முயல் – ஆமை ஓட்டம்! முடிவு?

நாம் அடையவேண்டிய இலக்கை நோக்கி நிதானமாக தொடர்ந்து சென்றால், முடிவு எமக்கு சாதகமாகும். அதேவேளை வேகமாக செயல்படுவதாய் இறுமாப்பாக புறப்பட்டு, நிலமை எமக்கு சாதகமாக இருப்பதாக தப்புக்கணக்கு போட்டால், காரியம் கைநழுவி போகும் நிலை ஏற்படலாம். இதனைத்தான் அண்மையில் யாழில் தமிழ் மக்கள் பேரவையின் உறுப்பினர்கள், ஒரு முக்கியமான சந்திப்பை தமிழ் அரசு கட்சி தலைமையகத்தில் திரு மாவை சேனாதிராசா உடன் நடத்தியது கோடிட்டுகாட்டுகிறது.

என்ன பேசினோம் என இருதரப்பும் கூறாது மௌனித்தாலும், இதைத்தான் பேசியிருப்பார்கள் என்பதை ஊகிக்கமுடிகிறது. தமிழ் தேசிய கூட்டமைப்பு அதிலும் தமிழ் அரசு கட்சி, முக்கியமாக சம்மந்தர் பல விடையங்களில் மெத்தன போக்கை கடைப்பிடிப்பதாக, [ ஒரு ஆசிரியர் கும்பகர்ண தூக்கம் என தலையங்கம் எழுதினார் ] குறைகூறி பேரவை கண்டு, ஏற்ற தீர்வு இதுதான் என அவசரகதியில் ஒரு தீர்வு திட்டத்தை வெளியிட்டனர். அந்த நிகழ்வுக்கு முதல்வர் தலைமை தாங்குவார் என அறிவித்தனர்.

ஆனால் அந்த நிகழ்வில் முதல்வர் இணைத் தலைவராகவே அமர்ந்தார். தீர்வு நகலை முதல்வர் வெளியிட்டு வைப்பார் என அறிவித்தும் அவ்வாறு அல்லாது, சட்டத்தரணி வி புவிதரன் கையளித்த பிரதியை, முதல்வர் பெற்றுக்கொண்ட நிகழ்வே நடந்தேறியது. முதல்வர் கூட தன் உரையில், இந்த தீர்வு திட்ட வரைவு சம்மந்தமான முயற்சியில் எந்தவிதமான பங்களிப்பும் செய்யும் நிலையில் நான் இருக்கவில்லை. எனது வேலைப்பழுவே அதற்கான காரணம். பலமாதங்கள் தேவைப்படும் இந்த விடயத்தை சிலவாரங்களில் முடிப்பதென்பது கடினமாகும்.

எனவே இதுதான் இறுதி முடிவு என்ற நிலைமை இல்லாது இதில் சேர்க்கவேண்டிய, அல்லது நீக்கவேண்டிய விடயங்களை எவரும் முன்வைக்கலாம். முழுமையான மாற்றம் தேவை என்றாலும் அதுபற்றி முன்மொழியலாம். மக்கள் 2013ல் வட மாகாணசபை தேர்தல் விஞ்ஞாபனத்தில் நாம் முன்வைத்த விடயங்களை ஏற்றே எம்மை தெரிவு செய்தனர். எனவே அந்த அடிப்படையிலான தீர்வை நோக்கியே எமது நகர்வு அமையவேண்டும் என்றார்.

ஆரம்பத்தில் இருந்தே தாம் தனியான நிகழ்ச்சி நிரலில் இயங்கவில்லை என்றும், தாம் தயாரிக்கும் தீர்வு நகலை தமிழ் தேசிய கூட்டமைப்பின் பார்வைக்கு வைத்து, அவர்களுக்கு ஒத்தாசையாய் மக்கள் அபிப்பிராயத்தை அறிவதே பேரவையின் நோக்கம் என கூறியதை, முதல்வர் உறுதிபடுத்தியுள்ளார். பேரவையில் ஒருசிலர் மற்றும் அவர்களுக்கு பின்புலமாக செயல்பட்ட பத்திரிகையாளர் மட்டுமே சற்று மாறுபட்ட கருத்துக்களை தெரிவித்துவந்தனர்.

அவர்கள் தமிழ் தேசிய கூட்டமைப்பு மீது, குறிப்பாக சம்மந்தர், சுமந்திரன் மீது வைத்த விமர்சனங்கள், தமிழர் தரப்பு இரண்டாக பிளவுபட்டுவிட்டது போன்ற அச்சத்தை மக்கள் மனதில் விதைத்தது. பிளவு நிச்சயம் என்பது போல தலையங்கங்களும், சில கட்சி தலைவர்களின் பேச்சுக்களும் எரியும் நெருப்பில் எண்ணை வார்ப்பதாக அமைந்தது. இணைத்தலைவராக செயல்பட்ட முதல்வரிடம், நீங்கள் எங்கள் முதல்வராக செயல்படுங்கள் என பெரும்பான்மை மாணசபை உறுப்பினர்கள் கோரிக்கை வைக்கும் நிலையும் ஏற்பட்டது.

