உழவுக்கு வந்தனம் செய்வோம்!


அரசுவேலை வேண்டாம் :


விவசாயத்தோடு பின்னிப்பிணைந்து வாழ்ந்து வந்தவர்கள் நம் முந்தைய தலைமுறையினர். 50, 60ம் ஆண்டுகளில் வாழ்ந்த மக்கள் தங்கள் பிள்ளைகளுக்கு அரசாங்க வேலை கிடைத்தாலும் போகவிட மாட்டார்கள்.’சாமி சண்டைக்காரனாப் போனாலும், பூமி என்றுமே நம்மைக் கைவிடாது’ என்ற நம்பிக்கையில் வாழ்ந்தனர். ‘நம்ம வீட்டுல நாலு பேருக்கு வேலைக்கு இருக்கும்போது, நீ அரசாங்கத்துக்கு வேலை பார்க்கப் போறீயா? நம்ம வேலைய (விவசாயம்) பாருடா, நாலுகாசு சம்பாதிக்கலாம்,’ என்று வாழ்ந்த காலம் மலையேறிவிட்டது என்றே சொல்லலாம்.பணத்தைவிட நல்ல மனதைச் சம்பாதித்தவர்கள் விவசாய பெருமக்கள். அதனால்தான் மாதம் மும்மாரி பெய்தது என்றுகூடச் சொல்லலாம்.இன்றைய பிள்ளைகளிடம் விவசாயம் பற்றிக் கேட்டால், ‘அது எந்தக் கடையில் விற்கிறது?’ என்று கேட்கும் சூழ்நிலையில் உள்ளனர். எங்கள் தாத்தாவிடம் விவசாயம் பற்றி கேட்டால் போதும், பேசத் துவங்கிவிடுவார். அதில் ஒரு சிறுதுளிதான் நான் சொல்லப்போவது.


ஐந்து மன்னனுக்குச் சமம்:


‘அணில்தாவா ஆயிரம் தென்னை உடையோன் ஐந்து மன்னனுக்குச் சமம்’. அது எப்படி என்று கேட்டால் ‘ஆயிரம் தென்னை மரம் வைத்திருக்கும் ஒரு விவசாயியின் சொத்து, ஐந்து மன்னர்கள் வைத்திருக்கும் சொத்திற்கு சமமானது’. ‘ஒரு தென்னைக்கும் மற்றொரு தென்னைக்கும் அணில் தாவ முடியாத அளவிற்கு இடைவெளி விட்டு நட வேண்டும்’ என்பது இதன் கருத்து.மேலும் ‘நண்டு ஓட நெல் நடணும்; நரி ஓட கரும்பு நடணும்; வண்டி ஓட வாழை நடணும்; தேர் ஓட தென்னை நடணும்’ என்பதும் அனுபவம் சார்ந்த விவசாயி சொன்னதுதான். அவர்களுக்கு சென்டி மீட்டர் கணக்கெல்லாம் தெரியாது. இரண்டு சென்டிமீட்டர் இடைவெளி விட்டு பயிர் நடவேண்டும் என்று சொல்வது விவசாயிகளுக்கு புரியாத ஒன்று.நண்டு ஓடி வருமளவிற்கு இடைவெளி விட்டு நெல் நட வேண்டும். நரி ஓடி வருமளவிற்கு இடைவெளி விட்டு கரும்பு நட வேண்டும். (மாட்டு) வண்டி போய் வருமளவிற்கு இடைவெளி விட்டு வாழை நட வேண்டும். தேர் போய் வருமளவு இடைவெளி விட்டு தென்னை நட வேண்டும். அப்படியெனில் ஆயிரம் தென்னை மரங்கள் நட எத்தனை ஏக்கர் நிலம் வேண்டும் என்பதை பார்க்க வேண்டும்.’கைபடாத குழந்தையும், கால்படாத பூமியும் வளர்ச்சி பெறாது’ என்பர். நாற்றங்கால் பயிர் என்பது என்ன? நாற்றுப் பாவுதல், தொழி கலக்குதல், பரம்படித்தல், வரப்பு மெழுகுதல், சூடடித்தல், வைக்கோல் படப்பு, மாகாணி, வீசம்படி, மரக்கால், கமலை இறைத்தல், சால், வடக்கயிறு, மேக்கா, கடாணிக்குச்சி, கொழு, சால் போடுதல், நாத்து ஊத்துதல், இன்னும் இதுபோல் நிறைய சொற்களை விவசாய பெருமக்கள் பயன்படுத்துகின்றனர்.


மின்னிப் பயறு :


மின்னி(சிறு)ப்பயறு என ஒன்றுண்டு. வானம் பார்த்த பூமியில் மழைக்காலத்தில் தானாக முளைக்கும் கொடிவகை. வாய்க்கால் வரப்புகளிலும் வளரும். இது பாசிப்பயறு காய் போல அளவில் சிறியதாக இருக்கும். காய் நெற்றாகி தானாக வெடித்துச் சிதறும்.இப்பயறை எறும்புகள் சேகரித்து தன்புற்றுக்குள் சேமிக்கும். இந்த எறும்புப் புற்று இருக்கும் இடத்தை வெட்டினால் அங்கே நிறைய மின்னிப் பயறு இருக்கும். அதை அப்படியே மொத்தமாக அள்ளிக் கொண்டு வருவர்.குறைந்தது கால்படியாவது இருக்கும். இப்பயறை வறுத்து, துவையல் அரைத்தும் சாப்பிடுவர். அப்படியே சாப்பிடவும் செய்வர். இது உடலுக்கு நல்லது என்பர். இதெல்லாம் எத்தனை பேருக்கு தெரியும். வாய்ப்பே இல்லை. பீட்சா, பர்கர், சான்ட்விச், ஜூஸ், கூல்டிரிங்க்ஸ் போன்றவைதான் இப்போதைய குழந்தைகளின் உணவுப் பழக்கமாக உள்ளது.


எருவும், இனத்தானும்:


விவசாய பெருமக்கள் நிலத்தோடு மல்லுக்கட்டினர். ‘எரு (இயற்கை உரம்) செஞ்சது மாதிரி, இனத்தான்கூட செய்ய மாட்டான்’ என்று அதன்மீது அத்தனை நம்பிக்கை வைத்திருந்தனர். அதனால்தான், உடல் ஆரோக்கியத்துடன் வாழ்ந்தனர். நம் கண்முன்னே நுாறு வயது வரை நோய்நொடி இல்லாமல் வாழ்கின்றனர்.இதுவே அடுத்து வரும் தலைமுறைக்கு வரலாறாக மாறிப்போகும். இயற்கை, விவசாயம் பற்றிய விழிப்புணர்வை இன்றைய தலைமுறையினருக்கு நாம் உருவாக்க வேண்டும். அன்று இஷ்டப்பட்டு விவசாயம் செய்தனர். வளமையான வாழ்க்கையை வாழ்ந்தனர். இன்று கஷ்டப்பட்டுச் செய்ய வேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்பட்டு, மனஅழுத்தத்துடன் வாழ்கின்றனர்.


‘அன்று
நஞ்சை உண்டு
சாகுபடி ஆனது.
இன்று
நஞ்சை உண்டு
சாகும்படி ஆனது’.
Manuel Mangalanesan