அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா கியூபாவுக்கு வரலாற்று விஜயம்

அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா அடுத்த மாதம் கியூபாவுக்கு வரலாற்று முக்கியம் வாய்ந்த விஜயத்தை மேற்கொள்ளவிருப்பதாக அமெரிக்க அரச வட்டாரம் உறுதி செய்துள்ளது. வரும் மார்ச் மாதம் நடுப்பகுதியில் லத்தீன் அமெரிக்க நாடுகளுக்கும் ஒரு பரந்த சுற்றுப்பயணத்தை மேற்கொள்ளும் ஒபாமா அதன் ஓர் அங்கமாக கியூபாவுக்கு செல்லவுள்ளார். வெள்ளை மாளிகை நேற்று ஒபாமாவின் விஜயம் குறித்த அறிவிப்பை வெளியிட்டிருந்தது. இதன்மூலம் பதவியில் இருக்கும் அமெரிக்க ஜனாதிபதி ஒருவர் கியூபாவுக்கு பயணம் செய்யும் இரண்டாவது சந்தர்ப்பமாக இது அமையவுள்ளது. 1928 ஆம் ஆண்டு அமெரிக்க ஜனாதிபதியாக இருந்த கல்வின் கூலிட்ஜ் கியூபாவுக்கு விஜயம் செய்திருந்தார்.

எனினும் அமெரிக்க குடியரசு கட்சியினர் இந்த விஜயத்தை கடுமையாக விமர்சித்துள்ளனர். காஸ்ட்ரோ குடும்பம் ஆட்சியில் இருக்கும் சூழலில் இவ்வாறானதொரு விஜயம் இடம்பெறக் கூடாது என்று அந்த கட்சியினர் அழுத்தம் கொடுத்துள்ளனர்.

அமெரிக்கா மற்றும் கியூபாவுக்கு இடையிலான இராஜதந்திர உறவுகள் கடந்த ஜுலையில் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டதோடு இரு நாடுகளுக்கும் இடையிலான 54 ஆண்டு பயண மற்றும் வர்த்தக தடைகள் தளர்த்தப்பட்டன.

கியூப நாட்டு குடியேறிகளின் புதல்வர்களான குடியரசு கட்சி ஜனாதிபதி வேட்பாளர்கள் டெட் க்ரூஸ் மற்றும் மார்கோ ருபியோ இருவரும், இந்த விஜயம் தவறான முடிவென்று சாடியுள்ளனர்.

சுதந்திர கியூபா பிறக்கும் வரை அவர் அங்கு போகக் கூடாது என்று ரொபியோ குறிப்பிட்டிருப்பதோடு, ஒபாமா ஒரு வக்காலத்து வாங்குபவர் போல் நடந்து கொள்வதாக க்ரூஸ் விமர்சித்துள்ளார்.

ஓபாமா கடந்த டிசம்பரில் யாஹூ செய்திக்கு அளித்த பேட்டியில், கியூபாவில் அரச எதிர்ப்பாளர்களை சந்திக்க விரும்புவதாகவும், அது கியூப அரசை புதிய வழியில் இட்டுச் செல்ல உதவும் என்றும் குறிப்பிட்டிருந்தார். இதற்கு பதிலளித்த கியூப அரசு ஒபாமாவின் விஜயத்தை வரவேற்பதாகவும் ஆனால் நாட்டின் உள் விவகாரங்களில் தலையிடக் கூடாது என்றும் வலியுறுத்தி இருந்தது.

கியூப தலைநகர் ஹவானாவில் வரும் மார்ச் 23 ஆம் திகதி கொலம்பிய அரசுக்கும் அந்நாட்டு கிளர்ச்சியாளர்களுக்கும் இடையில் நாட்டின் பல தசாப்த சிவில் யுத்தத்தை முடிவுக்கு கொண்டுவரும் அமைதி உடன்படிக்கை கைச்சாத்தாகவுள்ளது. இதே காலப்பிரிவிலேயே ஒபாமாவின் விஜயம் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கொலம்பியாவின் 50 ஆண்டு சிவில் யுத்தத்தை முடிவுக்குக் கொண்டுவரும் இந்த அமைதி முயற்சிக்கு கியூபா மத்தியஸ்தம் வகித்து வருகிறது.

அமெரிக்கா மற்றும் கியூபாவுக்கு இடையில் கடந்த செவ்வாய்க்கிழமை ஐந்து ஆண்டுகளுக்குப் பின்னர் வர்த்தக விமான போக்குவரத்தை ஆரம்பிப்பதற்கான ஒப்பந்தம் கைச்சாத்தாகி இருந்தது.

எனினும் கியூபா மீது நீண்ட காலமாக நீடிக்கும் வர்த்தக தடையை அகற்றும் ஜனாதிபதி பராக் ஒபாமாவின் அழைப்பை குடியரசு கட்சியை பெரும்பான்மையாகக் கொண்ட கொங்கிரஸ் அவை முடக்கியுள்ளது. இந்த தடை இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தகத்தை மட்டுப்படுத்துவதோடு அமெரிக்க சுற்றுலா பயணிகள் கியூபா செல்வதை தடைசெய்கிறது.

ஒபாமாவின் விஜயம் கடந்த 90 ஆண்டுகளில் அமெரிக்க ஜனாதிபதி ஒருவரின் கியூப விஜயமாக அமையும். ஜனாதிபதி ஹென்ட்ரி ட்ரூமன் குவன்தனாமோ பேவுக்கு விஜயம் மேற்கொண்டிருந்தபோதும் அது அமெரிக்க கட்டுப்பாட்டில் இருப்பதால் கியூபாவுக்கான பயணமாக கருதப்படுவதில்லை. அதன்போது அவர் எந்தவொரு கியூப அதிகாரியையும் சந்திக்கவில்லை.

முன்னாள் ஜனாதிபதி ஜிம்மி காட்டர் ஜனாதிபதி பதவியில் இருந்து வெளியேறிய பின்னர் பல தடவைகள் கியூபாவுக்கு சென்றுள்ளார்.