இலங்கை தமிழர்களின் நலனைக் காக்க சென்றேன்: மோடி

இலங்கையில் மரண தண்டனை விதிக்கப்பட்ட 5 தமிழர்களைக் காப்பாற்றினேன். இலங்கை அரசுடன் நல்லுறவை ஏற்படுத்தி தமிழர்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணப்பட்டு வருகிறது என்று இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார். இலங்கைத் தமிழர்களின் நலனைக் காக்க யாழ்ப்பாணம் சென்ற முதல் இந்திய பிரதமர் நான்தான் என்றும் தலிபான் பயங்கரவாதிகளிடம் இருந்து தமிழக பாதிரியாரை மத்திய அரசு மீட்டது என்றும் அவர் கூறினார்.

சென்னை ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் நேற்று நடைபெற்ற பிரச்சாரப் பொதுக்கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொண்டு பா.ஜ.க. கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பேசும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். ‘சென்னையில் வெள்ளத்தால் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டபோது விரைந்து வந்து உதவிகள் செய்தேன். இந்தியர்களின் கடுமையான உழைப்பால் நாட்டின் பொருளாதாரம் உயர்ந்து வருகிறது. உலகப் பொருளாதாரம் வீழ்ச்சி அடைந்த போதும் இந்தியாவின் பொருளாதாரம் வளர்ந்து வருகிறது என்றும் அவர் கூறினார்.