தலைவர் சிறீ சபாரத்தினம் சக போராளிகளின் 30ம் வருட நினைவு நிகழ்வுகள்

 

தமிழீழ விடுதலைக் இயக்கம் தமது வீரமரணம் அடைந்த தலைவர் சிறீசபாரத்தினம் அவர்களின் 30 வது நினைவு தினத்தை தாயகத்திலும் புலம் பெயர் தேசமெங்கும் இம்முறை நடாத்தியுள்ளனர். தாயகத்தில் புலிகளால் மிலேச்சத்தனமாக கொலை செய்யப்பட்ட அன்னங்கை கொக்குவில் பகுதியில் வணக்க நிகழ்வும் இதன் மறுதினம் கல்வியங்காட்டில் அமைந்த சட்டநாதர் கோவில் அருகில் உள்ள மண்டபத்திலும் நினைவு தின நிகழ்வுகள் நடைபெற்றுள்ளது. இந்தக் கூட்டத்தில் பல்வேறு அரசியல் அமைப்புக்களைச் சேர்ந்த தலைவர்களுடன் புதிதாக உருவாகியிருக்கும் தமிழர் சமூக ஜனநாயகக் கட்சியின் மூத்த தலைவர்களின் ஒருவாரான அ. வரதராஜப்பெருமாள் உரையாற்றினார்.

இவரின் உரை மிகவும் யதார்த்தமனதாகவும் விடயங்கள் நிறைந்ததாகவும் பலராலும் உணரப்பட்டது. 1970 களில் இருந்து தான் பயணித்து வந்த பாதையில் தலைவர் சிறீ சபாரத்தினத்தின் விடுதலைக்கானதும், ஐக்கியத்திற்கானதுமான பங்களிப்பை எடுத்துரைத்தார். மனோ கணேசன் உட்பட பாராளுமன்ற உறுப்பினர்கள் மகாண சபை உறுப்பினர்கள், பல்வேறு அரசியல் கட்சிப்பிலமுகர்கள் இந் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றினர். ரெலோ அமைப்பின் தற்போதைய தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதன் தலமையில் நடைபெற்ற இக் கூட்டத்திற்கு ஆயிரக்கணக்கில் மக்கள் கலந்து கொண்டனர் என்பது இங்கு கவனிக்கத்தக்கது. புலிகளால் 30 வருடங்களுக்கு முன்பு ஜனநாயக மறுப்பின் செயற்பாடாவும் புலிகளின் கொலை வெறிக்கு சிகரம் வைக்கும் நிகழ்வுகளில் ஒன்றாக சிறீ சபாரத்தினத்தினதும் அவர்களின் வழிவந்த போராளிகளினதும் கொலைவெறிச் சம்பவம் இடம்பெற்றது என்பது ஈழவிடுதலைப் போராட்டத்தின் கறை படிந்த கால வரலாறு ஆகும்.

கனடாவில் நடைபெற்ற நிகழ்வு தமிழீழ விடுதலை இயக்கத்தின் முக்கியஸ்தர் கிருபா தலமையில் நடைபெற்றது. விளக்கேற்றல், வணக்க நிகழ்வுகளுடன் ஆரம்பமான நிகழ்வில் பல்வேறு அமைப்புக்களின் தலைவர்களும் கலந்து கொண்டனர். ஈபிடிபி, புளொட் தமிழர் சமூக ஜனநாயகக் கட்சியினர்(எஸ்டிபிரி) பொது மக்கள் என அவர்களின் உறுப்பினர்களுடன் பலரும் கலந்து கொண்டனர். தமிழீழ விடுதலைக் கழக உறுப்பினர் பலருடன் பல்வேறு அமைப்பு பிரதிநிகளும் தமது கருத்துரைகளை வழங்கினர்.

புலிகளின் ரெலோவிற்கு எதிரான ஆயுத நடவடிக்கையே சகோதரப் படுகொலையின் ஸ்தாபனமயப்படுதப்பட்ட ஆரம்பம். இதன் தொடர்சியே புலிகளுக்கு முள்ளிவாய்காலில் ஏற்பட்ட இறுதி முடிவுக்கான ஆரம்பமாக அமைந்தது என்று SDPT இன் தோழர் ஜேம்ஸ் கருத்து தெரிவித்தார். மேலும் ஈழவிடுதலைப் போராட்டத்திற்காக மரணித்த போராளிகள், சகல இனப் பொதுமக்கள் யாவரையும் நினைவு கூரும் ஒரு பொதுத் தினத்தை நாம் கண்டு பிடித்து அந்த தினத்தில் இணைந்து வணக்க நிகழ்வுகளை முன்னெடுக்கவேண்டும் என்ற பல வருடங்களாக கூறிவரும் கோரிக்கையை தனது உரையின் ஆரம்பத்தில் குறிப்பிட்ட அவர் ஈபிஆர்எல்எவ் இற்கும் ரெலோவிற்கும் தோழர் நாபாவிற்கும் சிறி சாபாரத்தினத்திற்கும் இடையேயான நெருக்கமான உறவுகளின் விடயங்களையும் தனது போராட்ட அனுபவங்களின் அடிப்படையில் எடுத்துரைத்தார்.

