சங்கரி கூட்டிய புதிய கூட்டணி

ஜனநாயக தமிழ்த் தேசிய முன்னணி என்கிற புதிய அரசியல் கூட்டணியொன்று, கடந்த வாரம் புதன்கிழமை அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டது. உதிரிகளின் கூட்டணி என்கிற எதிர்வினையை ஆரம்பத்திலேயே எதிர்கொண்டுள்ள இந்தப் புதிய கூட்டணி, தமிழ்த் தேசிய அரசியல் பரப்பில் தாக்கங்களை ஏற்படுத்தும் வல்லமை பெற்றதா அல்லது மற்றொரு தேர்தல் கூட்டணியா, என்கிற விடயங்கள் பற்றியே இந்தப் பத்தி கவனம் செலுத்த விளைகின்றது.

தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகம் வீரசிங்கம் ஆனந்தசங்கரியின் நீண்டநாள் காத்திருப்பின் பின்னர், ஒருவாறு புதிய அரசியல் கூட்டணியொன்று உருவாக்கப்பட்டிருக்கின்றது. அவர், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் அங்கம் வகித்த காலங்களைத் தவிர, மற்றைய அனைத்துத் தருணங்களிலும் புதிய அரசியல் கூட்டணியொன்றை ஏற்படுத்துவது தொடர்பிலேயே கவனம் செலுத்தி வந்தார். அவ்வப்போது ஒருசில கட்சிகளோடு இணைந்து தேர்தல் கூட்டணிகளை அமைத்தும் வந்தார்.

ஆனால், அது எந்தவிதமான பலனையும் அவருக்குப் பெற்றுக் கொடுக்கவில்லை. கடந்த பொதுத் தேர்தலின் போதும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிலிருந்து கழட்டி விடப்பட்டவர்களையும் சரத் பொன்சேகாவின் ஜனநாயகக் கட்சியிலிருந்து விலகிய மேல் மாகாண சபை உறுப்பினர் சுசில் கிந்தல்பிட்டியையும் இணைத்துக் கொண்டு போட்டியிட்டார். இந்தத் தேர்தல் கூட்டணியின் பின்னணியில், பெரும் ஊடக வலையமைப்பொன்று இருந்ததாகவும் கூறப்பட்டது. ஆனாலும், வடக்கு – கிழக்கிலும், கொழும்பிலும் போட்டியிட்ட அந்தக் கூட்டணி, சீண்டுவாரற்று தோற்றுப் போனது.

பொதுத் தேர்தலுக்குப் பின்னரான இன்றைய காலத்தில், தமிழ்த் தேசிய அரசியல் பரப்பில் ஏற்பட்டிருக்கின்ற பெருவெளியொன்றைக் கையாளுவது தொடர்பில் கவனம் செலுத்தியுள்ள அரசியல் கட்சிகள் சிலவும் பொது அமைப்புக்கள் சிலவும், புதிய கூட்டணியான ஜனநாயக தமிழ்த் தேசிய முன்னணியை ஆரம்பித்துள்ளன. இதுவும், வீரசிங்கம் ஆனந்தசங்கரியின் பெரும் முயற்சிகளின் பின்னால் கூட்டப்பட்டிருக்கின்றது.

வீரசிங்கம் ஆனந்தசங்கரி செயலாளர் நாயகமாக இருக்கும் தமிழர் விடுதலைக் கூட்டணி, டக்ளஸ் தேவானந்தா செயலாளர் நாயகமாக இருக்கும் ஈழமக்கள் ஜனநாயகக் கட்சி (ஈ.பி.டி.பி), பிரபா கணேசனை ஸ்தாபகத் தலைவராகவும் நல்லையா குமரகுருபரனைத் தலைவராகவும் கொண்ட ஜனநாயக மக்கள் காங்கிரஸ், சிரேஷ்ட ஊடகவியலாளர் என்.வித்தியாதரனை ஒருங்கிணைப்பாளராகக் கொண்ட ஜனநாயகப் போராளிகள் உள்ளிட்ட பத்து அரசியல் கட்சிகள், ஜனநாயக தமிழ்த் தேசிய முன்னணியில் அங்கம் வகிக்கின்றன. இந்தப் புதிய கூட்டணியில் இணைந்திருக்கின்ற ஒவ்வொரு கட்சியின் கடந்த காலமும் வேறு வேறு விதமானவை. அதன் முக்கியஸ்தர்கள் பலர், பிரதான கட்சிகளிலிருந்து பிரிந்து வந்தவர்கள் அல்லது ஒதுக்கி வைக்கப்பட்ட நிலையில், விலகியவர்கள். அரசியல் அதிகாரம் நோக்கிய பயணத்தில் கைவிடப்பட்ட உதிரிகள் என்கிற நிலையை எதிர்கொண்டவர்கள்.

