அதிமுகவின் அடுத்த பொதுச்செயலாளர் யார் என்ற போட்டி

 

அதிமுகவின் அடுத்த பொதுச் செயலாளர் யார் என்ற போட்டியில், செங்கோட்டையனை மையமாக வைத்து அந்தக் கட்சியில் பிளவு ஏற்படும் என்ற ஊகங்கள் பொய்த்துப் போயுள்ளன. சொத்துக்குவிப்பு வழக்கில் ஜெயலலிதா சிறைக்கு சென்ற நேரத்தில், புதிய முதல்வராக ஓ.பன்னீர்செல்வம் பொறுப்பேற் றார். அப்போதே அமைச்சரவை யில் தேவர் சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் பலமானவர்களா, கவுண்டர் சமுதாயத்தைச் சேர்ந்த வர்கள் பலமானவர்களா என்ற மோதல் மறைமுகமாக ஏற்பட்டது.

அதேபோல, ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக் கப்பட்ட பிறகும் இந்த சாதி ரீதியான விவகாரம் மீண்டும் தலைதூக்கியது. எந்த சமுதாயத் தைச் சேர்ந்தவர்கள் முன்னிலைப் படுத்தப்படுவர் என்று கட்சிக்குள் விமர்சனங்களும் விவாதங்களும் எழுந்தன.

ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு ஓ.பன்னீர்செல்வம் முதல்வ ராக பதவியேற்றார். கட்சியின் அடுத்த பொதுச்செயலாளர் யார் என்ற கேள்வி எழுந்தபோது கவுண்டர் சமுதாயத்துக்கு அந்தப் பதவியை தரவேண்டும் என்ற குரல் எழுந்தது. தற்போதைய மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை, அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் ஆகியோரின் பெயர் கட்சி வட்டாரத்தில் விவாதிக்கப்பட்டது.

இதில், கடந்த 2012-ம் ஆண்டு முதல் எம்எல்ஏ என்ற குறுகிய வட்டத்தில் சுருக்கப்பட்ட செங்கோட்டையன் பெயரை பலரும் முன்னிலைப்படுத்தினர். அதிமுக பிளவுபட்டபோது ஜெய லலிதாவுக்கு ஆதரவாக நின்றவர், அவரது தேர்தல் பிரச்சாரத்தை வடிவமைத்தவர் என கட்சியின் முக்கிய நடவடிக்கைகளில், ஜெயலலிதாவின் உத்தரவை அப்படியே நிறைவேற்றுபவராக இருந்ததுதான் அதற்கு காரணமாக சொல்லப்பட்டது.

ஆனால், செங்கோட்டையனை பொறுத்தவரை கடந்த 4 ஆண்டு களில் மாவட்ட அரசியலில்கூட அவர் தனிமைப்படுத்தப்பட்டிருந் தார். ஜெயலலிதா மூலம் தனக்கு அரசியலில் மறுவாழ்வு கிடைக்கும் என்ற நம்பிக்கையோடு காத்திருந் தார். இந்நிலையில், ஜெயலலிதா மறைந்துவிட்டதால், சசிகலா தன்னை அழைத்துப் பேசுவார், முக்கியத்துவம் தருவார் என்று உறுதியாக நம்பினார். அதனால், பொதுச்செயலாளர் பதவி என்ற ‘மாயவலையை’ தன்மீது வீச முயன்றவர்களை தொடக்கத்தில் இருந்தே விலக்கி வைத்தார்.

அவர் எதிர்பார்த்தபடியே சசிகலா தரப்பில் இருந்து கடந்த 7-ம் தேதி இரவே அவருக்கு அழைப்பு வந்துள்ளது. 8-ம் தேதி காலை எம்.நடராஜனுடனும் சந்திப்பு நடந்துள்ளது. அவர் களது விருப்பம்போல செயல் படுவதாகவும், கட்சியில் எந்தப் பதவிக்கும் ஆசைப்படவில்லை என்றும் செங்கோட்டையன் கூறி யுள்ளார். ‘தற்போது சசிகலாவை பொதுச்செயலாளராக்க ஆதரவு தெரிவியுங்கள். அதன்பின் உரிய பதவிகள் உங்களைத் தேடி வரும்’ என்று நடராஜன் தரப்பில் உறுதி அளித்ததாக கூறப்படுகிறது.

