‘டட்லி – செல்வா’ இன்னொரு பக்கம்!

‘கே.எம்.பி.ராஜரத்ன எனும் சிங்கள இனவாதத்தலைவரும், தமிழினவாதத் தலைவர்களான சா.ஜே.வே.செல்வநாயகம், ஜீ.ஜீ.பொன்னம்பலம் ஆகிய இருதரப்பினரும் டட்லியின் அரசாங்கத்தில் இருந்தனர். ‘இலங்கையில் சோஸலிஸத்தின் தந்தை’ என்று அறியப்பட்ட பிலிப் குணவர்த்தனவும், ‘யங்க்கி டிக்கி’ (அமெரிக்க ஆதரவாளர்) என அறியப்பட்ட ஜே.ஆர்.ஜெயவர்த்தனவும் ஒரே அமைச்சரவையில் இருந்தனர். டட்லி இந்த எதிர்த்துருவங்களை ஒன்றுபடுத்தியது மட்டுமல்லாது, ஐந்து வருடங்களுக்கு, அதாவது முழுப்பதவிக்காலத்துக்கும் அரசாங்கத்தை நடத்தினார். சுதந்திர இலங்கையில் முழுமையாக ஐந்து வருடங்கள் ஆட்சியிலிருந்த முதல் அரசாங்கம் இதுவாகும்.

அதுமட்டுமல்ல இந்த அரசாங்கத்துக்கு பிறகு வேறு எப்போதும், இன்றுவரை தமிழரசுக் கட்சியிலிருந்தோ, தமிழ் காங்கிரஸிலிருந்தோ எந்தவொரு நபரும் அரசாங்கத்தில் அங்கம் வகித்ததில்லை’ என ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் அமைச்சரும், நாடாளுமன்ற உறுப்பினருமான கலாநிதி கருணாசேன கொடித்துவக்கு, டட்லி சேனநாயக்க பற்றிய தன்னுடைய கட்டுரையொன்றில் எழுதியுள்ளார்.

இந்தப் பந்திக்குள்ளேயே நிறைய கேள்விகள் மறைந்திருக்கின்றன. ‘டட்லி-செல்வா’ ஒப்பந்தமும், ஐக்கிய தேசியக் கட்சிக்கான ஆதரவும், அமைச்சுப் பதவியுமெல்லாம், தமிழரசுக் கட்சியினரின் முழு மனதோடுதான் நடந்ததா? மாற்றுக்கருத்து பற்றி தமிழர்தரப்பில் ஒவ்வொருகாலத்திலும் நிறையவே பேசப்பட்டிருக்கிறது. ஆகவே, இந்த இடத்தில் ‘டட்லி-செல்வா’ ஒப்பந்தம் அதன் முன்னான, பின்னான நிகழ்வுகள் பற்றி தன்னுடைய விமர்சனப் பார்வையை முன்வைக்கும் தமிழரசுக் கட்சியின் அன்றைய முக்கியஸ்தரான வி.நவரட்ணத்தின் கருத்துக்கள் முக்கியத்துவம் பெறுகின்றன. இது ‘டட்லி-செல்வா’ பற்றிய இன்னொரு பார்வையை, நிகழ்ந்தவைகளின் இன்னொரு பக்கத்தைக் காட்டி நிற்கின்றன.

நடந்தது என்ன? சொல்கிறார் வி.நவரட்ணம்

தமிழரசுக் கட்சியின் அன்றயை நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த வி.நவரட்ணம் தனது ‘தமிழ் தேசத்தின் எழுச்சியும், வீழ்ச்சியும் (ஆங்கிலம்)’ என்ற நூலில் இவ்வாறு பதிவுசெய்கிறார்: ‘தமிழ்த்தரப்பிலிருந்த அனைத்துக் கட்சிகளுள்ளும் தமிழரசுக் கட்சிக்குதான் சிங்களக் கட்சிகளின் நம்பகத்தன்மையின்மை பற்றி நேரடியான அனுபவம் இருக்கிறது. ஆனாலும் ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணக்கம் கொள்ள தேர்தலுக்கு முன்பே தமிழரசுக் கட்சி இசைந்து விட்டது ஏன்? மக்களுக்கு இது ஏன் நடந்தது என்ற காரணம் இன்னும் சொல்லப்படவில்லை.

