‘அப்பாவின் குரல் கேட்கிறது’ – ஹிருணிகா பிரேமச்சந்திர

தங்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு, நீதி கிடைத்துள்ளது. எனினும், ஆட்சி மாறாமல் இருந்திருந்தால், தன்னுடைய தந்தையின் படுகொலை தொடர்பில் நேற்று (08) வழங்கப்பட்ட தீர்ப்பு, அறிவிக்காமலே விடப்பட்டிருக்கலாம் என்று, நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திர தெரிவித்தார்.

வழக்கின் தீர்ப்பு அறிவிக்கப்பட்டதன் பின்னர், நீதிமன்றத்துக்கு வெளியில் வந்து, ஊடகவியலாளர்களுக்கு கருத்து தெரிவித்த போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
‘மற்றுமொருவர் பாதிக்கும் போது, அதனை பார்த்து சந்தோஷப்படுமளவுக்கு நான் மனநலம் பாதிக்கப்பட்டவர் அல்லர்’ என்றும் கூறினார்.

ஆட்சி மாறாமல் இருந்திருந்தால் சில வேளைகளில் தீர்ப்பும் மாறியிருப்பதற்கு இடமுண்டு. இந்நாட்டுக்கு புதிய ஜனாதிபதி நியமிக்கப்பட்டதன் பின்னர் தான் சட்டத்தின் ஆட்சி பாதுகாக்கப்பட்டது. அதனால்தான் சரியானத் தீர்ப்பு கிடைத்துள்ளது.

சந்தோஷமடைய முடியாது. ஏனென்றால் எல்லோருக்கும் மரண தண்டனையே வழங்கப்பட்டுள்ளது. மற்றொருவர் துன்பப்படுவதை பார்த்து சந்தோஷமடையும் அளவுக்கு நான் மனநிலை பாதிக்கப்பட்டவர் அல்லர். நாங்கள் துன்பமடையும் நாட்கள் இன்றும் முடிந்துவிடவில்லை. வீட்டுக்குச் சென்றால் தந்தையில் குரல் கேட்பதை போலவே இருகின்றது’ என்றார்.

வழக்கின் முழு விவரம்

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் தொழிற்சங்க ஆலோசகருமான பாரத லக்ஷ்மன் பிரேமச்சந்திர கொலை செய்யப்பட்டமை தொடர்பிலான வழக்கில், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், பாதுகாப்பு அமைச்சின் கண்காணிப்பு எம்.பியாகச் செயற்பட்டவருமான துமிந்த சில்வா உள்ளிட்ட 5 பேருக்கு மரண தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டது.

கொழும்பு, விசேட மேல் நீதிமன்றத்தின் ஷிரான் குரணத்ன (தலைவர்) பத்மினி என். ரணவக்க மற்றும் எம்.சி.டி. எஸ் மொராயஸ் ஆகிய மூன்று நீதிபதிகள் கொண்ட குழுவினால் இந்தத் தீர்ப்பு, நேற்று வியாழக்கிழமை (08) வழங்கப்பட்டது.

இந்த வழக்கில், துமிந்த சில்வா உள்ளிட்ட 13 பேர் பிரதிவாதிகளாகக் குறிப்பிடப்பட்டிருந்தனர்.

வழக்கின் முதலாவது பிரதிவாதியான அநுர துஷார டி மெல், 2ஆவது பிரதிவாதியான தெமட்டகொட சமிந்த என்றழைக்கப்படும் சமிந்த ரவீ ஜயநாத், 7ஆவது பிரதிவாதியான சரத் பண்டார, 10ஆவது பிரதிவாதியான ஜனக பண்டார மற்றும் 11ஆவது பிரதிவாதியான முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வா, ஆகியோரைக் குற்றவாளியாக இனங்கண்ட நீதிபதிகள் குழாம், அவர்கள் அனைவருக்கும் மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்தது.

10ஆவது பிரதிவாதியான ஜனக பண்டார நேற்றைய தினம் நீதிமன்றத்துக்கு சமுகமளித்திருக்கவில்லை.

