தமிழ்ச்செல்வனை காட்டிக் கொடுத்த நடேசன்

தமிழ்ச்செல்வன் கொலையில் வெளியாகும் ‘CIA’ இரகசியம்..! பின்னணியில் அமெரிக்கா..?

விடுதலைப் புலிகளின் அழிவில் தமிழ் இனப்படுகொலையில் அமெரிக்க ஏகாதிபத்தியம் வகித்த பாத்திரம் பற்றி ஊடகங்கள் மௌனம் சாதிக்கின்றன. அது குறித்து ஏராளமான ஆதாரங்கள் வெளியான போதிலும் வலதுசாரி போலித் தமிழ்தேசியவாதிகளான அமெரிக்க அடிவருடிக் கும்பல் அவற்றை எல்லாம் வேண்டுமென்றே மறைத்து வந்துள்ளது. உலகில் பல கிளர்ச்சிக் குழுக்களின் தலைவர்களை தீர்த்துக் கட்டியது போன்று புலிகளின் தலைவர்களையும் அழிக்க வேண்டுமென்பது அமெரிக்காவின் நோக்கமாக இருந்துள்ளது. அதனை இரகசிய CIA ஆவணம் வெளிப்படுத்தி உள்ளது.


விடுதலைப் புலிகள் இயக்கத்தின் அரசியல் பிரிவு தலைவர் தமிழ்ச்செல்வன் சிறிலங்கா வான்படைக்கு சொந்தமான இஸ்ரேலிய கிபீர் விமானத் தாக்குதலில் கொல்லப் பட்டார். 2 நவம்பர் 2007 அன்று கிளிநொச்சிக்கு அருகில் இருந்த இரகசிய பங்கருக்கு, துல்லியமாக குறிபார்த்து போடப்பட்ட குண்டுவீச்சில் இறந்துள்ளார். தமிழ்ச்செல்வன் மீதான விமானத் தாக்குதலானது அப்போதே பல கேள்விகளை எழுப்பி இருந்தது.

அமெரிக்க இராணுவம் ஈராக் மீதான ஆக்கிரமிப்புப் போரில் பயன்படுத்திய பங்கர் துளைக்கும் குண்டுகள் சிறிலங்கா இராணுவத்திற்கு கிடைத்தது எப்படி? தமிழ்ச்செல்வன் தங்கியிருந்த பங்கர் இது தானென துல்லியமான உளவுத் தகவல் வழங்கியது யார்?
2014 ம் ஆண்டு விக்கிலீக்ஸ் வெளியிட்ட இரகசிய ஆவணம் இந்தக் கேள்விகளுக்கு ஓரளவு பதில் வழங்கியுள்ளது.

உலகம் முழுவதும் கிளர்ச்சிக் குழுக்களின் தலைவர்களை ஒழித்துக் கட்டும் அமெரிக்க ஏகாதிபத்திய நடவடிக்கையின் ஓரங்கமாகவே தமிழ்ச்செல்வன் கொலையையும் கருத வேண்டியுள்ளது.
முப்பதாண்டு கால ஈழப்போர் வரலாற்றில் புலிகள் இயக்கத்தின் மேல் மட்டத் தலைவர்களில் ஒருவர் கொல்லப் பட்டமை அதுவே முதல் தடவை ஆகும்.

தமிழ்ச்செல்வன் தங்கியிருந்த பங்கரை காட்டிக் கொடுத்த உளவுத் தகவல் தலைவர் பிரபாகரனின் மெய்ப்பாதுகாவலர் ஒருவரிடம் இருந்து கிடைத்ததாக CIA அறிக்கை தெரிவிக்கின்றது.
புலிகள் இயக்கத்திற்குள் ஏற்கனவே தமிழ்ச்செல்வனுக்கும் நடேசனுக்கும் இடையில் முரண்பாடுகள் இருந்ததாக அப்போதே புலிப் போராளிகள் மத்தியில் பேசப் பட்டது.

