(வி. ராம்ஜி)
சினிமாவை, சி.பி., என்றும் சி.மு., என்றும்தான் ஒரு கோடு கிழித்துப் பிரித்துப் பார்க்கவேண்டியிருக்கிறது. ஒரு கதை அமைக்கப்பட்டிருக்கும். நாயகன் நடிக்க ஒப்புக்கொண்டிருப்பார். இயக்குநர் திட்டமிட்டபடி கதை நகரும். ஆனால் ‘நடிக்கிறது இவருப்பா. அதுக்குத் தகுந்தது போல தைரியமா எத்தனை பக்கம் வேணும்னாலும் வசனம் எழுதலாம்’ என்றார்கள். ‘அவர் நடிக்கிறார்னா, அந்த சீன்ல, டைட் க்ளோஸப்பை தாராளமாவும் தைரியமாவும் வைக்கலாம்’, ‘வெறும் சோளப்பொரி போடாம, அந்த நடிப்பு யானைக்குத் தகுந்தபடி நடிக்கறதுக்கு தீனியைப் போட்டாத்தான், படமே பிரமாண்டமாகும்’ என்றெல்லாம் சொன்னார்கள். அப்படியொரு நடிப்பு அசுரன்… சிவாஜி கணேசன். அதனால்தான், ‘சி.பி., சிவாஜிக்குப் பின், சி.மு., சிவாஜிக்கு முன்’ என்று பகுத்துப் பிரித்து, பிரித்துப் பகுத்து சினிமாவைப் பார்த்தார்கள்.