அம்மாவிற்கு அன்பு மடல்

அம்மாவிற்கு
அன்பு மடல்
எழுதி வைத்துவிட்டு
பொழுது சாயும் முன்னே
போனவன் இன்னும்
வீடு திரும்பவில்லை……

அடுக்களை வாசலின்
முற்றத்தில்
தடுமாறியபடி
எல்லோரும் கூடிநின்று
அல்லோலப்பட
படிக்கும் மேசையில்
கடிதமொன்றை
கண்டெடுத்து
தங்கை தாரணி
வாசித்தபடி
முற்றம் நோக்கிவர……

திருப்பி வாசியடி பிள்ளை
பரபரப்போடு அம்மா….

அம்மாவிற்கு
அன்பு மடல்…..
அழுதுவிடாதே அம்மா!
தோழர்களோடு போகிறேன்
எதிரியோடு பொருதுகையில்
தோல்வியென்றால் வீழ்வேன்
வெற்றியென்றால் மீழ்வேன்…

என்னை,
ஊர்சுற்றித் திரிகிறான்
உதவாக்கரை என்பீர்களே!
உங்கள் பேர்சொல்ல
எப்போதும்
நான் உங்கள் பிள்ளை….

அம்மா….உன்..
நோய்க்கான மாத்திரைகளை
நேரம் தவறாமல் போடு…

தங்கை தாரணியின்
படிப்பை நிறுத்திவிடாதே!

அப்பாவிடம் சொல்
நான் விதைத்த பயிருக்கு
நாள் தவறாமல்
நீரூற்றும்படி…….

இப்படிக்கு
உங்கள் பேர் சொல்லும்
பிள்ளை த. தனஞ்செயன்….

வருடம் இரண்டு கழிந்து
தாய்நிலம் சேர்ந்தான்….

தடை செய்கிறோம்
சரணடையுங்கள்….என்றவாறு
ஒலிபெருக்கியில்
உரத்த குரல்……

வாசலில் வந்து நின்றது
வாகனம் ஒன்று…..

அம்மா கதறியழ
பிடித்துச் சென்றவர்கள்
முடிவில்லாத விடை

அவன் எங்கோ
தொலைந்துபோனான்……

(Ganeshalingam Kanapathipillai)