தன் நிலைபாட்டை கூட்டமைப்பு பாராளுமன்ற, மாகாணசபை உறுப்பினர்களின் சந்திப்பின்போது, சம்மந்தரின் தலைமையில் எட்டப்படும் முடிவு தான் ஏற்றுக்கொள்ளப்படும் என கூறியதன் மூலம் முதல்வர் கோடிட்டுகாட்டினார். இருந்தும் முதல்வர் தலைமையில் தம் விருப்பை, தீர்வு திட்டம் என்ற பெயரில் வெளியிட எடுத்த நடவடிக்கைகள், விடுத்த அறிக்கைகள், அனுப்பிய அழைப்பிதழ் அத்தனையும் மீண்டும், பிரிவினை புயல் மையம் கொண்டுவிட்டது என்ற அச்சத்தை ஏற்படுத்தியது.

வீரசிங்கம் மண்டபத்துக்கு வாருங்கள் புதிய தீர்ப்பை எழுதுங்கள் என்ற, அழைப்பு கிடைத்தவர்கள் அங்கு நடந்த நிகழ்வை பார்த்ததும் ஒரு விடயத்தை உணர்ந்தனர். அழைப்பிதழ் பிரகாரம் எதுவும் இடம்பெறாமல் ஓட்டவீரர்களாக தம்மை காட்டி கொண்டவர்கள் இலக்கை தவறவிட்டு, அமைதியாக, நிதானமாக போட்டியின் இலக்கை ஏற்கனவே எட்டிவிட்ட ஆமைமுன், வெட்கி தலைகுனிந்த முயல்போலானார்கள். அந்த நிலையை தன் செயல் மூலம் அவர்களுக்கு உணர்த்தியவர் முதல்வர்.

தலைமை ஏற்காது இணைத்தலைவராகவே கலந்து கொண்டார். தீர்வு திட்டத்தை வெளியிடாது அதன் பிரதியை மட்டும் பெற்றுக்கொண்டார். எல்லாவற்றிக்கும் மேலாக இந்த வரைவில் என் பங்களிப்பு இல்லை என்ற, ஆயிரம் உள் அர்த்தம் உள்ள அறிவிப்பை செய்தார். கூடவே 2013 தேர்தல் விஞ்ஞானம் பற்றியும், அதற்கு கிடைத்த மக்கள் ஆணைபற்றியும் குறிப்பிட்டார். இந்த நிகழ்வுகளின் பின்பு தான் பேரவையின் முக்கிய பிரமுகர்கள் மாவையை தமிழ் அரசு கட்சி காரியாலயத்தில் சந்தித்துள்ளனர்.

இந்த சந்திப்பு பலவிதமான செய்திகளை எமக்கு கூறுகின்றன. வெறுமனே ஊகத்தின் அடிப்படையில் அல்லாது, கடந்த கால நிகழ்வுகளை நாம் கவனத்தில் கொண்டால் பல யதார்த்த நிலைமைகளை அறியலாம். கூட்டமைப்பை விட்டுவிலத்தி சென்றவர் எவரும் தேர்தலில் வெற்றி பெறமுடியவில்லை. அவர்களினால் சிதைக்கப்பட்ட வாக்குகள் வேறு கட்சிகளுக்கு உறுபினர்களை பெற்றுக்கொடுத்ததே தவிர, இவர்களால் ஒரு ஆசனத்தைகூட பெறமுடியவில்லை.

விலகியவர்கள் மீண்டும் இணைந்த போதும், புதிதாக சிலர் இணைந்தபோதும் மக்கள் அவர்களை வெல்லவைத்தனர். ஒருசிலரின் தனிப்பட்ட முடிவுகளை மக்கள் கவனத்தில் கொள்வதில்லை என்ற நிலைமை புரியாமல், மீண்டும் மீண்டும் மக்களை குழப்ப புதுப்புது அணிகளில் களம் காணுவதும், அவர்களை மக்கள் நிராகரிப்பதும் தொடரும் வேளையில்தான், தமிழ் மக்கள் பேரவை உருவானது. பயனாளிகள் பூரித்து நின்றவேளையில், சம்மந்தரின் மௌனம் பற்றி கம்பவாருதி கூட விமர்சிக்கும் நிலைமை காணப்பட்டது.

