அரசியல் கைதிகளின் விடுதலையே தீர்வுக்கான வாசலைத் திறக்கும்

அரசியல் கைதிகளை சிறையில் வைத்துக் கொண்டு அரசியல் தீர்வை எட்டவே முடியாது, மண்டேலாவின் விடுதலையே ஆபிரிக்காவில் நல்லிணக்கம் ஏற்பட வழிவகுத்தது. எனவே தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையே அரசியல் தீர்வுக்கான வாசலை திறக்கும் என சமத்துவம், சமூக நீதிக்கான மக்கள் அமைப்பின் தலைவரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான மு. சந்திரகுமார் தெரிவித்துள்ளார்.

அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி அவர் ஊடகங்களுக்கு விடுத்துள்ள செய்திக்குறிப்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

தமிழ் அரசியற் கைதிகளின் வழக்கு விசாரணைகளும் விடுதலையும் நீடித்துக் கொண்டிருக்கிறது. இதனால், அரசியல் கைதிகளின் அடிப்படை உரிமைகளும் அவர்களுடைய குடும்பத்தினரின் வாழ்வும் மோசமாகச் சிதைக்கப்படுகின்றன. இது அரசியல் உள்நோக்கத்துக்கு அப்பாற்பட்ட அநீதியான செயற்பாடாகும்.

யுத்தம் முடிவடைந்து ஒன்பது ஆண்டுகள் கடந்த நிலையிலும் யுத்தகால வன்முறை அரசியல் சூழலுக்கான காரணங்கள் இல்லாதொழிந்த பிறகும் பயங்கரவாதத் தடைச்சட்டத்தை அரசாங்கம் நீக்காமல் நீடிப்பது மக்களின் மீதும் சுதந்திரமான அரசியல் உணர்வின் மீதும் விடுக்கப்பட்டிருக்கும் அச்சுறுத்தலாகும். பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் மூலம் அரசியல் கைதிகள் நீதியற்ற முறையில் அரசியல் பழிவாங்கல்களுக்கு உட்படுத்தப்படுகிறார்கள். இது வெளிப்படையான நீதிமறுப்புச் செயற்பாடாகும்.

இலங்கையில் பயங்கரவாதத் தடைச்சட்டம் நீக்கப்படாதிருப்பது கண்டனத்துக்குரியது, கவலைக்குரியது என்று சர்வதேச சமூகம் பகிரங்கமாகவே தெரிவித்திருக்கும் சூழலில் அதைத் தொடரும் அரசாங்கத்தின் நடவடிக்கை கண்டிக்கப்பட வேண்டியது.

ஆகவே, பயங்கரவாதத் தடைச்சட்டத்தைப் பயன்படுத்தி, அரசியல் கைதிகளின் மீதான நீதி மறுப்பும் ஒடுக்குமுறையும் தொடர்வதை நாம் வன்மையாகக் கண்டிக்கிறோம்.

அரசியல் பிரச்சினைகள் நியாயமான முறையில் தீர்க்கப்படுவது எவ்வளவு அவசியமானதோ அதே அளவுக்கு அந்த நோக்கில் அரசியல் கைதிகளின் விடுதலையும் அரசியல் ரீதியாக அணுக வேண்டும்.

ஆனால், இங்கே அவ்வாறு நடைபெறாமல் அரசியல் கைதிகளின் விடயம் வெறும் சட்டப்பிரச்சினையாக நோக்கப்படுகிறது. இதுவே அரசியல் கைதிகளின் விடுதலையில் ஏற்படுத்தப்பட்டுள்ள தடையாகும். எனவே இது தவறானதாகும்.

இலங்கையில் ஏற்கனவே பல சந்தர்ப்பங்களில் அரசியல் கைதிகளாக இருந்தவர்கள் அரசியல் தீர்மானங்களின் மூலம் விடுவிக்கப்பட்ட முன்னுதாரணங்கள் பலவுண்டு.

இப்போது தடுக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகளின் விடுதலையை மட்டும் சட்டரீதியாக அணுக முற்படுவது என்பது நிச்சயமாக நீதியற்றதேயாகும்.

இதற்குக் காரணமான பயங்கரவாதத் தடைச்சட்டத்தை அகற்றாமல் அரசாங்கம் அதை நீடிப்பது அரசியல் உள்நோக்கமுடையதேயன்றி வேறெதுவாக இருக்க முடியும்?எனவும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.