சோழியன் குடுமி சும்மாடு ஆகாது

தமிழ்நாட்டில் நடந்த சட்டசபைத் தேர்தலில், ஜெயலலிதாவின் தலைமையிலான அ.தி.மு.க மீண்டும் வெற்றிபெற்று, ஆட்சியமைத்திருக்கின்ற விவகாரம், இலங்கையிலும் பிரதிபலிப்புகளை ஏற்படுத்தியிருக்கிறது. ஜெயலலிதாவின் வெற்றிக்கு, வடக்கு மாகாண முதலமைச்சர் வாழ்த்துத் தெரிவித்திருந்தார். கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலரும் வாழ்த்துத் தெரிவித்திருந்தனர்.

ஆனாலும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் வாழ்த்துச் செய்தியை அனுப்பியதாகவோ, அல்லது குறைந்தபட்சம், அதுபற்றி ஊடகங்களிடம் கருத்து வெளியிட்டதாகவோ தெரியவில்லை. அதேவேளை, வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர, ஜெயலலிதாவின் வெற்றிக்கு வாழ்த்துச் செய்தி அனுப்பியிருப்பது முக்கியமான ஒரு திருப்பம்.

இன்னொரு பக்கத்தில், ஜெயலலிதாவின் வெற்றி, இலங்கைக்கு ஆபத்து என்று சிங்கள கடும்போக்குவாத, தேசப்பற்று தேசிய இயக்கத்தின் பொதுச்செயலாளர், கலாநிதி வசந்த பண்டார தெரிவித்திருக்கிறார். இவை எல்லாவற்றையும் பார்க்கும்போது, தமிழ்நாட்டில் மீண்டும் ஜெயலலிதா ஆட்சிஅமைத்திருப்பது, ஏதோ ஒரு வகையில் இலங்கையிலும் தாக்கத்தை செலுத்துவதாகவோ, எதிர்பார்ப்புகளை ஏற்படுத்துவதாகவோ அமைந்திருக்கிறது என்றே கருதவைக்கிறது. இலங்கைத் தமிழர் பிரச்சினை தொடர்பாக ஜெயலலிதா பல்வேறு வாக்குறுதிகளைக் கொடுத்திருக்கிறார். இந்தப் பத்தியின் நோக்கம், அதுபற்றி ஆராய்வதல்ல. தமிழ்நாட்டின் அரசியல் மாற்றத்தை, இலங்கை அரசாங்கம் எவ்வாறு எதிர்கொள்ள முனைகிறது என்பதே இங்கு முக்கியமாக பார்க்கப்பட வேண்டிய விடயம்.

தேசப்பற்று தேசிய இயக்கத்தின் கலாநிதி வசந்த பண்டார, ஜெயலலிதாவின் வெற்றியை இலங்கைக்கு ஏற்படப்போகும் ஆபத்தாக சுட்டிக்காட்டியிருப்பதற்குப் பிரதான காரணம், அவர் கொடுத்துள்ள வாக்குறுதி தான். ‘தமிழர்களுக்கு சுயநிர்ணய உரிமையை பெற்றுக்கொடுப்பேன், கச்சதீவை மீட்பேன் என்றெல்லாம் அவர் வாக்குறுதி அளித்துள்ளார். இந்த வாக்குறுதிகளை நிறைவேற்ற முதலமைச்சராக பதவியேற்ற பின்னர் ஜெயலலிதா அனைத்து முயற்சிகளையும் எடுப்பார்.

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இதனை எதிர்க்கமாட்டார். தனித்து அதிகப்பெரும்பான்மை பெற்ற தமிழ்நாட்டு முதலமைச்சரை பகைத்துக் கொள்வதை மோடி விரும்பமாட்டார். எனவே, இந்திய மத்திய அரசாங்கத்தின் ஆதரவுடன் ஜெயலலிதா தமிழர்களுக்கு சுயநிர்ணய உரிமையை பெற்றுக்கொடுக்கும் திட்டங்களை முன்னகர்த்துவார்.

சுயநிர்ணய உரிமை கிடைத்த பின்பு தனித் தமிழீழம் என்பது தானாகவே உருவெடுக்கும். அதனை தடுக்க முடியாது.

