இரண்டு மாஸ்டர்கள் தொடர்பிலும் இன்னும் ஆலோசனை இல்லை

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் ஊடகப்பேச்சாளர் தயா மாஸ்டர் மற்றும் மொழி பெயர்ப்பாளர் ஜோர்ஜ் மாஸ்டர் ஆகிய இருவர் தொடர்பிலும், சட்டமா அதிபர் அதிபரிடமிருந்து ஆலோசனை கிடைக்கவில்லை என்று இரகசியப் பொலிஸார், நீதிமன்றத்தின் கவனத்துக்குக் கொண்டுவந்தனர்.

இவ்விருவர் தொடர்பில் முன்னெடுக்கவேண்டிய சட்ட நடவடிக்கைகள் தொடர்பில், சட்டமா அதிபரின் ஆலோசனையைப் பெறுவதற்கு முயன்று 5 வருடங்கள் கடந்துவிட்டன என்றும் இரகசியப் பொலிஸார், நீதிமன்றத்தின் முன் தெரிவித்தனர்.

இரகசியப் பொலிஸார், மேற்படி விவகாரத்தை கொழும்பு பிரதான நீதவான் கிஹான் பிலபிட்டியவின் கவனத்துக்கு நேற்றுக் கொண்டுவந்தனர்.

இதேவேளை, 2014 ஒக்டோபர் 06, 2015 ஜுன் 18, 2015 செப்டெம்பர் 16 ஆம் திகதிகளுக்கான ஞாபகப்படுத்தல் கடிதங்களையும் இரகசியப் பொலிஸார் கையளித்தனர்.

பருத்தித்துறையைச் சேர்ந்த தயா மாஸ்டர் என்றழைக்கப்படும் வேலாயுதன் தயாநிதி, பருத்தித்துறையைச் சேர்ந்த ஜோர்ஜ் மாஸ்டர் என்றழைக்கப்படும் வேலுப்பிள்ளை குமார் பஞ்சரத்னம் ஆகிய இருவரும், நீதிமன்றத்தின் முன்னிலைப்படுத்தப்பட்டுப் பிணையில் இருக்கின்றனர்.

2009ஆம் ஆண்டு யுத்தம் இடம்பெற்றபோது, இலங்கை இராணுவத்திடம் சரணடைந்த இவ்விருவரும், ஓமந்தை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.

இவ்விருவரின் செயற்பாடுகள் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுப்பதற்காக ஓமந்தைப் பொலிஸாரினால் அவ்விருவரும் இரகசியப் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும். இதேவேளை இந்த வழக்கு, ஜூலை 4ஆம் திகதிவரை ஒத்திவைக்கப்பட்டது.