அந்த ஏமாற்றப்பட்ட அனுபவத்தை திருச்செல்வம் கருத்திலெடுக்காமல் விட்டிருக்கலாம், ஆனால், அதை எப்படி செல்வநாயகமும், அமிர்தலிங்கமும் மறந்தார்கள். செல்வநாயகம் திருச்செல்வத்தின் தந்தையைப் போன்றவர், அதனால் அவர் சம்மதித்திருக்கலாம். அமிர்தலிங்கம் இதற்கெப்படி தலையசைத்தார்? ஆனால், அடுத்தடுத்து நடந்த சம்பவங்கள் காரணங்களை தெளிவாகப் புலப்படுத்தின. எல்லா அடிப்படையான முடிவுகளும் ஏலவே திருச்செல்வத்தாலும், எஸ்மண்ட் விக்கிரமசிங்கவினாலும் பேசப்பட்டு எடுக்கப்பட்டிருந்தன.

தலைவர்களிடையேயான சம்பிரதாயபூர்வ சந்திப்பு டொக்டர். பீரிஸின் டரட் வீதி இல்லத்தில் நடத்தப்படவிருந்தது. இதில் பங்குபற்றும் குழுவில் நானும் இடம்பெற வேண்டுமென தமிழரசுக் கட்சிகளின் இளைய சக்திகள் அழுத்தம் தந்தன. நான் மிகுந்த சங்கடத்தில் இருந்தேன். நான் குழுவில் இருப்பதை திருச்செல்வம் விரும்பவில்லை என்பது வெளிப்படையாகத் தெரிந்தது. தமிழர்களை ‘விற்றுவிடும்’ இந்த செயற்பாட்டில் பங்கெடுக்க எனக்கும் விருப்பம் இருக்கவில்லை. அங்கே பேசுவதற்கு ஏதுமில்லை என்று எனக்கு தோன்றியது. எல்லாம் ஏற்கெனவே முடிவெடுக்கப்பட்டுவிட்டன, இது சம்பிரதாயபூர்வமான உறுதிப்படுத்தலாக இருக்கும் என்றே எனக்கு தோன்றியது.

முழுநாடுமே கவனித்துக்கொண்டிருந்த ஒரு விடயத்தில் தலையிட்டு மாற்றங்களைக் கொண்டுவரக்கூடிய நிலை இருக்கவில்லை. ஆனால் செல்வநாயகம் தன்னுடைய முடிவின் பொருத்தப்பாடு பற்றி முழுத் திருப்தியுடன் காணப்பட்டார், அதன்வழி முற்செல்லவும் திண்ணங்கொண்டிருந்தார். அவருடைய பெயரால் செய்யப்பட்ட ஒரு ஒப்பந்தத்திலிருந்து விலக அவர் கைக்கொண்டிருந்த நேர்மை அவரை அனுமதித்திருக்காது.

என் முன்னே நிறைய எண்ணோட்டங்கள் இருந்தன. ஆனால், கட்சி இளையோரின் அழுத்தத்தின் பேரில், அக்குழுவில் நான் பங்கேற்றேன். கூட்டத்திலே இருதரப்பு தலைவர்களிடையே பேசுவதற்கும் கருத்துமுரண்பாட்டுக்கும் எதுவும் இருக்கவில்லை, எல்லாமே ஏற்கெனவே திருச்செல்வத்தாலும், எஸ்மண்ட் விக்கிரமசிங்கவினாலும் பேசித்தீர்மானிக்கப்பட்டிருந்தன. ஆனால், முக்கியமான ஒரு விடயம் பற்றி பேசப்படவில்லை, அது கட்டாயம் பேசப்பட வேண்டும் என நான் சொன்னேன்.

