போரின் பின்னர் தேசியம் எப்படித் தகர்க்கப்படுகிறது?

வடக்கும் கிழக்கும் இணைந்த பூர்வீகத் தமிழர்களின் தேசிய நிலம் வடக்கு என்ற எல்லைக்குள் மட்டும் குறுக்கப்பட்டு அதற்கு விக்னேஸ்வரன் என்பவரை நிர்வாகியாக நியமித்து வருடங்கள் கடந்துவிட்டன. வடக்கிலும் கிழக்கிலும் உள்ளூர் உற்பத்திகள் அழிக்கப்பட்டு பல் தேசிய வியாபார நிறுவனங்கள் எந்தத் தடங்கலுமின்றி மக்களின் வாழ்க்கையை ஆக்கிரமித்துக்கொள்கின்றன. பல் தேசிய நிறுவனங்களில் தங்கியிருக்கும் பல் பொருள் அங்காடிகள் ‘மூலைக் கடைகளை’ப் பிரதியீடு செய்ய ஆரம்பித்துவிட்டன. விவசாயம், மீன்பிடி, தொழிற் துறை என்ற அனைத்தும் மக்களிடமிருந்து பிடுங்கப்படுகின்றன.

பெரு நிறுவனங்களுக்குச் சேவையாற்றக்கூடிய சிறு தொழிகளைச் ஆரம்பிப்பதற்கு மட்டுமே வங்கிகள் கடன் வழங்குகின்றன. மலிந்த கூலியில் உற்பத்தியாகும் பொருட்களை பெரு நிறுவனங்கள் கொள்ளையடிக்கின்றன. “ஒரு வர்த்தக சபையின் ஸ்தாபகர் ஜதுசன் கூறுகையில், பால்வளத்துறை வேளாண்மையில் ஈடுபட்டுள்ள 120 அங்கத்தவர்கள் நாளாந்தம் அண்ணளவாக 600 லிட்டர் பால் சேகரிக்கின்றனர், “இந்த பண்ணையிலிருந்து நாங்கள் நெஸ்டல் நிறுவனத்திற்குப் பால் வினியோகிக்கிறோம், ஆனால் அவர்கள் எங்களுக்கு மிகவும் குறைவான விலை தான் கொடுக்கிறார்கள்” என்று குறைபட்டுக் கொண்டார்.

திருநேல்வேலியில் பயோ ரெக் என்ற நிறுவனம் மூலிகளைக்கொண்டு குடிபானம் ஒன்றைத் தயாரித்து விற்பனை செய்துவந்தது. 2009 ஆம் ஆண்டு வரை யாழ்ப்பாணத்திற்கு கொக்கோ கோலா போன்ற குடிபானங்களும், எலிபண்ட் ஹவுஸ் குடிபான வகைகளும் விற்பனைக்கு வராத வேளைகளில் பயோ ரெக் இன் குடிபானங்கள் மக்கள் மத்தியில் பெருமளவில் விற்பனை செய்யப்பட்டன. இன்று அதன் விற்பனை முற்றாக நிறுத்தப்படும் நிலை தோன்றியுள்ளதாக பயோ ரெக் நிறுவனர்கள் தெரிவிக்கின்றனர்.

தேசியம் என்பதன் ஆரம்பமே சுய சந்தையிலும் பொருளாதாரத்திலும் தான் தங்கியுள்ளது. தேசியத்தின் அடித்தளத்தையே தகர்க்கும் புதிய அரசின் பொருளாதாரக் கொள்கைகளுக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியும் முழுமையான ஆதரவை வழங்குகின்றன. எதிராகப் பேசுவதற்குகோ குறைந்தபட்சம் துண்டறிக்கை விடுவதற்கோ இன்று எம்மத்தியில் ஒருவரும் இல்லை.

சுன்னாகத்தில் மின்னுற்பத்தி நடத்தி அப்பிரதேசத்தின் நீர் மற்றும் நில வளத்தை அழித்த நிறுவனம் இலங்கையில் இன்று பல்வேறு வர்த்தகத் துறைகளைக் கையகப்படுத்திக்கொண்டுள்ளது. இந்த நிறுவனத்திற்கு தமிழ்த் தேசியம் பேசும் அனைத்துக் குழுக்களும் ஆதரவு வழங்கி வருகின்றன. இதற்கு ஒரு படி மேலே சென்று விக்னேஸ்வரன் தலைமையிலான வடக்கு மாகாண சபை போலி நிபுணர் குழு ஒன்றை அமைத்து நிறுவனத்தைச் சட்டவிரோதமாகக் காப்பாற்றியுள்ளது.

