புலி திலீபனின் உண்மை முகம்

 

மாற்று இயக்கங்களை தடை செய்து அழித்தொழித்ததில் முக்கியமானவர் திலீபன்… தலைமறைவாக இருக்கும் புலி உறுப்பினர்கள் திடீரென்று ஊருக்குள் வருவார்கள். இன்றைக்கு இந்த இடத்தில் கூட்டம் ஒன்று வைக்க வேணும் என்பார்கள். திலீபனின் ஊர் ஊரெழு. ஆவரங்காலைச் சேர்ந்த முரளி (கிங்கோ) முன்னர் ஐரோப்பாவில் இருந்தவர். பின்னர் புலிகள் இயக்கத்தில் இணைந்துகொண்டார். முரளி உரும்பிராய்க்கு வரும்போது திலீபனையும் அழைத்துக்கொண்டு பிரச்சாரக்கூட்டங்களுக்கு வருவார். முரளி எனது வீட்டுக்கும் வருவதுண்டு. காரணம் எனது ஊருக்குள் இளைஞர்களை இயக்கத்தில் இணைக்கும் முயற்சியில் முரளி ஈடுபட்டிருந்தார். என்னையும் இயக்கத்தில் இணையும்படி கேட்டுக்கொள்வார்.

84ம் ஆண்டு புலிகளின் இன்னொரு பிரச்சாரக் கூட்டமொன்று உரும்பிராய் மேற்கில் நடைபெற்றது. பெற்றோமாக்ஸ் வெளிச்சத்தில் கூட்டம் நடைபெற்றது. அங்கு வந்த மக்கள் கேள்விகள் கேட்டார்கள். அண்ணை உங்கடை இயக்கத்திலை கலியாணம் கட்ட அனுமதி உண்டோ என்று ஒருவர் கேட்டார். அங்கு நின்றவர்கள் கேலியாகச் சிரித்துக் கொண்டார்கள். காரணம் புலிகள் இயக்கத்தில் திருமணம் செய்யக்கூடாது என்ற சட்டம் இருந்தது. ஆனால் பிரபாகரன் பல்கலைக்கழகத்தில் உண்ணாவிரதமிருந்த மதிவதனியைக் கடத்தித் திருமணம் செய்த காலகட்டம் அது. அதனால் அந்தக் கேள்வி கேட்கப்பட்டது.

புளொட் இயக்க உறுப்பினர்கள் சிலர் அங்கு வந்திருந்தனர். உரும்பிராய் புளொட் இயக்கத்தின் கோட்டையாக இருந்தது. புளொட் சிறி என்பவர் .திலீபனை நோக்கி அமெரிக்கா சம்பந்தமாக ஒரு கேள்வியைக் கேட்டபோது திலீபன் “அண்ணை ஏதோ அலட்டிறார்” என்று பதிலளித்தார். உங்களுக்கு அரசியல் தெரியும் என்று நாங்கள் நினைத்தோம். அரசியலே தெரியாத உங்களிடம் கேள்வி கேட்டது எங்கள் தவறு என்று புளொட் உறுப்பினர்கள் நகர்ந்து விட்டார்கள்.

மறுநாள் இரவு புளொட் சிறியின் வீடு தேடி திலீபனும் சில புலிகளும் சென்று உன்னிடம் பேசவேண்டும் வா என்று அழைத்தனர். கேள்வி கேட்டதற்காக திலீபன் சிறியை மிரட்டிவிட்டுச் சென்றார். அப்போது புளொட் இயக்கம் பலமானதாக இருந்ததால் சிறியைக் கடத்திச் செல்ல திலீபனால் முடியவில்லை.மாற்று இயக்கங்கள் மேல் புலிகள் எவ்வகையான குரோதங்களை வளர்த்தனர் என்பதற்கு பல சமயங்களில் கண்டிருக்கிறேன். தொடர்ந்து எழுதுவேன்.

(Rahu Rahu Kathiravelu)