இதுபோன்ற ‘மரியாதை’யான அழைப்புக்காகவே காத்திருந்த செங்கோட்டையன், உடனே ஒப்புக்கொண்டுள்ளார். அதைத் தொடர்ந்தே, தன்னை முன்னிலைப் படுத்தி பரவிய வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் அறிக்கை வெளியிட்டார். அதன் தொடர்ச்சியாக நேற்று முன்தினம் மதுசூதனன் உள்ளிட்ட மூத்த பிரமுகர்களுடன் சசிகலாவைச் சந்தித்து பொதுச்செயலாளர் பதவியை ஏற்க வேண்டும் என உருக்கமான வேண்டுகோள் விடுத்து திரும்பியுள்ளார்.

செங்கோட்டையனின் முடிவு குறித்து கொங்கு மண்டல நிர்வாகி களிடம் பேசியபோது, ‘‘தற்போது அவர் எடுத்திருக்கும் முடிவு, தனது பலத்தை உணர்ந்து எடுத்த முடிவு. சசிகலாவை பொதுச்செயலாளராக செங்கோட்டையனே ஏற்றுக் கொண்டார் என்ற பிம்பம் கொங்கு மண்டலம் மட்டுமல்லாது, மாநிலம் முழுவதும் உள்ள கட்சி நிர்வாகிகளை அமைதிப்படுத்த உதவியிருக்கிறது.

அடுத்தகட்டமாக, மாவட்ட அளவில் பதவியில் இல்லாத முக்கிய நிர்வாகிகளை அமைதிப் படுத்தவும், அவர்களின் தகுதிக் கேற்ப பதவிகளை பெற்றுத் தருவதற்கும் செங்கோட்டையன் பயன்படுத்தப்படுவார். அதற்கேற்ப அவருக்கு அமைச்சர் பதவியும், கட்சிப்பதவியும் வழங்கப்படும்’’ என்றனர்.

இதுதொடர்பாக ‘தி இந்து’விடம் செங்கோட்டையன் கூறியதாவது:

மாற்றுக்கட்சியில் இருப்பவர் கள் என்னைக் குறித்து தவறான செய்திகளைப் பரப்பி வந்தனர். இதற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என முடிவெடுத்துதான் அறிக்கை வெளியிட்டேன்.

கட்சி நிர்வாகிகள் அனைவரும் ஒன்றிணைந்து சசிகலாவிடம் சென்று ‘உங்களைத் தவிர பொதுச்செயலாளர் ஆகும் தகுதி யாருக்கும் இல்லை’ என எங்களின் ஒருமித்த கருத்தை பிரதிபலித் தோம். ஏனெனில் அவர்தான் ஜெய லலிதாவின் இன்ப, துன்பங்கள் என அனைத்திலும் பங்கு கொண்டவர்.

எங்களுக்குள் எந்த எதிர்ப்பும் கிடையாது. அனைவரின் ஒருமித்த கருத்தைத்தான் பிரதிபலித்தோம். யாருக்கு எந்த பொறுப்பு என்பது குறித்து பின்னர்தான் முடிவு செய்யப்படும். பொதுக்குழுவை நடத்துவது குறித்து அனைவரும் கூடி முடிவு செய்வோம். அதிமுக வுக்கு பாஜகவின் நெருக்குதல் உள்ளது என்பது உண்மைக்கு புறம்பானது. அப்படி ஏதும் நெருக்குதல் இல்லை.

இவ்வாறு செங்கோட்டையன் கூறினார்.

தொண்டர்கள் சிலர் சசிகலா வுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப் பாட்டம் நடத்தியது குறித்து கேட்டபோது, ‘‘அதுகுறித்து எனக்கு எதுவும் தெரியாது’’ என்று அவர் பதிலளித்தார்.