இலங்கை: கொரனா செய்திகள்

திருகோணமலை நகரில் கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் 14 பேர் இனங்காணப்பட்டதைத் தொடர்ந்து, அங்குள்ள 7 வர்த்தக நிலையங்கள் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளன.

திருகோணமலை நகர பொது சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக பிரதேசத்துக்குட்பட்ட திருகோணமலை நகரில் 129 பேருக்கு மேற்கொள்ளப்பட்டிருந்த பிசிஆர் பரிசோதனைகளிலேயே அங்குள்ள கடற்படை முகாமில் பணியாற்றும் நபரொருவர் உள்ளிட்ட  14 பேருக்குக் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதேவேளை தொற்றாளர்கள் பணிப்புரியும் வர்த்தக நிலையங்கள் தற்காலிமாக மூடப்பட்டுள்ளதோடு, அவர்களோடு தொடர்பிலிருந்தவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

கொரோனா வைரஸ் தடுப்பூசிகளைப் பெற்றுக்கொண்டு நாட்டுக்கு வரும் இலங்கையர்களை, அவர்களது வீடுகளிலேயே தனிமைப்படுத்துவதுத் தொடர்பில் அரசாங்கம் கவனஞ் செலுத்தியுள்ளது.

இதுத் தொடர்பான சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தின் தீர்மானம் இம்மாதம் 15ஆம் திகதி அறிவிக்கப்படுமென இராணுவத் தளபதி ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரஸ் தடுப்பூசிகளைப் பெற்றுக்கொண்டு நாட்டுக்கு வரும் இலங்கையர்கள் பிசிஆர் பரிசோதனையின் பின்னர் விடுவிக்கப்பட வேண்டுமென தான் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்திடம்  கோரியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதுத் தொடர்பில் கலந்துரையாடியப் பின்னர், இதுத் தொடர்பான தீர்மானம் அறிவிக்கப்படுமென சுகாதார சேவைகள் பணிப்பாளர்  நாயகத்தால் தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும் இராணுவத் தளபதி மேலும் தெரிவித்துள்ளார்.