இலங்கை பொருளாதாரத் தலையிடிக்கு சீன தைலம்!

பொருளாதாரத் தலையிடிக்கு சீன தைலத்தை நாடுகிறது இலங்கை! மார்ச் 6 இல் பீஜிங் பறக்கிறார் ரணில். சீனாவுடனான இருதரப்பு உறவுகளை பலப்படுத்திக் கொள்வதற்காக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நான்கு நாட்கள் பயணம் மேற்கொண்டு அந்நாட்டுக்கு செல்லவுள்ளார். அமைச்சர் சரத் அமுனுகம இந்தத் தகவலை வெளியிட்டார். கொழும்பில் அமைந்துள்ள ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தலைமையகத்தில் நேற்று நடைபெற்ற வாராந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்துத் தெரிவித்த அவர், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் ஜேர்மனி விஜயத்தின் மூலம் இரு நாட்டு உறவு மேலும் வலுவடையும் என எதிர்பார்கின்றோம். ஐரோப்பாவில் மிகவும் முக்கிய நாடான ஜேர்மனி இலங்கையின் முக்கிய சந்தையாக உள்ளது. சில தரப்பினர் எமது வெளிநாட்டு கொள்கை தொடர்பில் விமர்சனம் செய்கின்றனர். ஆனால், அவர்களது காலத்தில் கடைபிடித்த கொள்கைகளினால் நாங்கள் சர்வதேசத்தில் தனிமைப்பட்டு பல்வேறு சவால்களுக்கு முகம்கொடுக்க வேண்டியிருந்தமை எமக்குத் தெரியும்.

ஆனால், நல்லாட்சி கடைப்பிடிக்கும் சர்வதேச கொள்கைகளினால் எமக்கு எதிரி நாடுகள் என எதுவும் இல்லை. இந்தியா, சீனா, மேற்கத்திய நாடுகள் அனைத்தும் சமமாகும். அனைத்தும் எம்முடன் இணைந்தே செயற்படுகின்றன. அடுத்த மாதம் 6,7,8,9ஆம் திகதிகளில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான குழு சீனாவுக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொள்ளவுள்ளனர்.

இதன்போது அந்நாட்டு ஜனாதிபதி, பிரதமர் மற்றும் பல தரப்பு முக்கியஸ்தர்களை சந்தித்து இருதரப்பு பேச்சுகளில் ஈடுபடவுள்ளனர் என்றார். மஹிந்த ராஜபக்‌ஷ கடைப்பிடித்த பொருளாதார கொள்கைகளினால் நாடு மிகவும் மோசமானை நிலைக்கு தள்ளப்பட்டது. இதனை சரி செய்வதற்காக ஜோதிடர் சுமனசேனவின் பேச்சைக் கேட்டு மேலும் இரண்டு வருட பதவிக்காலம் இருக்கும் நிலையில் தேர்தலுக்கு சென்றார் என்று அவர் மேலும் தெரிவித்தார்.