அமெரிக்காவில் மீண்டும் ‘ஷட் டவுன்’ : அதிபர் ட்ரம்ப் கோரிக்கைக்கு எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு: 8 லட்சம் ஊழியர்கள் பாதிப்பு

அமெரிக்க அரசின் செலவின மசோதாவுக்கும், அதிபர் ட்ரம்பின் கோரிக்கைக்கும் எதிர்ப்புத் தெரிவித்து எந்தவிதமான நிதிமசோதாவையும் நிறைவேற்றாமல் செனட் அவை நேற்று ஒத்தி வைக்கப்பட்டது. இதனால் அமெரிக்காவில் ‘ஷட்டவுன்’ தொடங்குகிறது.இதனால், அரசின் செலவினங்களுக்கு நிதி இல்லாமல் நாட்டில் அனைத்துத் துறைகளும் முடங்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. 8 லட்சம் ஊழியர்கள் வேலைக்கு வரமாட்டார்கள், அல்லது ஊதியம் இல்லாமல் பணியாற்ற வேண்டியது இருக்கும். கிறிஸ்துமஸ் பண்டிகை நெருங்கி வரும் நிலையில், ‘ஷட்டவுன்’ ஏற்படும் சூழல் ஏற்பட்டுள்ளது.
தவறவிடாதீர்
அதிபர் ட்ரம்புடன் மோதல்: அமெரிக்க பாதுகாப்பு துறை அமைச்சர் ஜேம்ஸ் மேட்டிஸ் ராஜினாமா

“ஷட் டவுன்” நிகழ்வு என்பது, அமெரிக்க மத்திய அரசுக்கு கட்டுப்பட்ட சேவைகள் அனைத்துக்கும் ஊதியம் அளிக்க பணம் இல்லாமல் நிறுத்திவைக்கப்படும். அத்தியாவசிய பணிகளாக போலீஸ், ராணுவம் தவிர அனைத்தும் முடங்கும்.

கடந்த 2013ம் ஆண்டுக்கு பின் இப்போது மீண்டும் ஷட்டவுன் 4-வது முறையாக ஏற்பட உள்ளது. அதிபர் ட்ரம்ப் பதவி ஏற்று 2-வது முறையாக ஷட்டவுன் நடக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது.

மெக்சிகோ-அமெரிக்க எல்லையில் சுவர் எழுப்ப 500 கோடி டாலர் நிதி கேட்டு அதிபர் ட்ரம்ப் கோரிக்கை விடுத்தார். ஆனால், இதற்கு எதிர்க்கட்சியான ஜனநாயகக் கட்சி உறுப்பினர்கள் கடும் எதிர்ப்புத் தெரிவித்தனர். இதனால், நிதி செலவினத்துக்கான மசோதாவை நிறைவேற்றாமல் செனட் அவை நேற்று ஒத்திவைக்கப்பட்டது. அதேசமயம், குடியரசுக் கட்சிகள் அதிகம் கொண்ட பிரதிநிதிகள் சபையில் செலவின மசோதாவுக்கு ஒப்புதல் பெறப்பட்டது.

இதற்கிடையே வெள்ளை மாளிகையில் ஜனநாயாகக் கட்சியின் எம்.பி.க்களும், குடியரசுக் கட்சியின் எம்.பி.க்களும் பேச்சு நடத்தினார்கள் அதில் எந்தவிதமான உடன்பாடும் ஏற்படவில்லை எனத் தெரிகிறது. இதையடுத்து சனிக்கிழமை இரவு 12.01 மணியில் இருந்து ‘ஷட் டவுன்’ அதிகாரப்பூர்வமாகத் தொடங்கும்.

ஒருவேளை இந்த ‘ஷட் டவுன்’ தொடங்கினால் எத்தனை நாட்கள் அமெரிக்காவில் நீடிக்கும் என்று தெளிவாகத் தெரியாது. ஆனால், 8 லட்சம் ஊழியர்கள் வேறு வழியின்றி ஊதியம் இல்லாமல் பணியாற்ற வேண்டிய சூழல் கிறிஸ்துமஸ் நேரத்தில் ஏற்படும்.

வெள்ளை மாளிகை: கோப்புப்படம்

கடந்த 3 காலாண்டுகளாக ராணுவம், சுகாதாரம் உள்ளிட்டவற்றுக்கு 2019-ம் ஆண்டு செப்டம்பர் வரை முழுமையாக நிதி ஒதுக்கப்பட்டுவிட்ட நிலையில், 25 சதவீதம் மட்டுமே நிதி ஒதுக்காமல் இருக்கிறது.

இந்த ‘ஷட்டவுன்’ நடவடிக்கையால், நாசா ஊழியர்கள், வர்த்தக துறை அதிகாரிகள், உள்துறை, நீதித்துறை, வேளாண்மை மற்றும் மாநில அரசு ஊழியர்கள் பெரும்பாலும் வீட்டுக்கு அனுப்பப்படுவார்கள். அதேசமயம், நாட்டில் உள்ள தேசிய பூங்காக்கள் அனைத்தும் திறந்திருக்கும். ஆனால், ஊழியர்கள் மட்டும் பணிக்கு வரமாட்டார்கள்.

இது குறித்து அதிபர் ட்ரம்ப் கூறுகையில், “அமெரிக்காவில் இன்று இரவு ‘ஷட் டவுன்’ வருவது என்பது ஜனநாயகக் கட்சி எம்.பி.க்களைப் பொருத்தது. இந்த பிரச்சினைக்கு குடியரசுக் கட்சியினர் ஒருவரும் காரணமல்ல. நாங்கள் எந்த காரணம் கொண்டும் ஷட்டவுனுக்கு ஆதரவில்லை. அதேசமயம், நீண்டகால ‘ஷட்டவுன்’ நடந்தால், அதற்கும் தயாராக இருக்கிறோம். இந்த ‘ஷட்டவுனை’ நாட்டின் எல்லைக்காக நடத்துவதில் பெருமை கொள்கிறேன். இந்த நாட்டு மக்கள் கிரிமினல்கள் நாட்டுக்குள்வருவதை விரும்பவில்லை. மெக்சிக்கோவில் இருந்து வரும் அகதிகள் ஏராளமான பிரச்சினையை உருவாக்குகிறார்கள், போதை மருந்தை கொண்டுவந்து சப்ளை செய்கிறார்கள் ” எனத் தெரிவித்தார்.

இதற்கிடையே செனட்டர்கள் தரப்பில் ஊடகங்களிடம் கூறுகையில், “ வெள்ளைமாளிகையில், துணை அதிபர் மைக் பென்ஸ், அதிபர் ட்ரம்ப் மருமகன் ஜராட் குஷ்னர், தலைமை அதிகாரி மைக் முல்வானே, ஜனநாயககட்சி, குடியரசுக் கட்சி எம்.பி.க்கள் நீண்ட ஆலோசனையிலும், சமரசப் பேச்சிலும் ஈடுபட்டனர் இதில் உடன்பாடு ஏதும் ஏற்படவில்லை. ஆதலால் சனிக்கிழமை நள்ளிரவு முதல் ‘ஷட்டவுன்’ தொடங்கிவிடும்” எனத் தெரிவித்தனர்.