முடிவுற்ற முள்ளிவாய்க்கால் மரணங்களின் 7 ஆண்டுப் பாதையில்……

(சாகரன்)

முள்ளிவாய்காலில் முடிவுற்ற யுத்தம் பொது மக்கள் பலரை இருதரப்பும் காவு கொண்டு முடிவுற்று 7 வருடங்கள் ஓடிவிட்டன. யுத்தத்தின் பின்னர் மகிந்த ராஜபக்ஷ தன் தரப்பிற்கு நகரங்களை இணைக்கும் சாலைகளையும் நகர அபிவிருத்திகளையும் முக்கியமாக மையப்படுத்தி தனது செயற்பாட்டை செய்திருந்தார். யாரும் எவ்விடம் சென்று வரலாம் என்ற ஒரு நிலமையை யுத்தத்தை முடிவுக்கு கொண்டுவந்த மகிந்த செய்து முடித்துள்ள முக்கிய நிகழ்வாக மே 18 2009 அமைந்தது என்பது மறுக்க முடியாத யதார்த்தம். இதில் மகிந்த கூட்டும் அவர்களைச் சார்ந்தவர்களும் அபிவிருத்தியென்று ஒரு புறமும் தம்மை அபிவிருத்தியடைச் செய்தல் என்று மறபுறமும் இதனைக் கேள்விகளுக்குள் உள்படுத்தியவர்கள் அது சிங்களவர்களாக இருந்தாலும் கொலை மிரட்டலுக்கு உள்ளாக்கி போரை முடித்த போதிருந்த தமது ஆதரவுத் தளத்தை இழந்து வந்தனர்.

கூடவே சீனாவுடனான இணைந்த அபிவிருத்திச் செயற்பாடுகளை கொண்டிருந்தது என்பது மேற்குலகிற்கு ஒவ்வாமை ஏற்படுதியிருந்தது. இதற்கு முற்றுப் புள்ளி வைக்க தேர்தலில் நின்று தோற்றுப் போய் கொண்டிருக்கும் ரணிலின் உதவி மட்டும் போதாது என்பதினால் மகிந்தவின் ஒரு பிரிவினரையும் ரணிலையும் இணைத்து மைதிரியை வெல்லச் செய்து மகிந்தாவை அதிகாரத்திலிருந்து அகற்றிய வரலாற்றை கடந்த 7 வருடத்திற்குள் செய்திருக்கின்றது. இதில் தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வு என்ற விடயதில் பேரினவாதத் தலைவர்கள் போலவே மகிந்தாவும் செயற்பட்டார்.

மேற்குலகம் ஐநாவின் ஊடாக சர்வதேச விசாரண என்று மட்டும் இலங்கை அரசை மிரட்டிவந்து தமக்கு சார்பான ரணிலை ஆட்சியில் அமர்த்தி வெற்றி கண்டதுடன் எல்லாவற்றையும் விட்டுவிட்டு இருக்க முற்படும் நிலைப்பாட்டை இன்று வந்தடைத்திருகின்றன. இங்கு கவனிக்க வேண்டிய விடயம் இந்த மேற்குலகம் ஐநா சபை எப்போதும் இலங்கைத் தமிழருக்கான அரசியல் தீர்வுபற்றி உச்சரிப்பதை தவிர்த்தே வந்தனர் வருகின்றனர் என்பது.

1986 டிசம்பர் 13 ம் திகதியுடன் தனது ஏகபோகத்தை நிலைநாட்டினதாக தனி நாட்டிற்காக விடுதலைக்காக போராடியதாக தம்மை கூறிக் கொள்ளும் தமிழீழ விடுதலைப் புலிகள் பிரகடனம் செய்தனர். இதே வருடம் மே மாதத்திலிருந்து ஆரம்பித்த மாற்றுக் கருத்தாளர்களை தடைசெய்தல் என்ற ஸ்தாபன மயப்படுத்தபட்ட புலிகளின் செயற்பாடு மார்கழியில் ஈபிஆர்எல்எவ் ஐ தடை செய்ததுடன் முடிவுற்றதாகவும் புலிகளும், அவர்களின் ஆதரவாளர்களும் நம்பினர். மே மாதத்தில் ஆரம்பமான புலிகளின் செயற்பாட்டை தடுத்து நிறுத்த தமிழ் பேசும் பொது மக்களால் முடியவில்லை. இந்த போராட்டத்திற்கு பின்புலமாக ஆதரவு, ஒத்தாசை வழங்கிய இந்தியாவும், தமிழ்நாடும் இந்த கொலைகளை தடுத்து நிறுத்த முயலவில்லை.

