இலங்கை தொடர்பில் உலக வங்கி வெளியிட்டுள்ள செய்தி

இலங்கையில் ஏற்கனவே வறுமைக் கோட்டுக்கு கீழுள்ளவர்கள் என வகைப்படுத்தப்பட்டவர்களின் வாழ்க்கைச் செலவில் 65% அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக உலக வங்கிக் குழுமத்தின் தெற்காசியப் பிராந்தியத்திற்கான பிரதித் தலைவர் மார்டின் ரைஸர் தெரிவித்துள்ளார்.

அத்துடன், வறுமை கோட்டு வரம்புக்கு அப்பாற்பட்டவர்களின் வாழ்க்கைச் செலவில் 57 சதவீதம் அதிகரித்துள்ளது. இது அனைத்து இலங்கையர்களுக்கும் குறிப்பிடத்தக்க நலன் இழப்பை எடுத்துக்காட்டுவதாக அவர் தெரிவித்துள்ளார்.

நெருக்கடியின் ஆழம் இலங்கைக்கு புதிய அபிவிருத்தி மாதிரி தேவை என்பதை தெளிவுபடுத்தியுள்ளதாக ரைஸர் குறிப்பிட்டார்.

எவ்வாறாயினும், மீட்புக்கான பாதை சவாலானது என்றும், தேவையான நிதி சீரமைப்பு நடவடிக்கைகள் வலிமிகுந்ததாக இருக்கும் என்றும் அவர் மேலும் கூறினார்.

இலங்கையின் கடன்கொடுநர்களிடமிருந்து கடன் நிவாரணம் மற்றும் சர்வதேச நிதி நிறுவனங்களின் புதிய நிதியுதவி ஆகியவை, மக்கள் பொறுமையை இழக்காமல் இருப்பதையும் மாற்றத்திற்கான வாய்ப்பை இழக்காமல் இருப்பதையும் உறுதிப்படுத்துவது அவசரமானது என்றும் தெரிவித்துள்ளார்.