வெற்றி இலக்கை அடைய சூழ்நிலையை புரிந்து கொள்ளவேண்டும். முயல் போல இறுமாப்பு கொள்வதும், ஆமைபோல் தன் நிலை அறிந்து ஓய்வின்றி வெற்றி இலக்கை நோக்கி நகர்வதும் அவரவர் அனுபவ முதிர்வு தரும் அறிவு. வீரம் விலை போகாது விவேகம் துணைக்கு வராவிட்டால். கத்தியை தீட்டாதே உன் புத்தியை தீட்டு என்று, அறிஞர் அண்ணா தன் தம்பிகளுக்கு கூறியதைத்தான் சம்மந்தர், ஒரு தலைவனுக்கு இருக்கவேண்டிய பொறுப்புணர்ச்சியுடன் செயல்படுத்த முயல்கிறார்.

முயல் வேகமா? ஆமை வேகமா? எது இனவாத பேரலையில் சிக்காது மக்களை பாதுகாப்பாக கரை சேர்க்கும், என்ற முடிவை எடுக்கும் மூத்தவர் செயல் சிலருக்கு விமர்சனமாகவும், வேறு நபர்களுக்கு வெறுப்பாகவும், சுயநல பயனாளிகளுக்கு பரிகாசமாகவும் தென்பட்டால், அது அவரவர் சொந்த முடிவு. ஆனால் அதுவே மக்களின் முடிவு என கூறும் உரிமை, தனிநபர்களுக்கோ, கட்சி தலைவர்களுக்கோ, பதிரிக்கையாளருக்கோ கிடையாது. வாக்களிக்கும் நாளில் மிகத்தெளிவாக முடிவெடுக்கும் மக்களின் முடிவை விமர்சிக்கும் இவர்கள் திரிசங்கு சொர்க்கத்தை உருவாக்கி அந்தரத்தில் தொங்கவிட்ட முனிவரின் வாரிசுகள்தான்.

கோபுரத்தில் ஏறிய பின்பு தான் கலசங்கள் ஜொலிக்கின்றன. ஆனால் கோபுரதரிசனம் கோடிபுண்ணியம் என்றே வழிபடுபவன் நம்புகிறான். இருடியம் திருடுபவர்கள் மட்டுமே கலசத்தில் கண்வைப்பர். கோபுரமான மக்கள் ஏற்றிவிட்டவர் வெற்றிபெற, பதவி எனும் கலசத்தை, திருடியாவது பெற நினைப்பவர், தம் விருப்பை நிறைவேற்ற பின்புலத்தில் செயல்பட்டு, பேரவை மூலம் முன்வைத்த திட்டங்கள் பற்றி ஆசிரியர் தலையங்கம் எழுதும் நேரத்தில், பேரவையின் புத்திஜீவிகள் ஏழுபேர் மாவையை சந்தித்து மனம்விட்டு பேசியுள்ளனர். இது பற்றி சூசகமாய் கூறுவதானால் இன்ன காரியம் இன்னாரால்தான் முடியும் என்ற தெளிவே அன்றி வேறொன்றும் இல்லை.

புத்திஜீவிகள், துறைசார் வல்லுனர்களை தூண்டிவிட்டு, பத்திரிகை ஆசிரியரின் பக்கபலம் இருக்கும் துணிவில் நினைத்தவாறு அறிக்கைகள்விட்டு, ஒரு சலசலப்பை உருவாக்கியவர்கள் தாம் வடக்கில் உருவாக்க முயன்ற புயல் கரைகடந்து போனதால், தற்போது கிழக்கில் மையம் கொண்டுள்ளனர். விலகி சென்ற சிவாஜிலிங்கம் மீண்டும் மாகாணசபையில் இணைந்து கொண்டார். அமைச்சர் பதவியை ஏற்ற சூழலியலாளர் ஐந்கரநேசனும் வீடுபேறு அடைந்துவிட்டார். மாகாணசபை கண்டு பாராளுமன்றம் சென்ற வைத்தியர் சிவநேசன் வீட்டுக்கு விண்ணப்பித்து விட்டார்.

மட்டக்களப்பில் திரு கஜேந்திர குமாரும் திரு சுரேஸ் பிரேமசந்திரனும் தனித்தனியே நடத்திய பத்திரிகையாளர் மாநாட்டை பார்த்த, கூவான் கோழியும் கொட்டைப்பாக்கான் குருவியும் முன்பும் பேரவை உருவாக்க நம்மட ஊரிலிருந்தும் 3 பேரை பிடித்தவர்கள் இப்போ மீண்டும் வந்துள்ளார்கள், மட்டக்களப்பு மண்ணின் மைந்தர்களின் சிந்தனையில் உருவாகிய தமிழ் தேசிய கூட்டமைப்பை, எந்த சக்தியாலும் சிதைக்க முடியாது என்று, தங்களுக்குள்ளே பேசிக் கொண்டதாக செய்தி வந்துள்ளது என, பத்திரிகை நண்பர் சொன்னார்.

(ராம்)