ஏனைய எண்மரில், சந்தன ஜகத் குமார, லங்கா ரசாஜன, ஏ. மாலக சமீர, சுரங்க பிரேமலால், சமன் குமார அபேவிக்ரம, ரோஹன மாரசிங்க மற்றும் நாகொட லியனாராச்சி ஆகியோர் சகல குற்றச்சாட்டுகளிலிருந்தும் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

எவ்வாறாயினும், இந்த வழக்கின் 5ஆவது சந்தேகநபரான கலகொட, வழக்கு விசாரணைகளின் போது நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை. என்பதுடன் அவர் காணாமல் போய்விட்டதாக நீதிமன்றத்தின் கவனத்துக்கு கொண்டுவரப்பட்டது.

காணாமல் போன கலகொட உள்ளிட்ட அந்த 13 பேருக்கு எதிராகவும், கொலைசெய்தமை, மனிதப் படுகொலைக்கு முயற்சித்தமை, மக்களைச் சட்டவிரோதமான முறையில் கூட்டியமை உள்ளிட்ட 17 அதிக் குற்றச்சாட்டுகளின் கீழ், சட்டமா அதிபரினால், அதிக்குற்றச்சாட்டுப் பத்திரம் தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான பிரசார நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுக் கொண்டிருந்த போது, கொலன்னாவை முல்லேரியா, வல்பொல பிரதேசத்தில், 2011ஆம் ஆண்டு ஒக்டோபர் 8ஆம் திகதியன்று மாலை சண்டை இடம்பெற்றது. இதில், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பாரத லக்ஷ்மன், மொஹமட் ஹசீன், இமானுவெல் குமாரசுவாமி, தமித் தர்ஷன ஆகிய நான்கு பேர், சுட்டுப் படுகொலைசெய்யப்பட்டனர்.

நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த துமிந்த சில்வா, தலையில் காயமடைந்த நிலையில் ஸ்ரீ ஜயவர்தனபுர வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, நீதிமன்ற அனுமதியுடன் சிங்கப்பூர் வைத்தியசாலையில் மேலதிக மேலதிக சிகிச்சைகளைப் பெற்றுக்கொண்டார். இந்தச் சம்பவத்தில், இரு தரப்பிலும் இன்னும் சிலர் காயமடைந்தனர்.

அப்போதைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் தொழிற்சங்க ஆலோசகரான பாரத லக்ஷ்மன் பிரேமசந்திர உள்ளிட்ட மூவரின் கொலை வழக்கை விசேட வழக்காகக் கவனத்தில் கொண்டு விசாரிப்பதற்கு, நடவடிக்கை எடுக்குமாறு சட்டமா அதிபர், பிரதம நீதியரசரிடம் கோரிக்கை விடுத்தார்.

அதனடிப்படையில் இந்த வழக்கை, டிரயல் அட்பார் முறையில் விசாரணை செய்வதற்கு பிரதம நீதியரசர் கே. ஸ்ரீபவன், 2015 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 25ஆம் திகதியன்று தீர்மானித்தார்.

இந்த வழக்கு, நீதிபதிகளான சிரான் குணதிலக (தலைவர்), பத்மினி ரணவக்க, மொராயஸ் ஆகியோரின் முன்னிலையில், 2015 ஓகஸ்ட் 6ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துகொள்ளப்பட்டது.

வழக்கு விசாரணை, சுமார் ஒன்றரை வருடங்களுக்கு இடம்பெற்றுவந்தது. பிரதிவாதிகளில் தலைமறைவாகியுள்ள கலகொட என்பவரைத் தவிர ஏனைய சகல பிரதிவாதிகளும் சாட்சியமளித்துள்ளமையால், வழக்கு விசாரணை, 2016 செப்டெம்பர் மாதம் 14ஆம் திகதி வியாழக்கிழமை நிறைவடைந்தது.

வழக்கின் தீர்ப்பு, நேற்று 08ஆம் திகதியன்று அறிவிக்கப்படும் என்று ஜூலை மாதம் 14ஆம் திகதியன்று திகதி குறிக்கப்பட்டது.

இந்த வழக்கின் சாட்சி விசாரணை, 2015 ஆம் ஆண்டு ஒக்டோபர்; மாதம் 12ஆம் திகதியன்று ஆரம்பிக்கப்பட்டு, 52 நாட்கள் இடம்பெற்றது.

வழக்கில், முறைப்பாட்டாளர் சார்பில் சாட்சியாளர்கள் 40 பேர் முன்னிலைப்படுத்தப்பட்டனர், 86 சாட்சிப் பொருட்களும், 126 ஆவணங்களும் முன்வைக்கப்பட்டன.