விவசாயப் பிரதேசங்களான சுன்னாகம், இணுவில், மருதனாமடம், தெல்லிப்பழை, உரும்பிராய், எழாலை, ஊரெழி, புன்னாலைக்கட்டுவன் போன்ற பிரதேசங்கள் படிப்படியாக அழிந்து வருகின்றன. இவற்றைப் பேசுவதற்கு ஒரு குருவிகூட இல்லாத அவல நிலைக்குத் தமிழ்ப் பேசும் மக்கள் தள்ளப்பட்டுள்ளனர். தமிழ்த் தேசியம் தோன்றியதன் மற்றுமொரு பிரதான காரணம் பேரினவாதிகளின் கல்வி மறுப்புக் கொள்கையே! கல்வி மறுப்பையும் மீறி வட மகாணம் இலங்கையின் கல்வித் தரத்தில் முதலாவது அல்லது இரண்டாவது இடத்தை வகித்தது. இன்று இலங்கையின் கல்வித் தரத்தில் இறுதி நிலையை அடைந்துள்ளது.

இதனிடையே நல்லாட்சி என்ற முகமூடிக்குள் ஒளிந்துகொண்டு இலவசக் கல்வியை அழிக்கும் இலங்கை கிரிமினல் அரசாங்கம், கல்வியைப் பணம்படைத்தோருக்கான சொத்தாக மாற்றியுள்ளது. யாழ்ப்பாண மருத்துவபீட மாணவர்கள் மருத்துவக் கல்வியைத் தனியார் மயப்படுத்தலுக்கு எதிராகப் போராட்டம் நடத்தியுள்ளனர். தேசியம் மற்றொரு முனையிலிருந்து இங்கு தாக்குதலுக்கு உள்ளாகிறது.

தேசிய இனத்தின் இரண்டு பிரதான அடிப்படைக் கூறுகள் பொருளாதாரமும். பிரதேசமும். முதலில் வடக்குக் கிழக்கை எந்த எதிர்ப்புமின்றிப் பிளவுபடுத்தி அதன் ஒரு பகுதி விக்னேஸ்வரன் ஐங்கரனேசன் போன்ற அடியாட்களின் கைகளில் ஒப்படைக்கப்பட்டது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அதற்கு முழு ஆசியையும் வழங்கியது. இரண்டாவதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, தமிழ் தேசிய மக்கள் முன்னணி, தமிழ் மக்கள் பேரவை போன்றவற்றின் துணையுடன் தேசியப்பொருளாதாரம் அழிக்கப்பட்டு அன்னியர்களின் பல் தேசிய நிறுவனங்களின் கைகளில் ஒப்படைக்கப்படுகின்றது.

இங்கு வேடிக்கை என்னவென்றால் கலாச்சாரம் கெட்டுப் போகிறது என்று நீலிக் கண்ணீர் வடித்து தேசியம் பேசும் ஒரு தனிமனிதனோ, கட்சியோ உள்ளூர் உற்பத்திகளின் அழிவிற்கு எதிராக மூச்சுக்கூட விடவில்லை. தேசியத்தின் அடிப்படை அழிகிறது என்று அவர்களுக்குத் தெரியாமலில்லை. இவர்கள் அனைவரும் எதாவது ஒரு தொடர் புள்ளியில் தேசியத்தை அழிப்பதற்காக ஏகாதிபத்தியங்களாலும், அதன் தரகுகளான இலங்கை அதிகார வர்க்கத்தாலும் களமிறக்கிவிடப்பட்டவர்கள்.

மக்களை உணர்ச்சிவசப்ப்படுத்தி அதனைப் பணமாகவும் வாக்காகவும் மாற்ற இக்குழுக்கள் முனைந்துகொண்டிருக்க தேசியத்தின் அடித்தளம் இனிமேல் மீளாதவாறு முற்றாகத் தகர்க்கப்பட்டுக்கொண்டிருக்கிறது. மூன்று தசாப்தங்களுக்கும் மேலாக ஆயுதப்போராட்டத்தை நடத்திய தமிழ்ச் சமூகம் முப்பதாயிரத்திற்கும் மேலான போராளிகளை தமது விடுதலைக்காகப் பலிகொடுத்துள்ளது. இவ்வாறான சமூகம் ஒன்றில் அழிவுகளுக்கு எதிராக ஒற்றை வார்த்தைகூட பேசாத அரசியல் தலைமை ஒன்று ஒவ்வொரு முனையிலும் திட்டமிட்டு உருவாக்கப்பட்டுள்ளது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஒரு புறத்திலும், அதற்கு எதிரான மக்கள் சார்ந்த தலைமைகள் தோன்றாமல் இடைவெளியை நிரப்பிக்கொள்ள விக்னேஸ்வரன், சுரேஷ், கஜேந்திரகுமார் குழுவினரும், புலம்பெயர் தேசியக் கோமாளிகள் என அனைத்து முனைகளிலும் அழிப்பவர்கள் நிறுத்திவைக்கப்பட்டுள்ளனர். இவ்வாறான அரசியல் தலைமைகளின் பின்னணியில் வன்னிப்படுகொலைகளை நடத்திய மேற்கு ஏகாதிபத்திய நாடுகளும், இந்திய அரசும் செயற்படுகின்றன.