ஏன் ஐநா விற்கும் இந்தக் கொலைகள் கைதுகள் துரத்தல்கள் மனித உரிமை மீறல்களாக தெரியவில்லை. புலம் பெயர் தேசத்தில் வாழும் போராட்ட ஆதரவாளர்களுக்கும் இந்த செயற்பாடு மனித உரிமை மீறல்களாக உறுத்தவில்லை. மாறாக நிதி திரட்டி அனுப்பினர் உள்ளுரில் கொலைகளுக்கு சோடா உடைத்தும், ஆடு வெட்டி உணவும் படைத்தனர் மிகச் சில பகுதி மக்கள் துப்பாக்கிக் குண்டுகளுக்கும் பயப்படாமல் எதிர்த்து நின்றனர், மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் பலர் புலிகளால் கொல்லப்படவும் செய்தனர். பெரும் பகுதி மக்கள் என்ன செய்வது என்று தெரியாமல் மனதில் புழுங்கிக் கொண்டு நின்றனர்.

மே மாதத்தில் ஆரம்பித்த புலிகளின் மாற்றுக் கருத்தாளர்களுக்கு எதிரான ஆயுத வெறியாட்டத்தை ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி மட்டும் கண்டனம் தெரிவித்து போராட்டதில் ஈடுபட்டு மாற்று இயக்கப் போராளிகள் பலரையும் காப்பாற்றினர். ஈரோஸ் என்றும் போல் ஒதுங்கி நிற்று மறைமுக புலி ஆதரவு நிலையை எடுத்தனர். புளட் தனக்குள் நிலவி வந்த உட்கட்சிப் படுகொலைகளினால் செயலிழந்த நிலையில் தம்மை தாமே விலத்திக் கொள்வதாக அறிவிதது. இவர்களில் பல போராளிகளுக்கும் ஈ.பி.ஆர்.எல்.எவ் இனரே பாதுகாப்பு வழங்கினர். இதில் தாராக்கி சிவராம் தொடக்கம் கிருபா மாஸ்ரர் போன்றவர்கள் வரைக்கும் அடங்குவர்.

இறுதியாக ஈ.பி.ஆர்.எல்.எவ் இனர் மீது, தங்கள் மீது தாக்குதல் நடாத்த திட்டமிட்டிருந்தனர் என்ற குற்றச்சாட்டை முன்வைத்து தாம் இதற்காக முந்திக் கொண்டதாக புலிகள் ஈ.பி.ஆர்.எல்.எவ். மீது தாக்குதல் தொடுத்தனர். இதுவரை காலமும் சகோதரப் படுகொலையைத் தவிர்த்து வந்து ஈ.பி.ஆர்.எல்.எவ். இனர் பதில் தாக்குதல் நடத்த வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டனர்.

மட்டக்களப்பு, அம்பாறை மாவட்டங்களில் தமது தளங்களை தக்க வைக்க ஏனைய பகுதிகளில் பலர் கொல்லப்பட்டும், பெருவாரியானவர்கள் மக்களின் பாதுகாப்புடன் தமது உயிரைப்பாதுகாத்து கொண்டனர். புலிகளின் இந்த ஈபிஆர்எல்எவ் மீதான ஆயுத வன்முறையை தவிர்க்க முடியாமல் இதே வழியில் எதிர் கொண்ட ஈ,பி,ஆர்,எல்,எவ், இனர் இதனையே இந்திய இராணுவப் பிரசன்ன காலத்திலும் தொடரவேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டனர். இவற்றில் ஏற்பட்ட நடைமுறைத் தவறுகளையே இன்று புலியைக் காப்பாற்ற நினைக்கும் பலரும் முன்வைக்கும் ஈ,பி,ஆர்,எல்,எவ், இனருக்கு எதிராக வசைபாடும் செயற்பாடாக பார்க்க முடியும். ஏன் இந்த வரலாற்றை கூறுகின்றேன் என்றால் தற்போது பொது வெளியில் செயற்படும் பலருக்கு இந்த வரலாற்று உண்மைகள் தெரியாது பலர் இந்த நிகழ்வுகள் நடைபெற்ற காலத்தில் பிறந்திருக்கவில்லை அல்லது சிறு வயதில் இருந்தனர்.
வரலாற்றை புரட்டிப் பார்பது அவசியம் ஆகின்றது.

