அசாமில் பாஜக, மேற்கு வங்கத்தில் மம்தா முன்னணி

ஐந்து மாநில சட்டப்பேரவை தேர்தலின் வாக்கு எண்ணிக்கை இன்று காலை துவங்கியது. இதில், அசாமில் பாரதிய ஜனதா மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகளும், மேற்கு வங்கத்தில் திரிணமூல் காங்கிரஸும் முன்னிலை வகிக்கின்றன. அசாமில் 126 தொகுதிகளில் 51-ன் வாக்கு வித்தியாசங்கள் வெளியாகி உள்ளது. இங்கு ஏற்பட்ட மும்முனை போட்டியில் பாஜக 30 இடங்களில் முன்னணி வகிக்கிறது. தொடர்ந்து மூன்று முறை அசாமில் பதவி வகித்த காங்கிரஸ் 12 தொகுதிகளில் மட்டும் முன்னிலை வகிக்கிறது. பத்ருத்தீன் அஜ்மல் தலைமையிலான அகில இந்திய ஐக்கிய முன்னணி 6 மற்றும் இதர கட்சிகள் 3 தொகுதிகளில் முன்னிலையில் உள்ளன.

மேற்கு வங்கத்தில் திரிணமூல் காங்கிரஸ் கட்சிக்கு 79, இடதுசாரி கூட்டணி 39, பாஜகவிற்கு 2 மற்றும் இதர கட்சிகள் 1 தொகுதிகளில் முன்னிலையில் உள்ளன. இங்கு திரிணமூல் காங்கிரஸ் தலைவர்கள் அனைவரும் முன்னிலை வகிக்கின்றனர். பாஜகவிற்கு முதல் முறையாக அசாமில் அதிக தொகுதிகளில் வெற்றி கிடைக்கும் வாய்ப்புகள் தெரிகின்றன. அசாம் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பின்படி பாஜக முன்னிலை வகித்து வருகிறது. மேற்கு வங்கத்திலும் இந்த கருத்துக் கணிப்புகள் அதன் முதல் அமைச்சர் மம்தா பானர்ஜிக்கு ஆதரவாக வெளியாகி இருந்தன.