அதேபோன்று, சட்டரீதியாக இலங்கைக்குச் சொந்தமான கச்சதீவும் பறிபோகும் ஆபத்தும் உள்ளது. கடந்த காலங்களை விட இந்தியாவின் தலையீடுகள் இங்கு அதிகரிக்கும்.’ இது தான் கலாநிதி வசந்த பண்டாரவின் கருத்து.

ஆனால், ஜெயலலிதா இந்த வாக்குறுதிகளை நிறைவேற்றும் அளவுக்குச் செல்வாரா- அதற்கு இந்தியாவின் வெளிவிவகாரக் கொள்கை இடமளிக்குமா என்ற மிகப்பெரிய கேள்வியை அவர் மிகச் சாதாரணமாக ஒதுக்கித் தள்ளியிருக்கிறார்.

இந்த வாக்குறுதியை ஜெயலலிதா மிகச்சுலபமாக நிறைவேற்றக்கூடிய நிலையில் இருப்பாரேயானால், அதனை அவர், ஏற்கெனவே செய்திருப்பார். அது அவருக்கு தேர்தலில் கூடுதல் பலத்தைக் கொடுத்திருக்கும். ஆனாலும், கலாநிதி வசந்த பண்டார போன்ற சிங்கள கடும் போக்காளர்கள் இதனை ஒரு பூதாகாரமான விடயமாக சிங்கள மக்கள் மத்தியில் கொண்டு செல்ல முனைவது ஆச்சரியத்துக்குரிய விடயமல்ல. அதேவேளை, வெளிவிவகார அமைச்சு வேறுபட்ட முறையில் இந்த விவகாரத்தை அணுக முனைந்திருப்பது தான் முக்கியமான விடயம்.

கடந்த 2011ஆம் ஆண்டு சட்டசபைத் தேர்தலில் வெற்றி பெற்று, ஆட்சியமைத்தது தொடக்கம், அப்போது ஆட்சியில் இருந்த மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கத்துடன் கடுமையான முரண்போக்கை வெளிப்படுத்தி வந்தார் ஜெயலலிதா. இலங்கையில் நடந்த போர்க்குற்றங்களுக்கு சர்வதேச விசாரணையை வலியுறுத்தி சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றியது போன்ற, மஹிந்த அரசாங்கத்துக்கு தலைவலியையும், எரிச்சலையும் கொடுக்கும் பல்வேறு நடவடிக்கைகள், முன்னெடுக்கப்பட்டன.

முன்னைய அரசாங்கத்தின் பேச்சாளராக இருந்த, கெஹலிய ரம்புக்வெல, இலங்கை அரசாங்கத்துக்கும் இந்தியாவின் மாநில அரசாங்கங்களுக்கும் இடையில் எந்தத் தொடர்புகளும் இல்லை என்றும் அவர்களின் கருத்துக்களை செவிமடுக்கமாட்டோம் என்றும் கூறியதுடன், இந்திய மத்திய அரசாங்கத்துடன் மட்டுமே, தாம் தொடர்புகளை வைத்துக் கொள்வோம் என்றும் கூறியிருந்தார்.

மீனவர்கள் பிரச்சினை முற்றியபோது, முன்னைய அரசாங்கம், ஜெயலலிதா தலைமையிலான தமிழ்நாடு அரசாங்கத்துடன் பேசவே மறுத்து வந்தது. தமிழ்நாட்டுக்கும் இலங்கை அரசாங்கத்துக்கும் இடையில் நிலவி வந்த ஒரு பனிப்போர் நிலையை, கடந்த ஆண்டு ஜனவரி மாதம் இலங்கையில் நடந்த ஆட்சி மாற்றம் சற்று மாற்றியமைத்திருந்தாலும் பெரியளவிலான முன்னேற்றங்கள் ஏற்பட்டிருக்கவில்லை.