வடக்கு கிழக்கிலே திட்டமிட்ட சிங்களக் குடியேற்றங்கள் பற்றி பேசப்படவில்லை, இது பற்றி டட்லி சேனநாயக்கவின் நிலைப்பாடு என்ன? அவர் இதனை நிறுத்துவாரா? என்று கேள்வி எழுப்புவதைத் என்னால் தவிர்க்க முடியவில்லை. இது பேச்சுவார்த்தையில் சங்கடமான சூழலைத் தோற்றுவித்தது. நான் இதனைக் கேட்டபோது டட்லியின் மற்றும் எஸ்மண்ட் விக்கிரமசிங்கவின் முகங்களில் ஆச்சரியமும், திருச்செல்வத்தின் முகத்தில் அதிருப்தியையும் காணக்கூடியதாக இருந்தது. இது எனக்கு ஒன்றை உணர்த்தியது. ஒன்று இதுபற்றி திருச்செல்வமும், எஸ்மண்ட் விக்கிரமசிங்கவும் பேசவில்லை அல்லது அவர்கள் திருச்செல்வத்தை பேசி இந்தவிடயத்தை தவிர்க்கச்செய்திருக்கிறார்கள்.

டொக்டர்.ஈ.எம்.வி.நாகநாதன் எனது கருத்தை உறுதியாக ஆதரித்தார், இந்த விடயம் தமிழரசுக் கட்சியைப் பொறுத்தவரை அடிப்படையானதொரு கோரிக்கையாகும், இந்த விடயத்தில் விட்டுக்கொடுப்புக்கு தமிழரசுக் கட்சி தயாரில்லை என்று அவர் உறுதிபடக் கூறினார். இறுதியில் எஸ்மண்ட் விக்கிரமசிங்கவின் யோசனைக்கு தமிழரசுக் கட்சி முழுமனதின்றிச் சம்மதித்தது. இந்த நிலையில் நான் இன்னொரு முக்கிய விடயம் பற்றியும் கேள்வி எழுப்பினேன், அதாவது தனிச்சிங்களச் சட்டத்தால் பாதிக்கப்பட்டு, வேலையை இழக்கும் நிலையிலுள்ள தமிழ் அரச உத்தியோகத்தர்களின் நிலை என்ன? இந்தக் விடயமும் திருச்செல்வத்தாலும், எஸ்மணட் விக்கிரமசிங்கவினாலும் பேசப்பட்டிருக்கவில்லை என்பது வெளிப்படையாகத் தெரிந்தது.

ஆனால் இந்த விடயம் நிர்வாக ரீதியில் சரிசெய்யப்படக்கூடியது, இதற்காக நிறைய பந்திகளை ஒப்பந்தத்தில் எழுதி ஒப்பந்தத்தை நீளமாக்கத் தேவையில்லை என திருச்செல்வமும், எஸ்மணட் விக்கிரமசிங்கவும் கூறினர். இந்தவிடயம் பற்றி எந்த தீர்மானமுமின்றி ஒப்பந்தம் இறுதியானது, பேச்சுவார்த்தையும் இறுதிகண்டது. இப்படியாக இன்னொரு தோல்வியடைந்த ஒப்பந்தமும் கைச்சாத்தானது. கூட்டம் முடிந்து திரும்பியபின் திருச்செல்வத்தின் இல்லத்தில் வைத்து, சம்ஷ்டிக் கட்சி (தமிழரசுக் கட்சி) அரசாங்கத்தில் அமைச்சுப் பொறுப்பொன்றை ஏற்று, அரசாங்கத்தில் இணைந்து தமிழ் மக்களது உரிமைகளை வென்றெடுக்க முயற்சிக்க வேண்டும் என திருச்செல்வம் கதையோடு கதையாக ஒரு கருத்தைச் சொன்னார்.

தமிழரசுக் கட்சி இன்று அழைத்துச் செல்லப்படும் பாதை பற்றி எனக்கு உடன்பாடிருக்கவில்லை. நான், உடனே குறுக்கிட்டு தமிழரசுக் கட்சி அப்படியொரு காரியத்தை செய்வதை கனவிலும் நினைக்க முடியாது என்றேன். அவர் சிரித்துவிட்டு, இது சும்மா ஒரு யோசனைதான், நாடாளுமன்றக் குழுவில் பேசித் தீர்மானியுங்கள் என்று கூறினார். நான் அடித்துச் சொல்கிறேன், அவ்வேளை தன்னுடைய அந்த எண்ணத்துக்கு எவ்வகையான எதிர்ப்புகள் வரும் என்று திருச்செல்வம் மனதில் குறித்துக்கொண்டிருப்பார். தலைவரை அதற்கேற்ப தயார்படுத்த அவருக்கு போதிய கால அவகாசம் இருந்தது. டட்லியின் அரசாங்கம் அமைந்ததும் ஸ்ரீமாவோ இருதரப்போடும் பேசி ஏமாற்றிய திருச்செல்வத்தைக் கடுமையாக விமர்சித்தார்.

