அரசாங்கத்தை எச்சரிப்பதற்கு இரா. சம்பந்தன் எம்.பிக்கு சங்கரி ஐடியா

இரு வாரங்களுக்குள் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணாவிட்டால், எதிர்கட்சித் தலைவர் பதவியை இராஜினாமாச் செய்வேன் என, இராஜினாமாக் கடிதத்தை எழுதிவைத்துகொண்டு அரசாங்கத்துக்கு எச்சரிக்கை விடுக்குமாறு, எதிர்க்கட்சி தலைவரான இரா. சம்பந்தன் எம்.பிக்கு, தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகம் வீ.ஆனந்தசங்கரி ஆலோசனை வழங்கியுள்ளார்.

இந்த விவகாரம் தொடர்பில், எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தனுக்கு (ஐயா) நேற்று (27) அவர், கடிதமொன்றையும் எழுதி அனுப்பி வைத்துள்ளார்.

அக்கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

“தமிழ் மக்கள், தங்களுடைய பொறுமையின் எல்லையை அடைந்துவிட்டார்கள் என்ற இரா.சம்பந்தனின் கூற்றை ஏற்றுக்கொள்வதோடு, அது இன்றல்ல, என்றோ நடந்து விட்டதென்று கூறிவைக்க விரும்புகின்றேன்.

பொதுமக்கள், தங்களுடைய எதிர்க்கட்சி தலைவர் பதவியை இராஜினாமாச் செய்ய வேண்டுமென்று நிர்ப்பந்திக்க தள்ளப்பட்டுள்ளனர்.

பொதுமக்கள், தமிழ் மக்கள் மட்டுமல்ல சகல இன மக்களும் இப்பதவியை தங்கள் விருப்பத்துக்கு மாறாக அரசாங்கத்தைப் பாதுகாப்பதற்காகவே உபயோகிக்கின்றீர்கள் என நம்புகின்றார்கள்.

காணிகளை விடுவித்தல், அரசியல் கைதிகளின் விடுதலை, காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின் துன்பங்கள், போன்ற குறிப்பிட்ட பிரச்சினைகள் சம்பந்தமாக நீங்கள் விரும்பியிருந்தால், என்றோ தீர்த்திருக்க முடியும்.

இந்நிலையில், தங்களுடைய எதிர்க்கட்சித்தலைவர் பதவியை இராஜினாமாச் செய்வதாக எழுதி வைத்துக்கொண்டு, இரு வாரங்களுக்குள் இப்பிரச்சினைகளுக்குத் தீர்வு காணாவிட்டால் இராஜினாமாக் கடிதத்தை சமர்ப்பிப்பதாக அரசாங்கத்துக்கு எச்சரிக்கை விடுங்கள்.

மக்கள் உங்களை வன்மையாக கண்டிக்கின்றனர், கொடும்பாவி எரிக்கின்றனர் என்பதனை நினைவில் கொள்ளுங்கள். நீங்கள் விரைவாகச் செயற்படாவிட்டால், இலங்கை தமிழரசுக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களை இராஜினாமாச் செய்யும்படி அவர்கள் விரைவில் வற்புறுத்துவார்கள். அன்றேல் நீங்கள் அரசாங்கத்துக்கு வழங்கிவரும் ஆதரவை நிறுத்துமாறு கோருவர்.

இத்துடன் இதனை நிறுத்திவிட்டு நான் உங்களுக்கு முன் அறிவித்தலாகக் கூற விரும்புவது, நீங்கள் அரசியலில் இருந்து விலக வேண்டுமென்ற நியாயப்படுத்தக்கூடிய வலுவான காரணங்களை முன்வைக்க வேண்டிவரும்.

நியாயமாக சிந்திக்கின்ற எந்த இனத்தவரும் ஆணோ, பெண்ணோ ஆயுதப் போராட்டம் ஆரம்பிக்கப்படுவதற்கு 30 வருடங்களுக்கு முன்பு இருந்த இராணுவ முகாம்களை அவசிய தேவையானவர்களுடன் வைத்துக்கொண்டு அதன்பின்பு படையினரால் கையகப்படுத்தப்பட்ட சகல காணிகளை விடுவிக்குமாறு கோரிக்கையை விடுப்பதை மக்கள் தயக்கமின்றி ஆதரிப்பார்கள்.

நீண்டகாலமாக, சட்டவிரோதமாகத் தடுத்து வைக்கப்பட்டவர்களின் விடுதலை சம்பந்தமான விடயமாகும். இந்த விடயத்தை தொடர்ந்து அனுமதிக்க முடியாது.

பல்வேறு தரப்பட்ட பொதுமக்கள்
ஜே.வி.பி போன்ற அரசியல் கட்சிகள், ஓய்வுபெற்ற இராணுவத்தளபதி சரத் பொன்சேகா போன்றவர்கள், பௌத்த குருமார்கள், பல்வேறு சமயக் குருமார்கள் அவர்களின் விடுதலையைப் பற்றி விடுக்கின்ற வேண்டுகோளை அரசாங்கம் உதாசீனம் செய்கிறது.

அரசாங்கம், இக்கைதிகளை ஒரு குறிப்பிட்ட தேவைக்கு துருப்புச்சீட்டாகப் பிரயோகிக்ககூடும் என்ற சந்தேகம் எனக்கு ஏற்பட்டுள்ளமையால் தயவு செய்து இவர்களின் உடன் விடுதலையை அரசாங்கத்திடம் கோருங்கள்.

போர்க்குற்றங்களுக்காக இரு சாராரையும் விசாரணை செய்ய வேண்டுமென்று நீங்கள் விடுத்த கோரிக்கை முட்டாள்த்தனமானதென தற்போதாவது உணர்கின்றீர்களா? விடுதலைப் புலிகளால் சேர்த்துக்கொள்ளப்பட்ட போராளிகள் கட்டாய நிமித்தம் சேர்த்துக்கொள்ளப்பட்டார்கள் என்பதையும் ஏனென்று கேட்கக்கூடிய நிலைமையில் அவர்கள் இருக்கவில்லை என்பதையும் உணர்ந்தீர்களா?

இந்த விடயங்களை மேலும் பின்போட முடியாது. எதுவித தாமதமுமின்றி இது சம்பந்தமாக உடனடியாக நடவடிக்கையெடுக்க வேண்டும். இன்னுமொரு மிக முக்கியமான பிரச்சினை இன்று வேலையற்றிருக்கும் பட்டதாரிகள் சம்பந்தமானதே. பல்வேறு துறைகளில் அவர்களை வேலைக்கு அமர்த்தக்கூடியதாக ஆளணி சேர்க்கும் நடவடிக்கையை ஆரம்பியுங்கள். மிக இலகுவாகவும் விரைவாகவும் அவர்களுக்கு திருப்தித்தரகூடிய விடயம் யாதெனில், வெற்றிடமாகவுள்ள ஆசிரியர் வெற்றிடங்களை அவர்கள் மூலமாக நிரப்புவதே.

தயவு செய்து நான் கூறியவற்றை பரிசீலனை செய்து விரைவில் உடன் நடவடிக்கை மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்” என அவரது கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.