விடுதலை அமைப்புக்களால் உருவான ஜக்கிய முன்னணி ஈழத் தேசிய விடுதலை முன்னணியில் ஆரம்பத்தில் இருந்த மூன்று அமைப்புக்கள் தமது செயற்பாடுகளை ஐக்கியப்பட்டு பலமாக முன்னெடுத்த வேளைகளின் தாம் அன்னியப்பட்டு போவோம் என்ற பயத்தின் அடிப்படையிலும், இந்த ஐக்கியத்தை இல்லாமல் செய்வதற்காகவும் புலிகள் இந்த ஐக்கிய முன்னணியில் தீடீரென இணைந்ததாகவும் இந்த புலிகளின் கபடத்தனத்தை ஏனைய தலைவர் புரிந்து கொள்ளவில்லை என்றும் இதனை சரியாக ஏனைய தலைவர்கள் கணித்து இருந்தால் புலிகளை தனிமைப்படுத்தி புலிகளின் இந்த கொலைகார ஜனநாயக செயற்பாடுகளை நிறுத்தியிருக்க முடியும் என்ற கருத்தை தோழர் ஜேம்ஸ் மேலும் தெரிவித்தார். தலைவர் சிறீ சபாரத்தினத்தை காப்பாற்ற தாம் எடுத்த முயற்சி தவிர்க்க முடியாத சூழலில் ஒரு தினம் தள்ளிப் போனதும் மறுதினம் திட்டமிட்டபடி 12 மணிக்கு காப்பாற்றும் திட்டம் 11 மணிக்கும் மதியம் 12 மணிக்கும் இடையேயான புலிகளின் சிறீசபாரத்தினம் மீதான கொலை வெறியாட்டத்தினால் தடைப்பட்டதையும் இங்கு பதிவு செய்தார்.

தலைவர் சிறீ சபாரத்தினத்தை காப்பாற்றும் செயற்பாட்டிற்கான செயற்பாட்டிற்கு தோழர் ஜேம்ஸ் அவர்களே தலமை வகித்தார் என்பது தோழர் சிறீ சாபாரத்தினத்துடன் ஒன்றாக இறுதிவரை இருந்து உயிருடன் தப்பிய ரெலோ போராளி இவ் நிகழ்வில் கலந்துகொண்டவர்களிடன் தெரிவித்தார். தலைவர் சிறீ சபாரத்தினத்தை காப்பாற்றும் முன்னெடுப்புக்களை அன்றைய ஈபிஆர்எல்எவ் இன் சார்பாக தோழர் ஜேம்ஸ் இன் தலமையில் நடைபெற்றது என்பவும் இது இறுதிவரை புலிகளின் பலத்த பாதுகாப்பு நிலமைகளிலும் புலிகளால் கண்டறிய முடியாத வகையில் திட்டமிடப்பட்டு நடைபெற்றது என்பவும் துர் அதிஷ்டவசமாக சில மணி நேர தாமதம் தலைவர் சிறீ சபாரத்தினத்தை காப்பாற்ற முடியாமல் போய்விட்டது என்பதுவும் ஈழவிடுதலைப் போராட்ட வரலாற்றுக் குறிப்புக்களில் பதிய வேண்டிய ஒன்றாகும்.

அன்று தலைவர் சிறீ சபாரத்தினம் காப்பாற்றப்படடிருந்தால் ஈழவிடுதலைப் போராட்டத்தின் பாதை வேறுவிதமாக வெற்றிப்பாதையில் நகர்ந்திருக்க நிறையவே சாத்தியப்பாடுகள் ஏற்பட்டிருக்கும் என்று கருத்துப்பறிமாறல்கள் இந்த நிகழ்வின் பிரதான கருப்பொருளாகவும் இருந்தது. கனடா நிகழ்வு தமிழீழ விடுதலை இயக்க ஆரம்ப கால உறுப்பினர் வாத்தியின் நன்றியுரைக் கருத்துரையுடன் நிறைவுடன் நிறைவு பெற்றது.
(எமது கனடா, தாயத்து நிருபர்கள்)