அவுஸ்திரேலியாவை குடியரசாக்க முயற்சி

அவுஸ்திரேலியாவை ஒரு குடியரசா க்குவதற்கு பெரும்பாலும் அந்நாட்டின் அனைத்து மாநில மற்றும் பிராந்திய தலைவர்களும் ஆதரவாக கைச்சாத்திட்டுள்ளனர். எலிசபெத் மகாராணியை நாட்டின் தலைவர் பொறுப்பிலிருந்து மாற்ற, அரசியல் சாசனத்தில் மாறுதல் கொண்டுவர வேண்டும் எனக் கோரும் மனுவொன்றை அவுஸ்திரேலியக் குடியரசு இயக்கம் முன்னெடுத்துள்ளது.

இதில் கைச்சாத்திடாத ஒரே தலைவரான மேற்கு அவுஸ்திரேலியாவின் கொலின் பார்னட், தாம் குடியரசுக்கு ஆதரவாக இருப்பதாகவும் ஆனால் அதற்கு தற்போது சரியான நேரம் இல்லை என்றும் தெரிவித்துள்ளார்.

கடந்த 1999 ஆம் ஆண்டு இடம்பெற்ற சர்வஜன வாக்கெடுப்பில் அவுஸ்திரேலிய மக்கள் குடியரசொன்றுக்கு எதிராக வாக்களித்திருந்தனர். அப்போது குடியரசை உருவாக்கும் அமைப்பின் தலைவராக இருந்த மல்கம் டேர்ன்புல்லே தற்போது அவுஸ்திரேலிய பிரதமராக உள்ளார்.

எனினும் ஆட்சிக்கு வந்த டேர்ன்புல், இரண்டாவது எலிசெபத் மகாராணி பதவியில் இருக்கும் வரை எந்த மாற்றமும் கொண்டுவர தேவையில்லை என்ற நிலைப்பாட்டில் உள்ளார். அவுஸ்திரேலியாவில் தற்போது ஒரு முடியாட்சி கொண்ட அரசியலமைப்பே நடைமுறையில் உள்ளது. இதன்படி நாட்டின் அரச தலைவராக மகாராணி இருப்பதோடு அவரது பிரதிநிதியாக ஆளுநர் ஒருவர் இருந்துவருகிறார்.