முன்னைய அரசாங்கத்தில் இடம்பெற்றிருந்த, இப்போதைய அரசாங்கத்திலும் உள்ளவரான அமைச்சர் மஹிந்த அமரவீர, மீனவர்கள் பிரச்சினை குறித்து தமிழ்நாடு அரசாங்கத்துடன் பேசவேமாட்டோம் என்று அவ்வப்போது முரண்டு பிடித்து வந்தார். ஆனால், இப்போது, வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர, மீண்டும் முதல்வராகியுள்ள ஜெயலலிதாவுக்கு வாழ்த்துச் செய்தி அனுப்பியிருக்கிறார்.

இது ஒன்றும் சம்பிரதாயபூர்வமாக அனுப்பப்பட்ட வாழ்த்துச் செய்தி அல்ல. அதாவது, இந்தியாவின் மாநிலங்களில் ஆட்சியமைக்கும், முதலமைச்சர்களுக்கு இலங்கை அரசாங்கம் வாழ்த்துச் செய்தி அனுப்பும் வழக்கம் ஏதும் இருந்ததில்லை.

வழக்கத்துக்கு மாறாக, மங்கள சமரவீர, முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு வாழ்த்துச் செய்தி அனுப்பியிருக்கிறார் என்றால், இலங்கை அரசாங்கம், தமிழகத்துடன் புதிய உறவுகளை ஏற்படுத்த விரும்பகிறது என்று தான் அர்த்தம்.

தற்போதைய அரசாங்கம், தம்மை நல்லிணக்க அரசாங்கமாக, தமிழர்களின் பிரச்சினையை நியாயபூர்வமாக அணுகுகின்ற ஓர் அரசாங்கமாக உலகளவில் காட்டிக்கொள்ள முனைகிறது. தமிழர்களின் பிரச்சினைக்கு நியாயமான தீர்வை எட்ட விரும்பும் அரசாங்கமாக வெளிப்படுத்த எத்தனிக்கிறது. அதற்காக, புலம்பெயர் தமிழர்களுடனும், இதற்கு முன்னர், ஒதுக்கி வைக்கப்பட்டிருந்த பல்வேறு தரப்பினருடனும் தொடர்புகளை ஏற்படுத்தி, பேச்சுக்களை முன்னெடுத்திருக்கிறது. இதன்மூலம், தமிழர் பிரச்சினைக்கான நியாயமான தீர்வு குறித்து அல்லது தமிழர்களுக்கு ஏற்படுத்தப்பட்ட அழிவுகளுக்கு, நீதி வழங்கப்பட வேண்டும் என்பது குறித்து வெளியே இருந்து எழுப்பும் குரல்களின் தீவிரத்தைத் தணிக்கலாம் என்று கருதுகிறது. இலங்கைத் தமிழர்களுக்காக தமிழ்நாட்டில் இருந்து நீண்டகாலமாகவே தீவிரமான குரல்கள் ஒலித்து வருகின்றன. அதிலும் முதலமைச்சர் ஜெயலலிதாவின், தமிழர்களுக்கு சுயநிர்ணய உரிமையைப் பெற்றுக் கொடுப்பேன் என்ற அண்மைய வாக்குறுதியையிட்டு இலங்கை அரசாங்கம் கரிசனை கொள்ளாமல் இருக்க முடியாது.

எனவே, ஜெயலலிதாவுடன் இணக்கப்பாட்டை ஏற்படுத்தி, உறவுகளை வலுப்படுத்த வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர முனைந்திருப்பது ஒன்றும் ஆச்சரியத்துக்குரிய வழிமுறையல்ல. தற்போதைய அரசாங்கம் இதே அணுகுமுறையைத் தான் ஏற்கெனவே பல்வேறு நாடுகளுடனும் கடைப்பிடித்துக் கொண்டிருக்கிறது.

அதைவிட, இந்திய அரசாங்கத்துக்கும் இலங்கை அரசாங்கத்துக்கும் இடையில் பொதுவான பிரச்சினையாக இருப்பது, தமிழ்நாட்டு மீனவர்கள் தான். தமிழ்நாட்டு மீனவர்கள், இலங்கைக் கடற்பரப்புக்குள் அத்துமீறி நுழைவதும் அதனால் இலங்கை அரசாங்கம் நெருக்கடிகளை எதிர்கொள்வதும் அவ்வாறு அத்துமீறும் மீனவர்கள் தாக்கப்படுவதும் பிடித்துச் செல்லப்படுவதும் இந்திய அரசாங்கத்துக்கு நெருக்கடியை ஏற்படுத்துவதும் தொடர்கதையாகவே மாறியிருக்கிறது.

