விடை கொடுக்க மனமின்றி விடை கொடுக்கின்றோம்…..!

சென்னை விமான நிலையத்தில் இலங்கை தோழமையும் சென்னைத் தோழமையும் என்னை வரவேற்று அடையாற்றில் உள்ள ஒரு வீட்டின் இரண்டாவது மாடியில் நோக்கி பயணம்….

‘தோழர் இன்று என் வீட்டில் தங்குங்கள் நானும் அம்மாவுதான் என்று உங்களுக்கு தெரியும்தானே என் வீட்டில்…. மேற்குலக நாட்டில் இருந்து வரும் உங்களுக்கு அது சௌகரியப்பட்டால் தொடர்ந்தும் தங்குங்கள் சௌகரியம் ஒத்துவரவில்லை என்றால் அருகில் ஒரு தங்கும் விடுதியில் அறை எடுத்துத் தருகின்றேன்…” என்ற யதார்த்தமான அழைப்பை விடுத்தார் எனது தமிழ் நாட்டுத் தோழமை

இருபத்து நாலு மணி நேர தூக்கமற்ற பயணம் பகல் இரவாக… இரவு பகலாக… மாறிய நேரமாற்றம் கண்டம் விட்டு கண்டம் மாறிய காலநிலை எல்லாவுமாக களைப்புடன் அடையாறு வீட்டை அடைந்தேன்.

அதிகம் அளவளாவிப் பழக்கம் இல்லாவிட்டாலும் இரண்டு மூன்று தடவை ஏலவே சந்தித்த அனுவம் அம்மாவுடன்

‘வாங்க சார் பயணம் சௌகரியமாக இருந்ததா…” என்ற உபசரிப்பு ‘குளித்துவிட்டு வாருங்கள….; காப்பி போடவா மோர் தரவா…” என்ற கிரமத்து வாசனையுடன் நகரத்துப் பழக்கவழக்கமுமாக கலந்த உபசரிப்பு

அந்தக் கணமே இங்குதான் இந்த ஒரு மாதமும் விடுமுறைக் காலத்தில் தங்குவது என்று முடிவெடுத்த கணம் அது… சில வார்த்தைகள் உபசரித்து அணைந்த விதம் அப்படி…

இனி வரும் காலங்களில் அந்த ‘சார் வாருங்கள் காப்பியா…? மோரா பயணம் சௌரியமாக அமைந்தா….?” என்ற வரவேற்புடனான உபசரிப்பை நான் எதிர்பார்க்க முடியாது. தோழர் இளங்கோவனின் அம்மா எம்முடன் இனிமேல் இல்லை….

இழப்பு இயற்கையானது அதுவும் மூப்பின் காரணமாக என்று கூறினாலும் அம்மா இல்லை என்பது ரொம்பவே வலிகின்றது.

சிலருடன் பழகியது சில நாட்கள் என்றாலும் ஒரு ஜென்மத்து உறவு போல் ஒட்டிக்கொள்ளும் இறுக்கம் இருக்கும். அப்படி ஒரு பிடிப்பு இங்கே.

தோழர் இளங்கோவனும் அவரது தாயாரும் மட்டும் சீவிக்கும் வீடு அது. சிறிய எளிமையான வீடு தமிழ்நாடு சென்னை அடையாற்றில்….

தனியாக தனக்கொரு வாழ்வை அமைக்காத இளங்கோவனுக்கு அம்மாதான் எல்லாம். ஜாலியான உயர் நீதிமன்ற வழக்கறிஞராக இருந்தாலும் வீட்டில் அம்மாதான் சதா தங்கியிருந்து தொலைபேசி அழைப்பு நேரடியாக தேடிவரும் தமிழ்நாட்டு, வெளிநாடுகளில் இருந்து விருந்தினர்களாக செல்பவர்களை வரவேற்று அரவணைத்து எல்லாவுமாகி இருந்தவர்.

தெருவில் சுற்றித் திரிந்த கறுப்பன் நாயை தனது செல்லப் பிராணி போல் தெருவில் திரியவும் அனுமதித்து தனது வீட்டின் கீழ் மாடி முன் தாவாரத்தில் படுத்துறங்க அனுமதியும் வழங்கி… ‘கறுப்பா..” என்று அழைத்து அம்மாவிடம் அவரின் கையால் சாப்பாடு வாங்கி தின்று வாழும் நன்றியுள்ள ஜீவன் கறுப்பன்.