தமிழ்த் தேசியத்தை முன்னிறுத்திய அரசியல் பரப்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு மாற்றான சக்தியொன்று பலமாக எழுந்து வரவில்லை. கூட்டமைப்பின் மாற்றாகக் கூறிக்கொண்டிருக்கும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியும் கூட அதன் இடத்தினை உறுதி செய்து கொள்ளவில்லை. குறிப்பாக, மக்களிடம் தீர்க்கமான நம்பிக்கையொன்றைப் பெறுவது தொடர்பில் அல்லாடுகின்றது. அப்படிப்பட்ட நிலையில், வடக்கு – கிழக்கில் தமிழ்த் தேசியத்தை முன்னிறுத்திய அரசியல் பரப்பு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஏக நிலையொன்றின் கீழேயே இருக்கின்றது. ஆனால், எந்த ஏக நிலை என்கிற எண்ணப்பாட்டினைத் தாண்டி நோக்கினால், பெருவெளியொன்று வெறிச்சோடிப் போய் இருக்கின்றது. தீர்க்கமான புதிய அரசியல் வருகையாளர்களின் வெற்றிடமாகக் காணப்படுகின்றது.

அந்த வெற்றிடத்தினை நிரப்புவது அல்லது கைப்பற்றுவது தொடர்பிலேயே ஜனநாயக தமிழ்த் தேசிய முன்னணி என்கிற முன்னாள்கள், உதிரிகளின் புதிய கூட்டணியையும் கொள்ள வேண்டியிருக்கின்றது. ஏனெனில், தீர்க்கமான புதிய அரசியல் கொள்கையாளர்களைக் கோரி நிற்கின்ற பெருவெளியொன்றை பழைய பஞ்சாங்கங்களை வைத்து நிரப்ப முடியாது.

தேர்தல் கூட்டணியொன்றை இலக்காக்கிக் கொண்டு ஜனநாயக தமிழ்த் தேசிய முன்னணியை ஆரம்பிக்கவில்லை என்று அதன் பேச்சாளர் பிரபா கணேசன் தெரிவித்திருந்தாலும், எதிர்காலத்தில் தேர்தல் கூட்டணியாக நீடிப்பது தொடர்பில் கவனம் செலுத்தப்படும் என்றும் கூறியிருக்கின்றார். தீர்க்கமான அரசியல் சக்தியாகவோ அல்லது தேர்தல் கூட்டணியாகவோ கூட வெற்றிகரமான பக்கத்துக்கு இந்தப் புதிய கூட்டணியால் நகர முடியுமா என்று பார்த்தால், அதுவும் சாத்தியமான வழிகளைக் காட்டவில்லை.

கொழும்பு மாவட்டத்தின் தமிழ் வாக்குகளை முன்னிறுத்திய அரசியலிலும் மனோ கணேசனைத் தாண்டி வெற்றிகளைக் நோக்கி நகரும் வல்லமை பிரபா கணேசனுக்கோ, நல்லையா குமரகுருபரனுக்கோ இல்லை. பிரபா கணேசனின் செயற்றிறன் குறிப்பிட்டளவில் மெச்சப்படக்கூடியதுதான். ஆனால், அவரினால், மனோ கணேசன் என்கிற அடையாளத்தை வேரறுக்கும் வல்லமை இல்லை.

மனோ கணேசன் தலைமையிலான ஜனநாயக மக்கள் முன்னணி, மேலக மக்கள் முன்னணியாக இருந்த காலத்தில் அதன் வளர்ச்சியில் பெரும் பங்காற்றியவர் பிரபா கணேசன். அந்தப் பங்களிப்புக்காக 2010 தேர்தலில் கொழும்பிலிருந்து போட்டியிட்டு வெற்றியும் கண்டவர். அதன்பின்னர் அவர், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கத்தில் இணைந்து கொண்டு பிரதி அமைச்சரானார். அத்தோடு, அவர், மனோ கணேசன் தலைமையிலான கட்சியிலிருந்து விலக்கப்பட்டார். அல்லது, பிரிந்து சென்றார்.

அவர், பிரதி அமைச்சராக இருந்த காலத்திலும் கூட ஆற்றிய செயற்பாடுகள் தொடர்பில் மக்களிடம் குறிப்பிட்டளவான வரவேற்பு உண்டு. ஆனால், அது அவருக்கான வெற்றியைக் கொடுக்கும் அளவுக்கானது அல்லது. மேலக மக்கள் முன்னணியாக இருந்தாலும், இன்றைக்கு ஜனநாயக மக்கள் முன்னணியாக மாறிவிட்ட பின்னாலும் மனோ கணேசன் என்கிற ஒரு முகத்தினை முன்னிறுத்திய கட்சியாகவே எழுந்து நின்கின்றது. அதனை மீறி பிரபா கணேசனால் எழுந்து நிற்க முடியவில்லை. ஜனநாயக மக்கள் முன்னணியிலிருந்து விலகிச் சென்ற நல்லையா குமரகுருபரனின் நிலையும் அதுதான். ஜனநாயக தமிழ்த் தேசிய முன்னணியில் அங்கம் வகிக்கும் கட்சிகளில், வடக்கு – கிழக்கினை அரசியல் பரப்பாகக் கொள்ள நினைக்கும் கட்சிகளில் ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியைத் (ஈபிடிபி) தவிர்ந்து, ஏனைய கட்சிகள் எவையும் தேர்தல் வெற்றிகள் எதனையும் அண்மைய நாட்களில் பெற்றுக் கொண்டிருக்கவில்லை. ஜனநாயகப் போராளிகள் என்கிற அமைப்பினூடு, முன்னாள் போராளிகள் சிலரை அவசரமாக ஒன்றிணைந்து அரசியல் செய்ய ஆசைப்பட்ட என்.வித்தியாதரனும் தூக்கியெறியப்பட்டிருந்தார்.

