அன்னையர் தின வாழ்த்துகள்!

தியாகியாகாமல்,
தெய்வமாகாமல்,
தன் கடமையை மட்டும் சரியாக ஆற்றினால்
போதும் அன்னையர்களே!

வாழ்வென்பது எல்லோருக்கும் பொது.
அனைவருக்கும் அளிக்கப்பட்ட வரம்;
அதைத் தொலைத்து –
பின் வருந்தாதீர்கள் அம்மாக்களே!

தந்தையிடமும், அண்ணன் தம்பிகளிடமும், கணவனிடமும், அடிமைப்பட்டவர்களாக இருந்தால், அதை மகனிடமும் செய்யாமல் இருக்க கற்றுக்கொள்ளுங்கள் தாய்மார்களே!

சமைத்த உணவை பங்கு போட்டு உண்ணுங்கள், உங்களுக்கும் அதில் ஒரு பங்குண்டு என்பதை நினைவில் கொண்டு!

குடும்ப வருமானத்தில் அனைவரின் ஆசைகளும் நிறைவேற வேண்டும் எனில், உங்கள் சிறு சிறு ஆசைகள் நிறைவேற மற்றவர்களையும்
சிறிது விட்டுக்கொடுக்க வையுங்கள்.

உடல் சோர்வாக இருக்கையில்
சிறிது அவகாசம் எடுத்து ஓய்வெடுத்து,
உங்களுக்கு சமைத்து பரிமாறச் செய்யுங்கள்! சமையலறை உங்கள் சொத்தல்ல!

எல்லோருக்கும் எல்லாவற்றிற்கும்
எள் என்றால் எண்ணெய்யாக இருப்பது
உங்களுக்கு நன்றாக இருக்கலாம்,
நீங்கள் இல்லாத ஒரு காலத்தில்
அவர்கள் வாழ நேர்ந்தால்,
அது அவர்களுக்கு கொடுமையாக இருக்கும்
என்பதை நினைவில் கொள்ளுங்கள்!

தியாகிப்பட்டம் துறந்து,
தெய்வமெனக் கல்லாக நிற்காமல்,
அம்மா என்ற பெண்ணிற்கு
அன்பையும், அக்கறையும் மட்டும் காட்ட
கற்றுக் கொடுங்கள் உங்கள் பிள்ளைகளுக்கு!

எல்லா அம்மாகளுக்கும்,
தாய்மை உணர்வு கொண்ட அப்பாகளுக்கும்
மற்ற அனைவருக்கும்
என் அன்னையர் தின வாழ்த்துகள்!

(லத்தா)