இத்தனைக்கும் பலரைப் போல் செல்லப் பிராணிகளுக்கென பல் தேசியக் கம்பனிகள் விற்கும் உணவை வாங்கி கொடுத்து வேட்டை விலங்கை வீட்டு விலங்காக்கி வீட்டிற்குள் முடக்கிய வளர்ப்பு வாழ்க்கை அல்ல கறுப்பனுக்கு வாய்த்தது.

தெருவில் அவர்களின் வீட்டிற்கு அருகில் உள்ள சேரியில் வறுமையில் வாழும் சிறுவர்களுக்கு பிறந்த நாள் என்றால் இளங்கோவன் அவர்களை எல்லாம் அழைத்து வந்து அம்மாவுடன் சேர்ந்து அவர்களுக்க விரும்பமான உணவை தருவித்து (பல வேளைகளில் அவர்கள் வாழ்க்கையில் காணாத காணமுடியாத சினிமாவில் பார்த்த பீட்சா பேகர் உட்பட) கொடுத்து பிறந்த நாள் கொண்டாடி மகிழும் ஜீவன்.

இந்த சிறுவர்கள் யாரும் சங்கோஜம் இன்றி அந்த வீட்டின் பேரப்பிள்ளைகள் போல் அழுக்கு உடையுடன் உள் வீட்டிற்குள் புகுந்து செல்வார்கள். அம்மாவின் தாய்மை அப்படி.

வண்டி வைத்து மடிப்பு வேலை செய்யும் வண்டிக்காரனை பலரும் தமது தெருவிலும் வீட்டிற்கு முன்னாலும் தரித்து நின்று தொழில் செய்ய அனுமதிக்காத சூழலில் அவரை தனது வீட்டு வளவின் தெரு விழிம்பில் தங்களில் ஒருவனாக ஏற்று தொழில் நடத்தி வாழ இடம்கொடுத்த மனமுள்ள அம்மா….

பிறப்பு வளர்ப்பு வாழ்வு என்று வந்தவாசி என்ற இன்று வரை அசல் கிராமமாக இருந்தாலும் தற்போதைய வாழ்வினால் சென்னை நகரத்தில் அதுவும் அடையாற்றின் முக்கிய சந்தில் வாழப் பழகிய ‘எளிமை”

அரசியல் தலைவர்கள், இடதுசாரித் தோழர்கள், மனித உரிமை செயற்பாட்டாளர்கள், உயர் நீதி மன்ற வழக்கறிஞர்கள், ஊடகத்துறையாளர்கள் என்று யார் வந்தாலும் அவர்களை ஒரே மாதிரியாக வரைவேற்று உடனேயே தேனீரை தன் கையால் போட்டுக் கொடுக்கும் அந்த தள்ளாத வயதிலும் சலிக்காமல் செய்யும் உற்சாகம் விருப்பம். இது அம்மாவின் அடையாளங்கள்.

இவற்றை வேறு யாரும் செய்ய அனுமதிக்காது… பரிமாறுவதைக் கூட… கூடவே குடித்த கோப்பையைக் கூட தன்னைத் தவிர வேறு யாரையும் கழுவ விடாமல் தானே கழுவி அது தனது உரிமை என்று… நிலைநாட்டும் குடும்பத்தின் தலைவி.

அப்பப்பா… நான் மகிழ்ந்தும், நெகிழ்ந்தும், பிரமிச்சும் போனேன் மரியாதையாக. என் தாயை நேசிக்கும் அளவிற்கு மேலாக நேசிக்க வைத்த செயற்பாடுகள் இளங்கோவனுடைய அம்மாவின் செயற்பாடுகள்.

அதெப்படி சாம்பாரும், சாதமும் மதியச் சாப்பாடாக..? நாலு கறியும் அசைவமும், ஆறு கறியும் சைவமும் பொரியலும் தயிரும் என்று பலவாறு சாப்பிடும் இடத்து சாம்பாருடன் சாதமா…? இது எவ்வாறு சுவைக்கும் வயிற்றுக்குள் இறங்கும் என்றிருந்த போது அந்த சாம்பார் சாதம்தான் உலகின் அதி சிறந்த ருசியான நிறைவான உணவு என்பதை எனக்கு உணர்த்தி நளபாகம் அம்மாவினுடையது.