இன்றைய போலிகள் உண்மையான தேசிய வாதிகளாகவிருந்தால்.

1. முப்பதாயிரம் போராளிகளை தியாகிகளாக்கிய சமூகத்திற்கு அன்னிய உற்பத்திகளை நிராகரிக்குமாறு பிராச்சாரம் செய்திருப்பார்கள். மக்களில் பெரும்பகுதியினர் அதனை ஏற்றுக்கொண்டிருப்பார்கள்.

2. உள்ளூர் உற்பத்திகளை உக்குவிக்கும் முயற்சிகளில் ஈடுபட்டிருப்பார்கள்.

3. உள்ளூர் வியாபாரமும், மூலதனமும் அன்னிய முதலீட்டாளர்களால் அழிக்கப்படுவதற்கு எதிராகப் போராடியிருப்பார்கள்.

3. அன்னிய மூலதனத்தின் உள்ளீட்டால் தான் கலாச்சாரம் சிதைவடைகிறது என்பதை மக்களுக்குக் கூறியிருப்பார்கள்.

4. இலவசக் கல்வி அழிக்கப்படும் போடு நடைபெற்ற போராட்டங்களைத் தலைமை தாங்கியிருப்பார்கள்.

5. வளங்கள் சுரண்டப்படும் போது அதற்கு எதிராகப் போராடியிருப்பார்கள்.

6. சுன்னாகம் போன்ற பேரழிவுகளுக்கு எதிராகக் குரல்கொடுத்திருப்பார்கள்.

இந்தக் கோரிக்கைகளை மீறி பேசப்படும் தமிழ்த் தேசியம் போலியானது. திட்டமிட்டு அழிப்பதற்காகப் பேசப்படுவது. இன்னும் சில வருடங்களில் சுய பொருளாதாரம் மீளமுடியாத அளவிற்கு அழிக்கப்பட்டு மக்கள் அன்னியப் பொருளாதாரத்தை நிராகரித்து வாழ முடியாத நிலை ஏற்பட்டுவிடும். கல்வி உட்பட அனைத்தும் பல் தேசிய வர்த்தகமயமாகிவிடும். வளங்கள் தொடர்ச்சியாக அழிக்கப்பட்டுவிடும். சுன்னாகம் போன்ற பேரழிவுகள் தமித் தேசியவாதிகளின் ஆசியுடன் நடைபெற்று முடிந்துவிடும். அப்போது தேசியம் என்பது பாடப்புத்தகங்களிலும் புலம்பெயர் நாடுகளில் பிழைப்பு நடத்தவும் மட்டுமே பயன்படும்.

அனைத்துலக ஈழத் தமிழர் மக்களவை, நாடுகடந்த தமிழீழ அரசாங்கமும், அனைத்துலக தமிழ் இளையோர் அமைப்பு போன்றவை இணைந்து அதற்கான ஆரம்ப முயற்சியை தொடங்கிவிட்டன. வட்டுக்கோட்டைத் தீர்மானத்தின் 40 ஆண்டு நிறைவை வெகு விமரிசையாகக் கொண்டாடத் தீர்மானித்துவிட்டன. இனிமேல் எங்காவது ஈட்டியெறிந்து புதிது புதிதாக நினைவு தினங்களைக் கொண்டாட ஆரம்பித்துவிடுவார்கள். அதன் மறுபக்கத்தில் தேசிய இனம் என்பதன் அடையாளங்கள் முற்றாக அழிக்கப்பட்டுவிடும்! இன்றுள்ள சூழலில் இந்த அழிவிற்கான கால எல்லை இன்னும் ஐந்து வருடங்களைத் தாண்டாது. இன்றைய போலித் தேசியவாதிகள் அழிவுகளுக்கு எதிராகக் குரல்கொடுக்காமல், வட்டுக்கோட்டைத் தீர்மானம், தமிழீழ தாயகம், போர்க்குற்றம் போன்ற உணர்ச்சியூட்டும் வார்த்தைகளோடு மட்டும் நிறுத்திக்கொள்வார்கள் என்பதை அடித்துக்கூறலாம்.

[ இனியொரு – சபா நாவலன் ]