திம்பு பேச்சுவார்தையில் தமிழர் தரப்பு பலமாக இருந்ததற்கு காரணம் அவர்களிடையே உருவான எழுதப்படாத ஐக்கியம் ஆகும். இதில் தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணியும், தவிர்க்க முடியாமல் புலிகளும் இணைந்து செயற்பட்டதே வரலாறு. இதனாலேயே இந்தியா தனிநாட்டைத் தவிர வேறு எதாவது மாற்றுத்திட்டத்தை முன்வைக்கமாறு கோரிக்கை விடுத்த போது ஈழமக்கள் புரட்சிகர முன்னணியின் தலைவர்களான வரதராஜப்பெருமாள், கேதீஸ்வரன் போன்றவர்களின் முன்வரைதலில் உருவாக்கப்பட்ட நான்கு அம்சக் கோரிக்கை சகல விடுதலை அமைப்புக்களும் தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டமைப்பினரும் ஏற்றுக் கொண்டு பொதுமையாக இக் கோரிக்கை தனி நாட்டுக் கோரிக்கையிற்கு மாற்றாக முன்வைக்கப்பட்டது. இந்த நாலு அம்சக் கோரிக்கை ஒரு தேசிய இனத்தின் முழுமையான சுய நிர்ணய உரிமையை கொண்டதாகவே அமைந்தது இங்கு கவனிக்கத்தக்கது.

1987 இல் தனி ஆவர்தனமாக ஆரம்பித்த புலிகளின் தனிநாட்டுச் செயற்பாடுகள் மிகக் குறுகிய காலத்திலேயே இலங்கை அரசின் வடமராட்சித் தாக்குதலுடன் புலிகளின் தோல்விகளையும் இதனைக் காரணம் காட்டி இந்தியாவின் இலங்கையிற்கான பிரசன்னத்திற்கும் வாய்பை ஏற்படுத்திவிட்டது. தொடர்ந்து எற்பட்ட இலங்கை இந்திய ஒப்பந்தமும் சகல இயக்கங்களையும் தாயகத்தில் செயற்பட அனுமதித்த செயற்பாடுகளும் நடைபெற்றன. இதில் சகல விடுதலை அமைப்புக்களையும் தாயகத்தில் வேலை செய்ய அனுமதித்தது என்பதுவே புலிகள் இந்த ஒப்பந்தத்தை குழப்பி இந்திய இராணுவத்திற்கு எதிராக தாக்குதலுக்கு வழிவகுத்தது என்பதே உண்மை. தமது ஏகபோகத்திற்கு அப்பால் பன்முகப்படுதப்பட்ட தன்மையில் தாம் மக்களால் நிராகரிக்கப்படுவார்கள் என்பதே புலிகளுக்கான எல்லாச் செயற்பாடுகளுக்கும் அடிப்படையாக இருந்தன.

