தமிழ் ஆண்கள் பேரவை

நாட்டின் மொத்த சனத்தொகையில் 52 வீத பெண்களையும், மொத்த வாக்காளார்களில் 58வீத பெண் வாக்காளர்களையும் கொண்டுள்ள இலங்கையில், அரசியலில் பெண்கள் வகிக்க வேண்டிய பங்கின் முக்கியத்துவத்தை இன்னும்கூட ஆண் அரசியல்வாதிகளும், ஆண் அரசியல் தலைமைகளும் புரிந்து கொண்டதாகத் தெரியவில்லை. புரியாமல் இருக்கிறார்களா அல்லது புரியாத மாதிரி நடிக்கிறார்களா என்பது எனக்கு இன்னும் புதிராகவே இருக்கிறது. தொடர்ந்து ஆறு தசாப்தங்களாக பெண்கள் வகிக்க வேண்டிய அரசியல் பாத்திரம் ஆண்களால் மறுக்கப்பட்டே தான் வந்திருக்கிறது. அத்துடன் சிறுபான்மை மக்களுக்கு சிறு நன்மையேனும் ஆண் அரசியல் தலைமையால் கிடைக்கவில்லை. இன்று பிரச்சனை தீரும், நாளை விடிவு வரும் என்று கூவிக் கூவி வாக்கு வேட்டை நடத்துவது மட்டுமே நாம் காலம் காலமாகக் காணும் யதார்த்தம்.

மாற்றுக் கட்சிகள், பேரவைகள் எனத் தினம் தினம் அரசியல் அமைப்புக்கள் உருப்பெறுகின்றன. அதற்கான காரணம் என்னவென்று அவர்களைக் கேட்டால், மக்களுடைய பிரச்சனைகளுக்குத் தாமே இதுநாள் வரை தாம் அங்கம் வகித்த அமைப்புக்கள் அல்ல – விடிவைப் பெற்றுத் தரப்போகிறோம் என்கிறார்கள். அரசியல் கட்சிகள் தமது வேட்பு மனுக்களில் கூட பெண்களைச் சேர்த்து கொள்ளத் தயங்குகிறார்கள். அப்படிச் சேர்த்தாலும் கூட, ஓரிருவரை, எவ்வித முக்கியத்துவமும் வழங்காமல் வெறுமனே பேருக்காக மட்டுமே தான் பட்டியலில் சேர்க்கின்றனர். இதுவே இலங்கைத்தீவில் இன்றுவரை நிலவி வரும் அரசியலாகவுள்ளது .

அண்மையில், தேசிய இனப் பிரச்சனைக்குத் தீர்வு காண்பதைப் பிரதான நோக்கமாகக் கொண்டு ஆரம்பிக்கபட்டதாகக் கூறப்படும் தமிழ் மக்கள் பேரவையில் மருந்துக்குக் கூடப் பெண்களின் பங்களிப்பு இல்லை. இந்த அமைப்பை உருவாக்குவதின் பின்னணியில் நடந்திருக்கக் கூடிய கலந்தாலோசனைகள், கருத்தாடல்களில் கூட பெண்களின் பங்களிப்பு இருந்ததாகத் தெரியவில்லை.

இந்தப் பேரவையில் ஏன் பெண்களுக்கு இடமில்லை என்று முகபுத்தகத்தில் கேட்டதற்கு அவ்வமைப்பில் அங்கத்தவராக உள்ள ஒருவர் கூறுகின்றார்; ”பெண்களின் பங்களிப்புத் தேவை என்ற கோஷம் தொடக்கத்திலிருந்தே பலராலும் சுட்டிக் காட்டப்பட்டது , ஆகவே எதிர்வரும் காலங்களில், பெண்களைச் சேர்த்துக் கொள்வோம். அதற்காக தகமையான ஆளுமைகளை, துறைசார் நிபுணர்களை தேடிக் கொண்டிருகிறோம் ஆனால் எமக்குச் செயல்பாட்டளர்கள் தேவையில்லை என்கிறார் அவர். ஆமாம். பெண் சட்டத்தரணிகள், பீடாதிபதிகள், விரிவுரையாளர்கள், போன்றவர்களைத் தேடுங்கள்.

