இலங்கை அகதிகள் இன்று நாடு திரும்ப ஏற்பாடு

யுத்த காலத்தில் இந்தியாவுக்கு இடம்பெயர்ந்த 43 இலங்கை அகதிகள் இன்று விமானம் மூலம் நாடு திரும்புகின்றனர். திருச்சி, சென்னை மற்றும் மதுரை ஆகிய விமான நிலையங்களிலிருந்து மூன்று விமானங்களில் இவர்கள் நாடு திரும்பவுள்ளனர். 2016ஆம் ஆண்டில் மாத்திரம் இதுவரை 61 பேர் இவ்வாறு நாடு திரும்பியிருக்கும் நிலையில், இன்று நாடு திரும்பும் 43 பேரில் 24 ஆண்களும், 19 பெண்களும் அடங்குவதுடன், இவர்கள் வவுனியா, முல்லைத்தீவு, கிளிநொச்சி மன்றும் மன்னார் ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு, புனர்வாழ்வளிப்பு மீள்குடியேற்றம் மற்றும் இந்துமத விவகார அமைச்சின் செயலாளர் வே.சிவஞானசோதி தெரிவித்தார்.

யுத்தம் முடிவடைந்த பின்னர் நாட்டில் ஏற்பட்ட அமைதி நிலையைத் தொடர்ந்து 2011ஆம் ஆண்டு முதல் இதுவரை 4589 இலங்கை அகதிகள் தமிழகத்திலிருந்து நாடு திரும்பியுள்ளனர். அவ்வாறு நாடு திரும்ப விரும்புபவர்கள் குறித்த பட்டியல்களை வழங்கினால் அதற்கு உதவிசெய்ய முடியும் என இந்திய மத்திய அரசாங்கம் தெரிவித்துள்ளது.

எஸ்.சி.சந்திரஹாசன் தலைமையில் தமிழகத்தில் செயற்பட்டுவரும் ஈழத் தமிழர் அகதிகள் புனர்வாழ்வு நிறுவனத்துக்கும், இந்திய வெளிவிவகார அமைச்சர் சுஷ்மா சுவராஜுக்குமிடையில் சந்திப்பொன்று சில தினங்களுக்கு முன்னர் நடைபெற்றது. வான் மார்க்கமாகவன்றி கடல்மார்க்கமாகச் செல்வதற்கு வழி ஏற்படுத்திக்கொடுத்தால் தமிழகத்தில் உள்ள ஈழத்தமிழ் அகதிகளில் பலர் நாடு திரும்புவார்கள் என்ற விடயத்தை சந்திரஹாசன் சுட்டிக்காட்டியிருந்தார்.

அப்படியாயின் நாடு திரும்ப விரும்புவர்களின் விபரங்களை வழங்கினால் அதற்கு அமைய இந்திய மத்திய அரசாங்கத்தால் உதவ முடியும் என்பதை அவருக்கு எடுத்துக் கூறியிருந்ததாக இந்திய வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் விகாஸ் ஸ்வர்ப் தெரிவித்துள்ளார்.

கப்பலொன்றில் செல்லக்கூடிய எண்ணிக்கையானவர்கள் இருந்தால் அதற்கான ஏற்பாடுகள் செய்வது குறித்து ஆராய முடியும். எனினும், இவர்களின் வெளியேற்றமானது தாமாக முன்வந்ததாக இருக்க வேண்டும். பலவந்தப்படுத்தி அனுப்பிவைக்கப்பட்டதாக அமையக்கூடாது என்றும் அவர் கூறியுள்ளார்.

ஆகாய மார்க்கமாக தமிழ்நாட்டிலிருந்து அகதிகள் நாடுதிரும்புவதாயின் பயணப்பொதிகள் தொடர்பான சிக்கல் காணப்படுகிறது. இதனால் பெரும்பாலானவர்கள் விமானத்தின் மூலம் நாடு திரும்ப விரும்புவதில்லையென இந்தியத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதேநேரம், இன்று தமிழ்நாட்டின் திருச்சியிலிருந்து இலங்கை விமானசேவை ஊடாகவும், சென்னையிலிருந்து மிஹின்லங்கா விமான சேவை ஊடாகவும், மதுரையிலிருந்து மிஹின்லங்கா விமான சேவை ஊடாகவும் கொழும்பு திரும்புகின்றனர். அமைச்சர் சுவாமிநாதனின் முயற்சியால் தொழில் முயற்சிகள் அபிவிருத்தி அமைச்சும் இலங்கை விமானசேவை நிறுவனமும், இவ்வாறு இலங்கை திரும்பும் அகதிகளின் பயணப் பொதியின் அளவை 40 கிலோவிலிருந்து 60 கிலோவாக அதிகரிக்க இணங்கியது.

இவர்கள் இலங்கை வருவதற்கு இலவசமாக விமானபயணச்சீட்டு அகதிகளுக்கான ஐக்கிய நாடுகள் உயர்ஸ்தானிகர் அலுவலகத்தினால் வழங்கப்படும். அத்துடன் மீள் சமூக ஒருங்கிணைப்பிற்கான நன்கொடையாக ஒவ்வொருவருக்கும் 75 அமெரிக்க டொலர்களும், போக்குவரத்து நன்கொடையாக ஒவ்வொருவருக்கும் 19 அமெரிக்க டொலர்களும், உணவு அல்லாத பண நன்கொடையாக ஒவ்வொரு குடும்பத்திற்கும் 75 அமெரிக்க டொலர்களும் வழங்கப்படுவதாக அமைச்சின் செயலாளர் சிவஞானசோதி குறிப்பிட்டார்.

இந்தியாவில் 64,000 பேர் 109 முகாம்களில் தங்கியுள்ளனர்.

மொத்தமாக ஒரு இலட்சத்திற்கும் அதிகமான இலங்கை அகதிகள் இந்தியாவில் இருப்பதாகவும் அறியப்பட்டுள்ளது. சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு, புனர்வாழ்வளிப்பு, மீள்குடியேற்றம் மற்றும் இந்துமத அலுவல்கள் அமைச்சர் சுவாமிநாதன், மீள்குடியமர்த்தப்படும் மக்களுக்கு வாழ்வாதார நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு தேவையான நிதி உதவிகளை வழங்குவதற்கான அமைச்சரவை பத்திரம் ஒன்றை சமர்ப்பித்திருந்தார்.

தற்பொழுது தேசிய திட்டமிடல் திணைக்களத்திடம் விரிவான கருத்திட்டமுன்மொழிகளை அனுமதிப்பது தொடர்பான முன்னெடுப்புக்கள் நடைபெற்றுவருகின்றது.

மீள்குடியமரும் மக்களுக்கு 6 மாதகாலத்திற்கு உலர் உணவுகளை வழங்குவதற்கான அனுமதி கிடைக்கப்பெற்றுள்ளது.

இவ் அமைச்சானது, வீடுகள் மற்றம் தமது உறவினர்களை இழந்தவர்களுக்கும், காயமடைந்தவர்களுக்கும் நட்டஈடுகளை வழங்குமாறு, ஆட்களையும் ஆதனங்களையும் கைத்தொழில்களையும் புனரமைப்புச் செய்யும் அதிகாரசபைக்கு அறிவுரைகளை வழங்கியுள்ளது.

வீடுகளை இழந்தவர்களுக்கு அமை ச்சினால் மேற்கொள்ளப்படும் 65,000 வீட்டுத்திட்டத்தின் கீழ் வீடுகள் வழங்கப்படவிருப்பதாக அமைச்சின் செயலாளர் சிவஞானசோதி மேலும் தெரிவித்தார்.