையில் தமது அரசியல் வாழ்வை நடாத்தி வருகிறார்கள் என்பதை அவர்களும் அறிவார்கள்.
இலங்கையின் இனப்பிரச்சினைக்குத் தீர்வு காண தற்போதுள்ள இலங்கை ஆட்சியாளர்கள் விரும்பிச் செயற்பட்டாலும் கூட அவர்கள் தமிழ் மக்களில் பெரும்பான்மையினரின் ஆதரவு பெற்ற தமிழ்க் கூட்டமைப்பின் தலைவர்களுடன் உடன்பாடு காண்பதிலேயே அக்கறையாக இருப்பார்கள் என்பது புரிந்து கொள்ளப்படக் கூடிய ஒரு விடயமே. ஆனால் தமிழ்க் கூட்டமைப்பின் தலைவர்கள் எவற்றை அடிப்படையாகக் கொண்டு பேச்சவார்த்தையை நடத்தப் போகிறார்கள், என்னென்ன விடயங்களை உள்ளடக்கிப் பேச்சுவார்த்தை நடத்தப் போகிறார்கள் என்பதே மர்மமாக உள்ளது.
தமது கட்சிகளின் இரண்டாம் மட்டத்தலைவர்களுக்கோ, உறுப்பினர்களுக்கோ அறிவிக்காத வகையிலும், அவர்களுடன் எதுவித கலந்துரையாடலும் இல்லாமலே அரசுடன் ரகசிய பேச்சுவார்த்தை நடத்துவதே தமிழ்க் கூட்டமைப்பினரின் பாரம்பரியமாக இதுவரை உள்ளது. இவ்வாறு அவர்களது ஆதரவு வட்டாரங்களுக்குள் பரவலாகப் பேசப்படுவது எல்லோரும் அறிந்ததே. தமிழர்களின் தேசியப்பிரச்சினைக்கான பேச்சுவார்த்;தை என்பது தனிப்பட்ட வியாபாரப் பேரமல்ல. அரசியற் தீர்வுக்காகப் பேசப்படும் விடயங்களும் வேண்டப்படும் கோரிக்கைகளும் எந்த மக்களுக்கானவையோ அந்த மக்கள் சமூகத்தினரின் அறிவுக்கும் அங்கீகாரத்துக்கும் உரியவையாகும்.
மக்கள் பிரதிநிதிகள் தமது செயற்பாடுகள் தொடர்பாக பகிரங்கமாகவும் மக்களுக்குப் பொறுப்புக்கூறும் வகையாகவும் நடந்து கொள்வது அவசியமாகும்;. தம்மைத் தெரிவு செய்த மக்களுக்கு அந்த மக்களின் பொது விடயங்களைக் கையாள்;வதில் உண்மையாகவும் நேர்மையாகவும் நடந்து கொள்ள வேண்டும். பொது விவகாரங்களில் ரகசியமாகவும் பொறுப்புக்கூறும் உணர்வு இல்லாமலும் நடந்து கொள்வது ஜனநாயக விரோதமானது என்பதோடு அந்த ரகசியங்கள் பரகசியமாகிற போது பல பாதகமான விளைவுகளைத் தோற்றுவிக்கக் கூடியவையாகும் என்பது கவனத்திற் கொள்ளப்பட வேண்டும்.
இவ்வாறானதொரு நிலையில் தமிழ்ச் சமூகத்தின் பிரமுகர்களும் அறிவாளிகளும் ஏனைய கட்சிகளின் தலைவர்களும் என்ன செய்யப் போகிறார்கள். அவர்களின் பங்கு என்ன? கடமைகள் என்ன? தமிழ் மக்கள் மத்தியிலுள்ள கட்சிகளும் சமூகப் பிரமுகர்களும் அமைப்புகளும் தங்களது அறிவு அனுபவங்கள் இதுகாலவரையான தமது அவதானங்களை அடிப்படையாகக் கொண்ட தத்தமது நிலைப்பாடான கோரிக்கைகளை இலங்கை ஆட்சியாளர்களுக்கும் தமிழ்க் கூட்டமைப்பினருக்கும் தாங்கள் முன்வைக்கும் தீர்வுப் பிரேரணைப் பெட்டகங்களாக முன்வைக்க வேண்டியது அவசியமில்லையா? அவையே தாம்தாம் பிரதிநிதித்துவப்படுத்தும் மக்களின் கருத்து மக்களின் எதிர்பார்ப்பு என்ற வகையாக முன்வைத்து ஜனநாயகபூர்வமான அழுத்தங்களை மேற்கொள்ள வேண்டியது அவர்களின் கடமையல்லவா? அதன் மூலமாகத்தானே தமிழ் மக்களின் ஜனநாயக அபிலாஷைகளை முறையாகச் சபையேற வைக்க முடியும் – அரசு உருவாக்கவுள்ள அரசியல் யாப்பு நிர்ணய சபையில்; முக்கியத்துவம் பெறும் நிலையை ஏற்படுத்த முடியும்.
அதை விடுத்து, கடைசிவரை பார்வையாளர்களாக “என்னவோ நடக்குது மர்மமாய் இருக்குது” என்று விட்டு கடைசியில் இதுவல்ல நாங்கள் கேட்டது, இதுவல்ல நாங்கள் எதிர்பார்த்தது என ஓலமிடுவதால் ஒரு பயனும் ஏற்படாது.; தமது ஜனநாயக உரிமைகள் களவாடப்படும்போது மக்கள் விழிந்தெழுந்து குரலெழுப்பிப் போராடாவிட்டால் மக்கள் தமது ஜனநாயக உரிமைகளைத் தொடர்ந்து இழப்பவர்களாகவே வாழ வேண்டியேற்படும். தேர்தல் ஜனநாயக சமூகத்தில் மக்கள் என்பது அறிவுஜீவிகளே, சமூகப் பிரமுகர்களே, சமயத் தலைவர்களே, படித்த பெரிய மனிதர்களே. இவர்களே இங்கு தலைவர்களை ஆக்குகிறார்கள், மக்கள் பிரதிநிதிகளை உருவாக்குகிறார்கள் எனவே அவர்களே மக்களின் உரிமைகள் தொடர்பாக விழிப்பாயிருக்க வேண்டும், செய்ய வேண்டிய கடமைகளைக் காலம் தவறாது ஆற்றுவதோடு பொதுமக்கள் தொடர்பான பொறுப்புக்களை ஏற்கவும் வேண்டும்.