பகடாகவும் இல்லாமல் இத்தனைக்கும் அதிக நேரம் எடுக்காத சமையல் கூடவே கிராமத்தில் வீட்டில் செய்த ஊறுகாய் சில வேளைகளில் துவையல் அல்லது பொரியல் இந்த சாம்பார் சாதத்துடன் கூடவே இருக்கும்.

பெரிய பெரிய உணவகங்கள் செய்ய முடியாத தரமான ருசியான அந்த கைப்பக்குவம் தமிழ் நாட்டுக்காரர்களுடையது என்ற என் பொது அபிராயத்தை இன்னும் வலுச் சேர்த்த விருந்தோம்பல்கள் அம்மாவினதுதான்.

அசைவம் உண்ணாவிட்டாலும் அசைவச் சாப்பாடுகள் வீட்டிற்கு எடுத்து வந்தாலும் ‘அபச்சாரம்…’ என்று முகத்தில் கூட பாவனை செய்யாத பாங்கு.

இத்தனைக்கும் வயது மூப்பின் காரணமாக உடல் நலத்திற்காக தினமும் மூன்று வேளையும் பித்தளைச் சட்டியில் மோர்ச் சாதம் கரைத்து நிலத்தில் உட்கார்ந்திருந்து ஒரு டம்லரின் அளவு அளவாக கொஞ்சம் கொஞ்சமாக ஊற்றிக் குடிக்கும் பாங்கு அம்மாவின் சத்துணவு. இதற்கு அப்பால் அதிகம் ஏதும் சாப்பிடுவது குறைவு.

நாம் நித்திரையால் எழும்பியவுடன் அது பகல் இரவு, காலை மாலை எந் நேரமாக இருந்தாலும் உடனேயே ‘சார் காப்பி… ரீ.. போடவா என்று கேட்டு அடுத்த கணம் அருகில் கொண்டு வந்து தரும் பாங்கு நாம் தேடிப் போவதற்கான வாய்ப்போ நேர அவகாசமோ தராத சுறுசுறுப்பு.

கூடவே நாம் அருந்தும் போது அருகில் நின்று ‘சக்கரை போறு(து)மா…” என்று தரமான தேனீரை வழங்கியிருக்கின்றோமா என்ற அனுசரணைகள் அன்பான உபசரிப்புகள்…. என்னை திக்கு முக்காட வைத்தவை. இந்த என் திக்குமுக்காடலை அதிகம் நான் வெளிக் காட்டவில்லை அவரிடம்.

பேச்சுகளின் நடுவே இடையறாது ஓடிக் கொணடிருக்கும் நகைச்சுவை… பரிமாறும் பாத்திரத்தை நாம் இருக்கும் இடத்திற்கு எடுத்து வந்து ‘இன்னும் கொஞ்சம்…” என்று பரிமாறும் விருந்தோம்பல்…

கணம் தவறாமல் தேவை அறிந்து வைத்துத் தரும் தேனீரு…

இளசுகள், புதிய தலைமுறையினர், நாகரீக நங்கைகள், சேரிச் சிறுவர்கள், படித்த வக்கீல்கள், அரசியல் தலைவர்கள், ஊடகவியலாளர்கள், வீட்டிற்கு தண்ணீர், எரிவாயு சிலின்டர் கொண்டுவரும் சப்பிளையர்கள், வெளிநாட்டு நண்பர்கள், வீட்டின் கீழே தெருவில் வண்டி வைத்து மடிப்பு செய்யும் தொழிலாளி என்று ஒவ்வொருவருடனும் அவர்கள் விரும்பும் வகையில் அனுசரித்து அறிவுடன் பேசுதல் அபாரம் இவற்றை நான் ஆழமாகவே அவதானித்தேன் அம்மாவிடம்.

தாய்மை என்பது இப்படித்தான் இருக்க வேண்டும் என்று வாழ்வின் எல்லையில் நின்ற இந்த மூதாட்டியிடம் கற்றுக் கொண்டேன்.

