அணுவாயுதத்துக்கு எதிராக 51 நாடுகள் ஒப்பந்தத்தில்

வடகொரியாவின் அணுவாயுதப் பிரச்சினை, மிகவும் தீர்க்கமானதாக மாறிவரும் நிலையில், 51 நாடுகள் ஒன்றுசேர்ந்து, அணுவாயுதத்தை அழிக்க வேண்டுமென, ஒப்பந்தமொன்றில் கைச்சாத்திட்டுள்ளன. ஐக்கிய நாடுகள் பொதுச் சபை அமர்வுக்காக, ஐக்கிய அமெரிக்காவுக்கு அநேகமான நாடுகள் சென்றுள்ளன நிலையிலேயே, இந்த இணக்கப்பாடு ஏற்பட்டுள்ளது. எனினும், ஐ.அமெரிக்கா உள்ளிட்ட அணுசக்தித் திறனைக் கொண்ட நாடுகள், இந்த ஒப்பந்தத்தைக் கடுமையாக எதிர்க்கின்றன.

ஒஸ்திரியா, பிரேஸில், மெக்ஸிக்கோ, தென்னாபிரிக்கா, நியூசிலாந்து ஆகிய நாடுகள் தலைமைதாங்கி மேற்கொள்ளப்பட்ட பேரம்பேசல்களின் விளைவாக இந்த இணக்கப்பாடு, இவ்வாண்டு ஜூலையில், ஐக்கிய நாடுகளில் எட்டப்பட்டது. இதற்கு, 122 நாடுகள் சம்மதித்திருந்தன.

எனினும், அணுவாயுதத்தைக் கொண்டுள்ள நாடுகளான ஐ.அமெரிக்கா, ரஷ்யா, பிரித்தானியா, சீனா, பிரான்ஸ், இந்தியா, பாகிஸ்தான், வடகொரியா, இஸ்‌ரேல் ஆகிய 9 நாடுகளும், இந்தப் பேரம்பேசல்களில் கலந்துகொண்டிருக்கவில்லை. அணுகுண்டுத் தாக்குதலுக்குள்ளான ஒரேயொரு நாடான ஜப்பானும், இந்தப் பேரம்பேசல்களில் கலந்துகொண்டிருக்கவில்லை.

இந்த இணக்கப்பாட்டை, நேட்டோ அமைப்பும் கண்டித்திருந்தது.

ஆனால், இந்த ஒப்பந்தத்தில், தற்போது 51 நாடுகள் கைச்சாத்திட்டுள்ள நிலையில், ஐக்கிய நாடுகளின் செயலாளர் நாயகம் அந்தோனியோ குட்டரெஸ், இதை வரவேற்று, சரித்திரபூர்வமானது எனக் குறிப்பிட்டார்.

“இன்று நாங்கள், மிகப் பொருத்தமான வகையில், இதைக் கொண்டாடுகிறோம். அணுவாயுதங்களை அழிப்பதை நோக்கிய, கடினமான பாதையில், நாங்கள் எங்கள் பயணத்தைத் தொடர வேண்டும்” என்று அவர் குறிப்பிட்டார்.

இந்த ஒப்பந்தத்தில் குறைந்தது 50 நாடுகள் கைச்சாத்திட்டு, அவற்றை நடைமுறைப்படுத்துவதாக அறிவித்த பின்னர், இது நடைமுறைக்கு வரும். இதுவரையில், 3 நாடுகள், இதை நடைமுறைப்படுத்துவதாக அறிவித்துள்ளன.