இறுதியில் சொதப்புவது எப்படி?

20 ஆண்டுகள் கழித்து நியூசிலாந்து கிரிக்கெட் அணி ஐசிசி டிராபியைத் தூக்கியிருக்கிறது. 2000ஆம் ஆண்டில் நடைபெற்ற ஐசிசி நாக் அவுட் (இப்போது ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி) தொடரின் இறுதிப் போட்டியில் இந்திய அணியை வீழ்த்தி முதன்முறையாக ஐசிசி கோப்பையைக் கையில் ஏந்தியது நியூசிலாந்து. இப்போது இரண்டாவது முறையாகக் கோப்பையை வென்றிருக்கிறது. இப்போதும் நியூசிலாந்து இறுதிப் போட்டியில் இந்திய அணியைத்தான் வீழ்த்தியது. இந்திய அணி தோல்வியைத் தழுவ மூன்று காரணங்கள் உண்டு.

முதல் காரணம்

இந்தப் போட்டியின் முடிவுக்கு டாஸ் ஒரு முக்கியக் காரணி. சவுதாம்டனில் மழை பெய்த சூழ்நிலையைப் பயன்படுத்தி, டாஸ் வெல்லும் எந்த அணியும் முதலில் ஃபீல்டிங்கைதான் தேர்வுசெய்யும் என்கிற எதிர்பார்ப்பு இருந்தது. மழை-பிட்ச் தன்மையால் பேட்டிங் மிகவும் கடினமாக இருக்கும் என்று கணிக்கப்பட்ட சூழ்நிலையில் டாஸ் வெல்லும் அதிர்ஷ்டம் இந்தியாவுக்கு வாய்க்கவில்லை. இந்தியா பேட்டிங்கைத் தொடங்கியபோது மேகமூட்டமாக இருந்தது. இது முதல் இன்னிங்ஸில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. அது நியூசிலாந்து வேகப்பந்து வீச்சாளர்களுக்குக் கைகொடுத்தது. அந்த வகையில் இறுதிப் போட்டியில் இந்தியா தோல்வியடைய டாஸ் ஒரு காரணம்.

இரண்டாம் காரணம்

சவுதாம்டன் மேகமூட்டமாக இருந்தபோதே இறுதிப் போட்டியில் விளையாடும் அணியை ஒரு நாள் முன்பாகவே விராட் கோலி – ரவிசாஸ்திரி ஆகியோர் அறிவித்தனர். இதுபோன்ற இங்கிலாந்து தட்பவெப்பநிலையில் வேகப்பந்து வீச்சாளர்களுடன் களம் இறங்குவதே சிறந்தது என்பதைக் கத்துக்குட்டி அணிகள்கூட அறிந்திருக்கும். ஆனால், நம்பர் ஒன் என்று சொல்லிக்கொள்ளும் இந்திய அணியின் கோலியும் – சாஸ்திரியும் தவறிழைத்தனர். பேட்டிங்கில் பலவீனம் இருக்கக் கூடாது என்று நினைத்த இவர்கள், பவுலிங்கில் கோட்டைவிட்டனர். இரண்டு ஸ்பின்னர் களுடன் களமிறங்கியது மிகப் பெரிய தவறாகிப்போனது. இந்தியத் துணைக் கண்டத்துக்கு அப்பால் விளையாடும் போட்டிகளில் இரண்டு ஸ்பின்னர்களுடன் விளையாடுவது தற்கொலைக்கு ஒப்பான முடிவு என்பது ஏற்கெனவே நிரூபிக்கப்பட்ட உண்மை. ஆனால், அந்தத் தவறை கோலி-சாஸ்திரி செய்தனர்.

ஜடேஜாவுக்குப் பதில் உமேஷ் யாதவ் அல்லது முகம்மது சிராஜ் ஆகியோரில் ஒருவரை அணியில் சேர்த்திருந்தால், இப்போட்டியில் நியூசிலாந்துக்கு நெருக்கடியை ஏற்படுத்தியிருக்க முடியும். ஆல்ரவுண்டர் என்கிற அடிப்படையில்தான் ஜடேஜா சேர்க்கப்பட்டார். பவுலர் தேவையில்லை என்று நினைத்திருந்தால், ஹனுமா விஹாரியைத் தேர்வு செய்திருக்கலாம். இதுபோன்ற நிலைமைகளில் விளையாடிய அனுபவம் ஹனுமா விஹாரிக்கு உண்டு என்பதால் பேட்டிங்கில் கைகொடுத்திருப்பார். மேலும், பகுதி நேரப் பந்துவீச்சாளர் என்பதால், அஸ்வின் – ஹனுமா விஹாரி என்றுகூட அணியை முடிவு செய்திருக்கலாம். அணித் தேர்வில் கோலியும் ரவியும் செய்த தவறு அடுத்த காரணம்.

