சம்பந்தனின் சாணக்கியம்

வடக்கில் பெரும் பரபரப்புக்கு மத்தியில் ஸ்தாபிக்கப்பட்ட ‘தமிழ் மக்கள் பேரவை’ என்ற அமைப்பு இப்போது சலனமின்றி ஓய்ந்து போய்க் கிடக்கிறது. எத்தகைய விறுவிறுப்புடன் தமிழ் மக்கள் பேரவை உருவாகியதோ அத்தகைய வேகத்துடனேயே அது உறங்கிப் போய் விட்டது போல தற்போது தோன்றுகிறது.

தமிழ் மக்கள் பேரவை தோற்றம் பெற்ற காலத்தில் தமிழ் ஊடகங்களில் அதுவே பிரதான செய்தியாகிப் போயிருந்தது. பேரவை தொடர்பான செய்திகள், ஆய்வுகள், எதிர்பார்ப்புகள் என்றெல்லாம் தமிழ் ஊடகங்கள் சில வாரங்களாக பரபரப்புகளை வெளியிட்டுக் கொண்டிருந்தன. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை ஒரேயடியாக வீழ்த்தி விட்டு தமிழ் மக்கள் பேரவையே இனிமேல் கொடி கட்டிப் பறக்கப் போகின்றதென்ற எதிர்கால மாயைத் தோற்றத்தை சில தமிழ் ஊடகங்கள் காண்பிக்கத் தலைப்பட்டன. ‘தமிழ் தேசியக் கூட்டமைப்பின் அஸ்தமனம் ஆரம்பம்’ என்ற தலைப்பில் இரத்திரனியல் ஊடகமொன்று கட்டுரை வெளியிட்டிருந்தது.

இதற்கெல்லாம் அப்பால் தமிழ் மக்கள் உள்ளங்களில் மற்றொரு வேதனை இருந்தது. தமிழ் தேசியக் கூட்டமைப்பு உண்மையிலேயே பிளவுபட்டுத்தான் போய் விட்டதா? தமிழ் மக்களுக்காகக் குரல் கொடுக்கவும் பேரம் பேசவுமென இருந்த ஒரேயொரு அரசியல் சக்தி சீர்குலைந்து போன பின்னர் வடக்கு, கிழக்கு மக்களுக்காகக் குரல் கொடுக்கப் போவது இனிமேல் யார்? வடக்கு, கிழக்குத் தமிழர்களுக்கென்று இனிமேல் அரசியல் பலமே இருக்கப் போவதில்லையா?

இவ்வாறான கவலை ஒவ்வொரு தமிழனின் உள்ளத்தையும் சில வாரங்களுக்கு முன்னர் வாட்டிக் கொண்டிருந்தது. பன்னெடுங் காலமாகத் தொடர்ந்து கொண்டிருக்கும் இனப்பிரச்சினைக்குத் தீர்வைத் தரக் கூடிய புதிய அரசியலமைப்பொன்றை உருவாக்குவதற்கு காத்திரமான முன்னெடுப்புகளை அரசாங்கம் முன்னெடுத்து வருகின்ற இவ்வேளையில் தமிழ் மக்களின் பலமான அரசியல் முகாமுக்குள் பிளவு வந்து விடுமானால் தமிழர்கள் அதற்காகக் கவலைப்படுவதில் நியாயம் இல்லாமலில்லை.

இவ்வாறானதொரு பிளவானது தென்னிலங்கைக்கு வாய்ப்பாக அமையும் பட்சத்தில் இனப்பிரச்சினைக்கான தீர்வானது இனிமேல் எக்காலத்திலும் சாத்தியமாவதற்கு வாய்ப்பே இல்லையென்றே தமிழ் மக்கள் அச்சம் கொண்டிருந்தனர்.

எல்லாமே ஒரு கனவு போல இப்போது தோன்றுகின்றது. பிரதான தமிழ் ஊடகங்களில் தமிழ் மக்கள் பேரவை தொடர்பான செய்திகளை இப்போதெல்லாம் காண்பதே அரிதாகவிருக்கிறது. ஊடகங்கள் தற்போது அது பற்றி அதிகம் பேசுவதில்லை. பேரவை உறங்கி விட்டதா அல்லது ஊடகங்கள் சலிப்படைந்து வி்ட்டனவா என்று தெரியவில்லை. தமிழ்த் தரப்புகளிடமிருந்து அறிக்கைகளும் ஓய்ந்து போயுள்ளன.

