செந்தூரனின் மரணமும் சில செய்திகளும்!

தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி, யாழ்ப்பாணம் கொக்குவில் இந்துக் கல்லூரி மாணவன் இராஜேஸ்வரன் செந்தூரன் கடந்த வாரம் தற்கொலை செய்து கொண்டான். தமிழ்த் தேசிய விடுதலைப் போராட்டங்களில் தமது உயிர்களை நீத்த மாவீரர்களுக்கான நினைவு வாரம் அனுஷ்டிக்கப்பட்டுக் கொண்டிருந்த நிலையிலேயே, செந்தூரனின் மரணம் நிகழ்ந்திருக்கின்றது.

செந்தூரனின் மரணத்தை எவ்வாறு கையாள்வது என்பது தொடர்பில் தமிழ் மக்களும், அவர்கள் சார்புத் தளங்களும் குழம்பி நின்றன. வழமையாக எல்லா விடயங்களுக்கும் உணர்வூட்டி அதில் குளிர்காயும் தரப்புக்களைத் தவிர, தமிழ் மக்களில் பெரும்பான்மையினரால் இந்த மரணம் ஏற்றுக் கொள்ளப்பட்டிருக்கவில்லை. ஆனால், இந்த மரணம் முன்னிறுத்திய அரசியலும் மரணத்தை முன்னிறுத்தி நிகழ்த்தப்பட்ட அரசியலும் ஒன்றோடு ஒன்று பின்னிப் பிணைந்தது போல காட்டப்பட்டது. எனினும், இரண்டுமே ஒப்பீட்டளவில் வேறு வேறானவை.

அரசியலுரிமைப் போராட்டங்களில் உயிரிழப்புக்கள் நிகழ்வதுதான். ஆனால், அந்த உயிரிழப்புக்கள் என்ன மாதிரியான தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது தொடர்பிலான உணர்திறன் இன்றி இழக்கப்படும் போது, அந்த உயிரிழப்புக்களை கேள்விக்குள்ளாக்கப்பட வேண்டிய அவசியம் ஏற்படுகின்றது. ஆயுதப் போராட்டமொன்று பெருமெடுப்பில் எழுச்சி பெற்று, உலக அரசியல் ஒழுங்கின் போக்கில் பல்வேறு தரப்புக்களினால் இணைந்து வீழ்த்தப்பட்டது. 2009, முள்ளிவாய்க்கால் பேரழிவு அதன் போக்கிலேயே நிகழ்த்தப்பட்டிருக்கின்றது. அப்படிப்பட்ட நிலையில், உயிர்களை பணயம் வைக்கும் போராட்ட முறைமை தொடர்பில் நாம் மாற்று நிலையை எடுத்தாக வேண்டும்.

தமிழ்ச் சூழலில், ‘தியாகம்’ என்கிற வார்த்தைக்கு இருக்கின்ற போதை சொல்லிக் கொள்ள முடியாதது. அது, உயிர்களை இலகுவாக பயணம் வைப்பதற்கான பெரும் தூண்டல்களை கடந்த காலங்களில் வழங்கியிருக்கின்றது. இன்னமும் அதன் வீரியம் எந்தவிதக் குறைகளும் இன்றி நீள்கின்றது. எனினும், இழக்கப்படுகின்ற உயிரின் பெறுமதியை எந்தவித அடிப்படைகளும் இன்றி புரிந்து கொள்ளாமல் ‘தியாகம்’ என்கிற ஒரு விடயத்துக்குள் மாத்திரம் பொருத்திவிட்டு நகர்வது, எதிர்கால அரசியலுக்கும் போராட்டக்களத்துக்;கும் ஒப்புவமையானது அல்ல. அதுவும், தமிழ்ச் சமூகத்தின் இறுதி இரண்டு தலைமுறைகளில் இழக்கப்பட்ட உயிர்களும், அதன் பின்னராக உருவாகியுள்ள ஒழுங்கற்ற தலைமுறை வெளியொன்றும் கவனத்தில் கொள்ளப்பட வேண்டியவை.