இவற்றின் வெளிப்பாடாக முதலில் மாற்று இயக்கங்களை தடை செய்தவர்கள் மாற்றுக் கருத்தாளர்களை கொலை செய்தார்கள் மாற்று மொழிக்காரர்களை ஆரம்பதிலிருந்தே கொன்றவர்கள் தமது மொழிபேசும் முஸ்லீம் மக்களை கொன்றார்கள் இதன் தொடர்ச்சியாக தமது மக்களையும் கொல்வதில் பின்நிற்கவில்லை. இறுதியில் தாம் மட்டும் தப்புவதற்காக மக்களை மந்தை போல் முள்ளிவாய்கால்வரை அழைத்து சென்றனர. இறுதியில் இவர்களை நம்பி பயன் இல்லை என்று இறுதிவரை இவர்களை நம்பிய மக்களே தப்பியோட முற்படுகையில் பொது மக்களை கொலையும் செய்தனர். இதில் மிகவும் கேவலமான விடயம் தான் ஒருவன் உயிர்வாழ்வதற்காக தமது குடும்ப உறுபினர்களையும் இவர்கள் பலி கொடுக்க தயங்கவில்லை. அதாவது தனது மரணத்தை தவிர்பதற்காக தன் மனைவி குழந்தைகளைக் கூட இவர்கள் பலிகொடுக்க தயங்கவில்லை.

இதில் எதிரியுடன் உயிருடன் பிடிபடுவதில்லை என்ற சயனைட் தற்கொலை என்ற புலிகள் இயக்கத்தின் முக்கிய கட்டுப்பாடு என்பதை 99 வீதமான உறுப்பினர்கள் கடைப்பிடிக்கவில்லை என்பது மறைக்கப்பட்ட உண்மை. இதனாலேயே புலிகளின் பத்தாயிரத்திற்கு மேற்பட்டோர் இலங்கை இராணுவத்திடம் சரணடைந்து பின்பு ‘புனர்வாழ்வழிகப்பட்டு’ விடுவிக்கப்பட்டதற்கும் காரணமாக அமைந்தது. நாம் எப்போதும் சயனைட் தற்கொலைகளையோ சகோதரப் படுகொலைகளையோ ஆதரித்தவர்களோ, ஏற்றுக் கொண்டவர்களோ அல்ல. புலிகளின் போலி முகங்களை உரித்துக் காட்டுவதற்காகவே இதனை பதிவிடுகின்றோம்.

புலிகளின் நடவடிக்கை எப்போதும் நட்பு சக்தி வட்டங்களை குறுக்குவதையும் பகை வட்டத்தை அதிகரிப்பதையுமே செயன் முறையாகக் கொண்டதாகவே இருந்தது, இருக்கின்றது. இதுவே அவர்களின் ஆண்டபரம்பரை ஆள நினைக்கும் தனிநாட்டுக்கனவுவாகும். இதுவே இவர்கள் முள்ளிவாய்காலுக்குள் மூழ்கிப் போனதற்கான காரணம் ஆகும். முகாம்களை அடித்து காவு கொண்ட இராணுவத்தின் எண்ணிக்கை மூலம் தம்மை நிறுத்திக் கொள்ளலாம் என்பதில் எடுத்த கவனத்தில் ஒரு சத விகிதத்தையேனும் எமது மக்களுக்கான போராட்டதிற்கான தார்மீக ஆதரவை சர்வதேச சமூகத்திடம் பெறுவதற்காக உழைத்திருந்தால் அவர்களும் அழிந்திருக்க மாட்டார்கள் இவர்களை நம்பிய பொது மக்கள் இவ்வளவு வகை தொகையில்லாமல் கொலல்லப்பட்டிருப்பதை தடுத்திருக்கவும் முடியும்.

நான் அடிக்கடி கூறும் விடயததையே இங்கு மீண்டும் கூறுகின்றேன்…. அப்பாவி மக்களுக்கு முள்ளிவாய்காலில் நடைபெற்ற அவலம் ‘…ஒரு மிருகத்தினால் சிறை பிடிக்கப்பட மறு மிருகத்தினால் கடித்துக் குதறப்பட்டதே…” பொது மக்கள் மரணத்தில் நடைபெற்றது. இதில் சிறைப் பிடித்தவர்களும் மற்றய மிருகத்திடம் செல்ல முற்பட்டவர்களை கடித்துக் குதறியதே அந்தோ பரிதாபம். இந்தக் கொலைகளுக்கான பொறுப்பை இருவரும் சமமாக பொறுப்பெடுத்தேயாக வேண்டும்.