தான், திருச்செல்வம் கேட்ட அமைச்சர் பதவியைக் கொடுக்க மறுத்ததுதான் திருச்செல்வம், ஐக்கிய தேசியக் கட்சி பக்கம் சாயக் காரணம் என ஸ்ரீமாவோ தெரிவித்தார். இதனை திருச்செல்வம் மறுத்தார். ஸ்ரீமாவோ சொன்னதிலும், திருச்செல்வம் மறுத்ததிலும் எது உண்மை என்பதை உலகம் ஒருபோதும் அறியாது.’ இவ்வாறு வி.நவரட்ணம் பதிவு செய்கிறார்.

வி.நவரட்ணத்தினுடைய மேற்குறிப்பிட்ட பதிவு முக்கியத்துவம் மிக்கது. ‘பண்டா-செல்வா’ ஒப்பந்தத்தின் தோல்வியின் பின்னர் தமிழர்தரப்பு மிகச்சிறந்த பாடமொன்றைக் கற்றிருந்தது. தற்காலிக ஒப்பந்தங்களால் அல்லது சந்தர்ப்பம்சார் ஒப்பந்தங்களால், பெரும்பான்மைக் கட்சிகளின் மைய அரசியலை ஒருபோதும் மாற்ற முடியாது. விரும்பியோ, விரும்பாமலோ இலங்கை அரசியல் இன-மத ரீதியில் கட்டமைக்கப்பட்டுவிட்டது. 1956இல் பண்டாரநாயக்கவோடு எழுச்சி பெற்று மையநிலையை அடைந்த ‘சிங்கள-பௌத்த’ பெரும்பான்மைவாத அரசியல், இலங்கையின் அரசியல் மையத்தின் அஸ்திவாரமாகி, வேர்கொண்டு, விருட்சமாகிவிட்டது.

அதன்பின் ஏற்படுத்தப்பட்டதாக சொல்லப்பட்ட எந்த மாற்றமும் அந்த அஸ்திவாரத்தின் மேல் அமைந்ததேயன்றி, அந்த அஸ்திவாரத்தை மாற்றியமைக்கவில்லை. இன்றுவரை இதுவே நிலை. இந்த இடத்தில்தான் தமிழ்த்தரப்பின் இனவாதசக்திகள் என்று பெரும்பான்மைக் கட்சிகளாலும், சிங்கள இனவாதத் தரப்பாலும் சொல்லப்படுகிற கட்சிகளின் ‘சலுகைகள் வேண்டாம், உரிமைகள் வேண்டும்’ என்ற வாதம் பற்றி நாம் சிந்திக்க வேண்டும்.

‘பண்டா-செல்வாவாக’ இருக்கட்டும், ‘டட்லி-செல்வாவாக’ இருக்கட்டும் இவை ‘சிங்கள-பௌத்த’-மைய அரசியலை மாற்றாது, அதற்குள்ளான ஒரு சமரசத்தை ஏற்படுத்தும் முயற்சிகளாகவே இருந்தன. இதைச் செய்தவர்கள் எவ்வளவு நல்லெண்ணம் கொண்டு இதைச் செய்திருப்பினும், எத்தனை முயற்சிகள் செய்திருப்பினும் இவை வெற்றி பெறாததற்கு இந்த அடிப்படை மாறாததே காரணம். முற்றுமுழுதாக மாறுபட்ட ஓர் அடிப்படையின் மேல், அதற்கு முரணான ஒரு விடயத்தை சமரசத்தின் பெயரால் நிலைபெறுத்த முயல்வது, மணல் மண்ணில் நெல்விதைக்கும் செயலாகும்.