எல்லோருக்கும் நண்பாக இருக்கு பெல்ஜியத்தின் வெள்ளைகார அம்மாவை (அவர் ரைரானிக் இல் வரும் கதாநாயகி அம்மா போல் இருப்பார்) அவருடன் ‘வெள்ளைகார அம்மா” என்று பழகும் அந்நியோன்யம் இருவருக்கு அதிகம் ஆங்கிலத் தெரியாவிட்டாலும் நட்பாக பழகும் பாங்கு ஒரு தெளிந்த நீரோடை போல் வாழ்ந்த உதாரண வாழ்வு நின்று விட்டது இன்று.

இத்தனைக்கும் யாரிடமும் எதனையும் எதிர்பார்க்காத பாங்கு…. வெத்திலை….. மருந்து குளிகைள்… நாட்டு வைத்தியத்திற்கான சில பொருட்கள்….. சிறிய அளவிலான காய்கறிகள்…. என்று இளங்கோவனிடம் கேட்கும் பாங்கு அருமை.

மோருக்கான தயிரை தானே உருவாக்கி தனது உணவாக அருந்தி வந்த மூப்பும் உடல் நலமும் ஆக வாழ்ந்த வாழ்கை யாருடனும் கோவப்படாத அணுகுமுறை. எந்த நேரமும் மகிழ்வாக காணப்படும் இயல்பு.

தமிழ்நாட்டில் இருந்து நான் வாழும் புலம் பெயர் தேசத்திற்கு பிரிய மனமில்லால் பிரிவதற்கு முதல் நாள் இரவு…

என் இலங்கை நண்பரின் உறவினர் வீட்டிற்கு சென்று அவர்களின் அன்பான வேண்டுதலை மறுக்காது இரு கவளம் கடையில் எடுத்த புரியாணி சாப்பிட்டதால்….

விடியற்காலை தமிழ் நாட்டில் பல இடங்களுக்கும் சென்று பல்வேறு உணவங்களில் உணவும் அருந்தி எந்த வயிற்றுப் பிரச்சனையும் வராத எனக்கும் இலங்கை நண்பருக்கும் வயிற்றுப் பிரச்சனையை பிரியாணி கொடுக்க….

அவர் மதியம் இலங்கையிற்கு நான் அதற்கு 12 மணி நேரம் கழித்து கிட்டத்திட்ட 24 நேரப் பயணம் என்று இருக்க இருவரும் பயணத்தை இடைநிறுத்தி வயிற்றுப் பிரச்சனையை சரி செய்த பின்பு பயணப்படுவோமா என்றிருக்க….

இலங்கைத் தோழர் தனக்கு 45 நிமிட விமானப் பயணம் தான் சமாளிக்கின்றேன் என்றார்.

நான் காலை எழும்பி நேரம் தொடக்கம் மாலை ஆறு மணி வரைக்கு அம்மா கொடுத்த நாட்டு வைத்தியமும் வேறு எதனையும் உள்ளெடுக்காத ஆனால் தொடர்ந்து வாந்தியாக கழிந்த நிலையில் மாலை ஆறு மணிக்குத்தான் சிறியளவு தேனீரு என்று என்னை சுகப்படுத்தி என்னை இரவு சாமம் 12 மணியிற்குள் விமானம் ஏற்றி வழியனுப்பி வைத்த அந்த மருத்துவச்சி அம்மாவை இனி காண்பேனோ

விடை கொடுக்க விருப்பமின்றி விடை கொடுக்கின்றோம் இளங்கோவன் அம்மாவிற்கு…. தாயம்மாவிற்கு…..

இனி தனிமையில் இழப்பை அதிகம் உணர்ந்தவராக இல்லாதிருக்க நாம் இருக்கின்றோம் இளங்கோ இற்கு. ஆனால் அம்மா இல்லை.

இங்கு இணைக்கப்பட்டுள்ள புகைப்படங்கள் சொல்லும் சேதிகள் அவரின் எளிமை விருந்தோம்பல் கைப் பக்குவம்… கூடவே சகலருடனும் நட்பாக அன்பாக பழகும் அந்நியோன்யத்திற்காக….