தமிழ் மக்கள் பேரவை தொடர்பான நிகழ்வுப் போக்குக் களத்தில் இரா. சம்பந்தனின் மௌனத்தையே விசித்திரமாக நோக்க வேண்டியிருந்தது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குள் முரண்பாடுகள் உருவெடுத்து விட்டதாக ஊடகங்களில் பரபரப்புச் செய்திகள் வெளிவந்து கொண்டிருந்த வேளையில் அதுபற்றி சம்பந்தன் வாய் திறக்கவில்லை.

முதலமைச்சர் விக்னேஸ்வரன், சுரேஷ் பிரேமச்சந்திரன், சித்தார்த்தன் போன்ற முக்கிய புள்ளிகளின் பங்கேற்புடன் தமிழ் மக்கள் பேரவையின் கூட்டம் நடைபெற்ற போதிலும் சம்பந்தன் அலட்டிக் கொள்ளவில்லை; தனது சீற்றத்தை மறைமுகமாகவேனும் அவர் வெளிக்காட்டியதில்லை. வடக்கு, கிழக்குத் தமிழ் மக்களின் ஏகபிரதிநிதியெனக் கொள்ளக் கூடிய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் பேணிவந்த இவ்வாறான மௌனம் தமிழ் மக்களுக்கு வெறுப்பையும் எரிச்சலையும் ஊட்டியதென்பதை மறுப்பதற்கில்லை. ‘சம்பந்தன் மௌனம் கலைப்பது எப்போது?’ என்ற தலைப்பில் நாட்டின் தேசியப் பத்திரிகைகள் தலைப்புச் செய்தியும் வெளியிட்டன.

இன்று எல்லாமே ஓய்ந்து போனதாகவே காட்சிகள் புலப்படுகின்றன. தமிழ் மக்கள் பேரவையின் சிருஷ்டிகர்த்தா எனக் கூறக் கூடிய முதலமைச்சர் விக்னேஸ்வரனிடமிருந்தோ, பேரவையின் ஏனைய முக்கியஸ்தர்களிடம் இருந்தோ காட்டமான கருத்துகளை இப்போதெல்லாம் காண முடியாதிருக்கிறது.

‘தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் விஞ்ஞாபன அடிப்படையிலேயே நாம் செயற்படுகிறோம். தமிழ்க் கூட்டமைப்பினராகவே இப்போதும் இயங்கி வருகின்றோம். தமிழ் மக்கள் பேரவை ஒரு போதுமே அரசியல் கட்சியாக மாற்றமடையப் போவதில்லை’ என்று சில தினங்களுக்கு முன்னர் விக்னேஸ்வரன் தெரிவித்த கருத்தை வைத்துப் பார்க்கின்றபோது சூடு தணிந்து விட்டதென்ற முடிவுக்கே வர வேண்டியிருக்கிறது.

‘பேரவையுடன் நான் தொடர்புபட்டிருப்பதைக் காரணம் காட்டி, தமிழ்க் கூட்டமைப்புக்கு முரணாக நான் நடந்து கொள்வதாக அபத்தமாகக் குற்றம் சுமத்துகின்றனர்’ என்றும் கூறியிருக்கிறார் விக்னேஸ்வரன்.

தமிழ் மக்கள் பேரவையின் பரபரப்பு அடங்கிப் போய் விட்டதென்பதற்கு விக்னேஸ்வரனின் கருத்தைத் தவிர வேறு ஆதாரங்கள் தேவையில்லை.

இதற்கெல்லாம் மறுபுறத்தில் பார்க்கின்ற போது சம்பந்தன் மீது இப்போது சலிப்போ, வெறுப்போ தமிழர்களுக்குத் தோன்றவில்லை. அரசியல் தூரதிருஷ்டி நிறைந்த ஆற்றலின் வெளிப்பாடுதான் அவரது அன்றைய மௌனமோ என்றே இப்போது நினைக்கத் தோன்றுகிறது.

இதேசமயம் கூட்டமைப்பின் அலுவலகங்களை முற்றுகையிடும் போராட்டம் நேற்று கிளிநொச்சியில் இடம்பெற்றுள்ளது. காணாமல் போனோரின் உறவினர்களது துயர உணர்வு என்றுமே தணிந்து விடப் போவதில்லையென்பது உண்மை. ஆனாலும் நேற்றைய போராட்டத்தின் போது வெளியான கோஷங்கள் வேறெங்கோ திசைமாறிச் செல்வதாகவே இருந்தன. அரசியல் எதிர்ப்பின் பின்புலம் இல்லாது போனால் இவ்வாறான கோஷங்கள் வெளியாவதற்கு வாய்ப்பில்லை.

(Rajeevan Jeyachandramoorthy)