ஆண்களாகப் பிறந்து பெண்களாக வாழ்ந்தோர் சவூதிச் சிறையில் அடித்துக் கொலை!

(எஸ். ஹமீத்.)

பாகிஸ்தானைச் சேர்ந்த திருநங்கைகள் அம்னா ,வயது 35 . மீனோ, வயது 26 . இவ்விருவரும் சவுதி அரேபிய சிறைச்சாலையில் பொலிஸார் பார்த்திருக்க, கோணிச் சாக்குகளில் கட்டப்பட்டு, தடிகளால் அடித்துக் கொல்லப்பட்டுள்ளதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன. அத்தோடு, இந்தச் சம்பவம் உலக அளவில் பெரும் எதிர்ப்பலைகளைத் தோற்றுவித்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

பெண்களின் ஆடைகளை ஆண்கள் அணிந்து பெண்கள் போல நடமாடுவதும் ஆண்களின் ஆடைகளைப் பெண்கள் அணிந்து ஆண்கள் போல நடமாடுவதும் சவூதி அரேபியாவில் தடை செய்யப்பட்டுள்ளது. ஆனால் ஆண்களாகப் பிறந்து பாலியல் பிறழ்வுகளினால் பெண்களாக வாழ்வோருக்கு சவூதி அரேபியச் சட்டம் என்ன சொல்கிறது என்பது தெரியவில்லை. இந்த நிலையில், ஆண்களாகப் பிறந்து பெண்களாக மாறிய பாகிஸ்தானைச் சேர்ந்த திருநங்கைகள் சிலர், சவுதி அரேபிய தலைநகரான ரியாத்தில் நடமாடியிருக்கிறார்கள். இதுபற்றித் தமக்குக் கிடைத்த தகவலின் பேரில் பொலிஸார் தேடுதல் வீட்டை நடாத்தி, 36 பேரைக் கைது செய்துள்ளனர். பின்னர் இவர்களை சவூதிச் சிறைச்சாலையொன்றுக்கு அழைத்துச் சென்று கண்மூடித்தனமான தாக்குதல்களை மேற்கொண்டுள்ளனர். இந்தத் தாக்குதலின் போது இருவர் உயிரிழந்துள்ளதாகக் கூறப்படுகிறது.

இந்தச் சம்பவத்தைத் திருநங்கைகளுக்கு ஆதரவான பல அமைப்புகளும் நிறுவனங்களும் மிகக் கடுமையாகக் கண்டித்துள்ளன. போலீசார் கைது செய்த 36 பேரில் 11 பேர் கிட்டத்தட்ட ஒன்றரை இலட்சம் சவூதி ரியால்கள் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர். இன்னமும் சிறையிலிருப்போரின் நிலைமை என்னாகுமோ என்ற அச்சம் பல தரப்புகளிலும் மேலோங்கியிருக்கிறது.