அரசியல் பதவிகளை அலங்கரிக்க அவர்களைக் கொண்டு வாருங்கள். மக்கள் மத்தியில் பணி செய்யும் செயற்பாட்டாளர்களையோ, பெண்ணியவாதிகளையோ மற்றும் மனித உரிமை ஆர்வலர்களையோ, முன்னாள் போராளிகளையோ அரசியலுக்குள் கொண்டு வந்தால் உங்களையும் உங்கள் செயற்பாடுகள், திட்டங்களைக் கேள்வி கேட்பார்கள், கண்காணிப்பார்கள், உங்கள் நடவடிக்கைகளை விமர்சனம் செய்வார்கள். நீங்கள் செய்யும் அனைத்து காரியங்களுக்கும் சலாம் போட மாட்டார்கள் என்று அஞ்சுகிறீர்களா? உங்களுடைய பெண்களுக்கு சம சந்தர்ப்பமும், சம வாய்ப்பும், தீர்மானம் எடுக்கும் சுதந்திரமும் சமூகத்தின் சகல மட்டங்களிலும், அரசியலிலும் கொடுக்க முடியாதவர்கள் சிங்களத் தலைமைகளிடம் இருந்து தமிழ் மக்களுக்கு சமத்துவதத்தை பெற்று தரமுடியுமா? உங்களுக்கு அரசியலில் பெண்களின் பங்களிப்பு பற்றிய தேவை உள்ளதெனத் தெரியாத போது, சிங்களத் தலைலைமகளுக்கு எவ்வாறு தமிழ் மக்களின் பங்களிப்பு புரியப்போகிறது ?

சரியான பெண்களைத் தேடுகிறோம் என்ற கூற்று வேடிக்கையாகவும், விநோதமாகவும் உள்ளது . முப்பது வருடங்களுக்கு மேற்பட்ட போராட்ட வரலாற்றில், சகல துறைகளிலும், சகல மட்டங்களிலும், யுத்த களத்திலும், கடற்படையணியிலும், அரசியல் துறையிலும், ஆணுக்கு சமமாகப் பெண் நின்று போராடிய பூமியில் அரசியலில் என்றவுடன் மட்டும் தமக்குத் தோதான பெண்களைத் தேடுகிறார்களாம். துணிச்சலுடன் எதிரிக்கு முன்னின்று ஆயுதமேந்திப் போராடவும், தற்கொலை குண்டுதாரியாக தாம் கொண்ட இலட்சியத்திற்காகத் தமது உயிரை மாய்த்துக் கொள்ளவும் துணிந்து வந்த பெண்கள், அரசியல் என்றதும் உங்கள் கண்களுக்குக் காணாமல் போய் விட்டதுதான் அதிசயம்.

வெளிநாட்டுப் பயணங்கள், குளிரூட்டப்பட்ட கார்கள் , செல்வாக்கு எல்லாம் கொட்டிக் கிடக்கும் சுக போக அரசியலுக்குப் பெண்கள் தேவை இல்லை ஆண்கள் மட்டுமே உரித்தானவர்கள் என்பதை அனைத்து அரசியல் கட்சிகளும், தமிழ் மக்கள் பிரச்சனையை முன் வைத்து ஆரம்பிக்கப்படுவதாகப் பறைசாற்றிக் கொள்ளும் அமைப்புக்களும் தெளிவாகவே வெளிப்படுத்துகின்றனர் .

போரால் உருக்குலைந்து, அனைத்து கொடுமைகளுக்கும் முகம் கொடுத்த வண்ணம், கண்ணீருடன் தம் உறவுகளைத் தேடி அலைவதெல்லாம் பெண்கள். பாலியல் தொழிலாளியாகவும், கூலித் தொழிலாளியாகவும், சுய கௌரவம் இழந்து உண்ண உணவின்றி இருக்க இடமின்றி அன்றாடம் செத்துப்பிழைக்கிறார்கள்பெண்கள்.தீர்மானம் எடுக்கும் சகல மட்டங்களிலும் அதற்கான அதிகாரத்தைக் கொண்டிருப்பது ஆண்களே. சமூக நலன் தொடர்பான எந்த நடவடிக்கைகளிலும், பெண்களின் பங்களிப்பின்றி தீர்வும் விடிவும் சமூகத்திற்கு எப்போதும் வராது.

கடைசியாக ஒன்றைக் கேட்கிறேன் “தமிழ் மக்கள் பேரவை“ என்ற பெயரில் உள்ள “மக்கள்” யார்? ஆண்கள் மட்டுமா? அமைப்பின் பெயரைத் “தமிழ் ஆண்கள் பேரவை “என்று மாற்றினால் மிகப் பொருத்தமாக இருக்குமன்றோ? ஆணோ பெண்ணோ ஜனநாயக விழுமியங்களையும் நல்லாட்சியின் குணாதிசயங்களையும் மனித உரிமைகளையும், பெண் உரிமையையும் மதித்து நடக்காத, கருத்தில் கொள்ளாத எந்த கட்சியும் அல்லது எந்த அமைப்பும் தமிழ் மக்களின் பிரச்னைக்கு தீர்வை பெற்று தரும் என்பது தண்ணீரில் எழுதிய எழுத்தாகும்.

-நளினி ரட்ணறாஜா- [ மனித உரிமை பாதுகாவலர், அரசியல் செயல்பாட்டாளார் ]