தமிழ்ச்செல்வனின் அகால மரணத்தின் பின்னர் காவல் துறை பொறுப்பாளராக இருந்த நடேசன் அரசியல் துறை பொறுப்பாளர் ஆனார். அப்போதே புலிகளின் வீழ்ச்சியும் ஆரம்பமாகி விட்டது என்று புலிகளுக்கு நெருக்கமானவர்கள் தெரிவித்தனர். தமிழ்ச்செல்வன் நடேசனுக்கு இடையிலான தகராறுக்கு சில முரண்பாடும் ஒரு காரணம்.
‘உச்ச கட்ட பெறுமதி வாய்ந்த இலக்குகள் (UVT) – படுகொலைத் திட்டம்’  என்று பெயரிடப் பட்ட CIA இரகசிய ஆவணம் இரகசியம் வெளிநாட்டவர் பார்வைக்கு அல்ல என்று வகைப் படுத்தப் பட்டிருந்தது.
கிளர்ச்சிக் குழுக்களின் தலைவர்களை இலக்கு வைத்துக் கொல்வதில் உள்ள சாதக பாதகங்களை ஆராயும் அறிக்கை அது. புலிகள் மட்டுமல்ல அல்கைத தாலிபான் ஹமாஸ் ஹிஸ்புல்லா போன்ற இஸ்லாமியவாத இயக்கங்களும் அந்த அறிக்கையில் குறிப்பிடப் பட்டுள்ளது.

அதே போன்று கொலம்பிய FARC பெருவின் ஒளிரும் பாதை வட அயர்லாந்து IRA போன்ற இயக்கங்களின் தலைவர்கள் மீதான தாக்குதல்களையும் ஆராய்கின்றது. அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் பார்வையில் இவை எல்லாம் ஒரே மாதிரியான கிளர்ச்சிக் குழுக்கள் என்ற உண்மையையும் மேற்படி அறிக்கை கோடிட்டுக் காட்டுகின்றது.
கிளர்ச்சிக் குழுக்களின் தலைவர்களை படுகொலை செய்யும் திட்டத்தின் நோக்கம் என்ன? அதற்கான விடையும் அறிக்கையில் உள்ளது. தலைவர்களை சிறைப்பிடிப்பதிலும் பார்க்க கொலை செய்து விடுவது சிறந்தது என்று CIA கருதுகின்றது.

முள்ளிவாய்க்காலில் புலிகளின் உயர்மட்ட தலைவர்கள் அனைவரும் சிறிலங்கா இராணுவத்தால் தீர்த்துக் கட்டப் பட்டனர். இது அன்றைய பாதுகாப்பு அமைச்சர் கோத்தபாய ராஜபக்சேவின் நேரடி உத்தரவின் பேரில் நடந்தது. இருப்பினும் அதுவே அமெரிக்காவின் நோக்கமும் என்று தெரிய வருகின்றது. பிரபாகரன் உட்பட புலிகளின் தலைவர்கள் கொல்லப் பட்ட சம்பவம் CIA அறிக்கையில் குறிப்பிட்டு எழுதப் பட்டுள்ளது.

தலைவர்களை சிறைப் பிடித்து பின்னர் விடுதலை செய்வதால் இயக்கம் அழியப் போவதில்லை என்பது CIA முன்வைக்கும் வாதம். ANC தலைவர் நெல்சன் மண்டேலா சிறை சென்று மீண்டதை அதற்கு உதாரணமாக காட்டுகின்றது.இஸ்ரேலிய வான்படைத் தாக்குதல்களில் ஹமாஸ் தலைவர்கள் கொல்லப் பட்ட சம்பவங்கள் CIA தாக்குதல்களால் மிகப்பெரிய பாதிப்பை உண்டாக்க முடியும் என்பதை நிரூபித்தது.

தலைமையை குறிவைத்து தாக்குவதன் மூலம் இயக்க உறுப்பினர்கள் மத்தியில் குழப்பத்தை உண்டாக்க முடியும். அதிக பட்ச உளவியல் தாக்கத்தை உண்டு பண்ணலாம் என்று அறிக்கை தெரிவிக்கிறது.
இருப்பினும் ஹமாஸ் தாலிபான் விடயத்தில் UVT தாக்குதல்கள் எதிர்பார்த்த விளைவுகளை உண்டாக்கவில்லை என்பதையும் தெரிவிக்கின்றது.