வழக்கு விசாரணை நிறைவடைந்துள்ள நிலையில், முறைப்பாட்டாளர் மற்றும் பிரதிவாதித் தரப்புச் சாட்சித் தொகுப்புரைகளை, 2016 ஆம் ஆண்டு ஓகஸ்ட் 25ஆம் திகதியன்று ஆற்றுமாறு நீதிபதிகள் குழு, இருதரப்புச் சட்டத்தரணிகளிடமும் கேட்டுக்கொண்டது.

2011ஆம் ஆண்டு ஒக்டோபர் 12ஆம் திகதியன்று சாட்சியமளித்த, கொலை செய்யப்பட்ட பாரத லக்ஷ்மன் பிரேமச்சந்திராவின் சாரதி, ‘சம்பவம் இடம்பெற்ற தினத்தன்று, அங்கொடை சந்தியை நோக்கி பாரத லக்ஷ்மன் பிரேமச்சந்திராவின் வாகனத்தை நான் செலுத்திச் சென்றேன். வேறு இரண்டு வாகனங்கள் எம்மைத் தொடர்ந்த வந்தன.

இந்நிலையில், எதிரே வந்த கார்களின் தொடரணியொன்று எம்மை வழிமறித்தது. அப்போது, பாரத லக்ஷ்மன் பிரேமச்சந்திர – வாகனத்தை விட்டு இறங்க, துமிந்த சில்வாவும் தனது வாகனத்தை விட்டு இறங்கினார்.

இருவருக்கிடையில் நடந்த வாக்குவாதத்தைத் தொடர்ந்து துமிந்த சில்வா, பாரத லக்ஷ்மன் பிரேமச்சந்திரவின் முகத்தில் அடிக்க, அவர் கீழே விழுந்துவிட்டார்.

கீழே விழுந்த பாரத லக்ஷ்மன் பிரேமச்சந்திரவை, துமிந்த சில்வா துப்பாக்கியால் தலையில் சுட்டுவிட்டு, லக்ஷ்மனை சுடுமாறு சத்தமிட்டார். அதனைத் தொடர்ந்து பாரத லக்ஷ்மன் பிரேமச்சந்திரவின் மீது ரி-56 ரக ரைபிளினால் சுட்டனர்’ என்றார்.

இந்நிலையில், நீதிமன்றில் அறிக்கை தாக்கல் செய்தபோது சந்தேக நபருக்கு வழங்கப்பட்ட ரி-56 ரக ரைபிளையும் பயன்படுத்தப்பட்ட சில ரவைகளையும் தாம் கைப்பற்றியுள்ளதாக புலன் விசாரணைப் பொலிஸார் நீதிமன்றில் கூறியிருந்தனர்.

வழக்கின் தீர்ப்பு நேற்று வியாழக்கிழமை வழங்கப்படவிருந்த நிலையில், கொழும்பு மேல் நீதிமன்றம் மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் பாதுகாப்பு, பன்மடங்காக அதிகரிக்கப்பட்டிருந்தது.

10 அடிக்கு ஒரு பொலிஸார்

என்ற வீதத்தில் பொலிஸார் பாதுகாப்பு வழங்கியிருந்தனர். அவர்களுக்கு மேலதிகமாக, விசேட அதிரடி படையினரும் பாதுகாப்பில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.

கொழும்பு மேல் நீதிமன்றத்தில் நேற்றையதினம், விசாரணைக்காக எடுத்துக்கொள்ளப்பட்ட வழக்குகளுக்கு சமுகமளித்தவர்களைத் தவிர வேறு எவரும், நீதிமன்ற வளாகத்துக்குள்ளேயே அனுமதிக்கப்படவில்லை.

பாரத லக்ஷ்மன் கொலை வழக்கு விசாரணைக்கு எடுத்து கொள்ளப்படவிருந்த அறைக்குச் சென்றவர்கள் அனைவரும், கடும் உடற்சோதனைக்கு உட்படுத்தப்பட்டதன் பின்னரே அறைக்குள் அனுமதிக்கப்பட்டனர்.

வழக்கில் சுமத்தப்பட்டுள்ள சகல குற்றச்சாட்டுகளிலும், குற்றமற்றவர்கள் என்று நீதிமன்றத்தால் இனங்காணப்பட்ட ஏழுபேரையும் முற்றுமுழுதாக விடுவிப்பதாக அறிவித்த நீதிபதியான சிரான் குணதிலக்க (தலைவர்), சகல குற்றச்சாட்டுகளிலும் குற்றவாளிகளாக ஐவரும் இனங்காணப்பட்டுள்ளனர் என்று அறிவித்தார்.

