இயலாத தாய்
சுட்டு வைத்த பணியாரம்
சிறுபிள்ளை பிராயத்தில்
கடை முழுதும் சென்று விற்றீர்…
விற்று வீடுவந்து
கல்வி தாகத்தால்
பள்ளிக்கும் ஓடுவீர்..
தந்தை இல்லா வீட்டு வறுமை..
அன்னைக்கும் தம்பிகளுக்கும்
தூணாய் இருந்தீர்..
மேல் கல்வி முடிக்கும் முன்னே
பதினாறு வயதினில்
தமிழர் உரிமை எனும்
பதாகை பிடித்தவரோடு
கை கோர்த்தீர்..
நோட்டீஸ் ஒட்டியதற்காய்
ரிமாண்டும் ஆனீர்…
தொடங்கியதோர் அரசியல் பயணம்..
தமிழரசு கட்சி என்றும்
விடுதலை கூட்டணி என்றும்
உள்ளார்ந்த பெரியோரை
கனம் பண்ண தவறியதில்லை..
இளைஞர் பேரவையின்
மேடை முழக்கம் நீர்..
புஷ்பராஜா பிரான்சிஸ்
பத்மநாபா என்கின்ற
ஜாம்பவான்களின்
அருமை நண்பராய்..
மிதவாத அரசியல்
பெரியோரின் பாதை
பிடிக்காத காரணத்தால்
இளைஞர் பேரவை விடுத்து
ஈழவிடுதலை இயக்கம் எனும்
இளைஞர் பேரணி
தொடங்கிய முதல்வர்களில்
நீரும் ஒருவராய்…
தமிழர் உரிமை கேட்டு
தொடர்ந்தது உம் பயணம்..
மேற்படிப்பை இடை நிறுத்தி
தமிழர் உரிமைக்காய்
அரசியல் களமாடிய
பேரிளைஞன் அப்போது..
நீண்ட சிறைவாசம்
மூன்று தடவைகள்..
சிறை கூட உமக்கு
கல்விக்கூடம்தான்..
அரசியல் மட்டுமல்ல
பல்கலைக்கழக நுழைவுக்கான
உயர்தர பரீட்சையும்
சிறையில்தான் தேறினீர்..
பல்கலைக்கழக வாழ்வில்
அரசியலுக்கு விடுமுறை..
கற்றீர் கற்றுக்கொண்டே இருந்தீர்..
இந்திரபாலா அவர்களின்
பேரன்பு மாணவன் நீர்..
என் அக்காளை கரம்பற்ற
விரும்பிய நீங்கள்
முறையாய் பெண் கேட்க
உம் ஆசிரியர்
கந்தசாமி வாத்தியாரும் மனைவியும்
எம் வீடு வந்து பேசிய நாள்
இன்னும் பசுமையாய்..
நேர்மை நியாயம்
அரசியல் சாணக்கியம்
அஞ்சாமை தோழமை
இவை யாவும் உம்மிடம்
வணங்கியே நிற்கின்றன…
திருமணமும் புதுமையாய்
ஐயரும் பாதிரியும்
இல்லாத மேடைதனில்..
வீரசிங்கம் மண்டபத்தில்
மேடை மீது
கலாநிதியார் உமது ஆசான்
இந்திரபாலாவும்
நேசத்திற்கும் மதிப்புக்கும் உரிய
உமதரசியல் மூத்தவர்
அமிர்தலிங்கம் அவர்களும்
தாலி தொட்டு எடுத்து கொடுக்க
இளைஞர் யுவதிகள்
உற்றார் உறவினர்
கைதட்டல் அன்று
கெட்டி மேளமாய் முழங்கியதும்
இன்னும் பசுமையாய் நினைவுகளில்…
ஆசிரியராய் பல்கலைக்கழக
விரிவுரையாளராய் சிலகாலம் பயணிக்க
எம் எ முடித்து கலாநிதியாகுமுன்
83 இல் மறுபடியும் சிறைவாசம்
உற்ற நண்பர் பத்மநாபா
வந்தும்மை அழைத்ததனால்
மட்டக்களப்பினிலே கூட்டம் ஒன்றில்
பிடிபட்டீர்..
மட்டக்களப்பு சிறையுடைப்பில்
வெளிவந்து இந்திய கண்டத்தில்
மறுபடியும் அரசியல் நுழைவு..
EPRLF கட்சியுடன் மறுபடி பயணம்…
பிறந்த குழந்தைகளை
என் அக்காளுடன் விட்டுவிட்டு
ஊர் ஊராய் இயக்கம் வளர்க்க
அலைந்து திரிந்ததை
நேரில் கண்டவன் நான்…
வெறுந்தரை கிளிஞ்சல் உடை
எது பற்றியும் கவலைப்படா
எங்கும் படுத்துறங்கும் மனிதர் நீர்
உம் அருமை நண்பர் நாபாவைப்போல…
87 இல் இந்திய ஒப்பந்தம்..
88 இல் முதலமைச்சர் பதவி..
சிங்கள அரசுடன் முட்டி மோதி
எடுக்கப்பார்த்த உரிமைகள்
புலிகள் பிரேமதாசா
கூட்டுச்சதியில்
முடங்கிப்போயின அநியாயமாக…
90 களிலே அஞ்ஞாத வாசம்..
வட இந்தியா வரைக்கும்
புலிகளின் கொலை முயற்சி..
90 இல் புலிகளிடம்
மாகாண அரசினை கொண்டு நடாத்த
வேண்டுகோள் விடுத்தீரே
நீர் திருமலை விட்டு நீங்கு முன்னே..
நீர் சொல்லிய வார்த்தை இன்னும்
ஆரூரமாய்
‘’ இச்சந்தர்ப்பம் விடுப்பின்
இனியொரு காலம்
இணைந்த வடகிழக்கில்
திருமலை தலைநகராய்
இன்னொரு சந்தர்ப்பம்
எப்பொழுதும் வாராது…’’
சொல்லியபடி நடந்தாச்சு..
வடக்கும் கிழக்கும் பிரிஞ்சாச்சு..
அரசியல் திருத்தத்தின்
13 ஐ உம் போல அறிந்தவர்
அநேகம் பேர் கிடையாது..
அரசியல் தீர்வு இன்னும்
தமிழருக்கு தூரமே..
பதவிகள் வைத்திருப்போர்
வசதிகள் மட்டும் வாங்கினார்..
தமிழர் உரிமைகளை
வென்றெடுக்க
கையாலாகாதவர் போல
வாழ்கிறார்..
‘’உண்மை செருப்பணிந்து
புறப்படுவதற்குள்
பொய் உலகையே
சுற்றி வந்துவிடுமாம்’’
அதுதான் நம் நாட்டிலும்
நடக்கிறதோ…
உங்கள் பெருமைதனை
ஊர் அறியும் நாள் ஒன்று வரும்..
மக்களுக்கான அரசியல் என்று
ஊர் போற்றும் நாள் வரும்…
அதுவரைக்கும் பொறுமையாய்
ஆரோக்கியமாய் உங்கள் பணி தொடர
என் பிறந்தநாள் வாழ்த்துக்கள்
என்றும் என் வரதண்ணாவுக்கு
இனிதே வாழ்கவென….
உங்கள்
ராசா (போல்)