அமெரிக்க அறிக்கையால் இருதரப்பு நம்பிக்கை அதிகளவில் பாதிப்பு: சீனா

சீனாவின் இராணுவம் தொடர்பாக, ஐக்கிய அமெரிக்காவின் பாதுகாப்புத் திணைக்களம் (பென்டகன்), அந்நாட்டின் காங்கிரஸ{க்குச் சமர்ப்பித்த அறிக்கையால், இருநாடுகளின் இருதரப்பு நம்பிக்கை, அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளதாக, சீனா தெரிவித்துள்ளது. காங்கிரஸூக்கான தனது வருடாந்த அறிக்கையை, கடந்த வெள்ளிக்கிழமை சமர்ப்பித்த பென்டகன், தென்சீனக் கடலிலுள்ள செயற்கைத் தீவுகளில், தொடர்பாடல், கண்காணிப்பு உள்ளிட்ட கணிசமானளவு இராணுவ உட்கட்டமைப்பை சீனா சேர்க்குமென எதிர்பார்ப்பதாகத் தெரிவித்திருந்தது.

இதற்குப் பதிலளித்துள்ள சீன பாதுகாப்பு அமைச்சின் பேச்சாளர் யங் யுஜுன், இந்த அறிக்கை குறித்து அதிகமான அதிருப்தியை வெளியிட்டதோடு, அதற்கு எதிர்ப்பை வெளியிடுவதாகவும் தெரிவித்ததோடு, குறித்த அறிக்கை, இருதரப்பு நம்பிக்கை அதிகளவில் பாதித்துள்ளதாகத் தெரிவித்தது.

சீன இராணுவத்தினால் ஏற்படுத்தப்படக்கூடிய ஆபத்தையும் வெளிப்படைத்தன்மை குறைவான நிலைமையையும், அந்த அறிக்கை தேவையற்று மிகைப்படுத்தியுள்ளதாகத் தெரிவித்த அவர், சீனாவின் பாதுகாப்புக் கொள்கைகளை வேண்டுமென்றே திரிவுபடுத்தியுள்ளதாகவும் தெரிவித்தார்.

அத்தோடு, சீனாவின் தேசிய பாதுகாப்புக் கொள்கை, அடிப்படையிலேயே தற்காப்பை அடிப்படையாகக் கொண்டது எனவும் தெரிவித்தார். அத்தோடு, பிராந்தியத்துக்கு இராணுவ விமானங்களையும் போர்க் கப்பல்களையும் அடிக்கடி அனுப்புவதன் மூலம், இராணுவப் பலத்தை வெளிப்படுத்த முயல்வதும் சந்தேகத்துக்குரியதாக உள்ளதும், ஐக்கிய அமெரிக்காவே எனவும், அவர் இதன்போது குற்றஞ்சாட்டினார்.