செந்தூரனின் மரணத்தைக் கொச்சைப்படுத்துவதற்கான விடயமாக யாரும் கையாள வேண்டியதில்லை. ஆனால், அந்த மரணம் பற்றிய உரையாடல்களின் போது அந்த மரணம் முன்னிறுத்திய அரசியலைத் தாண்டிய பிற்போக்குத்தனமான விடயமொன்று மேலெழுந்து நிற்கின்றது. உயிரிழப்புக்கள் உரிமைகளைப் பெற்றுத் தரும் என்கிற உலக யதார்த்தம் தற்போதைக்கு இல்லை. அது, என்றைக்குமே பெருமளவான வெற்றிகளைத் தந்ததில்லை என்பதுதான் கடந்த கால உலக வரலாறு. அங்கொன்றும் இங்கொன்றுமாக சில வெற்றிகள் சாத்தியப்பட்டிருக்கின்றன அவ்வளவுதான். அப்படிப்பட்ட நிலையில், இழக்கப்படும் உயிர்கள் தொடர்பில் அதிருப்தி கொள்வது நியாயமானதுதான்.

மூன்று தசாப்தங்களுக்கும் மேலாக ஆயுதப் போராட்டத்தை முன்னெடுத்த தரப்பொன்று, அதன் வெற்றி தோல்விகளின் போக்கில் மனநிலை மாற்றங்களை வெளிப்படுத்துவது இயல்பு. ஆனால், ஒட்டுமொத்தமான அழிவொன்றுக்குப் பின்னரான காலம் என்பது, பெரும் சூனியவெளிக்கு ஒப்பானது. அந்த வெளியைக் கடந்து வருவதுதான் அதன் எதிர்கால வெற்றிகளையும், நிலைபெறுகையையும் தீர்மானிக்கும் சாத்தியப்பாடுகளைத் தோற்றுவிக்கும். ஆனால், அந்த சூனிய வெளியைத் எவ்வாறு தாண்டுவது என்பதான நியானமான உரையாடல்கள் தமிழ்ச் சூழலில் நிகழ்த்தப்படவில்லை. மாறாக, அச்சுறுத்தும் அளவுக்கான உணர்வூட்டும் முனைப்புக்கள் முன்னெடுக்கப்பட்டிருக்கின்றன.

செந்தூரனின் மரணம் தென்னிலங்கை ஆட்சியாளர்கள் மீதான அதிருப்தியுடன் மாத்திரம் நிகழ்த்தப்பட்டதாகக் கொள்ள முடியாது. மாறாக, தமிழ் அரசியல் போக்கின் மீதான ஏமாற்றமாகவும், அதனால் எழுந்த ஆற்றாமையாகவும் கொள்ளப்பட வேண்டியது. தமிழ்த் தேசிய அரசியல் சூழலில் உருவாகியிருக்கின்ற வெற்றிடம் என்பதுவும், அதனை பிரதியிட முனையும் தரப்புக்கள் எந்தவித நம்பிக்கையையும் மக்களிடம் பெற்றுக் கொள்ளவில்லை என்பதுவும் இங்கு கவனத்தில் கொள்ளப்பட வேண்டியது. (தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என்பது தமிழ்த் தேசிய அரசியலின் பிரதான இடத்தினை, குறைநிரப்பும் தரப்பு என்று இந்தப் பத்தியாளர் தொடர்ந்தும் குறிப்பிட்டு வந்திருக்கின்றார்.)

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியும் இன்ன பிற கட்சிகளும் கட்டமைக்கும் அரசியல் என்பது அதிக தருணங்களில் தேர்தல் அதிகாரம் சார்ந்ததாக மாத்திரமே இருந்திருக்கின்றன. இதனை, எந்தத் தரப்பு நிராகரித்தாலும், அது அபத்தமானது என்பதை நாளாந்த அரசியல் வெளிப்பாடுகளில் காண முடியும். கொள்கை கோட்பாடுகள் சார்ந்து மேடைகளிலும்- ஊடகங்களிலும் வாய் வலிக்குமளவுக்கு இந்தக் கட்சிகளினால் பேசப்பட்டாலும், அதனை மக்களிடம் கொண்டு சேர்ப்பதற்கான சாத்தியமான வழிகள் கண்டுபிடிக்கப்படவில்லை.

