இன்று ‘மே 18’ நினைவேந்தல்

யுத்தம் நிறைவுக்கு வந்த மே 18 ஆம் திகதியான இன்று (18) முல்லைத்தீவு முள்ளிவாய்க்கால் பகுதியில் பல்வேறு தரப்பினரால் நினைவேந்தல் நிகழ்வுகள் நடத்தப்படவுள்ளன. இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக இடம்பெற்று வருவதாக வடமாகாண சபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் தெரிவித்துள்ளார். தமிழர் தாயகப் பகுதிகளில் 2006 ஆம் ஆண்டு வாகரை மண்ணில் உச்சம் பெறத்தொடங்கிய கோரத் தாண்டவம், 2009 ஆம் ஆண்டு மே மாதம் 18 ஆம் திகதி முள்ளிவாய்க்கால் மண்ணில் வரலாறு காணாத பேரவலத்தை விதைத்திருந்தது என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

இந்த மானிடப் பேரவலத்தின் எட்டாவது ஆண்டு நினைவு தினமே இன்று (18) அனுஷ்டிக்கப்படவுள்ளது. அந்த வகையில், வடமாகாண சபையின் ஏற்பாட்டில் முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபிக்கு அருகில் நினைவு நிகழ்வு இன்று காலை 9.30 மணியளவில் இடம்பெறவுள்ளது.

அத்துடன், முள்ளிவாய்க்கால் கிழக்கு கடற்கரைப் பகுதியில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் 2.30 மணிக்கு நினைவு நிகழ்வு இடம்பெறவுள்ளது. மாலை 3.00 மணியளவில் முள்ளிவாய்க்கால் கிழக்கு பகுதியிலுள்ள கிறிஸ்தவ ஆலயத்தில் சிவில் சமூக அமைப்புக்களால் நினைவுக் கற்கள் பொறிக்கப்பட்டு நிகழ்வுகள் இடம்பெறவுள்ளன.

இதேவேளை, ஜனநாயகப் போராளிகள் கட்சியின் ஏற்பாட்டில் முல்லைத்தீவு முள்ளிவாய்க்கால் பொது நோக்கு மண்டபத்தில் நினைவு நிகழ்வுகள் 4மணியளவில் இடம்பெறவுள்ளன.

காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் முல்லைத்தீவு மாவட்ட செயலகத்திற்கு முன்பாக முற்பகல் 11 மணியளவில் நினைவு நிகழ்வு இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வில் பொதுமக்கள் கலந்துகொள்வதற்காக மாவட்டங்கள் ரீதியாக மட்டுப்படுத்தப்பட்ட அளவில் போக்குவரத்து ஒழுங்குகள் செய்யப்படவுள்ளன.

ஒழுங்கு செய்யப்பட்ட பேரூந்துகளில் வரக்கூடியவர்கள் அதனூடாகவும், ஏனையவர்கள் தாங்கள் வரக்கூடிய வகையிலும் இப்புனித அஞ்சலிக்காக முள்ளிவாய்க்கால் கிழக்கில் ஒழுங்கு செய்யப்பட்டுள்ள நினைவேந்தல் தளத்துக்கு வருகை தருமாறும் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் ஏற்பாட்டுக்குழுவின் சார்பில் வடமாகாண சபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் கேட்டுக்கொண்டுள்ளார்.