இந்த வழக்கிலிருந்து விடுவிக்கப்படுவதாக பெயர் குறிப்பிடப்பட்ட ஏழுபேரும், பிரதிவாதிகள் கூண்டிலிருந்து இறங்கிவிட்டனர்.

துமிந்த சில்வா உள்ளிட்ட ஐவர் மட்டுமே பிரதிவாதிகள் கூண்டில் இருந்தனர். அவர்களைப் பார்த்து, தீர்ப்பை வாசிப்பதற்கு முன்னர் ஏதாவது கூற விரும்புகின்றீர்களா எனக்கேட்டார்.

பிரதிவாதியின் கூண்டுக்குள் தலைகளை கவிழ்த்தவாறு நின்றிருந்தவர்கள், தாங்கள் நிரபராதிகள் என்றனர்.

இந்நிலையில், முறைப்பாட்டாளர் சார்பில் மன்றில் ஆஜராகியிருந்து சிரேஷ்ட பிரதி சொலிஸிட்டர் ஜெனரல் இந்தச் சம்பவம், முழு நாட்டையும் உலுக்கியது. அதிகாரத்தில் இருந்தபோதே இவ்வாறான சம்பவம் இடம்பெற்றது. இனிவரும் காலங்களில் இவ்வாறான சம்பவங்கள் இடம்பெறாமல் இருக்கவேண்டுமாயின், இவ்வழக்கில் குற்றவாளிகளாக இனங்காணப்பட்டோருக்கு அதியுச்சபட்ச தண்டனைகளை வழங்கவேண்டும் எனக் கோரிநின்றார்.

நீதிபதியின் கட்டளைக்கு இணங்க, நீதிமன்றத்தின் சகல கதவுகளும் இறுக்கி மூடப்பட்டன. மின்விசிறிகள், மின்விளக்குகள் அணைக்கப்பட்டன. சகலரும் எழுந்துநிற்க, மூன்றிலிரண்டு பெரும்பான்மை அனுமதியுடன் தீர்ப்பை நீதிபதி வாசித்தார்.

‘இந்த வழக்கின் பிரதிவாதிகளில் ஐவரை, இந்த நீதிமன்றம் சில குற்றச்சாட்டுகளுக்காகக் குற்றவாளிகளாக இனங்கண்டுள்ளது. ஆகையால், மரணங்களை ஏற்படுத்திய குற்றத்துக்காக ,அவர்களுக்கு இந்த நீதிமன்றம் மரணத்தண்டனை விதிக்கின்றது. ஜனாதிபதி நியமிக்கின்ற நாளன்று, நேரத்தில் மற்றும் இடத்தில் குற்றவாளியின் கழுத்தில் தூக்குக் கயிற்றை மாட்டி அவரது உயிர், அவரது உடலிலிருந்து பிரியும் வரையிலும் தூக்கிலிடப்படவேண்டும்’ என்று தீர்ப்பளித்து, தீர்ப்பில் ஒப்பமிட்டார். ஒப்பமிட்ட அந்தப் பேனையை உடைத்து வீசிவிட்டு நீதிபதி, மன்றிலிருந்து நண்பகல் 12 மணியளவில் வெளியேற சக நீதிபதிகளும் வெளியேறிவிட்டனர். அதனையடுத்தே மின்விளக்குகள் ஒளிரவிடப்பட்டன. மரண தண்டனை விதிக்கப்பட்ட குற்றவாளிகள், கடும் பாதுகாப்புக்கு மத்தியில் சிறைச்சாலை அதிகாரிகளினால் சிறைக்கு அழைத்துச்செல்லப்பட்டனர்.

மேன்முறையீடு செய்வோம்

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் தொழிற்சங்க ஆலோசகருமான பாரத லக்ஷ்மன் பிரேமச்சந்திரவின் கொலை வழக்கில், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், தனது தரப்பைச்சேர்ந்த துமிந்த சில்வா உள்ளிட்ட 5 பேருக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை எதிர்த்து மேன்முறையீடு செய்யவுள்ளதாக பிரதிவாதிகள் சார்பில் ஆஜரான சட்டத்தரணி தெரிவித்தார்.