தமது அரசியல் குறித்து நம்பிக்கையற்று ஏமாற்றத்தின் பக்கமிருக்கும் சமூகமொன்றை நம்பிக்கையின் பக்கம் அழைத்து வருவது என்பது பெரும் முனைப்புக்களோடு நிகழ்த்தப்பட வேண்டியது. கடந்த ஆறு ஆண்டுகளில் அது அவ்வளவாக நிகழ்த்தப்பட்டிருக்கவில்லை. தேர்தல் வெற்றிகள் சில அந்த நம்பிக்கை பக்கங்களின் கதவுகளைத் தட்டியதோடு ஓய்ந்திருக்கின்றன. நாளாந்த வாழ்க்கையை வெற்றி கொள்வதே தமிழ் மக்களுக்கு பெரும் சிக்கலாகியுள்ள நிலையில், அரசியல் மீது நம்பிக்கை கொள்வது என்பது எவ்வளவு சாத்தியமானது என்ற நிராகரிக்க முடியாது பெரும் கேள்வி எழுந்து நின்கின்றது.

தென்னிலங்கையோடும். சர்வதேசத்தோடும் சதிராடி நாம் எவ்வாறு அரசியல் வெற்றிகளைப் பெற வேண்டியிருக்கின்றதோ, அதேயளவுக்கு எமது சமூகம் எதிர்கொண்டிருக்கின்ற புலமையிழப்பு, பொருளாதார இழப்பு, சமூக ஒழுங்கின்மை தொடர்பிலும் அக்கறை கொள்ள வேண்டியிருக்கின்றது. அந்த அக்கறையை தமிழ்ச் சமூகம் பெருமளவு பலத்தோடு கொள்ள முடியும். அதற்கான வல்லமையும் உண்டு. ஆனால், அதனை ஒருங்கிணைப்பதற்கான புள்ளிகள் தான் இன்னமும் இனங்காணப்படவில்லை. அல்லது, சாத்தியமாக்கப்படவில்லை.

உணர்வுபூர்வமாக விடயங்களைக் கையாள்வதில் தொடர்ந்தும் முன்னிற்கும் தமிழ் மக்களும், அதன் தளங்களும் தர்க்க ரீதியாக விடயங்களைக் கையாள்வதில் கோட்டை விட்டிருக்கின்றன. அதுதான், பெரும் தோல்வியொன்று மறைமுகமாக எல்லா பக்கங்களிலும் இன்னமும் தொடர்வதற்கும் காரணமாகவும் இருக்கின்றது. போதைப் பாவனையும், (பாலியல்- குடும்ப உள்ளிட்ட) வன்முறைகளும் எதிர்பார்க்கும் அளவினை மீறி அதிகரிப்பதற்கும் காரணமாக இருக்கின்றன. பெரும் தோல்வியொன்று ஏற்படுத்தி விட்டிருக்கின்ற தோல்வியின் விளைவுகள் இவை. இந்த விளைவுகளை கையாள்வதற்கான திட்டங்கள் தொடர்பிலேயே முதலில் அக்கறை கொள்ளப்பட வேண்டும். இனியும் தாமதிப்பது இன்னமும் அச்சுறுத்தும் விளைவுகளை ஏற்படுத்தும்.

இலங்கையின் இப்போது இருக்கின்ற (அல்லது இருப்பது மாதிரியாக காட்டப்படுகின்ற) சிறிய ஜனநாயக வெளியை தமிழ் மக்களும் அதன் சார்புத் தளங்களும் தமக்கு சாதகமாக கையாள வேண்டும் என்று தொடர்ச்சியாக வலிறுத்தப்படுவதும் அதன் போக்கில் தான். சமூக ரீதியிலான ஒருங்கிணைவும், ஒவ்வொரு தனி மனிதன் மீதான பொறுப்புணர்வையும் கட்டமைப்பது என்பது தமிழ் சூழலுக்கு அவசியமானது. அதுவே, அடிப்படைகளை சீர்செய்வதாக இருக்கும். ஒவ்வொரு தனி மனிதனின் பொறுப்பும், அது சார்ந்த விடயங்களும் உணர வைக்கப்பட்டாலே பெருமளவு பிரச்சினைகளை வெற்றி கொண்டுவிடலாம். தமிழ்ச் சமூக சூழலில் தனி மனிதனுக்கான பொறுப்பு என்பது குடும்பங்களுக்கும் மாத்திரம் அதிக நேரங்களில் முடக்கப்பட்டு விடுகின்றன. அதுவும், கூட தற்போது குறிப்பிட்டளவு குறைந்திருக்கின்றது.