குறிப்பாக ஹமாஸ் ஒரு கட்டுகோப்பான இயக்கம் என்பதாலும் மக்களை கவரும் சமூக நலத் திட்டங்களாலும் தன்னை மீளக் கட்டியமைக்க முடிந்தது. தாலிபான் அல்கைதா தலைவர்கள் நவீன தொலைத்தொடர்பு கருவிகளை பாவிப்பதை நிறுத்திக் கொண்டார்கள்.
மேல் மட்ட தலைவர்களை தவிர யாரையும் சந்திக்காமல் பங்கருக்குள் முடங்கிக் கொண்டனர். மறுபக்கம் இந்தக் காரணத்தால் இயக்கத்தின் கீழ்மட்ட போராளிகளுக்கும் தலைமைக்கும் இடையில் விரிசல் ஏற்பட்டது.

விக்கிலீக்ஸ் இந்த CIA ஆவணத்தை 2014 ம் ஆண்டே வெளியிட்டு இருந்த போதிலும் ஊடகங்கள் எதுவும் அதைப் பற்றிப் பேசாதது ஆச்சரியத்திற்குரியது. அதன் அர்த்தம் அவர்களுக்கு தெரியாது என்பதல்ல. புலிகளுக்கு ஆதரவான ஆங்கிலப் பத்திரிகை ஒன்று ஏற்கனவே இந்தத் தகவலை பிரசுரித்தது. இருப்பினும் பெரும்பான்மையான தமிழ் மக்களுக்கு இந்தத் தகவல் போய்ச் சேரவில்லை. என்ன காரணம்?

அமெரிக்க அடிவருடிகளான போலித் தமிழ்தேசியவாதிகள் ஏகாதிபத்திய நலன்களுக்காக சிங்களப் பேரினவாதத்திற்கு முண்டு கொடுத்து வருபவர்கள். அவர்கள் இது போன்ற பல தகவல்களை வேண்டுமென்றே இருட்டடிப்பு செய்வார்கள். தமிழ்ச்செல்வனின் கொலைக்குப் பின்னர் பங்கருக்குள் இருப்பது தனக்கு பாதுகாப்பானதல்ல என்று தலைவர் பிரபாகரன் உணர்ந்திருந்தார்.

இறுதி யுத்தத்தில், பிரபாகரனின் பங்கர் இருந்த புதுக்குடியிருப்பு பகுதியை சிறிலங்கா இராணுவம் சுற்றி வளைத்தது. அதே நேரத்தில் புலிகள் இலட்சக்கணக்கான தமிழ் மக்களை கூட்டிக் கொண்டு புதுமாத்தளன் முள்ளிவாய்க்கால் பகுதிகளுக்கு நகர்ந்தனர். அது முல்லைத்தீவு கடற்கரையோரம் இருந்த எந்தவித பாதுகாப்புமற்ற வெட்ட வெளிப் பிரதேசம்.

முள்ளிவாய்க்கால் செல்லுமாறு யார் அறிவுரை கூறினார்கள்? வேறு யார்? சந்தேகத்திற்கிடமின்றி மேற்கத்திய நாடுகளில் வாழ்ந்த வலதுசாரி அமெரிக்க அடிவருடிகள் தான். அதற்கு அவர்கள் கூறிய காரணம்? அமெரிக்க மரைன் படைகளின் கப்பல் ஒன்று முலைத்தீவு கடற்கரையை நோக்கி வந்து கொண்டிருக்கிறது… அது புலிகளின் தலைவர்களை காப்பாற்றி பாதுகாப்பாக அழைத்துச் சென்று விடும்…’ இப்படிப் பொய் சொல்லி நம்ப வைத்தார்கள்.

கடைசியில் அமெரிக்கக் கப்பலும் வரவில்லை அமெரிக்கா காப்பாற்றவும் இல்லை. புலிகளின் தலைவர்கள் உட்பட பல்லாயிரக் கணக்கான தமிழ் மக்கள் சிறிலங்கா படையினரால் இனப் படுகொலை செய்யப் பட்டனர்.அப்போதே அந்த முடிவை வரவேற்று அறிக்கை எழுதியுள்ளது. அதனால் தான் இந்தத் தகவலை தமிழ் மக்களுக்கு தெரிய விடாமல் மறைத்துக் கொண்டிருக்கிறார்கள்.