போரை நிறுத்துங்கள் மனிதக் கேடயமாக பாவிக்கப்படும் மக்களை விடிவியுங்கள் என்று எப்போதும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கோரிக்கை வைக்கவில்லை. இதில் வேறு தமிழ் நாட்டில் பணத்திற்காக குரல் கொடுக்கும் வைகோ வகையறாக்களுக்கு பணம் பட்டுவாடா செய்வதில் சுரேஸ் பிரேமசந்திரனும், சிவாஜிலிங்கமும் இரட்டைச் சிறகு கட்டிப் பறந்தனர். (அன்றைய காலகட்ட செய்தித்தாள்களைப் புரட்டிப்பாருங்கள் இந்த உண்மைபுரியும்). எவை எப்படி இருந்தாலும் மரணங்கள் யாருக்கு நிகழ்ந்தாலும் அது எமக்கும் வலிக்கின்றது. எமது ஆதங்கங்கள் எல்லாம் எவ்வாறு இந்த மனிதப் பேரவலத்தை தடுத்திருக்க முடியும் என்பதே. இதே போல் எதிர்காலத்தில் நடைபெறாமல் தடுப்பதும் என்பதே.

யுத்தம் முடிந்த இந்த ஏழு ஆண்டில் நாம் கண்டதெல்லாம் செயற்படும் திறன் அற்ற வட மாகாணசபையும் இதன் முதல் அமைச்சரும் ஏனையவர்களும். அதே போல் கிழக்கில் மாகாணசபையில் இடம்பிடித்து அமைச்சர்கள் ஆகியும் ஏதும் செய்யாத தமிழர் தரப்பும் மட்டுமே. யுத்தம் முடிவில் மக்களிடம் விடுதலைப் போராட்டத்திற்கென திரட்டிய பணத்தை சுருட்டி குபேரர் ஆன பல போக்கிரிக் கனவான்களையும், பிரமுகர்களையும் மட்டும்தான். போரின் உக்கிரத்தால் எல்லாவற்றையும் இழந்த மக்களும் அநியாயமாக பலியிடப்பட்ட, பாதிக்கப்பட்ட போரில் ஈடுபட்டவர்களின் சிதிலம் அடைந்த வாழ்க்கையையும்தான். நகர அபிவிருத்தியும், நகரங்களை இணைக்கும் சாலைகளும் இவர்களுக்கு, சாமானிய மக்களுக்கு நேரடியாக ஏதும் உதவிகரமக இருப்பதாக அறிய முடியவில்லை.

போருக்கென்று திரட்டி பணம் எல்லாம் பொது மக்களுடயவை. இவை புனர்வாழ்விற்கு பயன்படுதப்படவேண்டியவை. இதில் ‘நனோ’ சதமளவு கூட இதற்கு பாவிக்கப்படவில்லை. முள்ளிவாய்காலில் தீபம் எற்றி அடுத்த தேர்தல் வெற்றிக்கு வாக்கு தேடும் தமிழ் தேசியக் கூட்டமைப்போ அல்லது அவர்களுடன் நிற்பவர்கள் யாரும் இதற்கான முன்னெடுப்புக்களை, குரல் கொடுப்புக்களை செய்ததாக செய்வதாக அறிய முடியவில்லை.

இவ்விடயங்களை நாம் உரகக் கூறுவதினால் மாற்றுக் கருத்தாளர் ஆகிய நாங்கள் துரோகிகளாவும், தவிர்க்க வேண்டியவர்களாகவும் பொது வெளியில் பிரச்சாரப்படுத்தப்படுகின்றோம். இதே மாதிரியான செயற்பாடுகளை அணுகுமுறைகளையே மாற்றுக் கருத்தாளர்கள் மாற்று அமைப்பக்களை 1986 களில் புலிகள் அழித்த போது செய்ய முற்பட்டோம். இதற்கூடாக எம்மக்களுக்கான ஒரு சுபிட்சமான வாழ்வை பெறுவதை உறுதிப்படுத்த முயல்கின்றோம். இதன் தொடர்சியாக வெற்றி பெற்ற ஈழவிடுதலை வரலாற்றை நிறுவ முயல்கின்றோம்.

(மே 18, 2016) (Saakaran)