திட்டமிட்ட இன அழிப்பு தொடர்பில் தொடர்ச்சியாக எதிர்வினையாற்றிக் கொண்டிருக்கும் நாம், எம்மால் குறிப்பிட்டளவில் வெற்றி கொள்ளக் கூடிய இன அழிப்பு அம்சங்களை இனங்கண்டு, வெற்றி கொள்வது தொடர்பில் அக்கறையின்றி இருக்கின்றோம். பாடசாலைகளைக் குறிவைக்கும் போதைக் கும்பல்களும், வடக்கு- கிழக்கில் ஆறாய் ஓடி அரசாங்கத்துக்கு பெருமளவு வருமானத்தை தொடர்ச்சியான ஈட்டிக் கொடுக்கும் மதுப்பாவனையும் கவனத்தில் ஏற்று கையாளப்பட வேண்டியவை. ஏனெனில், போதைக்குள் சிக்கி வாழ்க்கையைத் தொலைக்கும் இளம் தலைமுறையொன்றின் உருவாக்கம் அரசியல் இருப்புக்கு எவ்வளவு அச்சுறுத்தலானதோ, அதேயளவுக்கு மதுபாவனையின் பெரும் அதிகரிப்பு என்பது பொருளாதாரத்தின் முதுகெலுப்பை முறிக்கும் அளவுக்கான ஆபத்தைக் கொண்டது. கலாசார விழுமியங்கள் மற்றும் சமூக ஒழுங்கின் போக்கில் முன்னிலையில் இருப்பதாக காட்டிக் கொள்ளும் தமிழ்ச் சமூகத்தின் தோல்வி முகங்கள் இவை. இவற்றை அடிப்படையிலிருந்து சீர் செய்ய வேண்டும்.

தமிழ்த் தேசிய போராட்டக்களம் மீண்டுமொரு ஆயுதப் போராட்டத்தை ஏன் தெரிவு செய்ய முடியாதோ, அதே மாதிரித்தான், தற்போது ஏற்பட்டிருக்கின்ற அடிப்படைப் பிறழ்வுகளை சரி செய்து கொள்ளாமல் சரியான அரசியல் பாதையையையும் சீரமைக்க முடியாது. அடிப்படைகளை சரி செய்யவனூடு இளம் தலைமுறையை நம்பிக்கையூட்டலாம். இல்லையென்றால், செந்தூரனின் மரணம் போன்ற விடயங்கள் தொடர்ச்சியாக பல்வேறு விதமான அரங்கேறிக் கொண்டிருக்கும்.

செந்தூரனின் மரணத்தை, குறியீட்டு வடிவிலான போராட்ட முனைப்பாக தமிழ்ச் சமூகம் கொள்ள வேண்டும் என்கிற கோரிக்கைகள் சில கடந்த நாட்களில் முன்வைக்கப்பட்டன. அது கவனத்தில் கொள்ளப்படக் கூடியவைதான். ஆனால், தமிழ்ச் சமூகத்தின் அடிப்படைகளே ஆட்டம் கண்டுள்ள நிலையில், தீர்க்கமான போராட்டங்களை ஒருங்கிணைப்பதுவும், அதன் நீட்சியைத் தக்க வைப்பதுவும் கேள்விக்குறியானவை. அப்படியான நிலையில், ஓர் உணர்வுபூர்வமான மரணமாகவும், சில நாள் ஊடக பரபரப்போடும், சில மணிநேர போராட்ட முனைப்புக்களோடும் அந்த மரணம் கடக்கப்பட்டுவிடும். அதுதான், நடந்தும் இருக்கின்றது.
(புருஜோத்தமன் தங்கமயில்)