மூன்றாம் காரணம்

முதல் இன்னிங்ஸை இந்தியா நன்றாகத் தொடங்கியபோதும், அதிக ரன்களைக் குவிக்கும் வகையில் எந்த வீரரும் நீண்ட நேரம் நிலைக்கவில்லை. டெஸ்ட் போட்டியில் 50 ரன்களை ஒருவர் கடந்தால், அதை நூறாக மாற்ற வேண்டும். அப்போதுதான் அதிக ரன்களை அணியால் குவிக்க முடியும். ஆனால், முதல் இன்னிங்ஸில் ஒருவருமே 50 ரன்களைத் தாண்டவே இல்லை. இந்த இடத்தில் சீனியர் வீரர்களும் அணியை நெருக்கடியிலிருந்து மீட்கும் வகையில் தங்கள் அனுபவத்தைப் பயன்படுத்தி விளையாடவே இல்லை.

இந்திய பேட்டிங்கின்போது பேட்ஸ் மேன்களின் பலவீனம் வெளிப்பட்டது. பந்துவீச்சுக்கு ஏற்ப கால்களை நகர்த்தி விளையாடுவதிலும் இந்திய அணியினர் சோடைபோயினர். நியூசிலாந்து அணியின் பந்துவீச்சுக்கு எதிராகப் போட்டி முழுவதுமே இந்திய பேட்ஸ்மேன்கள் திணறினார்கள். அந்த அளவுக்குக் கச்சிதமாகப் பந்துவீசி நெருக்கடி கொடுத்தார்கள் நியூசிலாந்து வீரர்கள். குறைந்தபட்சம் முதல் இன்னிங்ஸில் கிடைத்த பாடத்தை அனுபவமாகக் கொண்டு இரண்டாம் இன்னிங்ஸிலாவது பேட்டிங்கில் கூடுதல் கவனம் செலுத்தியிருக்க வேண்டும். குறைந்தபட்சம் நியூசிலாந்துக்கான இலக்கை 200 ரன்கள் என்கிற அளவில் உயர்த்தியிருந்தால்கூடத் தோல்வியிலிருந்து தப்பியிருக்கலாம். அதையும் செய்யத் தவறினர். இதுபோன்ற தவறுகள் எல்லாம் நியூசிலாந்து கோப்பையை வெல்ல வாய்ப்பானது.

‘சோக்கர்ஸ்’ இந்தியா

கிரிக்கெட்டில் தென்னாப்பிரிக்க அணியை ‘சோக்கர்ஸ்’ என்று கேலியாக அழைப்பதுண்டு. மிகப் பெரிய தொடர்களில் லீக் போட்டிகளில் அதகளப்படுத்திவிட்டு, நாக் அவுட் போட்டிகளில் மண்ணைக் கவ்வும் அணியை ‘சோக்கர்ஸ்’ என்று அழைப்பார்கள். திடீரென ஏற்படும் நெருக்கடி அல்லது அழுத்தத்தைச் சமாளிக்க முடியாமல் தோல்வி அடைபவர்களை ஆங்கிலத்தில் இப்படிக் குறிப்பிடுவது உண்டு. தென்பாப்பிரிக்காவைத் தொடர்ந்து இந்திய அணியும் ‘சோக்கர்ஸ்’ ஆகிவிட்டது என்று தாராளமாகச் சொல்லலாம். 50 ஓவர் உலகக் கோப்பை (2015, 2019 அரையிறுதிப் போட்டிகள்), டி20 உலகக் கோப்பைகள் (2014-இறுதி; 2016-அரையிறுதி), ஐ.சி.சி.சாம்பியன்ஸ் டிராபி (2017-இறுதி) என வரிசையாகத் தோல்வியடைந்த இந்திய அணி, இப்போது உலக டெஸ்ட் சாம்பியன்ஸ் டிராபியிலும் தோல்வியடைந்து ‘சோக்கர்ஸ்’ ஆகியிருக்கிறது.

கோலி – சாஸ்திரியின் சோகம்!

2015 உலகக் கோப்பையில் தோனி கேப்டனாக இருந்தபோது அணியின் இயக்குநராக ரவி சாஸ்திரி இருந்தார். இந்தத் தொடரில் அரையிறுதியில் இந்தியா தோல்வியடைந்தது. அதன்பின் நடந்த 2016 டி20 உலகக் கோப்பை, 2017 சாம்பியன்ஸ் டிராபி, 2019 50 ஓவர் உலகக் கோப்பை, 2021 உலக டெஸ்ட் சாம்பியன்ஸ் டிராபி போட்டி அனைத்துக்குமே ரவி சாஸ்திரிதான் தலைமைப் பயிற்சியாளர். இந்தப் போட்டிகள் எல்லாவற்றிலும் அரையிறுதி அல்லது இறுதியில் இந்தியா தோல்வியை அடைந்திருக்கிறது. இதில் 2017, 2019, 2021 ஆகிய மூன்று தொடர்களுக்கு கேப்டனாக இருந்த விராட் கோலி ஒருமுறைகூடக் கோப்பையை ஏந்தவில்லை.