அது எத்தனை தூரம் நல்லெண்ணத்துடன் செய்யப்பட்டாலும், அங்கு நெல் விளையப்போவதில்லை. இனப்பிரச்சினை தீர்வு பற்றியும், இனப்பிரச்சினையைத் தீர்க்க திடசங்கற்பம் பூண்டுள்ளதைபற்றியும் ஆண்டாண்டுகாலமாக பேசிய அரசாங்கங்கள், ஏன் ஒருபோதும் அந்தத் தீர்வுகளுக்கு முட்டுக்கட்டையாக இருக்கும். அடிப்படைகளை இல்லாதொழிக்க தயாராகவில்லை என்ற கேள்வி எழுவதைத் தவிர்க்க முடியாது. ஆனால், இந்த அரசாங்கங்கள் தமிழ் மக்களுக்கு சலுகைகள் வழங்குவதற்கு ஒரு போதும் பின்னின்றது இல்லை. தமிழ் மக்கள் அந்த அரசியல் அஸ்திவாரத்தை மாற்றும்படி கோராத வரை தமிழ் மக்களின் வேண்டுகோள்களை குறிப்பிட்டளவுக்கு ஏற்றுக்கொள்ள அவை தயாராகவே இருந்தன, இருக்கின்றன. தமிழ் அமைச்சர்களை நியமிப்பதிலும், தமிழர் பிரதேசங்களில் ஒன்றிரண்டு அடையாள அபிவிருத்தித் திட்டங்களை முன்னெடுப்பதிலும் அரசாங்கங்கள் செயற்பட்டிருக்கின்றன.

ஆனால், சுயநிர்ணயம், சுயாட்சி, சமஷ்டி, அதிகாரப் பிரிவு, அதிகாரப் பகிர்வு போன்ற விடயங்கள் இலங்கையை ஆட்சிசெய்த அரசாங்கங்களைப் பொறுத்தவரையிலும், பெரும்பான்மைக் கட்சிகளைப் பொறுத்தவரையிலும் கசப்பான சொற்களாகவே இருந்து வந்துள்ளன. தேசங்கள் பிளவுபடாது ஒன்றுபட்டு இயங்குவதற்கேற்ற சமஷ்டி முறையை, நாட்டைப் பிரிப்பதற்குரியதொரு விடயமாகப் பூதாகரமாக்கிப் பிரசாரம் செய்து, பெரும்பான்மை மக்களிடம் அதைப் பற்றிய எதிர்மறையானதொரு விம்பத்தை கட்டியெழுப்பும் செயற்பாட்டில் பெரும்பான்மைக் கட்சிகள் நிச்சயம் வெற்றி பெற்றிருக்கின்றன. திருச்செல்வம் சொன்ன ‘அரசாங்கத்தோடு சேர்ந்து தமிழ் மக்களின் உரிமைகளை வென்றெடுத்தல்’ என்ற கருத்து நல்லெண்ணத்துடன் சொல்லப்பட்டதாகவே இருக்கலாம்.

இன்றும் பல தரப்பிலிருந்து இதையொத்த கருத்து முன்வைக்கப்படுகிறது. நிச்சயமாக தமிழர் பிரதேசத்தின் அபிவிருத்தி, உட்கட்டமைப்பு விரிவாக்கம், வேலைவாய்ப்பு என குறுகிய காலத்தில் சில நன்மைகள் அடையப்பெறப்பட முடியும், ஆனால் தமிழ் மக்கள் வேண்டும் உரிமைகள் இதனால் சாத்தியமாகுமா, இல்லை உரிமைகள் என்பது வெறும் அரசியல் கர்ச்சனை மட்டுந்தானா, அது தமிழ் மக்களின் உண்மை விருப்பமில்லையா? ‘வரலாறு மீளும்’ என்பது பிரபலமான ஒரு கூற்று. வரலாறு முக்கியம் பெறுவதற்கு இதுவும் ஒரு முக்கிய காரணம். தமிழ் மக்களின் அபிலாஷைகள்

என்ன என்ற இந்த தேடலில் நாம் இலங்கையில் தமிழர் அரசியல் வரலாற்றின் ஊடாக தமிழ் மக்களின் தேவைகள் என்ன, அபிலாஷைகள் என்ன, தமிழ் மக்கள் வேண்டுவது என்ன? என்ற கேள்விகளுக்கு பதில் தேட முயற்சிக்கிறோம். அந்த வகையில், ‘டட்லி-செல்வா’ ஒப்பந்தத்தின் படி, டட்லி அரசுக்கு ஆதரவளித்த தமிழரசுக் கட்சி, தமிழ் மக்களுக்காக எவற்றை அடைந்தது என்று பார்ப்பது முக்கியமாகிறது.

[தமிழ் மிரர் ] – என்.கே.அஷோக்பரன் LLB (Hons) –