தமிழ் மக்களின் அரசியல் உரிமைகள் மற்றும் ஏனைய பிரச்சினைகள் தொடர்பில் கவனம் செலுத்தவுள்ளதாக கூறும் ஜனநாயக தமிழ்த் தேசிய முன்னணியின் கொள்கைகள் அல்லது மக்களை நோக்கிய முன்வைப்புக்கள் எவ்வகையானவை என்பது தொடர்பில், அது ஆரம்பிக்கப்பட்ட ஒரு வார காலத்துக்குள் தெரிவிக்கப்பட்டிருக்கவில்லை. புதிய அரசியல் கூட்டணியொன்றினை ஸ்திரமாகக் கொண்டு செலுத்துவதற்கான நேரம் அதிகமாக தேவைப்படும் என்கிற விடயம் கருத்தில் கொள்ளப்பட வேண்டியதுதான். ஆனாலும், ஒரு தீர்க்கமான முடிவினை அறிவிக்கும் வல்லமையற்ற நிலையில் அரசியல் கூட்டணியொன்று எழுவது, சிறு அலைகளுக்குள்ளேயே அடிபட்டுச் செல்லும் நிலைகளையே தோற்றுவிக்கும்.

ஜனநாயக தமிழ்த் தேசிய முன்னணி அவசரமாக செய்யப்போகும் ஒன்றாக அல்லது மிகச் சிறியதாக பெற்றுக் கொள்ளப்போகும் அறுவடையாக எதனைக் கொள்ள முடியும் என்றால், அது எதிர்வரும் ஆண்டு நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்றத் தேர்தல்களில் நிகழ்த்தப்படப்போகும் ஒரு சில வெற்றிகளையாகும். வடக்கில், ஈழமக்கள் ஜனநாயகக் கட்சிக்கு இருக்கின்ற வாக்கு வங்கியின் ஒத்துழைப்போடு சில வெற்றிகளைப் பெற்றுக் கொள்ள முடியும். அதனைத் தாண்டி, வட மாகாண சபைத் தேர்தல் காலங்களை நோக்கியதாகவும் அது இருக்கின்றது. அங்கு ஒரு சில உறுப்பினர்களை வெற்றி கொள்வதற்கான வாய்ப்புக்களை வேண்டுமானால் அது உருவாக்கும். தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு மாற்றாக இன்னொரு தமிழ் அரசியல் அணியை முன்னிறுத்துவதானால், கூட்டமைப்புக்கு எதிரான வாக்குகளை ஈட்டலாம் என்கிற விடயத்தை முன்னிறுத்தியது அது.

வடக்கு – கிழக்கினை குறிவைத்து, ஐக்கிய தேசியக் கட்சியும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும் நகர்ந்து வருகின்ற நிலையில், கூட்டமைப்புக்கு எதிரான வாக்குகளை அந்தக் கட்சிகள் இலகுவாக வெற்றி கொள்கின்றன. அந்த வெற்றிகளை தன்னுடைய பக்கம் திரும்பும் நோக்கிலும் ஜனநாயக தமிழ்த் தேசிய முன்னணி தன்னுடைய ஆரம்பத்தினையும் எதிர்கால பயணத்தினையும் ஆரம்பித்திருக்கலாம். அதன்போக்கிலேயே, வாங்கு வங்கியற்ற கட்சிகளுடன் ஈழமக்கள் ஜனநாயகக் கட்சி இணைந்து கொண்டிருப்பதையும் கொள்ள முடியும். மாறாக, புதிய அரசியல் அலையொன்றை ஏற்படுத்தும் வல்லமை பற்றிய நம்பிக்கைகளை வீரசிங்கம் ஆனந்தசங்கரியும் டக்ளஸ் தேவனந்தாவும் கொண்டிருப்பார்கள் என்றால் அது, நீரில் எழுதிய எழுத்துக்கள் மீது கொள்ளும் நம்பிக்கைகளுக்கு ஒப்பானதாக அமையும்.
(தங்கமயில் புருசோத்தமன்)