‘அதிகார பகிர்வு புலிக்கு அல்ல’

“அதிகாரத்தைப் பகிர்ந்தளிப்பது விடுதலைப் புலிகளுக்கு எனச் சிலர் நினைக்கின்றார்கள். அல்லது தமிழர்களுக்கு மாத்திரம் அதிகாரத்தைப் பகிர்ந்து கொடுக்கப்போவதாக நினைக்கின்றார்கள். அனைத்து மாகாணங்களுக்கும் சமமான வகையிலான அதிகாரங்களை வழங்குவதற்கே, நாம் யோசனைகளை முன்வைத்திருக்கிறோம்” என கடற்றொழில் நீரியல் வளங்கள் அபிவிருத்தி அமைச்சர் மஹிந்த அமரவீர, நேற்று (08) தெரிவித்தார்.

புதிய அரசமைப்புக்கான அரசமைப்புச் சபையின் வழிப்படுத்தல் குழு இடைக்கால அறிக்கை தொடர்பான விவாதம், அரசமைப்பு சபையில் ஐந்தாவது நாளாகவும் நேற்று இடம்பெற்றது. இந்த விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.

“நாம் 30 வருட கால யுத்தத்துக்கு முகங்கொடுத்திருக்கிறோம். இந்த யுத்தத்தில் வடக்கிலும் தெற்கிலும் உயிரிழந்தவர்களில் இலங்கை இளைஞர்களே பலியாகினார்கள். அரசமைப்புத் தொடர்பில் யோசனைகள் முன்வைக்கப்பட்டு, கலந்துரையாடல் மாத்திரமே இடம்பெற்று வருகின்றது”.

”ஆனால், இது இறுதியான அரசமைப்பு எனவும் நாடாளுமன்றத்தில் வாக்கெடுப்பு நடத்தப்படவுள்ளது என்றும் பலர் கருத்துகளைப் பரப்பி வந்தார்கள். ஆனால், என்ன நடந்தது? இந்த விவாதம் ஆரம்பிப்பதற்கு முன்னர் இருந்த நிலைமையும் இன்று உள்ள நிலைமையும் மாற்றமடைந்திருக்கின்றது” என்றார்.

“விவாதத்தின் ஆரம்ப நாளில் நாடாளுமன்றத்துக்கு முன்னால் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. முன்னாள் சிரேஷ்ட இராணுவ அதிகாரிகள் தவறான கருத்தை முன்வைத்தார்கள். புதிய அரசமைப்பைக் கொண்டுவந்தால் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ள வேண்டும் என, கமல் குணரத்ன போன்றோர் கூறினார்கள். இது சர்வதேசத்தின் கவனத்துக்கும் கொண்டுவரப்பட்டது” என்றார்.

“இவ்வாறானவர்கள், யுத்த காலத்தில் எவ்வாறு நடந்துகொண்டிருப்பார்கள் என்பதையும் சர்வதேசத்தின் பார்வைக்குச் சென்றது.

புதிய அரசமைப்பு தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்கவின் காலப்பகுதியில் எமக்கு ஜி.எல். பீரிஸ் பாடம் எடுத்தார். புதிய அரசமைப்பு இவ்வாறுதான் வரப்போகின்றது என எங்களுக்குத் தெளிவுபடுத்தினார். ஐக்கிய இலங்கைக்குள் தீர்வு எனக் கூறினார். அவருடைய தெளிவுபடுத்தலுடன் அது தொடர்பான செய்தியை நாம் கிராம மட்டத்திலிருந்து மக்களுக்குக் கொண்டு சென்றோம்.

ஆனால், இன்று அவர் வேறொரு கருத்தை முன்வைத்து வருகின்றார்.

“ஆட்சியில் உள்ளபோது, ஒரு கருத்தையும் ஆட்சியில் இல்லாதபோது, மற்றுமொரு கருத்தையும் கூறுவது வாடிக்கையாகிவிட்டது. அதேபோல், ஆட்சியில் இல்லாதபோது வழங்கப்படும் உறுதிமொழிகள் ஆட்சிக்கு வந்தபோது மறந்துவிடுவதும் இதற்கு முன்னர் இடம்பெற்றுள்ளது.

“ஆனால், தற்போதுள்ள தேசிய அரசாங்கம் அவ்வாறு செயற்படப் போவதில்லை. நாம் மக்கள் நம்பிக்கையை, அனைத்துத் தரப்பினரதும் நம்பிக்கைக்குப் பாத்திரமானவர்களாக மாற்றிக்கொள்ள வேண்டியுள்ளது.

“தேசிய கீதம் தமிழ் மொழியில் பாடப்படுவதற்கு, அமைச்சரவை அங்கிகாரம் கிடைத்தபோது, எவ்வாறான கருத்துகள் பரப்பப்பட்டன. இன்னொரு நாடு உருவாகப்போகின்றது, இன்னொரு தேசியக் கொடி உருவாகப்போகின்றது என்றார்கள். ஆனால், இன்று என்ன நடந்துவிட்டது? தமிழ் மொழியில் அந்த மக்கள் தேசிய கீதத்தின் அர்த்தம் உணர்ந்து பாடுவதை, நாம் அனைவரும் இலங்கையர்களாக உணரவில்லையா?

“இவையெல்லாம் மக்களைத் திசைதிருப்புவதற்காக குறுகிய நோக்கத்துடன் செய்யப்படுபவை. எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன், தமிழ் மக்களின் தலைவராக இருந்து நடுநிலைமையாகச் செயற்படுகின்றார். இவரது காலத்தில் எமக்கு புதிய அரசமைப்புக் கொண்டுவர முடியாமல்போனால் எதிர்காலத்தில் பல்வேறு சவால்களுக்கு நாம் முகங்கொடுக்க வேண்டி வரும். சிவாஜிலிங்கம், விக்னேஷ்வரன் போன்ற அடிப்படைவாதிகள் தலைமைத்துவம் ஏற்பார்களாயின் நிலைமை மோசமாகும் என்பதை நாம் உணர வேண்டும்.

“அதிகாரத்தைப் பகிர்ந்தளிப்பது விடுதலைப் புலிகளுக்கு எனச் சிலர் நினைக்கின்றார்கள். பயங்கரவாதிகளுக்கு, நாட்டைப் பிளவுபடுத்திக்கொடுக்கப் போவதாக நினைக்கின்றார்கள். அல்லது தமிழர்களுக்கு மாத்திரம் அதிகாரத்தைப் பகிர்ந்து கொடுக்கப்போவதாக நினைக்கின்றார்கள்.

“ஆனால், நாம் அவ்வாறு செய்யப்போவதில்லை. அனைத்து மாகாணங்களுக்கும் சமமான வகையிலான அதிகாரங்களை வழங்குவதற்கே நாம் யோசனைகளை முன்வைத்திருக்கிறோம்” என்றார்.