இந்தப் பிரச்சினைக்கு முடிவுகட்டப்பட வேண்டுமானால், தமிழ்நாட்டு அரசாங்கத்தின் ஒத்துழைப்பும் ஆதரவும் முக்கியமானது. இலங்கையில் புதிய அரசாங்கம் பதவிக்கு வந்த பின்னர், மீனவர்களுக்கிடையில் நடத்தப்பட்ட பேச்சுக்கள் வெற்றியளிக்கவில்லை. அதற்கு ஒரு காரணம், தமிழ்நாடு அரசாங்கத்தை இலங்கை புறக்கணித்து வந்ததும் தான்.

அமைச்சர் மஹிந்த அமரவீர, தமிழ்நாட்டு அரசாங்கத்தை வெளிப்படையாகவே புறக்கணித்து வந்தார். ஆனால், அதே அணுகுமுறை இனியும் வாய்க்காது என்பதைத் தான் மங்கள சமரவீரவின் வாழ்த்துக்குப் பின்னால் ஒளிந்திருக்கும் உண்மை.

கடந்த 13ஆம் திகதி புதுடெல்லியில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் நடத்திய பேச்சுக்களின் போது, மீனவர்களின் பிரச்சினைக்கு நிரந்தரத்தீர்வு காணும் பொறிமுறை ஒன்று உருவாக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தியிருந்தார் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி. அதன் அர்த்தம், தமிழ்நாட்டு மீனவர்களின் அத்துமீறலைத் தடுப்பது அல்ல. அவர்களும் மீன்பிடிப்பதற்கு அனுமதிக்கும் ஒரு பொறிமுறையை உருவாக்குவது தான்.

அத்தகைய பொறிமுறையை உருவாக்குவதில், தமிழ்நாடு முதலமைச்சரின் ஆதரவு முக்கியம் தேவை. இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியைப் பொறுத்தவரையில், ஜெயலலிதாவைப் பகைத்துக் கொள்ள விரும்பமாட்டார். தேர்தல் முடிவுகள் முழுமையாக வெளிவர முன்னரே, அவர் ஜெயலலிதாவுக்கு முதல் ஆளாக வாழ்த்துக் கூறியிருந்தார். காரணம், ஜெயலலிதாவின் தயவு, அவருக்குத் தேவை. ராஜ்யசபையில் பாஜகவுக்கு பெரும்பான்மை கிடையாது.

இப்போதைய தேர்தல் வெற்றியின் மூலம், அடுத்தமாதம் ராஜ்யசபாவின் 6 இடங்களுக்கு நடக்கவுள்ள தேர்தலில், நான்கு இடங்களை அ.தி.மு.க பெறவுள்ளது.

அதனுடன் சேர்த்தால், ராஜ்யசபாவில் அ.தி.மு.கவின் பலம், 13 ஆகிவிடும். ராஜயசபாவில் நான்காவது பெரிய கட்சியாக மாறப்போகும், அ.தி.மு.கவின் தயவு அவ்வப்போது மோடிக்குத் தேவைப்படும்.எனவே தான், ஜெயலலிதாவுக்கு அவர் வாழ்த்துக் கூறினார். அதேபோன்று, மீனவர்கள் பிரச்சினைக்குத் தீர்வு காண்பதற்கும், தமிழர் பிரச்சினையை வெளியரங்கில் அமுக்குவதற்கும், ஜெயலலிதாவின் தயவு இலங்கை அரசுக்கும் தேவைப்படுகிறது.

அது தான் மங்கள சமரவீரவின் வாழ்த்துச் செய்தியின் இரகசியம். சோழியன் குடுமி சும்மா ஆடாது என்பது இதனைத் தான்.
(கே. சஞ்சயன்)